அடிக்கடி ஊதுகுழலின் சத்தங்களாலும், அணிகளுக்காக வழங்கப்படும் பயிற்சிக் கட்டளைகளாலும் எப்போதும் துடிப்போடே இருக்கும் அந்த மைதானமும், ஒட்டிசுட்டான் பிரதேசத்தின் 9 ஆம் கட்டைப் பகுதியில் இருந்த அடர்ந்த காடும். ஒருபுறம் மாங்குளம் முல்லைத்தீவு வீதியையும், மறுபுறம் முத்தையன்கட்டுக் குளக் கரையையும் எல்லைகளாக கொண்ட அந்த அடர் வனத்துக்குள் தான் துடிப்பான நெருப்புக் குழந்தைகள் தம்மை வெடிகளின் சுவாலைகளுக்குள் ஆகுதியாக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

வானம் தொட்டு நிமிர்ந்த மரங்களால் அந்தக் காட்டு நிலம் சூரியனைக் காண முடியாத நிழலுக்குள் நெருப்பாற்றுக் குழந்தைகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே கவிழ்ந்து படுத்திருக்கும் யானைகளைப் போல அந்தப் பிரதேசம் எங்கும் சிறு மலைகள் விரிந்து கிடந்தன. முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்தும், குளத்தை நோக்கியும் பாயும் தண்ணீரின் சலசலத்த ஓசை எப்போதும் அந்த முகாமுக்கு செவிக்கினிமையான சங்கீதம்.

தமிழீழத்தின் தேசிய விலங்கான சிறுத்தைகள் வாழும் அந்த அடர்ந்த வனத்தில், கரடிகளும், குரங்குகளும் சின்னக் குட்டிகள் முதல் வயதான யானைகள் வரை பட்டி பட்டியாக வாழ்ந்து வந்தன. உணவுக்காக இலைகுழைகளையும், தாகத்துக்காக நீரையும் தேடி அலைமோதிக் கொண்டு வரும் அந்த யானைகள் அசைந்து வருவது எதிரியின் டாங்கிகள் முகாமை நோக்கி வருவதைப் போலவே காட்சி தரும். அழகிய தோகைகளை விரித்தாடும் மயில்களாலும், மான் மரை போன்ற விலங்குகளாலும், மர அணில்களின் கீச்சிட்ட கீதத்தாலும், காட்டுக் குருவிகளின் ரீங்காரத்தாலும் எப்போதும் துடிப்போடுதான் இருக்கும் அந்தக் காட்டுக்குள் தான் “கரும்புலி மேஜர் ஜெயம்” நினைவோடு நிமிர்ந்து கிடந்தது அந்த கரும்புலிகளின் பாசறை.

அதற்குள்தான் இலட்சிய வேங்கைகளும் துடிப்போடு இயங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த முகாம் உயர் பாதுகாப்போடு இருக்கும் ஒரு பயிற்சி முகாம். தங்களது உயிர்களை வெடிமருந்து அங்கிக்குள்ளே விதைத்துவிட்டு, ஒவ்வொரு வினாடிகளும் தமிழீழத் தாயின் விடியலுக்காக தம்மை அக்கினித் தீயில் தியாகிக்கத் தயாராக இருந்த குருதிச்சன்னங்கள் வாழ்ந்த புனித இடம். அங்கிருந்து தான் பல வெற்றிச்சண்டைகளுக்கான கரும்புலி அணிகள் பயணப்பட்டு போய், வெடியோடு வெடியாகியும் வெற்றிச் செய்தியோடு தளம் திரும்பியும், அடுத்த சண்டைக்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, தம்மை தயார்ப்படுத்திக் கொண்டு தமிழீழ விடியலுக்காக வலுச் சேர்த்தார்கள்.

அதில் ஒருவனாகத் தான் விஜயரூபன் இருந்தான். மிகவும் சுறுசுறுப்பும் தன்நம்பிக்கையும் கொண்ட போராளி தமிழீழத்துக்காக நிறையச் சாதிக்க வேண்டும் என்ற உன்னதம் மிக்க இலட்சியம் கொண்டவன். தென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் எனும் இடத்தில் உள்ள விசக்கேணிக் கிராமத்தில் 13.02.1975 ஆம் வருடம் திரு/ திருமதி கந்தசாமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தான்.

மட்டக்களப்பில் நடந்த இந்திய /இலங்கை வல்லாதிக்க சக்திகளின் ஒவ்வொரு இனவழிப்பு நடவடிக்கைகளும் அவனது மனதில் ஆழமாக பதியத் தொடங்கியது. சிறு வயதிலிருந்தே தமிழீழத் தேசத்துக்கான விடியலின் தேவை அவனின் மனதில் நிறையத் தொடங்கி இருந்தது. அதுவே பின்நாட்களில் 4-5 முகாமில் ஒரு கரும்புலி வீரனாக உருமாறி ஜெயம் முகாமில் தமிழீழக் கனவைச் சுமந்தபடி கறுப்பு வரிக்குள் வாழும் எண்ணத்தை விதைத்திருந்தது.

சிவகுணம் என்ற இயற்பெயரைக் கொண்ட புலிவீரன் 1992 ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் இருந்த கானகம் ஒன்றில் போராளிக்கான அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து விடுதலைப்புலியாக தன்னை மாற்றிக்கொண்டு தமிழீழ விடியலுக்காக பயணிக்கத் தொடங்கினான். வெள்ளாமைச்சேனை நோக்கி நகர்ந்த இராணுவத்தினரினை இடைமறித்து நடாத்தப்பட்ட தாக்குதல் அவனது முதற்களமாக வரலாறாகியது. தொடர்ந்து மட்டு அம்பாறை மாவட்ட படையணியில் களமாடிக் கொண்டிருந்த அந்த வேங்கை தென்தமிழீழத்தில் இருந்து வடதமிழீழத்துக்கு வந்திருந்தான்.

விஜயரூபன் வடதமிழீழத்தில் நடந்த பல தாக்குதல்களில் பங்கெடுத்து விடுதலைக்கு வலுச்சேர்த்துக் கொண்டிருந்த, அதே நேரம் தான் கரும்புலியாகி தமிழீழத் தாயகத்துக்காக பணியாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வளர்க்கத் தொடங்கி இருந்தான். அதனால் தமிழீழ தேசியத்தலைவருக்கு கரும்புலி அணியில் இணைவதற்கான அனுமதி கேட்டு கடிதம் எழுதி, அனுமதி கிடைக்காது போனதால் மனமுடைந்து போனான். மீண்டும் மீண்டும் கடிதங்களுக்கூடாக தலைவனிடம் அனுமதி கேட்டு, அனுமதிக்காக காத்திருந்த விஜயரூபன் ஒருநாள் வெற்றி பெற்றான்.

அனுமதி கிடைத்த பூரிப்பிலேயே யாழ்மாவட்டத்தின் சாவகச்சேரிப் பிரதேசத்தின் சம்புத்தோட்டம் பகுதியில் இருந்த கரும்புலிகள் முகாமான 4 – 5 தளத்துக்கு வந்து சேர்ந்திருந்தான். அங்கிருந்து தனங்கிளப்புப் பகுதியில் இயங்கிய கரும்புலிகள் பயற்சி முகாமில் பயிற்சிக்காக 1995 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டு கரும்புலிகளுக்கான கடுமையான சிறப்புப் பயிற்சிகளை இலகுவாக முடித்து சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான். விஜயரூபனுக்கு தலையில் உட்காத்திருந்த வெடிபொருட்களின் சிதறல்கள், சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் போதெல்லாம் பெரும் வலியை உருவாக்கும். சொல்ல முடியாத வேதனை தலைக்குள் உருவாகும். அவனின் வலி ஒருபுறம் இருந்தாலும், விடுதலை வேட்கை, அந்த வலியை விட அதிகமாக இருந்ததால் அவன் தன்னை கரும்புலியாக புடம் போடுவதில் வெற்றி கண்டான்.

விஜயரூபனுக்கு மிருகங்கள் என்றால் அதிகம் விருப்பம். எதிரிக்கு கல் நெஞ்சக்காறனான இவனும் இவனது தோழர்களும் மென்மையான மனதைக் கொண்ட புலிவீரர்கள். மற்ற உயிர்களிடத்தில் தம் உயிரை விட அதிகமான பாசத்தைக் கொண்டவர்கள் அதனால் தான் விஜயரூபன் “சுபோ “ என்று அன்பாக அழைக்கும் பன்றி ஒன்று இங்கே வளர்ந்து வந்தது. விஜயரூபனால் சிறு குட்டியாக கொண்டு வந்து வளர்க்கப்பட்ட அப்பன்றி, எப்போதும் விஜயரூபனின் ஆதரவிலும் தோழர்களின் பராமரிப்பிலும் என்றும் நலமுடனே இருந்தது.

அந்த நேரத்தில் எங்கள் தேசமே பெரும் இக்கட்டான சூழலுக்குள் இருந்தது. சூரியக்கதிர் 1-2 என்று படையெடுத்து வந்த சிங்களப்படைகளோடு பொருதிய எம் படையணிகளும், மக்களும் அரசியல் தந்திரோபாய பின்நகர்வு ஒன்றை ஏற்படுத்தி தமிழீழத்தின் இதயமாக விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்புக்குச் சென்ற போது, விஜயரூபன் உள்ளடங்கலான அந்தக் கரும்புலிகள் அணியும் யாழ்ப்பாண மண்ணை விட்டு மனம் முழுவதும் தேசத்தலைமகனின் கட்டளையை ஏற்க வேண்டிய நிலையில் வெளியேறியது.

தம்மை முற்றுமுழுதான கரும்புலிகள் அணிக்கான பயிற்சிகளை மணலாறு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் இருந்த அந்தமான் வெட்டைப்பகுதியில் வைத்து பெறத் தொடங்கியது இந்த அணி. ஆனாலும் குறுகிய காலத்துக்குள், மீண்டும் சில காரணங்களுக்காக அங்கிருந்து நகர்ந்த அவ்வணி ஒட்டிசுட்டான் பகுதியில் “ஜெயம்” பெயர் சுமந்த இந்தப் பயிற்சி முகாமை உருவாக்கிக் கொண்டது. சாதாரணமாக இம் முகாம் உருவாக்கப்படவில்லை. பலத்த இடர்களைச் சுமந்தார்கள் போராளிகள். இரகசிய முகாம் என்பதால் ஒவ்வொரு பணியையும் போராளிகளே செய்தார்கள். சிறிய பாறைகளை உடைத்து பதுங்குகுழிகளை உருவாக்கியது முதல், பயிற்சி மைதானத்தில் நின்ற பாரிய மரங்களை அகற்றியது வரை உருமறைப்பும் குலைந்து போகாது அம்முகாம் சீராக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு அருகிலேயே மகளிர் கரும்புலிகளுக்கான முகாமும் உருவாக்கப்பட்டது.

இங்கு தான் தமிழீழ வரலாற்றின் முக்கிய சண்டையாக இருந்த சீனங்குடா விமானத்தளத் தாக்குதலுக்காக இவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அதற்காகவே இக் கரிய வேங்கைகள் விசேட பயிற்சி ஒன்றினைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். மேஜர் மாதவன் மாஸ்டரின் பொறுப்பில் இருந்த அந்த முகாமில் அந்த அணிக்கு துறை சார்ந்த பயிற்சி ஆசிரியர்களினால் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. பலநூறு கரும்புலிகள் தமக்கு இந்த இலக்கு கிடைத்துவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்க அவர்களுக்குள் இருந்து இவர்களுக்கு மட்டுமே அந்த சந்தர்ப்பத்தை தமிழீழ விடுதலையின் வரலாறு அன்று கொடுத்திருந்தது

தமிழீழ தேசியத்தலைவரினால் அன்போடு தாத்தா என்று உரிமையோடு அழைத்து உறவாடும் கரும்புலி சுபேசன் தலைமையில் சிற்றம்பலம், விஜயரூபன், நிவேதன், நிலவன், றெஜி, தனா, மங்கை என அந்த அணியில் கரும்வேங்கைகள் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்வில் மாதிரிப்பயிற்சிகளைப் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எப்போதும் தமிழீழ விடியலுக்காக சாகத் துணிந்த வேங்கைகள். விடுதலை வேங்கைகளின் சாவு ஒவ்வொன்றும் தமிழீழத்திற்கு பாரிய இழப்பாகும். அதனால் இவர்கள் குறைந்த இழப்போடு எதிரிக்கு பாரிய இழப்புக்களைக் கொடுக்க வல்ல உயர் பயிற்சிகள் வழங்கப்பட்டு முடிந்தளவு எதிரிக்கு இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தரைக் கரியபுலிகளாக நிமிர்ந்து நிற்க வளர்க்கப்பட்டார்கள்.

சீனங்குடா விமானத்தளத்தை தாக்கி அழித்து சிங்கள ஆதிக்கவெறியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்றைக் கொடுக்க வேண்டிய தருணம் ஒன்றை திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறை சார்ந்த போராளிகள் மற்றும் திருமலை மாவட்ட வேவு அணி ஆகியவை உருவாக்கி இருந்தன. முழுமையான வேவுத்தகவல்களுடன் தேசியத்தலைவருக்கு அந்தத்திட்டம் போய் சேர்ந்தது.

வேவுத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் முழுவதும் சரியாகப் போடப்பட்டு சீனங்குடா விமானநிலையத்தை தாக்கி அழிப்பதற்கான தாக்குதலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர் இக் கரும்புலிகள். பயிற்சிகள் அனைத்தும் நிறைவாகி இருந்தது.

இவ்வணிக்கான உணவு எவ்வாறு இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்ட போது, விடுதலை அமைப்பு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்ததை மறுக்க முடியாது. ஆனாலும் இவ்வணிக்கான உணவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கூட தேசியத்தலைவர் சரியாகத் திட்டமிட்டார். இவ்வணிக்கான உணவு தயாரிக்கப்பட்டு உணவின் மாதிரி தலைவருக்கு அனுப்பப்பட்ட போது, அதன் சத்தூட்டம் குறைவாக இருப்பதாகவும், ஊட்டச்சத்துமிக்க உணவு தயாரிக்குமாறும் பணிக்கப்பட்டது
பின்பு நிறையூட்டம் மிக்க உணவு தயாரிக்கப்பட்டு அணிக்கு வழங்கப்பட்டது. இதைப் போலவே ஆயுத, வெடிபொருட்களும் சரியாக திட்டமிடப்பட்டது. இவை அனைத்தும் தமிழீழத்தின் தலைமகனின் நேரடி கண்காணிப்பில் நடந்து முடிந்தன.

ஆயுத வழங்கல், உணவு வழங்கல் எல்லாம் சரிபார்க்கப்பட்டு அந்த அணி செம்மலைப்பகுதிக்கு நகர்ந்திருந்தது. அங்கிருந்து கடற்புலிகளின் இரகசிய அணி ஒன்றின் படகின் மூலமாக திருகோணமலைக்குச் சென்றடைகின்றனர். அங்கிருந்து கரும்புலிகளணி நகரத் தொடங்கியது. சிங்களத்தின் உயர் பாதுகாப்புப் பகுதியாக இருந்த அவ்விடத்தில் சாதாரணமாக ஊடறுத்துச் சென்றது கரும்புலி சுபேசனின் அணி. பெருங் காடுகளையும் சரி, நீர்நிலைகளையும் சரி இருள் பகல் என்ற வித்தியாசம் இன்றி கடக்கக் கூடிய கரும்புலிகள் அணி அந்த அடர்காட்டையும் இடையில் சந்தித்த அனைத்து இயற்கையின் தடைகளையும் இலகுவாகக் கடந்து சீனங்குடா விமானத்தளத்தின் எல்லைக்குள் வந்திருந்தது.

எதிரியின் ஒவ்வொரு விமானத்தையும் உடைத்தெறியக்கூடிய வலுவான கனரக ஆயுதமான லோவை சிற்றம்பலமும், விஜயரூபனும் வைத்திருந்தார்கள். எதிரியின் எந்தத் தடைகளையும் தரித்து நிற்கும் ஒவ்வொரு விமானங்களையும் நிச்சயம் உடைத்தெறியப்போகும் இந்த அணி தடை வெட்டி உள்ளே செல்வதற்காக காத்திருக்கிறது. சிற்றம்பலமும், விஜயரூபனும் அந்த இருட்டுக்குள் கம்பி வேலி அருகே இருளோடு இருளாக நகர்கிறார்கள். ஏனையவர்கள் சிற்றம்பலத்துக்கு பாதுகாப்பளித்தபடி காத்திருக்கிறார்கள்.

அவர்கள இருவரும், ஒவ்வொரு கம்பியாக வெட்டி பாதையை ஏற்படுத்துகிறார்கள். இன்னும் ஓரிரு நிமிடங்களில் அந்த முகாம் கரும்புலிகள் அணியிடம் நிச்சயமாக ஆளுகைக்குள் வரும் என்பதில் எந்த மறுதலிப்பும் இல்லை. இந்த நிலையில் OP யில் நின்ற இராணுவத்தினன் ஒருவன் சிற்றம்பலம் கம்பி வெட்டுவதைப் பார்த்துவிட்டான். ஆனால் எதுவுமே செய்யவில்லை. எதற்காகவோ அமைதியாகி விடுகிறான் அந்த சிப்பாய். ஒருவேளை தான் கண்டுவிட்டதை இவர்கள் அறிந்தால் தன்னைச் சுட்டு விடுவார்கள் என்று பயந்திருப்பான் போல, அவனின் அமைதி இவர்களுக்குச் சாதகமாகியது. கரும்புலிகளணி சிற்றம்பலத்தால் வெட்டி எடுக்கப்பட்டிருந்த பாதையூடாக உள்நுழைகிறது.

ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டிருந்த விமானங்களை நோக்கி வேகமாக நகர்கிறது. அப்போது காவலணியில் இருந்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த சிங்களவர்கள் சிலர் கௌத … கௌத … என்று கேட்டபடி கரும்புலிகள் அணியை நோக்கி வருகின்றார்கள். கரும்புலிகள் எந்த பதிலும் இன்றி ஓடுதளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்க, இவர்களை யார் என்று புரிந்து கொண்ட விமானப்படையினர் உடனடியாக விமானதளத்தை உச்ச விழிப்பு நிலைக்குக் கொண்டுவரக் கூடியதாக விழிப்புநிலை அலாரத்தை அடித்து விடுகிறார்கள். அதனால், விமானநிலையம் உச்சக்கட்ட விழிப்பு நிலைக்கு வந்திருந்தது. எதிர்த்தாக்குதல்கள் பலமாக இருந்தது. எதிரியின் தாக்குதல்களை ஊடறுத்து விமான ஓடுபாதைக்கு வந்து சேர்ந்திருந்த கரும்புலிகள் அணி தேடி வந்த இலக்கை கண்டு கொண்டார்கள். ஆனால் சிறு ஏமாற்றமும் கூட. பல விமானங்கள் வானத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. அதனால் அவற்றை லோ ரக ஆயுதத்தால் சுட முடியவில்லை. மேலெழுந்த விமானங்கள் மீது லோவால் அடிக்க முடியாது போனது. விமானங்கள் பல மேலெழுந்து விட்டன.

அதே நேரம் சிற்றம்பலத்தின் லோவும், விஜயரூபனின் லோவும் அங்கே தரித்து நின்ற Y-12 ரக விமானம் மீது குறி வைக்கின்றன. ஆனால் எதிரியின் ரவைகள் சிற்றம்பலத்தின் உடலை ஊடுருவுகின்றன. அதைத் தாண்டியும் Y-12 வானூர்தி தீப்பற்றி எரிகிறது. எதிரியோ பலத்த எதிர் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கின்றான். சிற்றம்பலம் விமானம் தகர்க்கப்பட்ட அதே பொழுது தனது வெடியுடையை வெடிக்க வைத்து காற்றோடு கலந்து போகிறார்.

அங்கே இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கியை கைப்பற்றி இருந்த நிவேதனும் மற்றைய கரும்புலிகளும் அதனைப் பயன்படுத்தி விமானங்களைத் தாக்க முயற்சி செய்கின்றார். ஆனாலும் அந்த ஆயுதம் பற்றிய அடிப்படைப் பயிற்சி இல்லாத நிலையில் கரும்புலிகள் அணியால் அவ்வாயுதத்தைப் பயன்படுத்தி வானில் எழுந்த விமானங்களைத் தாக்கி அழிக்க முடியவில்லை. பல முயற்சிகள் செய்தும் பலனில்லாது போக உடனடியாக விமான எதிர்ப்பு ஆயுதத்தை தகர்க்குமாறு சுபேசன் கட்டளையிடுகிறார்.
நிவேதன் விமான எதிர்ப்பு ஆயுதத்துடனே வெடித்து சிதறிக் காற்றோடு கலந்து கப்டன் நிவேதனாக வீரச்சாவடைகின்றார்.

பல சண்டைக்களங்களைக் கண்டு திரும்பிய அந்த கருவேங்கைகள் இருவரும் கந்தக வெடியிலே காற்றோடு கலந்துவிட விஜயரூபன் விழுப்புண் அடைந்து வீழ்கின்றார். சுபேசன் தன் அணியை பின்நகருமாறு கட்டளையிட்டார். காயப்பட்டிருந்த விஜயரூபனைத் தூக்கியபடி அக்கரும்புலிகள் அணி நகரத் தொடங்கியது. மேஜர் சிற்றம்பலத்தையும், கப்டன் நிவேதனையும் அந்த மண்ணில் காற்றுக்குள் தேடியபடி அவர்கள் பின்நகரத் தொடங்கினார்கள்.

காயத்தின் கனதியில் முனகிக் கொண்டிருந்த விஜயரூபனின் குப்பியை போராளிகள் கழட்டிவிட்டார்கள். ஒருவேளை விஜயரூபன் குப்பியை கடித்து விடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனால் விஜயரூபனின் கழுத்தில் இருந்த இரட்டை குப்பியை கழட்டிக் கொண்டு எவ்வளவு வேகமாக பின்நகர முடியுமோ அவ்வளவு வேகமாக தளம் நோக்கி நகர்கிறார்கள். வெடியுடையை இழுத்து வெடிக்க வைக்கலாம் என்ற அபாயம் இருந்ததால் அதையும் கழட்டி எடுத்திருந்தார்கள் மற்றவர்கள். ஏனெனில் காயத்தின் வேதனையில் நினைவு தப்பி வெடியுடை வெடிப்பியை விஜயரூபன் இழுத்துவிட்டால் பெரும் ஆபத்துக்கள் வந்துவிடும்.

1 – சாச்சரை இழுத்தால் தூக்கிக் கொண்டு வரும் போராளிகளுக்கும் ஆபத்தாகலாம்.
2 – சாச்சர் வெடித்து சிதறும் சத்தத்தை வைத்து கரும்புலிகள் அணி எந்த பாதையால் பின்நகர்கிறார்கள் என்பதை எதிரி கணித்துவிடுவான்.

இவ்விரண்டு அபாயகரமான நிகழ்வுகளை விஜயரூபன் உட்பட்ட அவர்கள் எவரும் விரும்பவில்லை. அதனால் வெடியுடை விஜயரூபனிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது வியரூபனின் வயிற்றுக்காயம் பாரியதாக இருந்ததால் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. முடிந்தளவு முதலுதவி செய்து இரத்த வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி இருந்தாலும், குருதி வெளியேறுவது தவிர்க்க முடியாமல் இருக்கின்றது.


“டேய் என்னை சுட்டுப்போட்டு போங்கோடா….”
விஜயரூபன் கனத்த குரலில் கத்திக் கொண்டிருக்கிறார்.

டேய் சொன்னால் கேளுங்கோடா… என்னால உங்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாதடா என்னை சுடுங்கோடா… இல்லை என்றால் குப்பியை தாங்கோடா நான் கடிக்க போறன் என்று கத்திய விஜயரூபனை சுபேசன் சமாதானப்படுத்துகிறார். எப்படியாவது நாங்கள் விஜயரூபனை வன்னிக்கு கொண்டு சென்றுவிடுவோம் என்று நம்பினார் சுபேசன். அந்த நம்பிக்கையையூட்டியபடி பின்நகர்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆனால் விஜயரூபனோ தன் காயத்தினால் வெளியேறிக் கொண்டிருக்கும் குருதியை தடம்பற்றி எதிரி பின்நகர்ந்து வரலாம் தன்னைத் தூக்கிக்கொண்டு நகர்வதால் மொத்த அணியும் வேகமாக நகர முடியாத சூழல் இருப்பதால் ஆபத்து மிக அதிகம் என்றும் சுட்டிக்காட்டி, தன்னை சுடுமாறு பணித்துக் கொண்டிருந்தார்.

பொறுப்பாக வந்த சுபேசனுக்கு உண்மை புரிந்தாலும், தன் நண்பன் சாவதை அவர் விரும்பவில்லை. முடிந்தளவு விஜயரூபனின் கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமலே நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

எப்படி அவரால் விஜயரூபன் கேட்பதைச் செய்ய முடியும்?

கொஞ்ச நேரத்துக்கு முன்பாக விமான நிலையத்தைத் தாக்கிக் கொண்டிருந்த கரும்புலிகளணியின் தலைவனான சுபேசனின் அருகில் வந்த சிங்களப் படையினன் ஒருவன் தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்த கட்டிடத்தைச் சுற்றி ஓடுகிறான். அப்போது அவனுக்கு எதிர்புறமாக ஓடி வந்த சுபேசன் அவன் மிக அருகில் இருந்தும் அவனை சுடவில்லை. அவனோ பின்புறமாக திரும்பி மீண்டும் அக்கட்டிடத்தை மறுபக்கமாக சுற்றி ஓடினான். மீண்டும் எதிரே வந்து இடைமறித்த சுபேசன் அப்போதும் அந்த இராணுவத்தினனை சுடவில்லை. அவனும் மீண்டும் மீண்டும் அக் கட்டிடத்தை சுற்றி ஓடுவதும் மறிபடுவதுமாக நின்ற போதும் அவனுக்கு ஒரு சிறு காயத்தை கூட இந்த கரும்புலிகள் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அவன் அப்போது நிராயுதபாணியாக நின்றான். யுத்த தர்மங்களில் இதுவும் ஒன்று. மனிதாபிமானம் மிக்க தலைவனின் பிள்ளைகள் அந்த இராணுவத்தை உயிரோடே விட்டுவிட்டு பின்நகர்ந்தார்கள். ஆயுதமின்றி பயத்தில் ஓடிக் கொண்டிருந்தவனை சுட்டுவிட அந்த கரிய உடை உடுத்த நெஞ்சங்களால் முடியவில்லை

சிங்கள இராணுவமும் அரசும் எம் மக்களை துன்புறுத்தி, கொடுமை செய்து, கற்பழித்து, கொன்று குவித்தாலும், எம் போராளிகள் எந்தப் படைக்கு எதிராக களமாடிக் கொண்டிருந்தார்களோ, அந்தப் படையினனையே நிராயுதபாணியாக நின்றதால் உயிரோடு விட்டு வந்ததை தமிழீழ வரலாறு பதிவாக்கிக் கொண்டது.
இவ்வாறான மனநிலை உள்ள இவ்வணித் தலைவனால் எவ்வாறு நண்பனின் கோரிக்கையை நிறைவேற்ற இயலும்? ஆனாலும் குறித்த சில மீட்டர்கள் நகரும் முன்னமே மீண்டும் விஜயரூபனின் கட்டளை…

சுபேசன் அண்ண… என்னைச் சுட்டுப்போட்டு மற்றாக்கள காப்பாத்துங்கோ அண்ண… பிளீஸ்.

அந்த இடத்தில் வேறு யாராவதாக இருந்தால் தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்றுதான் கத்தி இருப்பார்கள். இவர்கள் கரும்புலிகள். மற்றவர்களுக்காக சாகத்துணிந்த நெருப்புப் பந்துகள். எப்பொழுதும் தம் உயிரை விட தமிழீழத்தை அதிகமாக நேசிப்பவர்கள். அதனால் தான் தன்னைக் காப்பாற்றுங்கள் என்பதைப் போலவே எப்படியாவது என்னை சுட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அந்த கரும்புலி வீரன். இதற்கு மேல் என்னால் நகர முடியாது என்னை கீழே கிடத்துங்கள் என்று கட்டளையிட்ட விஜயரூபன் வயிற்றுக் காயத்தையும் தாண்டி சாறத்தினால் உருவாக்கப்பட்டிருந்த காவுப் படுக்கையிலிருந்து எழுந்து அமர முயல்கிறான். அது இன்னும் ஆபத்தைத் தரலாம் என்ற நிலையில் நிலத்தில் படுக்க வைத்தார்கள் தூக்கி வந்த போராளிகள்.

விஜயரூபனோ பிடிவாதமாக இருந்தான். தன்னால் இந்த அணி ஆபத்தில் மாட்டக்கூடாது என்ற உறுதியோடு இருந்தான். இவர்கள் அனைவரும் நிறைய சாதிக்க வேண்டியவர்கள். தன்னால் ஏற்படும் வேகத்தடையும், ஆபத்தும் இவர்களின் உயிர்களைப் பறித்தால் தேசியத்தலைவனின் பல தூரநோக்குச் சிந்தனைகள் சிதறிப் போய்விடும். சாதிக்க வேண்டியவர்கள் பின்நகரும் போது வீணாக தன் ஒருவனால் சாவது என்பது கொடுமையானது என்பதை அவர்களுக்கு பிடிவாதமாக உணர வைக்க முயன்றான். ஆனால் அவர்களும் பிடிவாதமாக இருந்தார்கள். தம்முடைய நண்பனை காப்பாற்றியே தீருவோம் என்ற முடிவில் இருந்தார்கள். இவர்களின் பிடிவாதமும் விஜயரூபனின் பிடிவாதமும் அந்த அணியின் நகர்வில் தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில், சுபேசன் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டியவராக இருந்தார்.

உடனடியாக நிலமையை கட்டளைப்பீடத்துக்கு தெரியப்படுத்தி முடிவெடுக்கவும் முடியாத நிலை. இவர்களது தொடர்பாடலை ஊடறுக்கும் எதிரி இவர்களின் தற்போதைய நிலையை அறிந்து கொண்டு விடலாம். அது இன்னும் அதிகமான ஆபத்தை தரலாம். சுபேசன் என்ன செய்வதென்றாலும் உடனடியாக அந்த முடிவை எடுத்தாக வேண்டும். இல்லையேல் எதிரியின் முற்றுகைக்குள் ஏனைய கரும்புலிகள் மாட்டுப்படலாம். அழுதழுது சிவந்து போய்விட்ட விழிகளோடு ஒவ்வொருவரையும் பார்க்கிறார் சுபேசன். அனைவரும் வேண்டாம் அண்ண என்பதைப்போலவே தலையசைக்கிறார்கள். ஆனால் நிலமையின் தீவிரம் அந்த முடிவை எடுக்க வைக்கிறது. தம் உயிரை இழக்கத் தயாராக இருந்த ஒவ்வொரு கரும்புலிகளும் தம் நண்பனின், தம் சகோதரனின் உயிர் தமக்காக தம்முன்னே பறிபோவதை பார்க்க முடியாமல் தவித்தார்கள்.

நீண்ட தூரம் பின்நகர்வுப் பயணம், அணியில் இருந்த மருத்துவ வளமும் மிகக் குறைந்த முதலுதவி சிகிச்சைக்கான வளமே. ஆனால் கடக்க வேண்டிய தூரமோ கனமானதும் அதிகமான தூரத்தையும் கொண்டது. இந்த நிலையில் எல்லாவற்றையும் யோசித்து முடிவுக்கு வந்தார் சுபேசன்.

தன்னிடம் இருந்த ஒலியமுக்கி பூட்டப்பட்டிருந்த கைத்துப்பாக்கயை எடுக்கிறார். அவரால் அதைச் செய்துவிட முடியாது அதனால்,


“அவன் சொல்லுறத யாராவது செய்யுங்கோ “

தன் அணியையோ, விஜயரூபனையோ திரும்பிப் பார்க்காமல் தன் கைத்துப்பாக்கியை தன் அணியில் இருந்தவர்களிடம் கொடுக்கிறார். யாருமே வாங்க மறுக்கிறார்கள். யாருமே வாங்கவில்லை. விஜயரூபனை திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த முடிவு மிகக் கொடுமையான தருணத்தை அவர்களுக்குத் தந்தது. அவர்கள் யாரும் அதை செயற்படுத்த விரும்பவில்லை. சுபேசனின் விழிகள் கசிந்தது. முடிவும் கசந்தது. ஆனால் உருவாகப் போகும் மிக ஆபத்தான சூழலைத் தவிர்ப்பதற்கு இந்த முடிவே சரியானதாக அவர்களுக்கு புரியவைத்தான் விஜயரூபன்.

தன்னைச் சுட்டுப்போட்டுத் தன் ஆயுதத்தை அண்ணையிடம் கவனமாக கொண்டு போய்க் கொடடா என்று வீரச்சாவடைந்த லெப். சீலன் வழி வந்த புலிவீரன் தன் இலட்சியக்கனவு வெல்லப்பட வேண்டுமாயின் தன் அணி பாதுகாப்பாக தளம் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். அதனால் தன்னிடமே துப்பாக்கியை தருமாறு பணித்தான். தானே தன்னைச் சுடுவதாக வேண்டினான். எவருக்கும் அந்தத் துப்பாக்கியைக் கொடுக்க முடியாது இருந்தது.

காயத்தின் கனதியில் முனகியபடி மெதுவாக வேண்டிக் கொண்டிருக்கும் தம் தோழனை எப்பிடியாவது காப்பாற்றிவிட வேணும் என்று எண்ணிக் கொண்டிருந்த அவர்களால் எப்படி அந்தப்பணியைச் செய்ய முடியும். அவர்கள் அவனைத் திரும்பிப் பார்க்காமலே நின்றார்கள். சுபேசனின் உடல் எதற்கும் தளர்ந்ததில்லை. அன்று மிக மோசமாக சுபேசன் உட்பட அனைவரும் தளர்ந்து போனார்கள். விழிகள் கசிந்து ஆறாகப் பெருக்கெடுத்தது.

விஜயரூபன் அந்தக் கானகத்தில் சத்தமில்லாத துப்பாக்கி ரவையினால் விழி மூடி தமிழீழத் தாய் மடியில் துயிலாகிப் போனான். அவன் நினைவுகள் சுமந்த ஏனையவர்கள் பின்நாட்களில் அவனின் எண்ணத்தைப் போலவே சாதித்துத் தமிழீழத்துக்கு உரமாகிப் போனார்கள்.