எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை எத்தனை எத்தனை அப்பாவி மக்கள் தமது வாழ்க்கையை சிறைக்குள் தொலைத்திருக்கின்றார்கள். உண்மையான குற்றவாளிகள் தப்பித்து வாழ்ந்து வர சந்தேகம் என்ற பெயரில் கைதாகியவர்களின் நிலை என்ன என்பதற்கு அண்மையில் நடந்த கைது ஒன்றே சாட்சியம்.

வவுணதீவில் நடந்த காவல் அதிகாரிகள் இருவரின் கொலை தொடர்பாக எதுவும் அறியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்த்துறை. ஆனால் அந்தக் கொலைக்கு நாங்கள் தான் காரணம் என்று உண்மையை வெளிச்சமிட்டுள்ளனர் ISIS அமைப்புத் தீவிரவாதிகள்.

இந்த நிலையில் கைதாகி உள்ள போராளி எத்தவறையும் செய்யாதவர் என்று நிரூபனம் ஆகின்றது. ஆனால் கைதாகி இருக்கும் அவரை விடுதலை செய்ய அரசால் முடியவில்லை. இதனால் கணவனை மீட்பதற்காக அப் போராளியின் மனைவி பல வழிகளில் முயன்று வருகின்றனர். இப்போது அவரை விடுவிக்கவில்லை எனில் தற்கொலை செய்வோம் என்று அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக வந்த செய்திகளின் அடிப்படையில்,

வவுணதீவில் பொலிஸாரின் கொலைக்கு தாமே காரணம் என்பதை ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், சந்தேகநபராக கைதுசெய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வராதமை குறித்து முன்னாள் போராளியான கதிர்காமதம்பி இராஜகுமாரனின் மனைவி செல்வராணி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இனியும் தனது கணவன் விடுவிக்கப்படாவிடின் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கும் தாம் உள்ளிட்ட பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்ளவே நேரிடும் எனவும் அவர் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள வவுணதீவு மற்றும் வலையிறவு ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வவுணதீவு பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கரையாக்கன் தீவு கன்னன்குடாவைச் சேர்ந்த அஜந்தன் என்ற கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எனினும் வவுணதீவில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ஐ.எஸ் என்ற சர்வதேச தீவிரவாத அமைப்பின் உளளூர் அமைப்பான தேசிய தௌவீத் ஜமாத் அமைப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மட்டக்களப்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்திய இராஜகுமாரனின் மனைவி செல்வராணி, தந்தை எங்கே என கேட்கும் பிள்ளைகளின் கேள்விக்கு பதில் கூற முடியாத நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் தாம் இதுவரை துன்பங்களை அனுபவித்ததாக குறிப்பிடும் செல்வராணி, கணவர் விடுவிக்கப்படாவிடின் உயிரை துறப்பதே ஒரே வழி எனவும் கூறியுள்ளார்.