“எமது மொழியும் கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை; எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை”. எமது மண்ணில் வாழ்ந்த தலைவர் ஒருவரினால் கூறப்பட்ட இந்த நிதர்சனமான சிந்தனை ஆழ்ந்த பொருளுடையதாகவும், இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகின்ற அதே வேளை, இன்றைய தமிழர்களின் இருப்பின் மீது தொடுக்கப்பட்டிருக்கும், வெளியே தெரியாமல் உள்ளே பரவும் புற்றென சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்  பண்பாட்டு அழிப்பின் கோரமுகத்தைப் புரிந்து தெரிந்து எதிர்கொள்ள தேவையான தொடக்கப் புள்ளியாக அந்த தலைவரின் கூற்றை எடுத்துக் கொள்ளலாம். 

ஏனெனில், எமது தமிழ் சமூக சூழலில் சமகாலத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை உற்று நோக்கினால் அது தெளிவாகப் புரியும். சிலருக்கு அந்த நிகழ்வுகள் செய்தியாகிப் போகிறது. ஆனால் பலருக்கு அது தமது வாழ்க்கையினுடையது மட்டுமல்லாமல், சந்ததியின் இருப்பைக் கூட கேள்விக் குறியாகிப் போய்விடுகிறது. இதனை “மொழியெங்கு முடிகிறதோ நிலம் அங்கே முடிகிறது” என கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரம்பரிய நிலம் என்கின்ற ஒன்றில்தான் மனித இனம் தனது வரலாற்றையும், பண்பாட்டையும் கட்டிக் காக்க முடியும். மொழி வாழ நிலம் கட்டாயம் அவசியமானது என்பதை மேல் எடுத்துக்காட்டிய இரு எடுத்துக் காட்டுகளும் தெளிவாக்குகின்றன. 

அல்லது, மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் போல வெளிநாட்டவர் யாரும் சொல்லியிருக்கிறார்களா? என்றால் “A people without the knowledge of their past history, origin and culture is like a tree without roots”. என 1887 இல் ஜமேக்காவில் பிறந்த, உலக ஆபிரிக்க நீக்ரோ  இனத்தர்களுக்கான சர்வதேச மையத்தை நிறுவி செயற்பட்ட Marcus Mosiah Garvey Jr. என்பவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏனெனில் வேர்களை இழந்த ஒரு இனமாக இன்று உலகப்பரப்பில் மொழியிழந்து, பண்பாடிழந்து, நிலமிழந்து சொல்லப்போனால் இன்றும் எதோ ஒருவகையில் அடிமையாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறது இந்த ஆப்ரிக்க நீக்ரோ இனம். கிட்டத்தட்ட தமிழர்கள் நாமும் அப்படியே! 

மொழி, கலை, பண்பாடு ஆகிய மூன்றும், ஒரு மக்கள் இனத்திற்குள் நிலைத்து நிற்க, அது வேரூன்றிக் கொள்ள வளமான நிலப்பரப்பு நிச்சயம் அவசியமாகின்றது. ஓரினத்தை இல்லாதொழிக்க இவை  மூன்றையும் அழித்தாலே போதுமானது. அது வாழ்கின்ற நிலப்பரப்பை கூறுபோடுவதன்  மூலம் சாத்தியமாகின்றது. இங்கே “வளமான நிலப்பரப்பு” என்று ஏன் கூறப்படுகிறது என்றால், வளமான இடத்தில்தான் மக்களும் வசிப்பார்கள். நிலைத்து நிற்கின்ற நாகரீகமான மக்கள் கூட்டத்தினால்தான் மொழி, கலை,பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்க முடியும். எடுத்துக் காட்டாக 1921 ல் மணல் மேடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் தொன்மையான சிந்துசமவெளி நாகரீகம் புராதன காலத்தில் அனைத்து தளங்களிலும் உயர்வுடனும் உயிர்ப்புடனும் இருந்தாலும், பிற்பட்ட காலங்களில் அது அழிந்து போனதற்கு எதை ஆதாரமாக வைத்து அந்த நாகரீகம் தோற்றம் பெற்றதோ அந்த சரஸ்வதி நதியின் மறைவே காரணமாகக் கூறப்படுகிறது. (அப்படியொரு நதியே இல்லை என்ற வாதமும் இருக்கிறது.) எதுவாக இருப்பினும் வளமான நிலப்பரப்பு மனிதன் வாழ அவசியமாகின்றது. அந்த வளமான நிலப்பரப்பை அழிப்பது அல்லது கூறுபோடுவதனால் ஒரு இனத்தின் மொழி, கலை, பண்பாடு ஆகிய  மூன்றையும் அழிக்கலாம். 

ஈழநிலத்தில் பிளவுகள்.
எமது ஈழத்தாயகத்தில் பூர்வீகத் தொன்மையான தமிழர்களின் பண்பாட்டு வழி வாழ்வியலுடன் கூடிய நிலப்பரப்பை அழித்தல் அல்லது கூறுபோடுதல் என்ற செயற்பாட்டை மிகவும் திட்டமிட்ட நேர்த்தியான முறையில் சிங்கள அரசு செயற்படுத்தி வருகிறது. தமிழருக்கென்று தனியான வளமான நிலப்பரப்பு மட்டுமல்லாமல், அதில் பன்னெடுங்காலமாக வரலாற்றுடன் வாழ்கின்ற ஒரு மக்கள் இனமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கான உறுதியான ஆதாரங்களை அண்மைய மன்னார், கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்வுகள் சந்தேகமின்றி நிறுவியிருக்கிறது. ஈழத்தமிழர்கள் தமக்கென்று தனித்துவமான மொழி, கலை, பண்பாடு அனைத்தும் கொண்டவர்கள். சுமார் அறுபது வருடங்களுக்கு மேலாக கறையான் அரிப்பது போல தமிழருடைய நிலம், மொழி, கலை, பண்பாடு என அனைத்தும் அரிக்கப்பட்டு இன்று இறுதி அத்தியாயம் பெரும்பான்மையினரால் அரங்கேற்றப் பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்குப் பல தமிழ் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரச அதிகாரிகளும் அற்ப எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக் கொண்டிருப்பதுதான் பெருங்கவலை. 

தமிழரின் பூர்வீக நிலங்களை கூறுபோடுவது என்ற உள்நோக்குடன் முதன்முதலில் உருவாக்கப்பட்டதுதான் கல்லோயா அபிவிருத்தித் திட்டம். அடுத்தது மகாவலி அபிவிருத்தித் திட்டம். இப்படி பட்டடியலை நீட்டிக் கொண்டே போகலாம். அங்கே ஆறு வற்றியதால் நாகரீகம் அழிந்தது. இங்கே ஆறுகளின் பெயராலேயே ஒரு இனம் வஞ்சிக்கப்படுகிறது. அவற்றின் வரிசையில் திருக்கோணமலையின் வடக்கு எல்லையில் பதவியா குளத்தின் அடிப்படையாகக் கொண்டு அதன் நீரைப் பெற்று ஓடும் மகாஓயா ஆற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மணலாறு குடியேற்றத்திட்டம். (இன்று வெலிஓயா என்றால்தான் பலருக்குத் தெரியும்). தமிழர் பெரும்பான்மையாகவும் பாரம்பரியமாகவும் வாழ்ந்த, வாழ்கின்ற வடக்கு கிழக்கைப் பிரித்துக்  கூறுபோட, அபிவிருத்தி என்கின்ற பெயரில் உருவாக்கப்பட்ட திட்டமே அது. அதில் தமிழர்கள் பெற்றதை விட இழந்ததே அதிகம். இழந்ததென்ன இல்லமாலே போய்விட்டோம். 

ஒரு கிராமத்தின் சுவடு.
இந்த கூறுபோடும் பேரலையில் திருக்கோணமலையின் வடக்கு கரையோர எல்லைக் கிராமம் ஒன்று, இன்னும் எத்தனை வருடங்கள் தமிழாக வாழும் என, சுருக்கு கயிற்றில் மாட்டிய கழுத்தின் நிலையாக இருப்பது  எத்தனை பேருக்குத் தெரியும்? சினிமாவில் அத்திப்பட்டி இல்லாமல் போன கதையை நெஞ்சுருக இரசித்தோம். ஆனால் இங்கே எத்தனை தமிழ் கிராமங்கள் கண் முன்னாலேயே அழிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் திருக்கோணமலை மாவட்டத்தின் வடக்கு கரையோர எல்லைக் கிராமமான “தென்னமரவடி” என்ற கிராமமாகும்.

தமிழரின் இதயபூமி என்று அழைக்கப்படும் மணலாற்றுக் காட்டின் தலைவாசல்தான் இந்த ‘தென்னமரவடி” என்பது பலருக்குத் தெரியாத விடயம். போதிதர்மனை சொந்த நாட்டிலேயே தேடியது போல்தான் நாமும் எமது ஊரை தேடவேண்டி இருக்கிறது. திருக்கோணமலையை சொந்த இடமாகக் கொண்ட பலபேருக்கு கூட தென்னமரவடி தெரியாமலேயே இருக்கிறது. உண்மையில் இன்றைய சந்ததி பிறப்பதற்கு முன்னமே இந்த கிராமம் அழிக்கப்பட்டது என்று கூறுவது சாலப் பொருந்தும். 

திருக்கோணமலை நகரிலிருந்து 72 கிலோமீற்றர்கள் வடக்காகவும், கொக்கிளாய் கடனீரேரியின் வாயிலிருந்து சரிநேர் மேற்காகவும், அதாவது கடனீரேரியின் உட்பரப்பிற்கு அருகாமையில் அமைதியாகவும், வளமாகவும் இருந்தது அந்த தமிழ் பழந்தமிழர் கிராமம். புல்மோட்டை- அனுராதபுரம் வீதியில் அமரிவயல் சந்தியில் வலப்புறமாகத் திரும்பி நேரே வடக்காகச் சென்றால் இக்கிராமத்திற்கு செல்ல முடியும். 1984 ற்கு முன்னர் கடனீரேரித் தொடுவாய் ஊடாகச் செல்ல முடியாதவர்கள் கடனீரேரியைச் சுற்றி செல்ல, இக்கிராமத்தைத் தொட்டு அந்த வண்டில் பாதை ஊடாக செல்வார்கள். வடக்கே முல்லைத்தீவின் கருநாட்டுக்கேணி என்ற கிராமமும் இருக்கிறது. அந்தக் கிராமமும் குற்றுயிராக சாவின் விளிம்பிலேயே கிடக்கிறது. மருதம், முல்லை, நெய்தல் என்பன தென்னமரவடியில் ஒருங்கே அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும். 

‘தென்னமரவடி” என்ற பெயர்வரக் காரணம் பல கூறப்பட்டாலும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் தென்னாட்டில் இருந்து வந்த ஒரு சிற்றரசன் வாழந்த கிராமம் இதுவென்றும், அவனுடைய பரிவாரங்கள் உறவுகள் தான் இக்கிராமத்தை தோற்றுவித்தார்கள் என்றும்  கூறப்படுகிறது. அதாவது ‘தென்னவன் மரபு அடி” காலப்போக்கில் ‘தென்னமரவடி” ஆகியதாகவும், இன்று ‘தென்னைமரவாடி” என்று அழைப்பதும் உண்டு. பண்டைய ஆறு வன்னிமைகளோடு தென்னமரவடியும் ஒன்றாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. முன்னொரு காலத்தில் கடற்பயணங்களுக்கு இக்கடனீரேரி பேருதவியாக இருந்ததாகவும், இலங்கையின் உள்பகுதிக்குச் செல்ல அதாவது அனுராதபுரம் தலைநகராக இருந்த காலத்தில் கூட போக்குவரத்திற்கு இலகுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் இக்கிராமத்திற்கு அருகாமையில்தான் இன்றைய புல்மோட்டை பழைய இறங்குதுறையாகவும் இருந்திருக்கிறது. தமிழின் வரலாற்றில் “தென்னவன்” என்றால் அது “பாண்டியர்”களையே குறிக்கின்ற சொல்லாடல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாண்டியர்களின் கப்பல்கள் இந்த கடனீரேரிக்குள் வந்திறங்கியதாகவும் வரலாற்றுக் கதைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். பதவியா குளத்தினுடையதும், அதன் நீரேந்தும் மற்றைய சிறிய குளங்கள் மகாஓயாவுடன், மீஓயா போன்ற ஆறுகளின் கொடையிலும் கடனீரேரி அள்ளிப் போட்ட வளமும், நெடிதுயர்ந்த சோலைக் காடுகளுடன் இயற்கையின் செந்தளிப்பில் வாழ்ந்த அந்த கிராமம் இன்று கடமைக்காக மட்டும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கியிருக்கிறது. 2012 சனத்தொகை கணக்கெடுப்பில் கூட அந்த கிராமம் வெறுமையாகவே காணப்படுகிறது.   

கிழக்கு மாகாணத்தில் தமிழர் இன விகிதாசாரத்தைக் குறைப்பதற்காக குறிப்பாக திருக்கோணமலைப் பகுதிகளில் புதிதாக பல சிங்களக் குடியிருப்புக்கள் பல்வேறு திட்டங்கள் என்கின்ற பெயரில் அமைக்கப்பட்டன. டி.எஸ். சேனாநாயக்க உருவாக்கிய கந்தளாய்த் திட்டம் மற்றும் அல்லைக் கந்தளாய்த் திட்டங்களுடன் ஜெயவர்த்தன உருவாக்கிய மகாதிவுல்வௌ திட்டம், சிறிமாவோ உருவாக்கிய மொறவேவ திட்டம், பண்டாரநாயக உருவாக்கிய பதவியாத் திட்டம் போன்ற குறிப்பிடத்தக்வையாகும்.   

இவற்றில் பதவியா அபிவிருத்தித் திட்டத்தில் திருக்கோணமலை மாவட்டத்திற்குள் புதிதாக பதவிசிறிபுர, திஸ்ஸபுர, சமணபுர, கெமுனுபுர, சிங்கபுர போன்ற சிங்களக் கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு திருக்கோணமலையில் தமிழரின் எண்ணிக்கை விகிதாசாரத்தில் குறைக்கப்பட்டது. இவ்வாறு அனுராதபுரத்தின் வடக்கிலும், முல்லைத்தீவின் தெற்கிலும் பல புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் மக்களின் பாதுகாப்புக்கு என உருவாக்கப்பட்ட துணை இராணுவ படைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு தமிழர்களை தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றுவதென்ற தமது எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள அரசு நிறைவேற்றத் தொடங்கியது. 

1983 கறுப்பு சூலையின் கொடூரங்களுக்குப் பின்னர், 1984 மார்கழி மூன்றாம் திகதி அருகில் உள்ள கிராமங்களின் துணைஇராணுவ படைகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறு தென்னமரவடி கிராமத்துக்குள் உள்நுழைந்திருக்கிறார்கள். பயத்தில் மக்கள் காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தார்கள். சில நாட்களின் பின்னர் மீண்டும் கிராமத்திற்குள் வரும்போது சுற்றிவளைக்கப்பட்டு சுடப்பட்டிருக்கிறார்கள். இதில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் பதிவுகள் கூறுகின்றன. இருபெண்கள் ஆடைகளின்றி தப்பி ஓடியதாகவும் கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஏழு கடைகள் உட்பட 165 வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப் பட்டிருக்கிறது. பள்ளிக்கூடம், பிள்ளையார் கோவில்கள் போன்றனவும் இடித்து அழிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு வாழ்ந்த சுமார் 800 தமிழ்ப் பொது மக்களும் அங்கிருந்து பாரம்பரிய நிலத்தை விட்டு வெளியேறி திருக்கோணமலை நகரை அண்டிய பிரதேசங்கள் மற்றும் வன்னிப் பெருநிலப்பரப்பின் பல பகுதிகளுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். அந்த சம்பவங்களுக்குப் பிறகு, பதவியாத் திட்டத்தில் கொக்கிளாய்க்கு மேற்காக உள்ள காட்டுப் பிரதேசங்கள் மற்றும் ஆறுகளை மையப்படுத்தி குடியேற்றப்பட்ட பெரும்பான்மையினரின் தொல்லைகளை தாங்காத அம்மக்கள், 1984 – 1985 வரை அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர் என்று கூறப்படுகிறது. பன்னெடுங்காலமாக அமைதியாகவும் வளமாகவும் வாழ்ந்த மக்கள் எதேதோ திசைகளில் பயணித்து விட்டார்கள். போர் முடிந்தால் நல்லகாலம் என்று சொன்னார்கள். ஆனால் இது போன்ற தமிழர் கிராமங்களுக்கு மட்டும் விடிவே இல்லை. 8.5 சதுரமைல் குடியிருப்பு பரப்பளவைக் கொண்ட இந்த தென்னைமரவடி என்ற தமிழர் பாரம்பரிய தொன்மையான கிராமம் நீண்ட வயல்பரப்பைக் கொண்டது. ஆறுகளின் கரைகளில் நாகரீகம் தோன்றியது என்றால் தென்னமரவடியும் விதிவிலக்கல்ல.

இன்று தென்னைமரவடியின் பெரும்பாலான வாழ்விடங்கள் காடடர்ந்து போய் கிடக்கிறது என்றாலும், “வாழ்ந்த நிலம்” என்ற பற்றினாலோ என்னவோ இன்று குடியிருக்க ஆயிரம் வசதிக் குறைபாடுகள் இருந்தாலும் அதன் பூர்வீக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல்! பிரதேச அரச அதிகாரிகள் பலரின் கரிசனத்தாலும், தென்னைமரவடி கிராம மீள்குடியேற்றத்துக்கென புலம்பெயர்வாழ் மக்களின் வாழ் தமிழர்களின் நிதி சேகரிப்பு உதவிகளுடன், சில வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களுடன் அங்கே குடியேறிய மக்களின் மனவுறுதிதான் பிரமிக்க வைக்கிறது. தற்போது மக்களால் மீள்  நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமும் பாடசாலையினதும் புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது ஒரு மனநிறைவு ஏற்பட்டாலும் கூட, உலகத்தமிழர் இப்படியான கிராமங்கள் நோக்கி தமது பார்வையைத் திருப்ப வேண்டும் என்பது பிரதானமானது. தமிழர் வரலாறு இப்படியான கிராமங்கள் வழியாகத்தான் புத்துயிர் பெறும் என்பது நம்பிக்கை. 

கடந்த கால வரலாறுகளின் படி, 2002 ல் சமாதான காலப்பகுதியில் பல தொண்டு நிறுவனங்களின் ஓத்திசைவுடன் தென்னமரவடி கிராமம் மீள்குடியேற்றத்துடன் மீள்கட்டுமானம் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுதும் அது பயனளிக்காமல் போனது. அதை நிறைவேற்றுவதற்கு விடவில்லை என்பதே சாலப் பொருந்தும். தென்னமரவடி கிராமத்திற்கு நீர் வழங்கிய பறையன் அணைக்கட்டு திருத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதுவரை எந்த விபரங்களிலும் வரைபடங்களிலும் பறையன்அணைக்கட்டு தொடர்பான பதிவுகள் இல்லாமலேயே போய்விட்டது மிகவும் வருந்தத் தக்கதாகும். அன்று தென்னமரவடி மக்களுக்குச் சொந்தமான சுமார் 270 ஏக்கர் வயல் வெளிகள் இன்று பெரும்பானமையின மற்றும் வேற்று இனத்தவரின் பெயர்களில் மாற்றப்பட்டிருக்கிறது என்பது கவலைக்குரிய விடயம். அதனைவிட பாதுகாப்பு என்கின்ற பெயரில் இராணுவத்தினரும் பெருமளவான நிலப்பரப்பினை தம்வசம் வைத்திருக்கிறார்கள். தென்னமரவடியில் வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு சந்ததியே இல்லாமல் போய்விட்டது. 2013 ல் சில  குடும்பங்கள் மீள்குடியமர்ந்தாலும்  இன்றுவரை அடிப்படை வசதிகள் குறைபாடுகளுடன் மிகவும் இன்னல்களுக்குள் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.பாரம்பரிய சொந்த வயல்காணிகள் பறிபோன நிலையில் அவர்கள் எங்கு சென்று முறையிடுவது? 

இன்று நேற்றல்ல.
அண்மைய சில வருடங்களுக்குள் தென்னமரவடி தொடர்பான செய்திகளில் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பதைத் தாண்டி, அந்த கிராம மக்களின் வயல்காணிகளை அபகரித்தமை தொடர்பாகவும், பெரும்பான்மை மற்றும் வேற்றினத்தாரின் இடையூறுகள் தொடர்பாகவும் செய்திகள் வரத்தான் வருகிறது. தொடர்ச்சியாக இலங்கையின் கிழக்குப் பகுதிகளின் எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டிருக்கின்றன. பதவியாவும் திருக்கோணமலை நிர்வாக எல்லைக்குள்ளேயே இருந்திருக்கின்றன. பின்னர் சிங்கள மயமாக்கலில் அவை அனுராதபுரத்துடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்று தமிழரின் பாரம்பரிய கிராமமான கந்தளாய் ஒரு சிங்களமாவட்டத்துடன் சேரக் காத்திருக்கிறது என்பதும் கசிந்த, வருந்தத்தக்க தகவலாகும்.

அடுத்தது தென்னமரவடி போன்ற கிராமங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் போன்ற  மாவட்டங்களில் இருந்து ஒருசில சிங்களக் கிராமங்களை சேர்த்து தனி மணலாறு மாவட்டம் உருவாக்கப் போவதாகவும் தகவல்கள் கசிகின்றன. 1833 ல் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக சுலபத்திற்காக ஐந்து மாகாணங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் 1889 ல் ஓன்பது மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. இலங்கை பிரித்தானியரின் ஆட்சியில் இருந்து விடுபட்ட 1948 க்குப் பின்னர, மீண்டும் 1958 ல் மாகாண மாவட்ட எல்லைகள் மீள் நிர்மாணம் செய்யப்பட்டது. 1972 இல் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யும் போது திருக்கோணமலை வடக்கு குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் இருந்த தென்னமரவடி, புல்மோட்டை போன்ற கிராம சேவையாளர் பிரிவுகள் பிரிக்கப்பட்டு பதவிசிறிபுர உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குள் இணைக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் 1982 மீண்டும் குச்சவெளியுடன் இணைக்கபட்டு பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இன்று திருக்கோணமலையில் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த பல கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்டிருக்கிறது என்பது வரலாறு. அவற்றின் பெயர்களும் சிங்களவருக்கே சொந்தமாகி இருக்கிறது. எடுத்துக்காட்டாக முதலிக்குளம்-மொறவெவ,  நொச்சிக்குளம்-நொச்சியாகம, குமரேசன்கடவை-கோமரங்கடவெல, இலங்கைத்துறைமுகத்துவாரம்-லங்காபட்டின, சாரதாபுரம்-சரிதாபுர என்று பட்டியல் போய்க்கொண்டு இருக்கிறது.

  அதனைவிட மருவிப் போதல் என்பதனாலும் எமது கிராமங்கள் மாறிப்போய் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அனுராதபுர மாவட்டத்தில் இருக்கும் ‘ஹொறவப்பொத்தானை” என்ற ஊரின் பெயர் வரக் காரணம் பற்றி வரலாறு சில தகவல்களைப் பதிந்து வைத்திருக்கிறது. இந்தியாவின் வாடா நாட்டிலிருந்து படையெடுத்து வந்த ஆரிய அரசர்களை மட்டக்களப்பு மன்னன் சிங்ககுமாரன் (கலி3370 இல்) எதிர்த்து வடக்கே இன்றைய திருக்கோணமலைக்கப்பால் துரத்தி எல்லைக்கல்லிட்ட இடத்தில் அவர்கள் சிங்ககுமாரனிடம் சமாதானம் கோரி அந்த இடத்தில் இவனுறவைப் பெற்றதனால் அவ்விடத்திற்கு ‘உறவுப்பெற்றானை” என்ற பெயர் வந்தது. (மட்டக்களப்புத் தமிழகம்-இயல்9.பக்-412) அதுவே மருவி இன்று ஹொறவப்பொத்தானை ஆனதாக வரலாறு சொல்கிறது. இப்படியும் எமது நிலங்கள் பெயர் மாறிக் கைமாறிப் போயிருக்கின்றன. திருக்கோணமலை மாவட்டத்தில் இன்றைய காலம் வரை ஒருபொழுதும் அரசாங்க அதிபர் மற்றும் காணி நிறைவேற்று அதிகாரி பதவிகளுக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக வரலாற்றில் இல்லை. இனி நியமிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகளுமில்லை. 

குடியேற்றத்தின் விளைவு.
1827 ஆம் ஆண்டு திருக்கோணமலையின் ஆட்தொகை கணக்கெடுப்பின் படி முசுலிம்கள்-3245, தமிழர்-15663, சிங்களவர்-250 மட்டுமே காணப்பட்டது. 1921 ல் சிங்களவர்கள் – 1501 மட்டுமே. பின்னர் 1946 இல் 11606 என்றும், 1953 இல் 15296 ஆகவும், 1963 ஆண்டு 39925 என்று சடுதியாக சிங்களவர்களின் சனத்தொகை இரட்டிப்பாக அதிகரித்துச் செல்வதை இங்கு நோக்கலாம். 1981 ஆம் ஆண்டு திருக்கோணமலையின் இனவாரியான சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி முசுலிம்கள் – 75,039, தமிழர்கள்-93,132, சிங்களவர்கள்- 85,503 இருந்திருக்கிறது. 1981 இல் இருந்து 2012 வரை இலங்கையில் இடம்பெற்ற இனப்போர் காரணமாக சிங்களவர், தமிழர்களின் இனஅதிகரிப்பு விகிதம் அவ்வளவு பெரிய மாற்றம் காணப்படாவிட்டாலும், முசுலீம்களின் இன அதிகரிப்பு விகிதம் இரட்டிப்பானது என்பதை இங்கே கவனிக்க முடியும். அது தனி ஆய்வாக செய்ப்பட வேண்டிய விடயப் பரப்பாகும். 2012 ஆம் ஆண்டின்  முசுலிம்கள்-163,982 (40.43%) ஆகவும், தமிழர்கள்-115,549 (30.55%) எனவும், சிங்களவர்கள்-101,991 (26.97%) என அதிகரித்து காணப்படுவதை மனவேதனையுடன் நோக்குவதை தவிர வேறு வழியில்லை. 1973 ல் திருக்கோணமலைக்குள் மட்டும் 10738 சிங்கள குடும்பங்கள் திட்டமிட்டு குடியமர்த்தப் பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நாளைய நம்பிக்கை.
திருக்கோணமலையில் தென்னமரவடி ஒரு சிறு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போன்று மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், புத்தளம் எனறு தமிழர் பன்னெடுங்காலமாக பாரம்பரியத்துடன் வாழ்ந்த நிலங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உருமாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்ற அதேநேரம், தமிழர் நிலங்களுக்கு பாதுகாப்பு இயற்கை அரணாக விளங்கும் பெரும் சோலைக் காடுகளும் குடியேற்றம், அபிவிருத்தி, சுற்றுலா என்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலநிலை மாற்றங்களால் பெரும் அவதிப்படும் வடகிழக்கு படித்த மக்களுக்கு இந்த சாதாரண விடயத்தைக் கூட புரிந்து தெரிந்து கொள்ள கற்ற கல்வி இடம்தரவில்லை என்பது பெரும் வேதனைதான். கோயிலுக்கு தங்க கூரை போட்டால் போதாது மக்களே! கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும். சிவனுக்குச் சிலை வானைத்தொடக் கட்டினால் போதாது மக்களே! தமிழர்க்குச் சொந்தமான இயற்கை மீதான பேரினவாதத்தின் போரை கொஞ்சமாவது புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

உணரவில்லை என்றால் நீங்கள் கட்டிய சிவன் சிலை, புத்தர் சிலையாக மாற அவ்வளவு காலம் தேவைப்படாது. இதற்கான நல்ல முடிவுகளை அறிவார்ந்த படித்த இளம்சமுதாயமே எடுக்க வேண்டும். தமிழர் தேசமெங்கும் அரச பதவி வெற்றிடங்களை நிரப்ப தமிழ் இளையோர் ஆர்வம் காட்ட வேண்டும். எமது நிலத்தில் எமக்கான அரச பதவிகள், அதிகாரங்கள் மீதான ஆசைகள் இளையோர்கள் மத்தியில் வலுப்பெற வேண்டும். அரச பதவிகள், அதிகாரங்கள் தாங்கிய தமிழ் இளையோர்களின் கைகளிலேயே எமது தமிழரின் இருப்பும் சந்ததியின் வாழ்வும் தங்கியிருக்கிறது என்பதை மறந்து விடலாகாது. இதுவே எமக்காக வாழ்ந்து தமது இன்னுயிர்களை ஈய்ந்தவர்களின் விருப்பமுமாகும். விடியும் நாளைய பொழுதாவது தமிழர்களின் நிலங்களில் பட்டொளி வீசி சுதந்திர காற்று பரவவேண்டும்.

பரவியேயாகவேண்டும். “தென்னைமரவடி” தொடர்பான இந்த பதிவு முடிந்த முடிவானதொன்றல்ல. வருங்காலங்களில் ஒரு வரலாற்றுப் பெரும் புத்தகக் கையேடாக, அனைவரிடம் இருந்தும் தகவல்களை பெற்று தொகுக்கப்பட வேண்டும். மேலும் தென்னமரவடி கிராமத்துடனும் இன்றைய சந்ததி கூடவே நிற்க வேண்டியது முக்கிய பொறுப்பும்  கடமையும் கூட.

புலர்வுக்காக எழுதியது ப.வித்யாசாகர்