கமலம் என்ன பண்ணுறாய் வேகமா வெளிக்கிடு….
இவ்வாறு கத்திக் கொண்டிருந்தார் நிமலராஜன். அவருக்கு மனசு முழுக்க ஆனந்தம். அதை வெளிக்காட்ட முடியாத திணறல் வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் வரப்போகினம் பேரனைப் பார்க்கலாம், பேத்தியோட விளையாடலாம் கனவுகளில் மிதந்தார். வரப்போவது அவரது மூத்த வாரிசின் குருத்துக்கள் அல்லவா…? இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் பிரிந்த பிள்ளையும், பத்து வயசாகிய குழந்தைகளும் தம்மைப் பார்க்க வரும் சந்தோசம்.


தலைகால் புரியாத நிலை அவருக்கு. என்ன செய்வது என்றும் புரியவில்லை. பார்ப்பவர்கள் அனைவருக்கும் வீட்டுக்கு வரும் படியான அழைப்பு. பெரியவன் வாறான் என்று மகிழ்ச்சியான தகவல் தெரிவிப்பு என்று ஆர்ப்பாட்டப்பட்டுக் கொண்டிருந்தார். கமலமும் அவருக்கு ஈடு கொடுத்து அவரது மகிழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தாள். உயிரோடு ஒன்றுக்கு மூன்று கிடா ஆடுகள் சேவல்கள் என்று வீட்டு கொட்டகையில் உயிர் துறக்கத் தயாராக காத்திருந்தன. பிள்ளைகள் பாவிக்க வெளிநாட்டு முறையில் அமைந்த கழிவறை என்று வீடு பலம் பெற்று கிடந்தது.
ஒவ்வொன்றையும் மகனுக்காகவும் மருமகளுக்காகவும் வாங்கிச் சேகரித்தார். குழந்தைகள் பயன்படுத்தவும, விளையாடவும் புதுப் புது சேகரிப்புகள். அந்த வீடே புதுமைப் படுத்தப்பட்டு அலங்காரம் கண்டது. “குளிர் நாட்டில இருந்து வாறவன் இந்த வெயிலுக்குள்ள எப்பிடி இருப்பான் நாங்கள் ஒரு AC வேண்டி போடுவமே…?” என்று கேட்ட மனைவியின் வினாவுக்கு விடை கொடுக்க முன் வீட்டு வாசலில் AC மெசின் வந்து நின்றது. தாம் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் மகனுக்காக அங்கே செலவழித்து கொண்டிருந்தது அந்தத் தம்பதி.


மகனும் குடும்பமும் வருகுது என்ற ஒரு தொலைபேசித் தகவலில் தம்மையே மறந்தவர்கள் அவனுக்காக சகலதையும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அவர் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியர். அதுவும் தமிழ் ஆசிரியர் தமிழ் பண்பாடுகள் மீது அதிக பற்று கொண்டு வாழ்ந்து வருபவர். தமிழ் வளர்க்கும் பல அமைப்புக்களோடு தொடர்புகள் உள்ளவர் அதைவிட பலரைத் தமிழ் வளர்ப்பில் ஈடுபடுத்தி அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழைக் காக்க முனைப்புக் கொண்டு செயற்பட்டு கொண்டிருப்பவர். தமிழ் பாரம்பரிய வாழ்க்கை முறையில் தன்னை வளர்த்து மற்றவர்களையும் வளர்க்கத் தூண்டுபவர். மனைவியைக் கூட அப்படியான வாழ்க்கை முறையில் வாழக் கற்றுக் கொடுத்தவர். இவை அனைத்தையும் விட இரண்டு வாரிசுகளை இந்த தமிழுக்காகவும் மண்ணுக்காகவும் கொடுத்தவர். தான் இறந்தாலும் தமிழ் வாழ தன்னாலான பணி செய்ய என்று தமிழ்ச் சங்கம் ஒன்றினை ஆரம்பித்து பொறுப்பானவர்களை நிருவகிக்க உரிமை கொடுத்து வளர்த்து வருபவர். தனது இறப்பின் பின் தனது உடலம் சிதை ஏற்றப்படக் கூடாது என்றும் தமிழ் முறைப்படியே புதைக்கப்பட வேண்டும் என்றும் உறுதியெடுத்திருப்பவர். இத்தகைய நிமலராஜன் மகனின் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினார்.


அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் விரைந்தோடி வந்திருந்தது விமான நிலையம் வந்திருந்தார்கள். இவர்களோடு மருமகளின் மைத்துனன் மற்றும் சகோதரியும் இணைந்திருந்தார்கள். விமானம் இறங்கிய செய்தி அறிவிக்கப்படுகிறது. பதை பதைக்கிறது மனசு ஆனந்த நெருடல் கொள்கிறது. பிள்ளை பெற்றவர்களை பார்க்க வருகிறான் மனைவி மக்களுடன், பயணப்பட்டு வந்துள்ளான் அவனை அணைத்து வரவேற்க அவரும் ஆவலோடு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.


மகனது குடும்பம் விமான நிலையம் விட்டு வெளிவருகிறது. நுனி நாக்கில் ஆங்கிலமும் மேற்கத்தைய நடையுடை பாவனைகளும் என மகனின் குடும்பம் முற்று முழுதான தமிழர்கள் மரபை மீறிய கலாச்சாரத்துக்குள் போய் இருந்தது. மருமகள் அணிந்து வந்திருந்த ஆடை அணிகலன்கள் கமலத்தின் கண்களை கோபத்தில் பனிக்க செய்தது. இருந்தும் மருமகள் என்ற நிலையில் கோபப்பட முடியவில்லை. பேரக்குழந்தைகள் இவர்களை கண்டு ஏளனம் கொண்டனர், நிமலராஜனின் வேட்டி மற்றும் சட்டை அவர்களுக்கு புதிதாக இருந்ததோ என்னவோ இவரின் பக்கம் அவர்கள் போகவே மறுத்தனர். ஆவலாய்க் கட்டித் தழுவி அரவணைக்க துடித்துக் கொண்டிருந்த அவரது கைகள் அசைவற்று போய் கிடந்தன.
டாட் ஹொவ் ஆர் யு…? என்ற மகனின் நல விசாரிப்பு அவருக்கு இரும்பைக் காய்ச்சி காதில் வார்த்தது போல் வந்து விழுந்தது. வந்திருந்தவர்கள் வாயில் இருந்து ஒரு தமிழ் வார்த்தை வெளிவரவில்லை பேச்சு முழுக்க ஆங்கிலமே நிறைந்திருந்தது. மேற்கத்தைய முறை வரவேற்று அங்கு கூடி நின்றவர்கள் அனைவரையும் கட்டி அணைத்து நல விசாரிப்பு என்று அவரது கண்களில் கோபக் கனலை உருவாக்கி கொண்டிருந்தது. இருப்பினும் அவர் எதுவுமே பேசாத நிலையில் மௌனியாக இருந்தார். அதுவும் மருமகள் மைத்துனனைக் கட்டித் தழுவிய போது மாமியார் இன்னமும் கோவத்தில் கொதித்தார். இருந்தும் அது அவர்கள் பண்பாடு என்று இவர்களால் விட்டுவிட முடியவில்லை. தமிழன் எங்கு வாழினும் தன கலாச்சார விழுமியங்களை விட்டு விலகக் கூடாது என்பதில் உறுதி கொண்டவர் நிமலராஜன். இன்று தனது மகனே அதை எல்லாம் உடைத்தெறிந்து வந்திருப்பது கண்டு மனவருத்தத்தைத் தவிர வேறெதையும் வெளியிட முடியவில்லை.


தாம் பேசுவது புரியாது முழிப்பது கண்டு நகைப்பு கொண்ட மருமகள், இல்லை மாமி அவர் உங்களை நல்லா இருக்கிறீங்களா என்று கேட்கிறார் என்று அரைகுறை தமிழில் மொழிமாற்றம் செய்ய பதிலை ம்ம்ம்ம் என்று மட்டும் விடை கூறி மௌனித்து போகிறாள் தாய். தாம் வளர்த்த பிள்ளை தம் கலை, கலாச்சார விழுமியங்களை எல்லாம் விட்டு வெகு தூரம் போய் விட்டதான உணர்வு அவர்களை வதைக்கத் தொடங்கியிருந்தது. எமக்கே இப்படி இருக்கின்றதெனில் என்னால் வளர்க்கப்பட்டவர்கள் மனதில் எத்தகைய எண்ணம் உருவாகுமோ என்று அஞ்சத் தொடங்கினார். “மகனை வளர்த்திருக்கிற வளர்ப்பைப் பார்” என்று மற்றவர்கள் கூற அதை தாங்கும் நிலையில் அவர் இல்லை.
வாடகை வாகனம் அவர்களைச் சுமந்து கொண்டு யாழ் நோக்கி நகர்ந்தது. இடைக்கிடை மகன் கேட்கும் கேள்விகளுக்கு முகம் முறிக்காத நிலையில் பதிலுரைக்கத் தொடங்கினார் நிமலராஜன். “தம்பி நீங்கள் இருக்கிற இடத்தில எப்பிடி என்றாலும் இருங்கோ ஆனால் இது நம்மட நாடு கலாச்சார விழுமியங்களால் நிறைக்கப்பட்ட நாடு அதனால நீங்கள் எங்கட கலாச்சாரத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கோ” அறிவுறுத்த முனைந்தார். ஆனால் அவரது அந்த கருத்துக்கு. “பட்டிக்காடுகள்” என்ற முணு முணுப்பே பதிலாக கிடைத்தது.


மருமகளின் அந்த வார்த்தைகள் அவரது நெஞ்சைப் பதம் பார்த்தது. வாய் மூடி மௌனியானார். சிறுசுகள் கூட இவர்களை ஏளனமாகவே நினைத்தன. பனித்த கண்களைத் துடைக்கக் கூட மனமின்றி சிலையானார் நிமலராஜன். தமிழ் தமிழ் தமிழ் என்று வாழ்ந்தவர் தமிழுக்காக தன் பிள்ளைகள் இருவரை இழந்தவர். மற்றவரை தமிழ் வளர்க்கத் தூண்டியவர், தன் பிள்ளை தமிழ் பாரம்பரியத்தை விட்டு வெளியேறிவிட்டதை நினைத்து மனதுடைந்து போனார். கமலமும் தான் பேசத் தடுமாறிக் கொண்டிருந்தாள். பேரன் பேத்திகள் தன்னை அவமானமாக நோக்குவதாக வெக்கி தலை குனிந்து கொண்டு வெளியே எதையோ வெறித்து கொண்டிருந்தாள்.


மருமகளின் சகோதரி மற்றும் மைத்துனனோ வெளிநாட்டு நாகரிகம் பிடித்தவர்கள். அவர்கள் மருமகள் போலவே நாகரிகத்தின் சிகரம் தொட நினைப்பவர்கள். அதனால் தாயின் சகோதரியுடன் அனைவரும் ஒட்டிக் கொண்டனர். நாகரிக துணுக்குகளாக பிள்ளைகளையும் வளர்த்திருக்கின்றார்கள் நிமலராஜனின் மகனும் மருமகளும். ஆங்கிலம் தவிர அவர்களுக்கு சரளமாக எதையும் பேச முடியவில்லை. தமிழில் அப்பம்மா, அப்பப்பா என்று சொல்வதே சிரமமாக இருந்தது அவர்களுக்கு. இது தான் தமிழை மூச்சாக கொண்டவரின் வாரிசின் நிலை மண்ணை முத்தமிடும் போது கூட தமிழை நேசித்த இருவரின் சகோதரனின் குடும்பத்து நிலை, முற்றிலும் ஆங்கில மயமாகி கிடந்தது.
வீடு ஆரவாரித்து கொண்டிருந்தது. நிமலண்ணன் மகன் குடும்பத்தை பார்க்க ஊரே கூடி நின்றது. அண்ணா மகன், மருமகன் என்று அந்த ஊரே எதோ ஒரு பிணைப்பில் அவரின் மகனை அழைத்து கொண்டிருந்தது. ஆனால் அத்தனையும் விரட்டி விடும் செயல் ஒன்றை அந்த மகன் செய்கின்றான். டாட் என்ன இது.. இத்தனை பேரும் ஏன் இப்ப இதில நிண்டு ஆர்ப்பாட்டம் பண்ணினம் எல்லாரையும் போக சொல்லுங்க பிள்ளைகள் பயப்பிட போகினம். வந்திருந்தவர்கள் அனைவரும் மூச்சிழந்து போகின்றனர். நிமலண்ணன் பேச்சிழந்து போனார்.
வந்தவர்கள் சென்று விட்டனர். வந்தவனோ அறைக்குள் முடக்கம் கண்டான். ஆசை ஆசையாக ஆக்கி இருந்த உணவுகளைக் கூட அவர்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கு இது எல்லாம் பிடிக்காது என்று ஒதுக்கினர். பிள்ளைக்குப் பிடிக்கும் என்று வெட்டிய நாட்டுக்கோழிக் குழம்பு அடுப்படியில் காய்ந்தது. பிள்ளையோ பிட்சா ஓடர் பண்ணி குடும்பமாய் உண்டனர். நிமலண்ணன், மனைவி கமலம் உண்ண மறந்து, பிள்ளைகளின் போக்கை எண்ணி மனம் நோகத் தொடங்கினர். வரமறுத்த தூக்கத்தோடு போராடி தூங்கி போயினர்.


அதிகாலை விடிந்தது வாசலில் வந்திருந்த வாகனத்தின் ஒலி இவர்களை எழுந்திருக்க செய்தது. “டாட் எங்களுக்கு இங்க கொம்பட்டபில் ( comfortable) இல்லை… நாங்கள் கொட்டல் ( hotel) புக் (book) பண்ணி இருக்கிறம். அதனால் அங்க போய் நிக்கப்போறம் நாங்க லண்டன் போறதுக்கு முதல் வந்திட்டு போறம் என்று சொல்லி மகன் கிளம்பிவிட சிலையாகி போயினர் நிமலராஜன் தம்பதிகள். இருந்தாலும் உறுதி கொண்டவராக, “சென்று வா மகனே… நீ இந்த வீட்டில் இருந்தால் நானும் நிம்மதியற்று தான் இருப்பேன். அதனால நீ உன் விருப்பப்படி எதை என்றாலும் செய்” என்று கூறி வாசல் வரை வந்து அனுப்புகிறார்.

எழுதியது : இ.இ. கவிமகன்