தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019  சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை    27000 மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர். 

தேர்வு பிரான்சு,  இங்கிலாந்து, யேர்மன்,  டென்மார்க்,  நோர்வே,  இத்தாலி,  நெதர்லாந்து,  சுவீடன்,  பெல்சியம், பின்லாந்து, நியுசிலாந்து,  கனடா ஆகிய நாடுகளில் கடந்த 01.06.2019 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துலகத் தேர்வு இம்முறையும் வழமை போல்  சிறப்பாக நடாத்திய அனைத்துக் கல்விக் கழகங்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ப்பெற்றோர்களின் பிள்ளைகள்; பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற போதும் கல்லெறிபட்ட கூட்டுப்பறவைகள் போல் அவர்களின் வாழ்வியல் முறை சிதறிவிடாமல் தாய்மொழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு தங்கள் அடையாளத்தைக் காக்கவேண்டும். தங்கள் வேரை அறிய வேண்டும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழினம் ஒரு குடையின் கீழ் நிற்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை  உரியவர்களால் உருவாக்கப்பட்டது.

 இவ்வமைப்பு 14 நாடுகளுக்கு அதாவது பிரான்சு,  இங்கிலாந்து,  யேர்மன், பெல்சியம்,  நோர்வே, டென்மார்க்,  இத்தாலி,  நெதர்லாந்து,  சுவீடன்,  அவுத்திரேலியா,  நியூசிலாந்து, கனடா,  பின்லாந்து,  மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு வளர்தமிழ் பாடநூல்களை வழங்குகின்றது.

 எமது வளர்தமிழ்ப் பாடநூல்களில் இலக்கியம் இலக்கணம் வரலாறு உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் மழலையர்நிலை பாலர்நிலை வளர்தமிழ் 1, வளர்தமிழ் 2   வளர்தமிழ் 3, வளர்தமிழ் 4, வளர்தமிழ் 5 வளர்தமிழ் 6 வளர்தமிழ் 7 வளர்தமிழ் 8 வளர்தமிழ் 9, வளர்தமிழ் 10,  வளர்தமிழ் 11, வளர்தமிழ் 12 வரை உருவாக்கப்பட்டுள்ளன.

வாசித்தல் நூல்கள் : மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்குரிய நூல்களாக அமைகின்றன.

1 – 4 வரை

5 – 8 வரை

9 – 12 வரை                                             

 மாணவர்களின் பேச்சுத் திறனைத் தூண்டும் வகையில் படங்களை உள்ளடக்கிய கட்புல நூலும் பட்டயக் கல்வி நூல்கள் எனப்பலவாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் 46 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் பாடத்திட்ட ஒழுங்கமைப்பு வாழிட நாட்டின் பள்ளிகளின் பொதுக்கல்வித் திட்டத்தோடு இணைந்து செல்கிறது. இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் மொழி கற்பதோடு மட்டுமன்றித் தமிழர்களின் கலை பண்பாடு வாழ்வியல் ஆகியவற்றையும் கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் சமய இன வேறுபாடுகள் அற்ற அரசியல் சாராத வகையில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக் கற்றல் வள நூல்களை 14 நாடுகளில் உள்ள கல்விக்கழகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. கல்விக் கழகங்கள் நூல்களைப் பெற்று அந் நாட்டின் வாழும் பிள்ளைகள் தமிழ்மொழியை ஆசிரியர்கள் மூலம் கற்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பிள்ளைகளின் அடைவுகளை அறிந்து கொள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலகத் தேர்வு நடாத்தப்படுகின்றது.அவுத்திரேலியா, மொறிசியசு தவிர்ந்த ஏனைய நாடுகளில் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தேர்வு நடாத்தப்படுகின்றது.  

அரையாண்டுத்தேர்வு

 மாதிரி வினாத்தாள் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் இறுதிச் சனிக்கிழமை நடைபெறுகிறது. அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினாலே அணியஞ் செய்யப்பட்டு 12 நாடுகளிலுள்ள கல்விக்கழகங்களுக்கு அதாவது

பிரித்தானியா: தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கிளை நிறுவனம்

யேர்மனி: தமிழ்க் கல்விக் கழகம்

பிரான்சு: தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்

நோர்வே: அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம்

டென்மார்க்:  மாலதி தமிழ்க் கலைக் கூடம்

நெதர்லாந்து: திருவள்ளுவர் தமிழ்க் கலைக் கூடம்

கனடா : அறிவகம்

நியுசிலாந்து : சிறுவர் பூங்கா

பின்லாந்து : அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம்

இத்தாலி : திலீபன் தமிழ்ச்சோலை

பெல்சியம்: தமிழ்ச்சோலை

சுவீடன் : தமிழ்ச் சோலை

ஆகிய கல்விக் கழகங்களிற்கு அனுப்பப்படுகின்றது.  அதன் பிற்பாடு மாதிரி வினாத்தாள்களுக்கான விடைத்தாள்களும் அனுப்பப் படுகின்றன.

புலன்மொழித் தேர்வு 

  கேட்டல் பேசுதல் வாசித்தல் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு கேட்டல் திறனையும் பேசுதல் திறனையும் வாசித்தல் திறனையும் வளர்க்கும் நோக்குடன் இடம்பெறுகின்றது. புலன்மொழித்தேர்வு வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை நடைபெறுகின்றன.  கேட்டலுக்கு ஒலிவட்டு வாசித்தலுக்கும் வாசிக்கும் பகுதி கல்விமேம்பாட்டு பேரவையினால் அணியஞ் செய்யப்பட்டு அந்தந்த கல்விக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.  பேசுதலுக்கு வளர் தமிழ் 1, 2 வகுப்புகளுக்கு படம் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். வளர்தமிழ் 3,4,5 ஆகிய வகுப்புகளுக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும்.  வளர்தமிழ் 6 முதல் 12 வரை தலைப்புகள் கொடுக்கப்பட்டு அவை தொடர்பாகப் பேசவேண்டும் தலைப்புகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும். பாடநூல் தலைப்பு பொதுத் தலைப்பு என இரு தெரிவுகள் இருக்கும். அவர்கள் இரண்டு தலைப்புகளிலும் ஒன்றைத் தெரிவுசெய்து பேசவேண்டும். வகுப்புகளிற் கேற்ப பேசும் மணித்துளிகள் மாறுபடும். சில வகுப்புகளிற்கு 2 மணித்துளிகளும் சிலவகுப்புகளுக்கு 3 மணித்துளிகளும் பேசுதலுக்குக் கொடுக்கப்படும். புலன்மொழித்தேர்வுப் புள்ளிகள் எழுத்துத் தேர்வு புள்ளிகளுடன் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கான புள்ளிகள் மொத்தமாக வழங்கப்படும். 

அனைத்துல எழுத்துத் தேர்வு

கேட்டல் பேசுதல் வாசித்தல் ஆகிய மூன்று திறன்களையும் புலன்மொழி வளத் தேர்வு மூலம் நிறைவு செய்த பிள்ளைக்கு எழுதுதல் திறனாக எழுத்துத் தேர்வு அமைகின்றது.

எழுத்துத் தேர்வு 12 நாடுகளுக்கும் ஒரே நாளில் அதாவது ஆனிமாதம் முதல் சனிக்கிழமை நடைபெறுகின்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தேர்வுத்தாள்கள் அணியஞ் செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலுமுள்ள கல்விக்கழகங்களுக்கும் மே மாத இறுதியில் அனுப்பி வைக்கப்படும் கல்விக் கழகங்கள் தேர்வினை நடாத்தி மாணவர்களின் விடைத்தாள்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அனைத்து நாடுகளிலிருந்தும் வகுப்பு நிலைக் கேற்ப ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

ஒவ்வொரு விடைத்தாளும் வெவ்வேறு ஆசிரியர்களால் மூன்று முறை மீள்பார்வை செய்யப்படும்.

ஒரு நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அந்த நாட்டு விடைத்தாள்கள் திருத்த வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

தேர்வுப் பெறுபேறுகள் ஆகத்து மாத நடுப்பகுதியில் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

ஒக்ரோபர் – நவம்பர் காலப்பகுதிகளில் பெறுபேறுகளுக்கா சான்றிதழ்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வழங்கப்படும்.

தேர்வெழுதிய மாணவர்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை சந்தித்த போது 

வினாத்தாள்கள் எப்படி இருந்தன?

 இலகுவாக இருந்தன.

எதற்காகத் தமிழ் கற்கின்றீர்கள்?

எமது வரலாற்றை அறிய வேண்டும் .தமிழ் எங்கள் அடையாளம்.தமிழ் எங்கள் தாய்மொழி.தாயகத்தில் உள்ள உறவுகளுடன் தமிழில் பேசவேண்டும்.எம் மாவீரரின் விருப்பு நிறைவேற என்ற பல பதில்கள் எம்மாணவர்களிடமிருந்து வந்தன.  

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

TEDC

4 AV DES PRIMEVERES

77290 MITRY MORY

FRANCE