தினமும் படியுங்கள்
எங்கள் மரணங்களை
அதிகாலை கோப்பியுடன்
தலைப்பு செய்திகளாய்


உங்கள் வானொலிகள்
சுமந்துவரும் வானத்து
இசைகளில் கலந்து வரும்
எங்கள் சாவையும் ரசியுங்கள்


அஞ்சாமல் சாவினை
நெஞ்சில் சுமந்தோம் அன்று
நஞ்சாக பஞ்சத்தை
கரங்களில் கொண்டோம் இன்று


உயிரது இங்கு நிலையில்லை
எம் மனமது வேண்டா ஆளில்லை
விழிகளில் வடிய நீரில்லை
பசி கொடியதை போக்கிட வழியில்லை


நாங்கள் சாகிறோம் நீங்கள்
தினமும் வேடிக்கை பாருங்கள்
வீழ்ந்து கிடக்கிறோம் தலைப்பு
செய்தியை நன்றாய் தீட்டுங்கள்


எங்கள் சாவுகளை பல ரூபாய்களுக்கு
விற்பனை செய்யுங்கள்
வயிறு புடைத்த செல்வந்தராய்
நீங்கள் நிமிருங்கள்

நாங்கள் நெருப்பில் வேகுகிறோம்
தீண்ட தகாத பூச்சிகளாய்
நாங்கள் காற்றோடு போகிறோம்
வேண்டப்படாத வெறும் பேச்சுக்களாய்

நாங்கள் சாக துணிந்தவர்கள்
பசி முன் மண்டியிட்டல்ல
சாவுக்கு முன்னே சாவோடு
உமக்காய் சாதிக்க துணிந்தவர்கள்


கழுத்தில் அணிந்த நஞ்சு கயிற்றை
தூக்கு கயிறாக்கி நாங்கள்
தினமொருவர் சாகிறோம்
நீங்கள் வேடிக்கை பாருங்கள்


நடு வீதிக்கு வந்து தமிழன்
ஏழ்மை நர்த்தனமிடுவதை
களமிடை பாய்ந்த புலி இன்று
தற்கொலை செய்வதை


வேடிக்கை பார்த்து கொண்டு
சுகமாக கண்ணுறங்குங்கள்
எங்கள் சாவுகளின் மேல் நிற்கும்
பிஞ்சு குழந்தைகளின் நினைவுகளோடு….

எழுதியது: இ.இ. கவிமகன்
நாள். 29.08.2021