தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 8ஆம் திகதி தமிழர்களின் தொன்மையான நிலப்பகுதியில் உள்ள குளத்தை ஜனாதிபதி,  ‘கிரி இப்பன் வெவ’ என்ற பெயரோடு திறந்து வைத்ததுடன், சிங்கள மக்களிடம் கையளித்திருந்தார். ஜனாதிபதியின் இத்தகைய செயலால் அப்பகுதியில் உள்ள காணிகளுக்கு உரித்துடைய தமிழ் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தனர்.

இதுகுறித்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், “அரசாங்கத்தினுடைய காணிக் கொள்கையானது இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய அறிக்கையில்கூட அது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அரசாங்க கொள்கைகளில் ஒன்று, காணிக் கட்டளைச் சட்டத்தின்படி ஒருகாணிக்கு இரண்டு ஆவணங்கள் இருந்தால் காலத்தால் எது முந்தைய ஆவணமோ அந்த ஆவணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுமென, அரசாங்கத்தினுடைய காணிக் கட்டளைச் சட்டத்தின்படி உள்ளது.

ஆனால் இவற்றைப் புறந்தள்ளி தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்துச் சிங்கள மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி, வெலி ஓயா என்ற பெயரில் எமது மணலாற்றுப் பூமியை பெயர்மாற்றம் செய்து ஒரு பிரதேச பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக எங்களுடைய பூர்வீக நிலங்களில் ஒரு பகுதியான ஆமையன் குளம் என்ற அதனோடு சேர்ந்திருந்த நிலங்கள் இன்று அபகரிக்கப்பட்டுள்ளன. அதில் 360 ஏக்கர் நிலத்திற்குரிய பயனாளிகளுடைய பெயர்கள், பயனாளிகளுடைய உறவினர்களுடைய பெயர்கள் உட்பட என்னிடம் இங்கே ஆவணங்கள் உள்ளன.

மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் படி 625 பயனாளிகளுக்குரிய 2919 ஏக்கர் காணிகள் இந்த அபகரிப்புக்குள் உள்ளடங்குகின்றன என்ற அறிக்கை தரப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையும் என்னிடம் இருக்கின்றது.

இந்நிலையில், ஆமையன் குளம் பகுதிக்குச் சென்று கிரி இப்பன் வெவ என்ற பெயரோடு ஏற்கனவே தமிழ் மக்களால் காலங்காலமாக பாவிக்கப்பட்டுவந்த அந்தக் குளத்தோடு சேர்ந்த காணிகள் அனைத்துக்குமான அந்தக் குளம், மறுசீரமைக்கப்பட்டு இப்போது குடியேற்றவாசிகளாக இருக்கின்ற சிங்கள மக்களுக்காக குளத்தினைத் திறந்து வைத்துள்ளார் அரச தலைவர்.

சிறுபான்மை இன மக்களுடைய வாக்குகளில் ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டிருப்பதைப் பல தடவைகள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் எங்களுடைய மக்களுக்குச் செய்யும் பாரிய துரோகம் இதுவென்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.

எங்களுடைய மக்கள் இந்தப் பிரச்சினைகளை தங்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையிலே எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது, தாங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு நாதியற்றவர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இதனூடாக தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.1