முன்னைய பதிவு

அதுபோல தாய்த் தமிழில் போரியல் கல்வியையும், தாயக புவிநிலைசார் அமைப்புக்கு ஏற்ப இராணுவத் தந்திரோபாயங்களைக் கொண்ட ஒரு தமிழர்களுக்குச் சொந்தமான இராணுவத்திடம் மட்டும் விநியோகம் இருந்திருக்காதா?  ஆனால் மன்னர்கால திரைப்படங்களில் மட்டுமல்ல வரலாறுகளில் கூட இந்த “விநியோகம்” என்கின்ற பக்கம் பதியப்படுவதில்லை. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதும் இல்லை. ஏற்றிவிட்ட ஏணிகளாக அவை அடுத்தடுத்து பணிகளுக்காக போய்க்கொண்டே இருக்கும். 

தொடரும் பதிவு

உலகளவில் செய்யப்பட்ட போர்களில் குறிப்பாக 1 ஆம் , 2 ஆம் உலக யுத்தங்களின் விவரண படங்களிலும், தந்திரோபாயங்களிலும் எதிரியின் விநியோகத்தை, விநியோக களஞ்சியங்களை, விநியோகத்துக்கு உதவியாக பாதைகள், வீதிகளை,  விநியோகம் செய்யும் வாகனங்கள் மற்றும் புகையிரதங்களை, விநியோகத்துக்கு வசதியான பாலங்களை அழித்தல் என்கின்ற ஒரு விடயம் நிச்சயம் உள்ளடங்கியிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

அது போல எதிரிக்கோ அல்லது தமக்கோ விநியோகத்துக்கு இலகுவான பள்ளத்தாக்குகள், கணவாய்கள், ஆறுகள், கடல்களை குறிப்பிட்டு தரையிறங்குவதையும் நீங்கள் அவதானித்திருக்கக் கூடும். அதாவது இயலுமானவரை விநியோகப்பாதைகளைக் கருத்தில் கொண்டே தமது முன்நகர்வுகளை இராணுவ வல்லுநர்கள் மேற்கொண்டதை படித்திருப்பீர்கள்.

அண்மைய செய்தித் தகவலாக இந்திய சீன எல்லைகளில் அருணாச்சல பிரதேசத்திலிருந்து திபெத்துக்கு எல்லையோரமாக இரயில் பாதை அமைத்துக் கொண்டிருக்கிறது சீனா. அதேநேரம் அருணாச்சல பிரதேசத்துக்கு மலைகள் வழி செல்லும் பாதைகளில், சுற்றிக்கொண்டு செல்லாமல் சுலபமாக செல்ல   குகைப்பாதைகளை அமைக்கும் முனைப்பில் இந்தியா ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. எல்லாம் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மக்கள் இலகுவாக செல்லவா?

இல்லை. ஒருபோதும் இல்லை. எல்லையோரத்தில் போர் மூண்டால் தரை வழி விநியோகத்தை இலகுவாக செய்ய மட்டும்தான். அமேரிக்கா, ரசியா, சீனா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகளும், வல்லரசாகத் துடிக்கும் இந்திய உட்பட அனைத்து நாடுகளும் பெருங்கடலில் நிலைநிறுத்த விமானந்தாங்கிக் கப்பல்களை கட்டிக் கொண்டிருக்கின்றனவே. எதற்காக? விநியோகத்தை இலகுபடுத்துவதும் ஒரு காரணமாகும்.

பனாமா கால்வாய், சுவேஸ் கால்வாய், மலாக்கா தொடுவாய் எல்லாம் மக்கள் நன்மைக்காகவா? உலக நன்மைக்காகவா? இல்லை தமது வியாபார விநியோகத்துக்கும், இராணுவ நடவடிக்கைகளின் பொது வேகமான செயற்பாட்டுக்கும் என்றால் அது பொய்யில்லை. ஏனென்றால், பனாமாவில் உள்நாட்டுப்போரை தூண்டியது அமேரிக்கா. பனாமாக்கு அருகில் உள்ள நாடுகளுடன் சண்டையை கோர்த்து விட்டது அமேரிக்கா.

சமரசம் என்று போய் நின்று அபிவிருத்தி என்று போய் நின்றதும் அமேரிக்கா. பனாமா கால்வாய் கட்டப்படுவதற்கு பண உதவியில் இருந்து அனைத்து வளங்களையும் வழங்கி ஆதரித்ததும் அமேரிக்கா. இப்போது புரிகிறதா? விநியோகம் என்பது இலகுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது என்று.

தலைநகர் திருக்கோணமலையில் பிரித்தானிய படைகளால் நிறுவப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய்க்கு குதங்கள் யாவும் எதற்காக? கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில், கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்கு என்பது இலகுவாகவே புரிந்து கொள்ளலாம். இலங்கையில் போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று உலகம் விரும்பி எமது இனம் வேரோடு அழிக்கப் படும்பொழுது உலக நாடுகள் உதவியும் செய்துவிட்டு, மௌனமாகவும் இருந்ததே. எதற்காக?

தமது உற்பத்திப் பொருட்களை  கிழக்குலகின் வர்த்தக சந்தைகளில் விநியோகம் செய்வதற்கு  நாம் தடைக்கல்லாக இருந்து விடுவோம் என்ற தூர நோக்காகவும் இருக்கலாம். கவட்டுக்குள்ளும், மத்தியிலும் காரல் முள்ளாக நாம் நின்றது பலருக்கு வேதனையாகத்தான் இருந்திருக்கும்.

உலக வரலாற்று அத்தியாயங்கள் அப்படியிருக்க, புரிதலுக்காக தமிழரின் போரியல் வழியில் நடந்த விநியோகத்தை மையமாக கொண்டு பேசப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, கொஞ்சம் பின்னோக்கி நாம் நினைவு படுத்திப் பார்க்கலாம். கூடுதலாக, குறிப்பாக இலங்கை இராணுவத்தால் தமிழர் தாயக நிலப்பரப்புகளில், தமிழர்களுக்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து போர் நடவடிக்கைகளும், “விநியோகப் பாதை” என்கின்ற ஒன்றை மையப்படுத்தியேதான் போரை நடத்தியிருந்திருக்கிறார்கள். ஆனால் 2008 மற்றும் 2009  ஆம் ஆண்டு காலபகுதியில் “பெருவீதிகளை தவிர்த்தல்” என்கின்ற ஒன்றை கருத்தில் கொண்டு அந்த போரை கனகச்சிதமாக திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த திட்டத்திற்குப் பின்னால் யார்யார் மூளைகள் இருந்ததோ இல்லையோ, ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களது ஆளுமை நிச்சயம் மிகப்பெரிதாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பெருவீதிகள் என்பதை தவிர்த்து செய்த நடவடிக்கைகளில், இலங்கை இராணுவம் தோல்வியின் விளிம்பில் கூட சென்று திரும்பியிருக்கிறது என்பதை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

அதாவது மன்னார் ஊடாக “அருவி” போல தாயக எல்லைகளை உடைத்துக்கொண்டு முன்நகர்ந்த இலங்கையின் இராணுவம் 2008 மாரிகாலத்தில் வன்னேரி, கிளிநொச்சி காட்டுப் பகுதியை வந்தடைந்திருந்தது. இயற்கையும் எமக்காக போராடியதோ என்னவோ எந்தவருடமும் இல்லாதது போல அந்த வருடம் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. எல்லா இடமும் மழை பரவலாக அடித்து ஊத்திக் கொட்டியது. வீதிகளைத் தவிர்த்து காடுகளுக்குள்ளால் புதிய பாதைகளை அமைத்து முன்னேறிய இராணுவம் குறித்த நாளில் கிளிநொச்சியை கைப்பற்ற முடியாமல் போனதையிட்டு பெரும் சோர்விற்குள்ளானது.

இராணுவத்தினருக்கான வழங்கல், விநியோகங்கள் எல்லாம் போடப்பட்ட காட்டுப் பாதைகளில் புதையத் தொடங்கின. உணவு, மருந்துகள், ஆளணிகளை நகர்த்துவதில் படாத பாடு பட்டது சிங்கள இராணுவம். இப்படியான நிலையில் முன்னகர்வையோ தாக்குதலையோ நம்பி நகர்த்த முடியாமல் திண்டாடியது. அதே நேரம் வன்னேரி தொடர் முன்னரங்கு பலப்படுத்தும் நடவடிக்கையில் தமிழர் தரப்பு தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் விநியோகம் சீராக இல்லாத காரணத்தால் முறிகண்டி, வன்னேரி வரை முன்னேறிய இலங்கை இராணுவம், மாங்குளம் -வெள்ளாங்குளம் வீதியை அண்மித்தவாறாக அதாவது மல்லாவியை மத்தியில் கொண்டு பின்வாங்கும் நிலைக்குள் தள்ளப்பட்டது. ஆனால் அதன்பின், பத்து நாள் பொறுத்துக்கொண்டு, நின்ற இடத்திலேயே நின்று சமாளிக்க இறுக்கமான கட்டளைகளை வழங்கிய சரத் பொன்சேகா, முழங்காவில் பூநகரி ஊடாக கரையோரமாக படையினரை நகர்த்தி 2009 ஆம் ஆண்டு புதிதாகப் பிறந்த பொழுது, தமிழரின் அழிவுக்கு கட்டியம் கூறி ஆனையிறவு, பரந்தன் இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்து போனது. அடுத்து வந்த நாட்களில் துப்பாக்கி வெடியோசைகள் அதிகம் கேட்காமலேயே கிளிநொச்சி நகர் சிங்கள இராணுவத்திடம் மண்டியிட்டது.

பதிவு தொடரும் …
எழுதியது வித்தியா சாகரன்

இப் பதிவை பிரதி எடுப்பவர்கள் தயவு செய்து புலர்வின் இணைப்பை பயன்படுத்துங்கள்.