கன்னியாய் வெந்நீருற்று ஈழத்தில், சைவத் தமிழரின் பாரம்பரிய சொத்து. அந்த புனிதப் பிரதேசத்தைப் பாதுகாப்பது ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் கடமையும் உரிமையும் ஆகும்.

மூன்று தசாப்த காலம் முப்படையுடன் போராடிய தமிழர் இனம் இன்று கையறு நிலையில் நிற்பதைப் பயன்படுத்தி பௌத்த – சிங்கள தேசம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை தொல்லியல் சின்னங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பதும் பின்னர் அதை பௌத்த பிரதேசம் ஆக்குவதும் தொடர் கதையாகி வருகின்றது. தமிழரின் தொன்மை வழிபாட்டிடம் கதிர்காமம் ஏற்கனவே பறிபோய்விட்டது. திருக்கோணேஸ்வரத்தைச் சுற்றிலும் படை முகாம். அதுவும் விரைவில் சிங்களப் பிரதேசம் ஆக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, வெடுக்குநாறிமலையை கையகப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாய் பிரதேசமும் பௌத்த சிங்களப் பூமி ஆக மாற்றப்பட்டு வருகின்றது. அங்கு ஏற்கனவே பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கன்னியாய் வெந்நீருற்றுப் பிரதேசம் பௌத்த – சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்தை அப்புறப்படுத்திவிட்டு பௌத்த விகாரை அமைப்பதற்கு பௌத்த பிக்குகள் துடியாய்த் துடிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பைத் தட்டிக் கேட்பதற்கு அப்பிரதேசத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

குறித்த விடயத்தில் திருகோணமலை தென்கயிலை ஆதீனம் அதிக அக்கறை எடுத்துச் செயற்பட்டு வருகின்றது. கன்னியாய் பிரதேசம் பறிபோய்விடக்கூடாது என்பதில் தென் கயிலை ஆதீனமும் அங்குள்ள சைவத் தமிழர்களும் அதிக கவனத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளாரின் வழிகாட்டலில், அவரின் தலைமையில் சென்ற அணியொன்று அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இவ்விடயத்தை மனோ கணேசன் கையாள்வது குறித்து திருகோணமலையைச் சேர்ந்த மக்களும் ஏனைய இடங்களைச் சேர்ந்த சைவத் தமிழ் மக்களும் மனோ கணேசனுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது ஆக்கிரமிப்பிற்கு உள்ளான காணியின் சொந்தக்காரியான, திருகோணமலை மடத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தர்மகத்தா கோகுலராணி என்பவர், அதற்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளார் என அறிவித்துள்ளார். தமக்கு சட்டத்தரணிகளின் உதவி தேவை என அவர் அறிவித்திருந்த நிலையில், அவர் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அமரர் கந்தையா நீலகண்டனின் மகன் சட்டத்தரணி பிரணவன் ஆஜராக முன்வந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.