கடந்த பல மாதங்களாக ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்கள் கனடிய தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் மேற்கொண்டுவந்த முயற்சியால் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற சட்டமூலம் (எண் 104) ஒன்ராறியோ மாநிலமன்றத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது, இன்று மே 16ஆம் திகதி இதன்மீதான இரண்டாவது வாசிப்பின் பின்னர், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு தெரிவிக்கின்றது.

தமிழர் மீது மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பு என்பதை வலியுறுத்துவதுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் நாள் தமிழின அழிப்பு நினைவு நாளாகக் கடைப்பிடிப்பதுடன், அதற்கு முந்தைய ஒரு வாரம் தமிழின அழிப்புத் தொடர்பான அறிவியற் கிழமையாகப் பேணப்படும்.

இது குறிப்பிட்ட அவ்வாரத்தில் ஒன்ராறியோவில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பான அறிவூட்டல்களை மேற்கொள்ள வழிவகுக்கும். இதன்மூலம் அனைத்து மக்கள் மத்தியிலும் எமக்கான ஆதரவு வலுப்பெறும்.

அத்துடன், இதுபோன்ற இன அழிப்புகள் வேறு எங்கும் நடைபெறாதிருக்க ஆவன செய்யுமாறும் இச்சட்டமூலம் கோருகிறது.

எனவே, ஒன்ராறியோ மாநிலமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலமானது அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகும் பட்சத்தில், தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பு என்பதை ஒன்ராறியோ அரசு ஏற்றுக்கொண்டதாகிவிடும்.

123 மாநிலமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒன்ராறியோ என்பது கனடிய அரசில் மிகவும் முக்கியமான மாநிலம் என்பதுடன், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான கனடிய நடுவண் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அத்துடன், தெற்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களுக்கு வெளியே தமிழர்கள் அதிகப்படியாக வாழும் பகுதியாகவும் ஒன்ராறியோ திகழ்கின்றது. இம்மாநிலத்தின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தமிழர்களது உழைப்பும் இன்றியமையாதது.

எனவே, ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தீர்மானம் அல்லது சட்டமூலம் கனடிய நாடாளுமன்றத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்த வல்லது. அத்துடன் இதுபோன்றதொரு சட்டமூலமொன்றினை கனடிய நாடாளுமன்றத்திலும் கொண்டுவருவதற்கான அடிப்படைகளை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.

கனடா நாட்டில் மட்டுமன்றி, தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளிலும்கூட இது சில மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். பிற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தத்தமது அரசியல் கட்டமைப்புகளுக்கு ஊடாக இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது ஒரு முன்னுதாராணமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கு அடித்தளமிடும் செயற்பாடுகளை கடந்த காலங்களில் இளையோர்களும் தமிழ் சமூகத்திலுள்ள பல தரப்பினரும், அனைத்து மட்டங்களிலுமுள்ள தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். அரசியல் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவது, கையெழுத்து அட்டைகள் அனுப்புவது, ஆதரவுக் கையெழுத்துகள் சேர்த்து அனுப்புவது போன்றவற்றை பலரும் தொடர்ந்து செய்துவந்தனர்.

இவற்றின் பலனாக ரொறன்ரோ மாநகரசபை மற்றும் பிரம்டன் நகரசபை போன்றவற்றில் தமிழின அழப்புக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பத்தாம் ஆண்டில் கொண்டுவரப்படும் இச்சட்டமூலமானது, கனடா வாழ் தமிழ் மக்களின் தமிழின அழிப்புக்கு எதிரான நீதி வேண்டிய போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்கதொரு வெற்றியென்றே கூற வேண்டும்.

2009 காலகட்டத்தில் நாம் வீதிகளில் நின்று உச்சமடைந்திருந்த இன அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடினோம். நடைபெறவில்லை. ஆனால், இன்று எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் தேடி நாமே சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளோம். இதில் இங்கு வாழும் நம் ஒவ்வொருவரதும் ஆதரவு நிச்சயம் தேவை.

இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, இதனை சட்டமூலமாக கொண்டுவந்த ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்களைப் பாராட்டுவதுடன், இனிவரும் காலங்களில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் நாம் துணைநிற்க வேண்டும்.

இச்சட்டமூலம் இப்போது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், எதிர்காலத்தில் இது ஒரு முழுமையான சட்டமாக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பது எம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

நன்றி CTR வானொலி