18.08.2019 இன்றைய நாள் தமிழீழத்தின் விடுதலைப் போரியல் வரலாற்றில் முக்கிய படிக்கல் ஒன்றைக் கொண்ட நாள். தமிழீழ விடுதலைப் போராட்ட சக்திகளில் மிக முக்கியமாக கொள்ளக் கூடிய ஆளணி வளத்தின் ஒரு புரட்சி ஏற்பட்ட நாள். தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் பிரதிவிம்பமாக ஒரு அணியாக மகளிர் கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான ஆரம்பப் பயிற்சி ஆரம்பித்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாளோடு தான் ஆரம்பித்தது தமிழீழ விடியலுக்கான சமவலு உள்ள மகளிர் அணி.

இந்தியாவின் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை எனும் மலைப்பிரதேசத்தில் 1985.08.18 ஆம் நாள் இப்புரட்சிகர இயக்கத்தின் மேன்மையுள்ள இலக்கான தமிழீழ தாயகம் மீட்க என தலைவர் அணியில் இணைந்து கொண்ட 99 பெண்கள் அணிக்கான அடிப்படைப்பயிற்சியை புதிய பெண் போராளிகள் எனும் அங்கிகாரத்தை கொடுத்து தமிழீழத் தேசிய தலைவர் அவர்களால் புலிக்கொடி ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சி முகாமின் பொறுப்பாளராக மேயர். பாரதிராஜா அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள பயிற்சி ஆசிரியராக விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான, லெப். கேணல் பொன்னம்மான் பொறுப்பெடுக்கின்றார். அவரோடு உதவி பயிற்சி ஆசிரியர்களாக, இருந்த மேஜர் செல்வராசா மாஸ்டர் , கப்டன் நேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

பயிற்சி முகாமில் புலிக்கொடி ஏற்றி வைத்து பயிற்சிகளை ஆரம்பித்த தேசியத்தலைவரின் முதல் கட்டளையோடு, ஆண் பெண் என்ற பால் வித்தியாசமின்றி கடினமான பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஆண் போராளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற அனைத்து பயிற்சிகளும் மகளிர் அணிக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற தலைவர் அவர்களின் சிந்தனைப்படி பயிற்சிகள் கடுமையானதாகவே இருந்தன. ஒரு கெரில்லா போராளி எவ்வாறு உருவாக்கப் பட வேண்டுமோ அவ்வாறு மகளிர் அணி உருவாகத் தொடங்கியது.

அதிகாலை 5 மணியில் இருந்து பயிற்சி ஆரம்பமாகும், ஓடுதல், உடல்பயிற்சிகள். கயிறு ஏறுதல். மலை ஏறுதல், துப்பாக்கிகளை கையாளுதல், சூட்டுப்பயிற்சி, ஆயுத வகுப்புகள், அரசியல் வகுப்புக்கள், அடிப்படை மருத்துவ வகுப்புக்கள், புலனாய்வு வகுப்புக்கள் என பலதரப்பட்ட பயிற்சிகள் அதி திறமை வாய்ந்த தளபதிகளால், பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டன.

பயிற்சி முகாம் அமைந்திருந்த சிறுமலைப்பகுதி மலைப்பிரதேசம் ஆகையால், பயிற்சிகளை பாறைகள் நடுவே பெற வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் மிக கடினமாகவே பயிற்சிகள் அமைந்தன. ஆனாலும் தலைவர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் பயிற்சிகள் நடந்ததாலும், தமிழீழம் என்ற அதி உன்னத இலக்குக்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்க துணிந்தவர்கள் இப் போராளிகள் என்பதாலும், மகளிர் அணி சலிக்கவும் இல்லை . களைக்கவும். பயிற்சிகளால் மெருகாகினார்களே தவிர சோர்ந்து போகவில்லை. கொடுக்கப்பட்ட எல்லாவிதமான பயிற்சிகளையும் திறமையாக செய்து தலைவர் அவர்களிடம் பாராட்டுக்களையும் நம்பிக்கையையும் பெற்றார்கள் மகளிர் அணிப் போராளிகள்.

மகளிர் அணிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்த லெப் கேணல் பொன்னம்மான் அவர்களும் அவரது உதவி ஆசிரியர்களும் தயவு தாட்சணியம் இன்றி பயிற்சிகள் வழங்கி ஓவ்வொரு போராளிகளையும் உரமான வீராங்கனைகளாக மாற்றினார். இப்பயிற்சித் திட்டத்தில் நற் பண்புகள் பயிற்சிகளை மேஜர் பாரதிராஜா , புலனாய்வுப் பயிற்சிகளை மாதவன் மாஸ்டர். அணிநடைப் பயிற்சிகள் மற்றும் ஆயுத சூட்டுப் பயிற்சிகளை இந்திரன் மாஸ்டர் , கெரில்லா தாக்குதல் பயிற்சிகளை மனோ மாஸ்டர், கராத்தே பயிற்சிகளை சோதி மாஸ்டர், மருத்துவ பயிற்சிகளை பின்நாட்களில் கடற்புலிகளில் தேசப்பணியாற்றிய முத்தண்ணா ஆகியோர் நடத்தினர். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இணைந்து சமராய்வு பிரிவுப் பொறுப்பாளராக இறுதியாக இருந்த திரு. யோகி, மற்றும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திரு. நடேசன் அவர்களும் அரசியல் சார்ந்த வகுப்புகள் எடுத்தார்கள்.

இவ்வாறாக பெரும் பலம் மிக்க ஆசிரிய அணியால் புடம் போடப்பட்ட மகளிர் அணி இறுதியாக தலைவர் அவர்களின் கட்டளையில், அவரது மெய்பாதுகாவலர்களுடன் இணைக்கப்பட்டு அதி விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் பெறுபேறு, மகளிர் அணி திறமையாக செயற்பட்டதற்கான பாராட்டுதலையும், நம்பிக்கையையும் மீண்டும் ஒருமுறை தலைவரிடம் பெற்றதாக அமைந்தது.

முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெண் போராளிகள் தமது அடிப்படைத் தேவைகளை தாமே நிறைவேற்ற வேண்டும் என்பது தேசியத்தலைவரின் உறுதியான கட்டளை. அதாவது தேவையான உணவுப் பொருட்கள், மற்றும் இருப்பிடம், மலசலகூடங்கள் என அனைத்தும் பெண் போராளிகளாலையே செய்யப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டது. மலையின் உச்சத்தில் அமைந்திருந்த பயிற்சி முகாமில் பாறைகளை உடைப்பதற்கு மட்டும் வெடிபொருள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதனூடாக உருவான கிடங்குகளில் மலசலகூடங்களை அமைத்தார்கள் பெண் போராளிகள். அதை விட உணவுப் பொருட்களை மலையடிவாரத்தில் இருந்து உச்சிக்கு கொண்டு செல்வதும் அவர்களாகவே இருந்தது. அப்போது தேசியத்தலைவரிடம் மேயர் பாரதிராஜா உணவுப் பொருட்களை மேலே கொண்டு செல்ல கழுதைகளை பயன்படுத்தலாமா என்று கேட்ட போது மறுத்துவிட்டு,

“ இக் கஸ்டங்களை அவர்கள் கடினமாக கடந்தால் தான் உறுதியான போராளிகளாக உருவாகுவார்கள் “

என்று உரைக்கின்றார்.

இதனை பின்னாளில் தலைவர் அவர்கள் தனது உரையாடல் ஒன்றில் கூறிய போது தான் அவ்வுண்மைகளை அப் போராளிகள் உணர்ந்து கொண்டார்கள். தலைவரின் எண்ணத்துக்கேற்ப உறுதி மிக்க புது வரலாறாக எழுந்து நின்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது மகளிர் அணி. அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து உறுதியான அணியாக அந்த 99 பெண்களும் போராளிகளாக அணிவகுத்து நிமிர்ந்து நின்ற பொழுது, தமிழீழத் தாய் நிச்சயமாக மகிழ்ந்திருப்பாள். தன் குழந்தைகளின் வளர்ச்சி அவளுக்கு நிச்சயமாக மகிழ்வைத் தந்திருக்கும். அந்த மகிழ்வோடு அவள் காத்திருக்க, அவளின் உடலைக் கிழித்து, மார்பைப் பிழந்து தேசத்தை கருவறுக்கவென்று படை நடத்தி வந்த சிங்களத்துக்கு எதிராக கருவி ஏந்தி தாயகம் புறப்பட்டார்கள் அப் பெண்கள்.

1986 ஆம் ஆண்டில் , மன்னார் மாவட்ட தளபதியான லெப் .கேணல் விக்டர் அவர்கள் இத் தேசப் பெண்களை பொறுப்பேற்கிறார். அன்றில் இருந்து நேரடிக் கள சண்டைகளில் பங்கெடுக்கத் தொடங்கினார்கள்.

1986.12.12 ல் விக்டர் அண்ணா தலைமையில் நடந்த மன்னார் அடம்பன் சண்டை இவர்களது முதல் களம். அப்போது மகளிர் அணிக்கு பொறுப்பாளராக இருந்த தீபா அவர்களின் தலமையில் தளபதி லெப். கேணல் விக்டர் அவர்களின் கட்டளையில் தமது முதல் நேரடிச் சண்டையை சந்திக்கிறார்கள் முதல் மகளிர் அணி. அச் சண்டையில் திறம்பட செயல்ப்பட்டு முதன்முதலாக இரண்டு சிங்களப் படைகளை கைது செய்து தலைவரதும், தளபதிகளதும் மகிழ்வையும் பாராட்டையும் பெற்று உறுதியோடு பயணித்தார்கள்.

இப் பெண்கள் அணியில் தான், கோப்பாய் மண்ணில் முதல் வித்தாக வீழ்ந்து தமிழீழ தாய் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் 2 ஆம் லெப்டினன் மாலதியும், முதல் தளபதியாக மகளிர் அணிக்கு பொறுப்பெடுத்து காச்சல் என்ற உடல்நலப் பாதிப்பின் காரணமாக விதையாகிய முதலாவது பெண் தளபதியாகிய மேயர் சோதியாவும் தம்மை தமிழீழ மண்ணுக்காக உறுதியானவர்களாக புடம் போட்டு கொண்டார்கள்.

இவை மட்டுமல்லாது, இங்கே பயிற்சி பெற்று புடம் போடப்பட்டவர்களால் தான் 2 ஆவது மகளிர் பயிற்சிப் பாசறை முற்றுமுழுதாக பொறுப்பெடுக்கப்பட்டு தியாக தீபம் திலீபன் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த “ சுதந்திரப்பறவைகள்” அமைப்பில் இருந்தவர்களுக்கு ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டு தலைசிறந்த பெண் போராளிகள் உருவாக்கப்பட்டதும், அந்த வழி வந்த பெண் பயிற்சி ஆசிரியர்களால் தான் இன்று உலகமே வியந்து நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல படையணிக் கட்டமைப்புக்களையும் நிர்வாகக் கட்டமைப்புக்களையும் கொண்ட மகளிர் அணிகள் நிமிர்ந்து நின்றதும் இந்த நாளில் போடப்பட்ட ஆரம்பப் புள்ளி என்றால் மிகையாகாது…