ஒரு நாள் அரக்கப் பரக்க நாங்கள் உயிர் காக்கும் பணி செய்து கொண்டிருந்த அந்த களமருத்துவமனைக்கு எமை தேடி நான்கு கால்கள் கொண்ட நண்பர்கள் இருவர் வந்திருந்தார்கள்.வந்தவர்கள் இருவரும் எமையும் கடந்து உள்ளே பணியில் மூழ்கிப் போயிருந்த மருத்துவர் அருள் அவர்களிடம் சென்று குதூகலித்தார்கள் வாலினை வேகமாக ஆட்டி அவரின் கால்களில் பணிந்து ஒரு வகையான கூச்சல் ஒலியினை எழுப்பி தங்களது அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்.செல்லப்பிராணிகளை தனது பிள்ளைகள்போல் பார்க்கும் குணவியல்பு இவரிடம் இயல்பாகவே இருந்தது!

ஆம், கடினமிகு காலமெலாம் தனது மக்களுக்கு அருமருந்தாக இருந்து கடமையாற்றிய Dr.அருள் அவர்களின் 90 ஆம் நாட்கள் தாண்டிய நிலையில் இன்று என்னிடம் ஒளிகொண்ட இந்த
ஒளிப்படம்கிடைத்தது.ஒளிப்படப்படத்தினை பார்த்தவுடன் எந்தனது நினைவுப்பெட்டகம் வேகமாக கிண்டிக் கிளறப்பட்டதை போன்றதோர் உணர்வு எழுந்து வேதனையையும் ஒருவகையான நெருடலையும் தந்தது.ஆம், எங்கள் வரலாற்றில் 1995 ஆம்ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்குடா நாட்டின் வலிகாமம்
பகுதியிலிருந்து எட்டு இலட்சம் மக்கள்
ஒரு நாளில் வண்ணாத்தி பாலத்தை
தாண்டி சென்றனர். சமாதான தேவதையாக ஆட்சிக்கட்டிலேறிய சந்திரிக்கா அம்மையார் சூரியக்கதிர் – 01 நடவடிக்கையென எமை சுட்டெரித்த போது மக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் தென்மராட்சிக்கும் வன்னி பெருநிலப்பரப்புக்கும்
சென்றனர்.அந்த நேரத்தில் அங்கு தங்கி நின்று பின் களப்பணி செய்த
நாங்கள் கால்நடைகள், மக்களின் செல்லப் பிராணிகள் பட்ட அவலங்களையும் பார்க்க வேண்டிய
ஒரு துர்பாக்கிய சூழ் நிலைக்கு உள்ளானோம்.எதிரிக்கு எதிராக மூர்க்கமுடன் களமாடிய போராளிகளின் மருத்துவர்களாக பணியாற்றியபடி வீரச்சாவு அடைந்த வீரர்களின் வித்துடல்களையும் பழுதடையாது பாதுகாத்து காரிருளின் துணை கொண்டு குருநகர் கடல்வழியாக அனுப்பிக் கொண்டிருந்தோம்.அத்துடன் ஆர்ப்பரித்தெழுந்த ஆட்லெறி,அஞ்சிஞ்சி குண்டுகள்,புக்காரா மற்றும் சுப்பசொனிக் விமானகுண்டுகளால் உடல் சிதறி சின்னாபின்னமாய் இறந்த கால்நடைகள் செல்லப்பிராணிகள் என அனைத்தையும் குழிதோண்டி புதைக்கவேண்டியிருந்த வேல்லைகள் உட்பட பல வேலைகளை செய்து கொண்டிருந்தோம். அவலமான அந்த நேரத்தில் ஒரு வீட்டில் நாய்கள் வித்தியாசமாக ஊளையிட்ட வாறே குரைக்கும் சத்தம் கேட்டது.நாய்கள் ஊளையிட்டுக் குரைக்கும் சத்தம் எங்களுக்கு ஒருவகையான அச்சத்தையும் அதே நேரம் கவலையையும் ஏற்படுத்தியது.

காரணம் நாய் ஊளையிடுவதையும் கோட்டான் அல்லது ஆந்தை கத்துவதையும் அபசகுனமாகவே (Bad omen )பார்க்கும் வயதான பேரன் பேத்திகளின் மடியிலிருந்து நாங்கள் வளர்ந்தவர்கள் அல்லவா? அந்த வீட்டுக்காரர் குடும்பத்தோடு இறந்திருக்க வேண்டும் அல்லது குடும்பத்தோடு கால் போன திசையில் எங்கேயோ ஓடி ஒழிந்திருக்க வேண்டும் என எண்ணியவாறு நாய்கள் குரைக்கும் திசையினை நாம் சற்று
நெருங்கி உண்ணிப்பாக கவனித்தே மெல்ல மெல்ல நடந்தோம். இரண்டு நாய்கள் கூட்டிற்குள் அடைபட்டிருந்த நிலையில் மிகுந்த பசியாலும் வாடியிருந்தன.

அந்த இரண்டு நாய்களும் “ஜேமன் செப்பேட்/German Shepherd அல்லது அலிசேசன்/Alsatian cross” வகைசயைச் சேர்ந்த உயர்ந்த இனத்தை சேர்ந்தவையாக காணப்பட்டன.
அவை இரண்டும் விலையுயர்ந்த பென்னம் பெரிய நாய்கள் ஆகவேதான் கூட்டில் அடைத்து வளர்த்திருந்தனர்
என்பது புரிந்தது. கிட்டத்தட்ட எனது இடுப்பளவு உயரமானவையாகவும் அழகானவையாகவும் அதே நேரம் பயங்கரமானதாகவும் அந்த நாய்கள் காணப்பட்டன. வெளியே தலை தூக்க முடியாத குண்டுவீச்சுகளாலும்
இக்கட்டான சூழ்நிலையிலையிலும்
எப்படியாவது கூட்டை திறந்து விடவேண்டும் என்பதே மருத்துவர் அருளின் ஒரே ஒரு தீர்வாக இருந்தது.
அதே நேரம் தொடர்ந்தும் அவைகளை நாங்கள் பாதுகாக்கவோ கடல்வழியாக கொண்டு வரவோ முடியாது.

எப்படியாவது நாய்களை திறந்துவிட வேண்டும் ஆனால் அனேகமானோர்
நாய்க்கூண்டினை திறந்துவிட முன்வரவில்லை.ஏனெனில் பசி வெறியோடு இருக்கும் அலிசேசன் நாய்கள் கடித்துக் குதறிவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. மற்றைய காரணம் எங்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லை, அல்லது ஜீவகாருண்யம் குறைவாகவே இருந்தது என்று கூட சொல்லலாம் .
அந்த வேளையில்தான் எங்களுக்கு
சாப்பாடு வந்திருந்தது.அந்ந சூழ்நிலையில் சாப்பாடு என்பதை
நிறையுணவு என்று சொல்ல முடியாது. ஓரளவு பசியினை விரட்டக்கூடிய உணவுகள் களத்திற்கு வருவதுண்டு
தரைப்பாதையை இராணுவம் கைப்பற்றிய பின்னர் போதியளவு உணவு பொருட்களும் இல்லை அத்துடன் இருந்தவற்றைவைத்து சமைக்கவும் முடியாது அவசரஉணவாக கஞ்சிதான் கிடைக்கும்.அந்த உணவு கூட அளவோடுதான் அப்படி அளவு சாப்பாடு வந்து கொண்டிருந்த வேளையில்தான் Dr. அருள் தனக்கு வந்த உணவை மெதுவாக கொண்டு சென்று நாய்க்கூட்டின் அருகே சென்று அதை ஒருவாறு உள்ளே வைத்துவிட்டு கூட்டையும் திறந்து விட்டார்.கூட்டின் கதவுகள் திறக்கப்பட்டதும் இரண்டு நாய்களும் அவரிடம் ஓடிவந்து ஒன்று பெரிய சத்தமாக குலைத்து வாலை ஆட்டி குழைவாக அவர் கால்களை பணிந்து சுற்றியது மற்றையது சோர்வாக காணப்பட்டதுஇதே மனிதனாக இருந்துருந்தால் இரு கரங்களை கூப்பி வணங்கியிருக்கும் என்ற எண்ணத் தோன்றியது அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் அவரின் முகம் நாய்களின் மகிழ்ச்சியைக் கண்டு பிரகாசித்தது.இதனை பார்த்த போது எங்களுக்கு கண்கள் பனித்ததுடன் ஆச்சரியமாகவும் இருந்தது.வேலைப்பளும் இடம்பெயர்ந்து மர நிழல்களின் கீழ வாடும் மக்களின் துயரமும் மக்களுக்காய் நஞ்சணிந்த நெஞ்சினை அழுத்திக் கொண்டிருந்ததால் நாங்கள் அந்த நாலுகால் நண்பர்களை மறந்தே போய்விட்டோம்.

நான்கு அல்லது நாட்கள் உருண்டோடிய நிலையில் எப்படியோ தெரியாது அந்த நாய்கள் நாங்கள் வந்த பாதையை நுகர்ந்தபடி மருத்துவ முகாமிற்கே வந்துவிட்டன.அன்றிலிருந்து Dr.அருளுடன் மிக நெருக்கமாக பழகிக் கொண்டன.அவர் படுத்துறங்கும்
போதும் அவர் தலைமாட்டிலேயோ அல்லது கால்மாட்டிலேயோ
அவையிரண்டு உறங்கும்.அவர்களில் ஒருவருக்கு “நிக்” என்ற பெயர்சூட்டி எங்கு சென்றாலும் அதையும் தன்னோடு அழைத்துச்செல்வார் இறுதியாக யாழ் வலிகாமம் பகுதியைவிட்டு முற்றுமுழுதாகவே ஓர் நள்ளிரவு வெளியேறுமாறு தலைமையிடம் இருந்து கட்டளை வந்தது.நாங்கள் குருநகர் கடற்கரையில் படகெடுத்து வரும் வரை எம்மோடு வந்த அந்த நான்கு கால்கள் கொண்டநண்பர்களையும் பெருங்கவலையுடன் கரையிலேயேவிட்டு விட்டு பட படக்கும் நெஞ்சோடு படகேறினார் அருமை நண்பர் அருள்!

இன்று மாந்தநேயமும் ஜீவகாருணியமும் மிக்க அந்த நன்மாந்தரையும் இழந்து நாங்கள் பரிதவிக்கின்றோம்!

அறத்தலைவன் அவர்களின் உள்ளத்தலிருந்து!