.

விடுதலைக்கு உரம் சேர்த்த ஆயிரம் ஆயிரம் மான மாவீரர்களை எம் மண்ணின் மார்பைப் பிளந்து விதைக்கும் ஒவ்வொரு கணத்திலும் தமிழீழ மண், அப் பிள்ளைகளுக்காக விழிநீர் கசியத் தவறியதில்லை. இவ்வாறான காலம் ஒன்றில் தான் நாம் சிறுவர்களாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சுகத்தையும், சிங்களத்தின் இனவழிப்பு நடவடிக்கையின் துன்பியல் சம்பவங்களையும் தாங்கிக் கொண்டிருந்தோம். 1995 ம் வருடம் யாழ்ப்பாணத்தை முற்று முழுதாக கைப்பற்றி விடும் நோக்கோடு படையெடுத்து வந்த சிங்களதேசத்தின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை எம்மை வன்னிப் பெருநிலப்பரப்பின் மல்லாவிக்கு இட்டுச் சென்ற போது, சொந்த நிலமிழந்து, உறவுகளை நாம் பிரிந்து புது தேசத்தில் எம் வாழ்வை நிலைநிறுத்தி நிமிர்ந்த போது மல்லாவியே எம் எல்லாமாகிப் போனது.

2000 ஆம் ஆண்டு காலம் மல்லாவி மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதி உயர்தரக் கல்விக்காக எம்மை வரவேற்ற போது, கண்ணாடி போட்ட அந்த மெலிந்த உருவத்தை ஆங்கில ஆசிரியையாக நான் சந்தித்தேன்.

நான் தான் உங்களுடைய ஆங்கில ஆசிரியை எனது பெயர் திருமதி. பாலசுந்தரம் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அன்று முதல், எமது ஆங்கில அறிவின் மேம்படுத்தலுக்காக உழைத்த அவரை இன்றுவரை எம்மால் மறக்க முடியாததைப் போலவே எம் தமிழீழ தேசமும் மறக்க முடியாத ஒரு மாவீரத்தை பெற்ற வீரத்தாயாக அவர் இருப்பதும் நியம். எமக்கெல்லாம் ஆங்கில ஆசானாக ஒன்றிவிட்ட எம் ஆசிரியை வினோதரன் என்ற மருத்துவப் போராளியைப் பெற்றெடுத்த வீரத்தாய் என்ற உன்னதம் மிக்க மதிப்புக்குரியவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

யார் இந்த வினோதரன்?

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கத்தில் நிச்சயமாக எழுதப்பட வேண்டிய ஒரு பக்கம் மேஜர் வினோதரன்.

14.10.1977 ஆம் ஆண்டு, திரு/ திருமதி பாலசுந்தரம் பவளரட்னம் தம்பதியரின் வீர மகனாக வந்துதித்த, ஆண் மகவு தான் அஜந்தன் என்ற சொந்தப் பெயரைக் கொண்ட வினோதன். தமிழீழ விடுதலைப் போராட்டம் உருவாக்கம் பெற்ற அப்பொழுதுகளில் வீரப்புதல்வனாக வந்த தனது மகனுக்கு எமது ஆசான் பல் கலைகளையும், நெறி பிறளாத நேரிய எண்ணங்களையும் ஊட்டியது மட்டுமல்லாது, தமிழீழத் தாகத்தையும் ஊட்டி வளர்த்திருந்தார். அதனாலோ என்னவோ தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் உச்சம் பெற்று இருந்த இரண்டாம் ஈழப்போரின் காலம் ஒன்றில் ஒன்றில் அஜந்தன் வினோதரனாக மாறிப் போனார்.

அன்றைய சிங்கள அரச தலைவராக இருந்த சந்திரிக்கா அம்மையாரும், அவரது மாமனான ரத்வத்தையும் இணைந்து செய்த கொடூரமான இனவழிப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இருந்தது சூரியக்கதிர் நடவடிக்கை. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி அதனூடாக தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழீழத் தேசியத் தலைவனையும் முடக்கி விட முடியும் என்ற நம்பிக்கையோடு எடுக்கப்பட்ட சூரியக்கதிர் நடவடிக்கையானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தான் புலியாகப் போனார் வினோதரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவையையும், அதன் உண்மை நிலைப்பாட்டையும், அதற்குத்தான் எந்த நிலையில் பங்கு தர முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் உணர்ந்தவராக 1995. 07. 26 தமிழீழ விடுதலைப்புலிகளின் பாசறை புகுந்தார் வினோதரன்.

அடிப்படைப் பயிற்சிகளை முடித்த போராளிகளை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் அல்லது படையணிகளுக்கும் பணிக்காக பிரித்தெடுக்கப்படும் பொழுது வினோதரன் விசேட வேவுப்பிரிவுப் பொறுப்பாளர் மூத்த தளபதி ஜெயம் அவர்களால் பொறுப்பெடுக்கப் படுகிறார். அவரது ஆங்கில மொழிப்புலமை மற்றும் கல்வி கற்றலில் இருந்த ஈடுபாடு அதோடு பாடசாலைக் கல்விக் காலத்தில் அவரது பள்ளியின் சேவைக் கழகத்தில் இருந்து செயலாற்றிய உச்ச சேவைகள் என்பவை படையணிக்குரிய மருத்துவத் தேவையை நிறைவேற்றக் கூடிய மருத்துவப் போராளியாக பொறுப்பாளருக்கு இனங்காட்டியது. அதனால் விசேட வேவுப் பிரிவுக்குரிய மருத்துவப் போராளியாக அவரை உருவாகுமாறு பொறுப்பாளர் கொடுத்த பணிப்புக்கமைய அப் பணியைச் சீராக செய்து முடிக்கின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் மருத்துவர்களான மேஜர் சுசில் , வாமன், தணிகை போன்ற தமிழீழ மருதுவக்கல்லூரியின் மருத்துவர்களாலும் மூத்த மருத்துவர்களாலும் தென்மராச்சிக் கோட்டத்தின் மட்டுவில் பகுதியில் இயங்கிய அடிப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கற்கையை முடித்து, ஒரு மருத்துவப் போராளியாக உருவாகி இருந்த வினோதரன் விசேட வேவுப்பிரிவின் மருத்துவப் போராளியாக பணிசெய்யத் தொடங்கியது மட்டுமல்லாது, குறுகிய நாட்களிலையே அப்படையணியின் மருத்துவப் பொறுப்பாளனாகவும் தன்னை வளர்த்துக் கொள்கிறார்.

மற்றைய படையணிகளைப் போல் இருக்க முடியாது விசேட வேவுப் பிரிவுப் போராளிகளின் பணிகள். ஏனெனில் ஒரு சண்டைக்கான தயார்ப்படுத்தல்கள் நடக்கும் பொழுது அல்லது எதிரியின் நகர்வுகளைக் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்படும் பொழுது, அதற்கான வேவுத்தகவல்களைத் திரட்டுவதற்காக எதிரியின் முகாமுக்குள் உள்நுழையும் வேவுப்புலிகள் சிறு சிறு அணிகளாகவே உள்நுழைவார்கள்.

படையணியின் போராளிகள் தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருடைய பணியை மற்றவர் அறிந்திருக்காது இருப்பினும் அல்லது இரகசியம் காக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஏனையவர்களின் தகவல்கள் பகிரப்படாது இருப்பினும் அனைவரும் பணிக்காக நிலையெடுத்திருக்கும் அத்தனை முகாம்களுக்கும் தனி ஒருவராக வினோதரன் சுற்றிச் சுழல வேண்டியதும் அவர்களுக்கான மருத்துவக்காப்பை உடனுடனையே வழங்க வேண்டியதுமான பெரும் பொறுப்பைச் சுமந்திருந்தார்.

வேவுக்காக எதிரியின் பகுதிக்குள் நுழையும் போராளிகளின் உடல்நலத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உள்நுழையும் போராளிகள், எதிரிகளின் பலமான எதிர்ப்புக்களையும் தாண்டி பனி, மழை, வெய்யில் என்று அனைத்து இயற்கையின் ஆபத்துக்களையும் சந்தித்தே வருவார்கள். இவ்வியற்கையின் நியதிகள் அவர்களுக்கு காச்சல், இருமல், சளி போன்ற சாதாரண நோய்களை உருவாக்கி விடும்.

இந்த நோய்கள் எதிரியின் பிரதேசத்துக்குள் உள்நுழையும் போது, போராளிகளுக்கு ஆபத்தை தரக்கூடியதான நோய்களாக மாறிவிடும். அதனால் அனைத்துப் போராளிகளுக்கும் தடுப்பு மருந்துகள் தொடக்கம் அவர்களுக்கான அடிப்படை மருத்துவ ஆலோசனைகள், மற்றும் அடிப்படை பருத்துவப் பொருட்கள் அனைத்தையும் நேரடியாக கண்காணித்துக் கொடுக்க வேண்டிய பெரும் கடப்பாடு வினோதரனுக்கு இருந்தது.

வேவு நடவடிக்கைக்காக உள்நுழையும் அணியினருக்கு பெரும்பாலும் முட்கள் கிழித்தும் தொட்டாவாடி செடியின் கீறல்களும் விசப்பூச்சிகள் , பாம்பு போன்றவற்றினால் ஏற்படும் விசத்தாக்குதல்களும் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த நிலையில், தனக்கு ஏற்படும் சந்தேகங்களை போராளி மருத்துவர்களாக இருந்தவர்களிடம் சென்று தீர்த்துக் கொள்வதும், ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாள முடியும் என்பதற்கான தீர்வுகளைப் பெறுவதும் வினோதரனின் வழக்கம். அவ்வாறு வினோதரனுக்கு மருத்துவ ரீதியாக எழுந்த பிரச்சனைகளைக்கான தீர்வுகளை வழங்கும் போது கற்பூரத்தில் தீப் பற்றுவதைப் போல விடயங்களை கற்றுக் கொள்ளும் திறன் இருந்தது. அதனால் வேவுப் பிரிவுப் போராளிகள் மருத்துவக் காப்பை நிறைவாக பெற்றார்கள்.

மருத்துவப் போராளியாக முன்பு வினோதரனின் அணி செய்த வேவு நடவடிக்கை ஒன்றில் தலைப்பகுதியில் விழுப்புண் அடைந்த வினோதரன் அக் காயத்தைப் பற்றி சிறிதும் அக்கறை படுபவர் அல்ல. தன்னை விட தன் போராளிகளின் மருத்துவத் தேவையை உணர்ந்து பணியாற்றிய ஒரு வேங்கைப் புலி.

அவரது தாய் தன் மாணவர்களை எவ்வாறு அரவணைத்துக் கற்பித்துக் கொண்டாரோ அதை விட அதிகமான தாய்மை உணர்வோடு போராளிகளுக்கான மருத்துவராக வினோதரன் இயங்கினார். அவரது பணி தமிழீழத்தின் அநேகமான களங்கள் எங்கும் விரிந்தே இருந்தது. தென் தமிழீழம் தொட்டு வட தமிழீழம் வரை அவரது பணி போராளிகளுக்கு கிடைத்தே இருந்தது. அவரும் சளைக்காது போராளிகளுக்காக மருத்துவக்காப்பை சரியாக கொடுத்தார்.

இவ்வாறு விசேட வேவுப் போராளிகளை தன் சேய் போல பார்த்துப் பார்த்து மருத்துவப்பணியாற்றிய வினோதரனை, அங்கிருந்து விடுகை கொடுத்து லெப்கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி தனது மருத்துவப் பொறுப்பாளராக உள்வாங்கிக் கொள்கிறது. அப்போதைய தளபதியாக இருந்த கேணல் பானு, வினோதரனின் செயற்பாடுகளை கண்டு நெகிழ்ந்தது நியம். எதாவது தவறுகள் செய்து அதை தளபதி சுட்டிக் காட்டும் பொழுது தவறை உணர்ந்து அழுதுவிடும் வினோதரன் அடுத்த தடவை அத்தவறை செய்யவும் மாட்டார் பணியில் இன்னும் அதீத கவனத்துடனும் சிரத்தையுடனும் செயற்படுவார்.

குட்டிசிறி மோட்டார் படையணியின் போராளிகளுக்கு மருத்துவப் பொறுப்பாளனாக கடமையாற்றிய அதே நேரம் தானும் சண்டைக்குப் போகவேண்டும் என்று அடிக்கடி தளபதியை நச்சரிக்கும் அவரை அவரது மருத்துப் பணியின் முக்கியத்துவத்தையும் மருத்துவப் போராளிகளின் இருப்பின் தேவையையும் உணர்த்துவதன் மூலம் சாந்தமடைய வைப்பார் தளபதி.

இந்த நிலையில் அரச பெண் பணியாளர் ஒருவருடன் தனது மணவாழ்வைத் தொடங்கிய வினோதரன் அந்த மகிழ்நிலையின் பெறுபேறாக ஆண் மகவு ஒன்றின் தந்தை ஆகிய மகிழ்வான பொழுதுகளையும் தன்னகத்தே கொண்டார். ஆனாலும் அக்காலத்தில் மூத்த தளபதி கேணல் பானு அவர்கள், தென் தமிழீழத்துக்கு பணி ஒன்றுக்காக புறப்பட்ட போது அவரின் அணிக்கான மருத்துவப் பொறுப்பாளனாகவும், தென்தமிழீழத்தில் நிலை கொண்டருந்த மோட்டார்ப் படையணியின் மருத்துவனாகவும் மட்டக்களப்பை நோக்கி புறப்பட்டார். பிறந்து சில மாதங்களே ஆகிய நிலையில் தன் குழந்தையையும், மனைவியையும் விட்டுப் பிரிந்து மட்டக்களப்புச் சென்றவருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன் உறவுகளின் நிலை அடுத்தநிலையில் தான் இருந்திருக்கின்றது என்பது வெளிப்படையானது.

அங்கே போராளிகளுக்கான மருத்துவத் தேவைகளை மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமங்களுக்கும் பயணப்படும் போதெல்லாம் அம் மக்களின் மருத்துவத் தேவைகளையும் நிறைவேற்றுவதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்துக் கொண்டார். மக்கள் படும் துன்பங்களை பார்த்து சகிக்க முடியாது வாய் விட்டுக் கதறி அழும் வினோதரனால் அம்மக்களுக்கான மருத்துவத் தேவைகளை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி, வருந்துகின்ற தனது மனதுக்கு மருந்திட்டார்.

அடிக்கடி தளபதியிடம்,
“எங்கட மக்களுக்கு மருத்துவப் பணி செய்யக்கூடியதாக நான் இன்னும் படிக்க வேணும். தியாகதீபம் திலீபன் மருத்துவமனையை இங்கே நிறுவி அதன் மருத்துவராக நான் பணியாற்ற வேண்டும்” என்று கூறிக் கொண்டிருக்கும் வினோதரனைத் தளபதி பானு அவர்கள் சில நாள்கள் நகர்வின் பின், வன்னிக்குப் புறப்படுமாறு பணிக்கிறார்.

மட்டக்களப்பில் பணியாற்றிக் பொண்டிருந்த வினோதரன் வடதமிழீழத்துக்கு தியாகதீபம் திலீபன் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவப் போராளிகளின் கற்கைநெறிக்காக மட்டக்களப்பிலிருந்து வந்து சேர்கிறார்.

மக்களுடன் பணியாற்றும் மருத்துவப் போராளிகள் இவர்கள் என்பதால், அக் கற்கைநெறியும் அதற்கேற்பவே மூத்த மருத்துவர்களால் திட்டமிடப்பட்டிருந்தது. தனித்து தனிநபர் மருத்துவம் மட்டுமன்றி, விசக்கடி மருத்துவம், மகப்பேற்று மருத்துவம் என்று பலவற்றை கற்றார் வினோதரன். அது மட்டுமல்லாது, மருத்துவ அரசியலையும் கற்றுத் தேர்ந்தார்.

எனக்குத் தெரிய உலகளவில் நோக்கினால் தமிழீழ அரசு மட்டுமே மருத்துவர்கள் கட்டாயமாக அரசியல் தெளிவுள்ளவர்களாக மக்களுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற விடயத்தில் நம்பிக்கையாக இருந்தது. ஏனெனில், இவர்கள் மக்களோடு இணைந்திருந்து பணியாற்ற வேண்டியவர்களாக இருந்ததால், மக்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் இணைந்து நிற்பதற்குத் தேவையான பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். அதுவும் தியாக தீபம் திலீபன் மருத்துவப் போராளிகள் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் பணியாற்றுவதால் அநேகமாக பாமரமக்களோடு பழக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள்.

அதனால், மருத்துவ அறிவை மட்டும் வைத்து மக்களிடம் சென்றால் அவர்கள் போராளிகளை வேற்றாளர்களாக பார்க்கும் சந்தர்ப்பம் இருப்பதோடு, மக்களுடன் நல்லுறவைப் பேண முடியாதவர்களாகவும் இருக்கும். அதனால் மக்களோடு நெருங்கி இருப்பதற்கு சகல ஆளுமைகளும் உள்ளவர்களாக அவர்கள் உருவாக வேண்டி இருந்தது.

உதாரணமாக, சிறு பிள்ளைகள் கல்வியில் சந்தேகம் கேட்டாலோ, பெரியவர்களுக்கு குடும்பங்களில் சிறு சிறு பிணக்குகள் வந்தாலோ அவற்றுக்கான தீர்வுகளை இவர்களே வழங்க வேண்டி இருந்தது. அவ்வாறு வழங்கும் போது அவர்களுக்கு போராளி மருத்துவர்கள் மீது நம்பிக்கையும், நெருக்கமும் உண்டாகும் என்பதில் எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. அதனால் முழுமையாக மக்களுக்கான மருத்துவர்களாக அவர்கள் தயாராக வேண்டி இருந்தது.

அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவாகி போராளிகள் பணிகளுக்காக அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில் இயங்கிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட போது, வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசத்தின் நைனாமடுப் பகுதியில் இயங்கிய மருத்துவமனையை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். அங்கே தன் மருத்துவசேவையை அம்மக்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாது, அம்மக்களின் நல்ல சகோதரனாக, பிள்ளையாக, ஆசிரியனாக மருத்துவனாக என்று அனைத்தாயும் மாறிப்போய் கைராசிக்காற பரியாரியார் என்ற மக்களின் நல்ல மதிப்பை பெற்றார்.

இவ்வாறாக இயங்கிய காலத்தில் தான் இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு வந்த ஆழிப்பேரலை சுனாமி என்று பெயரெடுத்து எங்கள் தமிழீழக்கடலெங்கும் சீறி சீற்றமெடுத்துத் தாண்டவமாடி ஓய்ந்த போது, கடற்கரையில் சிதைந்து போய்க்கிடந்த அம்மக்களின் வாழ்வாதாரத்தை நிறுவவும், அவர்களுக்கு ஏற்பட்ட உடல்காயங்களில் இருந்து மீண்டெழவும், நோய்த்தடுப்புக்களை வழங்கி அவர்களிடம் பரவி பேரழிவுத் தரவல்ல தொற்றுநோய்களில் இருந்து காக்கவும், இந்தப் பேரவலத்தில் இருந்து மீழ முடியாது தவித்துக் கொண்டிருந்த அம்மக்களின் மனங்களை ஆற்றுகைப்படுத்தவும் என்று இரவையும், பகலையும் தனதாக்கி ஓய்வின்றி உழைத்தார் வினோதரன்.

வடமராச்சி கிழக்கின் கரையோரக் கிராமங்களான ஆழியவளை, வத்திராயன், மருதங்கேணி, தொடங்கி முல்லைத்தீவின் கரையோரக்கிராமங்கள் வரை இருந்த இடைத்தங்கல் முகாம்கள் அனைத்திலும் தனது பணியை செய்து மக்களைக் காத்த வினோதரனுக்கு மீண்டும் தியாகதீபம் திலீபன் மருத்துவமனை ஒன்றில் பணி காத்திருந்தது.

மன்னார் மாவட்டத்தின் மிக பின்தங்கிய கிராமம் என்று கருதக்கூடிய வகையில் இருந்த முள்ளிக்குளம் கிராமத்தில் தியாகதீபம் மருத்துவமனையில் சேவை மையம் ஒன்று நிறுவப்பட்டு அதன் சிறப்பு மருத்துவராக வினோதரன் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இக்கிராமம் அடிக்கடி இராணுவத்தாக்குதல்களால் இன்னல்களை அனுபவிக்கும் கிராமம். அடிக்கடி இராணுவம் முன்னேறி நிலத்தை பிடிக்க முயலும் பிரதேசம். அடிப்படை மருத்துவ வசதிகள் எதுவும் அற்ற கிராமம்.

அங்கே பெரும்பாலும் எழும் பிரச்சனைகள் மகப்பேறு, விசக்கடி, யானைத் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் தான். ஆனால் அங்கே இவற்றுக்கு சரியான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. ஆனால் அம்மக்களில் ஒரு வயதான தாய் அங்கே மருத்துவிச்சியாக இருந்து அவர்களுக்கான மகப்பேற்றை கவனித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவரை மீறிய சில பிரச்சனைகள் எழுந்து மக்களை இன்னல்களுக்குட்படுத்திக் கொண்டிருந்தன. அப்போது வினோதரன் தான் கற்றுத் தேர்ந்த மருத்துவ அறிவை அம்மக்களுக்காக பயன்படுத்தினார். அம் மக்களோடு மக்களாக பயணித்தார். தன்னால் ஒரு நோயாளருக்கு எழும் பிரச்சனைகளுக்காக தீர்வுகாண இயலாத சூழ்நிலை எழுந்தால், உடனடியாக அருகில் இயங்கி வந்த அரச மருத்துவமனைக்கு அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைத்தார். இப்போது அம் மக்களுக்கு இன்னல்கள் வந்ததில்லை. சாவு வீதமும் நோயாளர் வீதமும் குறைந்திருந்தது.

வினோதரன் அங்கே பணியேற்ற பின்பு அம்மக்களுக்கான மருத்துவ வசதிகளில் பெரும் இடர்கள் வந்ததில்லை. அவர்களுக்கான மருத்துவ தேவைகள் சரியாக நிறைவேற்றப்பட்டன. இரவு பகல் எதுவுமற்று அம்மக்களுக்கு அம்மக்களோடு ஒருவனாக நின்று பணியாற்றினார் என் ஆசிரியை பெற்றெடுத்த வீரமகன். ஆனாலும் அப்பணி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

வெடி மருந்துக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். அக் கூற்றை மெய்ப்பிப்பது போல 06.03.2007 அன்று ஒரு வெடிபொருள் தவறுதலாக வெடித்தது. அவ் வெடிபொருளுக்கு எங்களின் வினோதரன் ஒரு மருத்துவன் என்பது தெரியவே இல்லை. அவன் இம்மக்களுக்கு இன்னும் பல காலங்கள் தேவை என்பது தெரியவே இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் இம்மருத்துவரின் பணி முக்கியம் என்பது தெரியவே இல்லை. அதனால அவ்வெடிபொருள் தவறுதலாக வெடித்து வினோதரனின் உயிரைப் பறித்தெடுக்கிறது.

தான் நேசித்த மக்களுக்கு தனது மருத்துவப் பணியால் சேவை வழங்க வேண்டும், மருத்துவதேவை உள்ள இடங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை இல்லாது ஓர் உயிர் கூட வீணாக பறிக்கப்படக் கூடாதென்று கனவு கண்ட மருத்துவப் போராளி தவறுதலாக நடந்த வெடிவிபத்தில் தன் உயிரை ஆகுதி ஆக்கி தமிழீழ மண்ணின் மார்புக்குள் விதையாக தூங்குகின்றான்.

இருப்பினும் பெரியமடுப் பகுதியில் இயங்கிய மன்னார் களமுனைக்குரிய இராணுவ மருத்துவமனை “மேஜர் வினோதரன் நினைவு இராணுவ மருத்துவமனை” என்று நிமிர்ந்து நின்றது. வினோதரன் வீழ்ந்து போகவில்லை விதையாக மண்ணில் விதைக்கப்பட்டார். இறுதி வரை தான் நேசித்த மருத்துவ சேவை ஊடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை நிறைத்து நின்றார். விதையாகியும் முளையாகி மருத்துவமனையாக நிலைத்திருந்தார்…

எழுதியது: இ.இ.கவிமகன்

நாள்.27.11.2021

தகவல்: மருத்துவர் தணிகை, மருத்துவப்போராளி வண்ணன் மற்றும் மேஜர் வினோதரனின் தங்கை.