யாழ்.பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் படங்கள் , மாவீரர்களின் படங்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை படைத்தரப்பு கைது செய்துள்ளதாக தெரிகிறது.

இக் கைது தொடர்பான எமது யாழ்ப்பாண செய்தியாளர் தெரிவிக்கையில், இன்று நடந்த சோதனை நடவடிக்கை ஒன்றின் போது இந்த கைது நடந்துள்ளதாக தெரிவித்தார்.

கைதானவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் என்று தெரியவருகிறது.

யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள மாணவர் விடுதி என்பன இராணுவம் , பொலிசாரினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சுற்றி வளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது. 

அதன்போது கலைப்பீட மாணவர் ஒன்றிய அலுவலக சோதனையிடப்பட்ட போது அதனுள் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன மீட்கப்பட்டன. 

அவை தொடர்பில் மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரை இராணுவத்தினர் கைது செய்து கோப்பாய் காவல்த்துறையிடம் ஒப்படைத்தனர். 

குறித்த இருவரையும் கோப்பாய் காவல்த்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போது புலிகளை புகழ்ந்து சிங்கள வல்லாதிக்க சக்திகள் இருக்கும் நிலையில் மறுபக்கம் எதிர்வரும் 18 ஆம் நாள் நடக்க இருக்கும் இனவழிப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வை குழப்பும் வகையில் இக் கைது நடவடிக்கை இருக்கிறது. என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.