அவசரம் அவசரமாக ஒரு பணியில் நான் மூழ்கிக் கிடக்கிறேன் . உடனடியாக குடுக்க வேண்டிய பணியது. அதனை பெறுவதற்காக அந்த வேலையைத் தந்தவர் காத்து இருக்கிறார். நானும் அவரை வெளியில் இருக்க வைத்து எனது மடிக்கணனியோடு சண்டை போட்டு கொண்டிருக்கிறேன். என் அவசரம் அதற்கு புரியவில்லை. அவரோ எழுந்து வந்து கண்ணாடிக் கதவின் ஊடாக சைகை காட்டுகிறார். பிளீஸ் அண்ண.. கொஞ்சம் பொறுங்க என என் இரண்டு விரல்களும் சைகை காட்டுகிறன. என் விழிகளை கணனித் திரையில் இருந்து எடுக்கவில்லை. அவருக்கு விரல்கள் மட்டுமே செயதியைச் சொன்னது.

மீண்டும் அவர் இருக்கையில் அமர… நான் வேலையைத் தொடர்கிறேன். அப்போது என் அலுவலகக் கதவைத் திறந்து கொண்டு நண்பன் ஒருவன் வருகிறான்.

“மச்சான் அவசரமா வெளில போகணும் வாறியா…?

எனது நண்பனின் அவசர அழைப்பு எரிச்சலை உண்டு பண்ணினாலும் அவனை உதறிவிட முடியவில்லை.

என்னடா இப்ப? நான் என்ன அவசரத்தில் இருக்கிறேன் என்பது உனக்கு தெரிய வில்லையா?

இல்ல நீ இந்த வேலையை வேற ஒராளிடம் குடுத்திட்டு வா… ஒரு சின்ன பிரச்சனை மாங்குளம் மட்டும் போய் வருவம்.

என்னடா பிரச்சனை?

அவனோடு பேசி கொண்டிருந்தாலும் வேலையில் இருந்து கவனம் சிதறவில்லை

மச்சான் கனகராயன்குளத்தில ஒரு கிளைமோர்… அதுல.. அவன் குரல் சோகமாகிறது.

“டேய் என்ன ஆச்சு யாருக்கு அடிச்சவன்? ”

மச்சான் கிளைமோர் சிவநேசன் அண்ணைக்கு.

டேய் என்னடா சொல்லுறா?

மனம் பதைபதைக்க இருப்பிடத்தை விட்டு எழுகிறேன். விழிகள் தன்பாட்டுக்கு கலங்க தொடங்கின.

மச்சான் என்னடா ஆச்சு ?

இல்லடா அவருக்கு காயமாம் நீ வா போய் பார்ப்பம்.

டேய் நியமா சொல்லு என்ன ஆச்சு?

காயம்தானடா… நீ யோசிக்கிற அளவுக்கு எதுவும் இல்லடா.

நான் அவனின் வார்த்தைகளை உள் வாங்கி கொண்டாலும் நியத்தை புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது. இவன் பொய் சொல்கிறான் என்பது மட்டும் புரிந்தது. எமது உந்துருளி தாக்குதல் நடந்த இடம் நோக்கி பயணித்தது.

“சிவநேசன்” எங்களின் குடும்பத்தை பொறுத்தவரை ஒரு பெரும் விழுது. வசிறுவயது முதல் அவரிடம் வளர்ந்த குழந்தைகள் நாங்கள். அனைவரும் என்னை அழைக்கும் பெயரில் இருந்து தனித்துவமாக ” பிரதீ ” என்று அன்போடு அழைக்கும் போது மனம் நெகிழும். என் பிறப்பில் இருந்து இன்றுவரை அவரைத் தவிர அந்த பெயர் சொல்லி யாரும் அழைப்பதில்லை. இப்போது அப்பிடி அழைப்பதற்கு அவர் இல்லை. என்ற போது மனது அவரை நினைக்கத் தொடங்கியது. அவருக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்று மனசு பதை பதைக்கிறது. நாங்கள் பயணித்து கொண்டிருந்த ஒவ்வொரு இடத்திலும் அவரது குரல் பிரதீ பிரதீ என்று ஒலிப்பதான பிரமை என் மனதில் எழுந்து கொண்டிருந்தது.

அவருக்கு ஒன்றும் ஆகி இருக்க கூடாது. அவரது பிள்ளைகள் இதை தாங்கும் சக்தி அற்றவர்கள். என்னாலையே முடியவில்லை அவர்களால் எப்படி முடியும்? மனது அவரது சாவை விரும்பாது அவரது வாழ்வுக்காக வேண்டி கொண்டே இருக்கிறது. ஆனாலும் மனதை வென்று எம்மை எல்லாம் தோற்கடிக்கும் சாதுரியம் மிக்க காலம் எமக்கு உண்மையை உரைத்தது. காற்றலை அந்த செய்தியை கொண்டு வந்து சேர்த்தது.

தகவல் பரிமாற்றங்கள் பரிபாசையில் சென்று கொண்டிருந்த போது எம்மால் புரிந்து கொள்ள கூடியதாக “சிவநேசன் அண்ணா பெட்டியாம், தியாகசீலம் கொண்டு போறாங்களாம். என்ற வார்த்தை தொடர்கள் காற்றில் எம்மை வந்தடைந்தன. என் விழிகளோ அழுகையை நிறுத்த முடியாது நீரைச் சொரிந்தன.

இரு ஆண் மற்றும் இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்து. அவர்கள் வாழ்வாதாரத்தை கண்ணாக கொண்டு தனது துணையாளுடன் பயணித்த அவர் தமிழீழ தேசத்துக்கான மக்கள் பணிக்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது நாம் எல்லாம் மனம் மகிழ்ந்திருந்தோம். ஆனால் அது நிலைக்கவில்லை.

திடீர் என்று சிங்கள வல்லாதிக்கத்தின் துரோகத்தனத்துக்கு அவர் சிதறி போவார் என்று நினைக்க முடியவில்லை. அவரது பிள்ளைகளும் மனையாளும் வாழ்வின் நிலையான வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த முன் ஏன் விட்டு சென்றார்? என ஆயிரம் வினாக்கள் எனக்குள் ஓடிக் கொண்டருந்தன.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் இன்றி சாதாரணமாக அனைவருடனும் பழகும் அவர் எப்படி அநியாயமாக சாகடிக்கப்படலாம்?. தேசத்தின் கடமைகள் பலவற்றை முன்னின்று செய்த ஒரு தியாகத்தின் உச்சத்தை எப்படி இந்த சிங்களம் அழிக்கலாம்? வினாக்கள் தோன்றி கொண்டிருந்தாலும் என் மனம் அவர் முகத்தை விட்டு நகராது இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பொறுப்பேற்ற பின்பான காலத்தில் அவரை நான் சந்திப்பது மிக அரிது. சந்தித்தால் கூட அவர் இரவில் தூங்கும் அவரது கட்டிலும் அவரது எழிமையையும் பார்த்து நான் கோவப்பட்டது உண்டு. ஏன் மாமா அவனவன் சொகுசா ஏசி ரூமில தூங்குறான் நீங்க இந்த ஓட்டை கொட்டகைக்குள் உடைஞ்ச மேசையில் வானத்தை பார்த்து கொண்டு நுளம்புக்கடிக்குள்ள கிடக்கிறீங்களே?

பிரதீ, அண்ண எங்கள அனுப்பிய போது மக்களுக்கு சேவை செய்ய சொல்லித் தான் வேண்டினார். அவர்கள் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளாகத் தான் நாங்கள் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். இந்த கடமையை விட்டு சொகுசாக நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று திமிராக திரிய என்னால் முடியாது. இது எனது முன்னாள் அலுவலக கொட்டகை இதில் படுக்கும் சுகம் அந்த ஏசி ரூமில் கிடைக்காது தம்பி நீ கவலைப்படாத.

கிடுகு கூரை வானத்தை காட்டும் அளவுக்கு ஓட்டைகளை கொண்டிருந்தாலும் அதை பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாது தனது முன்னைய பணி அலுவலகத்தின் பின் பக்கம் போடப்பட்டிருந்த சந்திப்பு கொட்டகையில் அவர் படுத்து கிடப்பது இன்று என் கண் முன்னே தோன்றுகிறது.

அவரை நொந்து கொண்டு நான் திரும்பும் போது அவர் புன்னகைக்கும் அந்த திரு வதனம் இன்றும் மறையாது நிழலாடுகிறது. இறுதியாக நான் அவரை கிளிநொச்சி டிப்போ சந்தியடியில் வைத்து பார்த்த சம்பவம் நிறைவற்றது. கிளிநொச்சி நகரை தாக்க பாய்ந்து வந்த கிபிரின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நாங்கள் நகர்ந்த போது, வேகமாக என்னை நோக்கி வந்த அந்த வெள்ளை நிற வாகனம் அதிரடியாக நிற்கிறது. அப்போது நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில்,

“பிரதீ எங்க போறாய்? அக்காவும் அத்தானும் சுகமா இருக்கினமா? கவனமப்பு இப்ப கிளிநொச்சில விமான தாக்குதல்கள் அதிகமா இருக்கு கவனமா இரு.”

என என் பாதுகாப்புக்காக கவலைப்பட்டு சென்ற அவர் இன்று தனது பாதுகாப்பை தவற விடுவார் என்று நினைத்து பார்க்கவே இல்லை. நாங்கள் கவனமாக தான் இருந்தோம் மாமா. நீங்களும் கவனமாய்த் தான் இருந்தீர்கள். ஆனால் உங்கள் கவனத்தையும் தாண்டி சிங்களதேசம் உங்கள் மீது இரத்த வெறியை ஏவி விட்டது. அன்று இறுதியாக சந்தித்த போது நீங்கள் வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து வந்து கூறிய கவனமப்பு வார்த்தை என்னால் மறக்க முடியாது கிடக்கிறது.

அந்த சந்திப்பு நடப்பதற்கு குறுகிய நாட்கள் முன் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிய அவரது விழிகள் கலங்கி இருப்பதை கண்டு

“அழாதையுங்கோ மாமா…”

பிரதீ என்னுடைய பயுரோவை உடனே மாற்ற சொன்னார். தனக்கு கிளைமோர் அடிப்பதாக நினைத்து உங்களுக்கு அடிக்க போறாங்கள் அண்ண என்றார். இனி அப்பிடி நடக்காதல்ல… அவருக்கு என்று கிளைமோர் அடிக்க மாட்டங்களல்ல….

அவர் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உதிர்த்து கண்ணீர் விட்ட போது என்னால் தேற்ற முடியாது விக்கித்து கிடந்தேன்.

நியம் தான் வன்னி களமுனை எங்கும் இராணுவ முன்னேற்றங்கள் இருந்த போது ஆழஊடுருவும் தாக்குதல் அணி முதன்முதலாக இலக்கு வைத்தது தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனத்தை தான் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அவரது பாதுகாப்பு பிரிவை சேர்ந்த போராளி லெப்டினன் கேணல் வெள்ளை அவர்கள் வீரச்சாவடைந்ததோடு வன்னியின் மூலை முடுக்கெங்கும் அந்த தாக்குதல் அணியின் செயற்பாடுகள் விரிந்தன.

அதனால் தான் தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனத்தை போன்ற நிறத்தில் அதே வகை பயுறோவை சிவநேசன் அவர்களும் வைத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போது இவரது பாதுகாப்பு மீது தமிழ்செல்வன் அண்ணைக்கு எவ்வளவு அக்கறை இருந்தது என்பதை உணர கூடியதாக இருந்தது.

அன்று தேசமே சோகத்தில் கிடந்த நாள். அவர் தமிழ் செல்வன் அண்ணா மீதான பற்றுதலை விழிகளால் சொன்ன நாள். நான் அவரிடம் இருந்து விடைபெற்றேன்.

தமிழ்செல்வனுக்காக என்றல்லாமல் சிவநேசனுக்காக சரியான தரவுகளுடன் தயார்படுத்தப்பட்ட சிங்களத்தின் கிளைமோர் வெடிக்கப் போவதை நாம் அறியோம். அதன் பிறகான காலத்தில், பயூரோ ரக வாகனத்தை விற்று ஹயஸ் ரக வாகனத்தைத் தான் அவர் பாவித்தார். அதில் தான் பயணத்தை மேற்கொள்வார். அவ்வாறான ஒரு வாகனத்தை நோக்கி கிளைமோர் வைக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை.

தினமும் மக்கள் படை கட்டமைப்பால் பாதுகாக்கப்படும் அந்த வீதியில் மரமோடு மரமாக உறங்கி கொண்டிருந்த கிளைமோர் இவரின் வருகைக்காகக் காத்து கிடந்ததை நாங்கள் எப்படி ஏற்று கொள்வது?

நல்ல ஒரு தேசபக்தன். இறைவன் மீது அதீத பக்தி கொண்ட ஒருவர். தனது நாமத்திலே சிவனை கொண்டிருக்கும் மாமனிதன். இன்று மல்லாவியில் இருக்கும் சிவனை வழிபடுவதற்காக கொழும்பில் இருந்து வருகிறார்.

இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவராத்திரி நாளில் மல்லாவி சிவன் ஆலையத்தில் நடத்த இருந்த முதல்கடவுள் சிவனை பற்றியதான சமைய பிரசங்கம் ஒன்றுக்கான தயார்படுத்தலுடன் மல்லாவி நோக்கி கொழும்பில் இருந்து வந்து கொண்டிருந்த போது புத்தனின் பிள்ளைகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடாத்துவார்கள் என்றோ அந்த தாக்குதல் சரியான முறையில் செய்யப்பட்டு எங்கள் சிவநேசன் மண்ணில் வீழ்வார் என்றோ என்றும் நாம் நினைத்ததில்லை.

ஆனால் அவர்கள் திட்டம் பலித்தது. நாடாளுமன்றத்தில் முந்தைய நாள் சிங்களத்தின் அமைச்சர்கள் டக்லஸ் மற்றும் பெர்னாண்டோபிள்ள ஆகியோருடன் நேரடியாக கருத்தாடல் செய்து தமிழின துரோகிகள் என்று அவர்கள் முகத்திரையைக் கிழித்த போதே இனத்துரோகி டக்லஸ் நடத்தி கொண்டிருந்த இதயவீணை வானொலி இவருக்கு அஞ்சலி கவிதையை ஒலிபரப்பி இருந்ததை பின்னாட்களில் நாம் கேட்டு இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை இனங்கண்டு கொண்டோம்.

எங்கள் சிவநேசன் மண்ணுக்குள் விதையாகி போனாலும், அவர் விதைத்து சென்ற பலவற்றை யாராலும் அழிக்க முடியாது என்பது திண்ணம். சிவநேசனின் தாயகம் மீதான பற்றுதல் அவரது 45 ஆவது நினைவு நாளில் பெர்ணான்டோபுள்ளையை வானுலகம் அனுப்பியது என்பது இதில் குறிக்கப்பட வேண்டிய நியம்…

துயர்சுமந்த விழிகளோடு எழுதியது: இ.இ.கவிமகன்
நாள்: 06.03.2020