இந்த பதிவை இந்த நாட்களில் தரவேற்றுவது சரியா பிழையா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்றும் எனக்குத் தெரியாது. அதிகமானோர்  என்னை “விசரன் , பைத்தியக்காரன்” என்று கடந்து போவார்கள் என்றும் எனக்குத் தெரியும். தமிழ்நாடு, ஈழத்தாயகம் மற்றும் புலம்பெயர்வாழ் மக்கள் அனைவரும் World Cup / IPL மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என்கின்ற பெருஞ்சுழலுக்குள் சுழலும் இவ்வேளை இது கவனிப்பார் அற்று கடந்துதான் போகும். ஆனாலும் இதனை என்னால் இயன்றவரை பதிவுக்குள் கொண்டுவந்து சந்ததிக்காக விட்டுச் செல்லும் பொறுப்பினைத் தந்த காலச்சக்கரத்திற்கு கட்டுப்பட்டு எனது பதிவைத் தொடர்கிறேன். 

விநியோகம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் பலர். அவ்வகையான விநியோக செயற்பாடுகளை செய்தவர்களின் நடவடிக்கை செயற்பாடானது எத்தகைய வலி மிகுந்தது. அல்லது எத்தகைய உச்ச வீரம் கொண்டது என்பதை வெளிக் கொண்டு வருவதற்காக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது. இது கடந்து போன சில நாட்களுக்கு முன் எழுதப்பட்டாலும் தேவை கருதியே இப்போது வெளியிடப்படுகிறது. 

இந்த பதிவை இந்த நாட்களில் தரவேற்றுவது சரியா பிழையா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்றும் எனக்குத் தெரியாது. அதிகமானோர்  என்னை “விசரன் , பைத்தியக்காரன்” என்று கடந்து போவார்கள் என்றும் எனக்குத் தெரியும். தமிழ்நாடு, ஈழத்தாயகம் மற்றும் புலம்பெயர்வாழ் மக்கள் அனைவரும் BiggBoss என்கின்ற பெருஞ்சுழலுக்குள் சுழலும் இவ்வேளை இது கவனிப்பார் அற்று கடந்துதான் போகும். ஆனாலும் இதனை என்னால் இயன்றவரை பதிவுக்குள் கொண்டுவந்து சந்ததிக்காக விட்டுச் செல்லும் பொறுப்பினைத் தந்த காலச்சக்கரத்திற்கு கட்டுப்பட்டு எனது பதிவைத் தொடர்கிறேன். 

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் நினைவில் உண்டு  “Don’t do the right thing at wrong time” (சரி பார்க்க) இத்தனையும் கருத்தில் கொள்கிறேன். 

பாகுபலி யில் இருந்த ஒரு காட்சி, பலரால் காட்சித் தவறு என சொல்லப்பட்ட காட்சி, பிழை சரி என்பவற்றிற்கு அப்பால், என்னை அந்த காட்சியில் இருந்து 2009 உடன் முடிவுக்கு வந்த அந்த தமிழரின் போராட்ட யுத்த களங்கள் நோக்கி அழைத்துச் சென்றது.

கடந்த நாட்களில் அதிகம் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டது போல, இறுதியாக வந்த ஒரு மாபெரும் வெற்றிப்படமான “பாகுபலி-2′ இல் இருந்து இந்த விடயத்தைத் தொடங்குகிறேன். பிழை பிடிப்பது என்பது பலருக்கு விருப்பமான ஒன்று கூட. எனக்கும்தான். அது சவால் நிறைந்ததும் மனதுக்கு இதமானதும். ஏனென்றால் நாம் கடவுளிடம் கூட பிழை கண்டு பிடித்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வழி வழி சொல்லி வந்தவர்கள். நக்கீரர் பரம்பரையும் கூட. 

ஆனால் அந்த திரைப்படத்தில் பிழை கண்டு பிடிக்க நானும் எத்தனிக்கவில்லை. பலர் அதனை ஒரு காட்சித் தவறாகவும் குறிப்பிட்டார்கள். இயல்பாக எனக்குள்ளும் அந்த கேள்வி எழுந்த பொழுது நான் அதனை சாதாரணமாக கடந்து அந்த திரைப்படத்தையும் பார்த்து ராஜமௌலியின் 2000 கோடிக்கு நானும் உடந்தையாகினேன். 

ஒரு காட்சி இடத்தில், “தூத்தம்” அதாவது அம்புக்கூட்டில் இருந்து அம்புகளை மூன்று மூன்றாக எய்த பின்னும் தேவசேனா, பாகுபலி ஆகிய இருவர் தூத்தங்களிலும் அம்புகள் குறையாமல் இருந்தன. அது எப்படி சாத்தியம்? காட்சித்தவறா? அல்லது பிழையா? அது ஏன் சரியாக இருக்கக் கூடாது? ஒரு திரைப்படத்தில் அனைத்து விடயங்களையும் காட்டிவிட முடியுமா? காட்டத்தான் வேண்டுமா? அவ்வளவு ஏன், பழைய படமான “கர்ணன்” படத்தில் கூட அந்த தவறு பிரம்மாதமாகவே இருக்கிறது. அள்ள அள்ள குறையாத தூத்தங்களை (அம்புக்கூடுகளை) காட்டியிருப்பார்களே? அப்படி என்றால் தவறு எங்கே? 

பாகுபலி, கர்ணன் படங்களில் மட்டும் அல்ல, சாதாரண துப்பாக்கிகளை காட்டும் திரைப்படங்களில் கூட மேலதிக ரவைக்கூடுகள் இல்லாத ஒருவன் ஆயுதத்தோடு இருக்கும் ஆகக்கூடிய 30 ரவைகளை சுட்டபின்னும், அது தொடர்ந்து 300 , 3000 என்று சுட்டுக் கொண்டே இருப்பார்களே! அது எந்த வகையில் நியாயம்? சிரிப்பு சிரிப்பாக வரும். அதிலும் அதிக திரைப்படங்களில், குறிப்பாக பிரமாண்ட இயக்குனர்களின் திரைப்படங்களில் கூட சுடப்படுகின்ற துப்பாக்கி ரவைகள் வெற்றுக் கோதுகளோடு போய்த்தான் எதிரியை கொல்லும்… (தொப்பி, தொப்பி), எமது இனத்தில் ஒருவன் இரும்பென எழுந்திருக்காமல் போயிருந்தால், நாமும் வெற்றுக் கோதுகளாகவே பயணித்திருப்போம். இவர்களின் போலிகளை நாமும் கைகொட்டி சிலாகித்திருப்போம். 

காட்டப்படாத பக்கங்கள் திரைப்படங்களில் மட்டுமல்ல, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் உண்டு. அதுபோல நடந்து முடிந்த தமிழர் போராட்ட களத்திலும் காட்டப் படாத பக்கங்கள் நிறைந்து இருக்கின்றன. அதற்கான சொந்தக்காரர்கள் மாவீரர்களாகவும், போருதவிப்படை வீரர்களாகவும், நாட்டுப்பற்றாளர்களாகவும் தம்மை அர்ப்பணித்துதான் இருக்கிறார்கள். இன்றும் அந்த சுகமான களங்களை நினைவுகளில் மட்டும் தாங்கிய வீரர்கள் தாமுண்டு தமது பணியுண்டு என இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். யார் அவர்கள்? அப்படி என்ன செய்தார்கள்? அவர்கள் செய்தது எல்லாம் அவ்வளவு முக்கியமா? இந்த போராட்ட சக்கரத்தை சுற்றியதில் உள்ள பங்கு அவர்களுக்கும் உண்டா? 

கண்களை மூடி அவர்களை நினைத்தால், கண்ணீரை மட்டுமே எமக்காக விட்டுச் சென்று இருக்கிறார்கள். போராட்ட வரலாற்றில் வீரம் செறிந்த தமிழர்களின் முன்னணி போரியல் படையணிகள் பலவற்றை கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களின் வீர சாகசங்கள், தியாகங்களை கேட்டு மெய்சிலிர்த்திருக்கிறோம்.  பல அரசியல் தொடர்பான அல்லது தேச உட்கட்டுமான விடயங்களுடன் தொடர்பான துறைகள், அணிகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களோடு சேர்ந்து நடந்திருக்கிறோம். பயனடைந்திருக்கிறோம். சில இடங்களில் அல்லலும் பட்டிருக்கிறோம். ஆனால் நான் குறிப்பிடும் அந்த பேசப்படாத அச்சாணிகள் போர்க்களத்தை நடத்துவதற்கு முன்னணிக்கும், பின்னணிக்கு இடையில் இருந்தவர்கள். பொதுச் சொல்லில் சுருங்கச் சொல்வதென்றால் “விநியோகம்”. அதே நேரம் அது மட்டுமே அவர்களது பணியும் அல்ல. 

உண்மையில் அவர்கள் ஒரு பேரெழுச்சியின் வடிவங்கள். போராட்ட பாதையில் காணப்பட்ட பல பேரெழுச்சிகள் போன்று இவர்கள் தனி வகையினர். இவர்களுடைய மனவோட்டம், உத்வேகம், உழைப்பு, மனவுறுதியை இலகுவில் கணிப்புக்குள் கொண்டுவரமுடியாது. எதோ அதிக build up  கொடுக்கிறேன் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு களமுனையையும், தாக்குதலையும் அவர்கள்தான் நகர்த்தியிருக்கிறார்கள். 

அவர்கள்தான் தாங்கியிருக்கிறார்கள். கெரில்லா யுத்த முறையில் இருந்த தமிழர் போராட்டமானது, இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வெற்றிகொண்ட பின்னர் அது மரபு வழி இராணுவக் கட்டமைப்பாக உருமாற்றம் பெற்று வீச்சுப் பெற்றது. களமுனைகள் பல்வேறு திசைகளில் திறக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் “விநியோகம்” என்பது தவிர்க்க முடியாத ஒரு பாரிய பணியாக மாறிப்போனது. 

கெரில்லா வழி நடந்த நாட்களில் அதிகமாக மக்கள் பொருட்களை சேகரித்து வழங்கினாலும், தனக்கான பொருட்களை தாமே தாங்கி நடந்து போராடவேண்டும் என்பது கெரில்லாப் போராளிக்கான நிலையாகும். என்றாலும், மரபுவழியாக மாறிய ஆரம்ப  நாட்களில் யார் இந்த விநியோகத்தை செய்தார்கள் என்று பார்த்தால், களம் நோக்கிய அனைத்துப் பணிகளையும்  போராளிகளே செய்திருந்தார்கள். ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் அதிக பிரதேசங்கள் வர தொடங்கியதால், போராளிகளின் எண்ணிக்கையும் ஆயுத பயன்பாடும், போர்க்களமுனை தொழிநுட்பங்கள் மற்றும் மக்கள் உட்கட்டுமானங்களின் வளர்ச்சி போன்றவற்றால் “விநியோகம்” என்பது விரிவுபடுத்தப்பட்டது. 

அதன் காரணமாக பெருந்தொகையான உணர்வுள்ள, அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் “விநியோகம்” என்பதற்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் பலரும் மாத ஊதியம் பெறும் பணியாளராக, தமிழீழ அரச சேவையாளர்களாக பணியாற்றினார்கள். ஆக மொத்தத்தில், தனிக்குழுவாக விடுதலை நோக்கி நடந்த ஒரு இயக்கம் அல்லது அமைப்பு, தமிழ் மக்களின் போராட்டமாக உருமாற்றம் காண இதுவே அடிப்படையாகிப் போனது என்றால் கூட பொய்யில்லை. 

இந்த “விநியோகம்” என்கின்ற ஒன்றில் அவ்வளவு முக்கியத்துவம் என்ன இருக்கிறது? என்கின்ற ஒரு வினா உங்களுக்குள் எழலாம். இதுவரை இந்த உலகில் நடந்த அனைத்து யுத்தங்களும் “விநியோகம்” என்ற ஒரு விடயம் இல்லாமல் நிகழ்ந்தே இருக்காது. அது சீனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட வெடிமருந்து யுகத்துக்கு முன்னும் சரி. பின்னும் சரி. முடிவழி மன்னராட்சி நடைபெற்ற காலங்களிலும், இந்த உலகில் மன்னர் ஆட்சியின் கீழ் பல சாம்ராச்சியங்கள் நிறுவப்பட்ட பொழுதும் கூட விநியோகத்துக்கு என பெரும் கட்டமைப்பு நிறுவப்பட்டே இருக்கிறது.  

அதுபோல தாய்த் தமிழில் போரியல் கல்வியையும், தாயக புவிநிலைசார் அமைப்புக்கு ஏற்ப இராணுவத் தந்திரோபாயங்களைக் கொண்ட ஒரு தமிழர்களுக்குச் சொந்தமான இராணுவத்திடம் மட்டும் விநியோகம் இருந்திருக்காதா?  ஆனால் மன்னர்கால திரைப்படங்களில் மட்டுமல்ல வரலாறுகளில் கூட இந்த “விநியோகம்” என்கின்ற பக்கம் பதியப்படுவதில்லை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதும் இல்லை. ஏற்றிவிட்ட ஏணிகளாக அவை அடுத்தடுத்து பணிகளுக்காக போய்க்கொண்டே இருக்கும். 

பதிவு தொடரும் …
எழுதியது வித்தியா சாகரன்

இப் பதிவை பிரதி எடுப்பவர்கள் தயவு செய்து புலர்வின் இணைப்பை பயன்படுத்துங்கள்.