கடந்த சில நாட்களுக்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் அவர்களது வலிகளை புகைப்படங்களாக தொகுத்து “உத்தரிப்புக்களின் அல்பம்” என்ற தொனிப் பொருள் தாங்கி புகைப்படக் கண்காட்சி மூலம் தமிழர் தாயகத்தில் நடத்தி முடிக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு முகத்தை வெளிக் கொண்டு வந்த இளம் ஊடகவியலாளரான குமணன் இன்று காவல்த்துறையால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை (CCTv ) அகற்றுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அவற்றை உடனடியாக அகற்ற பொலிஸாருக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் குமணன் கொக்கிளாய் பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேரடியாக எம் செய்திப்பிரிவு குமணனுக்கு தொடர்புகளை ஏற்படுத்தியும் தொடர்பு கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்தும் முயற்சிக்கின்றோம். மேலதிக செய்திகள் விரைவில்…

இரண்டாம் இணைப்பு:

செய்தியாளர் மயூதரனின் முகப்புத்தக பதிவில் இருந்து

முல்லைத்தீவு ஊடகவியலாளர் Kumanan Kana மீது தாக்குதல் நடாத்தி இனவாத கருத்துக்களால் தகாத வார்த்தைகளால் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பேசி அச்சுறுத்தியுள்ளனர்.

செம்மலை பிள்ளையார் கோவில் பெயர் பலகை நீக்கப்பட்டமையை கண்டித்து , பெயர் பலகையை மீள நாட்ட நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊரவர்கள் சென்ற போது , அங்கு சட்டவிரோதமாக விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்குவின் அழைப்பில் அங்கு வந்த பொலிஸார் ஊரவர்கள் அனைவரையும் நிலத்தில் அமர்த்தி அவர்களின் பதிவுகளை மேற்கொண்டனர்.

அது தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை படம் எடுக்க விடாது தடுத்த பொலிஸார் , ஊடகவியளாலர்களை படம் எடுத்து அச்சுறுத்தினார்கள். அதேவேளை அப்பகுதியில் பிக்கு CCTV கமராக்களையும் பொருத்தி உள்ளார். அது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. குறித்த செய்தியினை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்களில் குமணனும் ஒருவர்.

இந்நிலையில் நேற்றைய சம்பவங்கள் தொடர்பில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து நீதிவான் CCTV கமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து குறித்த CCTV கமராக்களை அகற்றுமாறு பிக்குவிடம் பொலிஸார் கூறிய போதிலும் பிக்கு அதற்கு உடன்படவில்ல.

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் செயற்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களை புகைப்படம் எடுக்கவிடாது , பொலிஸார் தடுத்துள்ளனர். அதன் போது ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , தமிழர்கள் தொடர்பிலும் தகாத வார்த்தைகளால் பேசி , இனவாத கருத்துக்களாலும் பேசியுள்ளனர்.

அதேவேளை நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற பொலிஸார் பிக்குவிற்கு சார்வாக செயற்பட்டனர் எனவும் குற்றம் சாட்டபட்டப்படுகின்றனர்.

நன்றி மயூதரன்.