கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும். கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும் – தேசியக்கவி புதுவை இரத்தினதுரை.


மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் போர் வீரர்களே.


பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ்வாறு நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது.
இவ்வாறு மனித வரலாற்றைச் சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை, உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூர்வது தெரிந்ததே.


முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில், ஜேர்மனியின் படைகள் திக்குத் திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள் நேசநாடுகளின் தளபதியுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை , 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.


முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதியை உலகப் போரிலும், அதன் பின்னரும் ஏற்பட்ட சண்டைகளில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள். இன்றுவரை நினைவு கூருகின்றனர்.
தமிழீழ மக்கள் எவ்வாறு நவம்பர் 27ஐ மாவீரர் தினமாகக் கொண்டாடுகின்றனரோ அதேபோல் பிரித்தானிய மக்களுக்கும் நவம்பர் 11 முக்கியத்துவம் பெறுகின்றது. “பொப்பி “ எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது.


பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பிப் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவைச் சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915 எழுதிய பெல்ஜியத்தில் Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றும், சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசை வரிசையாக பூத்துக் குலுங்கும் பொப்பிப் பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங் காட்டுகின்றன என்ற கவிதைவரிகளின் காரணமாகவே பொப்பிப் பூக்களை இந்நாடுகள் தங்களின் கல்லறை மலர்களாகத் தெரிந்தெடுத்திருந்தனர்.


அதேபோல் ஈழத்தமிழர்களின் கல்லறை மலரான கார்த்திகைப் பூ தமிழர்களின் வரலாற்று பண்பாட்டு விழுமியத்துடன் கலந்துவிட்டது. ஈழத்தில் கார்த்திகைப் பூ எனவும், தமிழகத்தில் காந்தள் மலரெனவும் அழைக்கப்படும் இப்பூ பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது.

“காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.
“மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.
“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய. முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழை நீரால் அடித்து வரப்பட்ட காந்தள் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.
“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.


“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது.
அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக கார்த்திகைப் பூவை புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.


இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.
அத்துடன் ஒரு சிறப்பான விடயம் என்னவெனில் ஈழத்தின் விடிவுக்காக தம்முயிர்களைத் துறந்தவீரர்களின் நினைவுதினமான நவம்பர 27 ஆம் திகதி அன்றே, அவுஸ்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களான ஒஸ்திரலோயிட் மக்கள் தமது மடிந்தவர்களை நினைவு கூர்ந்து நினைவு தின விழா ஒன்றை இத்தினத்திலேயே சிறப்பாகச் செய்கின்றனர் என்பது வியப்பான விடயம் மட்டுமல்ல, சிந்திக்கவும் தூண்டும் விடயமும் கூட.


இது குறித்த மேலதிக விடயங்கள் ஆராயப்படவேண்டியவையே.
அதேபோல் தாமாகச் சுதந்திரப் பிரகடனத்தைச் செய்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு சர்வதேச அங்கிகாரத்தையும் பெற்று இன்று சர்வ வல்லமையும் உடைய நாடாகத் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ள இஸ்ரேலும் தான் பிரகடணப்படுத்திய சுதந்திர தினத்தை (1948) ஆண்டு தோறும் தேசிய வீர்ர்கள் தினமாகக் கொண்டாடி வருவதனைக் காணலாம்.
இன்று உலகம் முழுவதும் யூதர்கள் பலமாகவும், சக்தி வாய்ந்த இனமாகவும் இருப்பதற்கு அந்த இனத்தின் காவலர்களாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் பல உயிரிழப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றின் பின் இஸ்ரேல் என்ற நாட்டை சமைத்துக் கொடுத்த “ககானா” என்கின்ற விடுதலை அமைப்பினர், முக்கியமாக இந்நாளில் நினைவு கூரப்படுகின்றனர்.


450 ஆண்டுகளாக இந்தோனேசிய அரசாங்கத்தின் கொத்தடிமைத் தனத்தின் கீழ் இருந்த கிழக்குத் தீமோர் ஆனது கிழக்குத் தீமோரின் தந்தை எனப்படும் சனானா குஸ்மாவே அவர்களின் தலமையில் சிறிது சிறிதாக வளர்ந்து சுதந்திரப் போராட்டமாக மாறி 20.05.2002 சுதந்திரம் அடைந்த்து.


அந்த நாள் இன்றும் சுதந்திர தினமாக இல்லாது விடுதலைக்கு வித்தாகிப் போனவர்கள் நாளாக எழுச்சியுடனும், உணர்வு பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றமையைக் காணலாம்.
ஒரு தேசத்தின் பிறப்பு அந்நாட்டு மக்களின் கையில் தான் இருக்கின்றது என்பதனைக் கிழக்குத் தீமோர் மக்கள் தம் விடுதலைப் போராட்ட வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர்.
இவர்களின் வெற்றி விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் எப்படியும் வெற்றி பெற்றுச் சுதந்திரம் பெறுவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.


மேலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களுக்கெதிராகச் சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய வியட்கொட் படையின் தலைவர் ஹோ-சி-மின் இறந்த நாளான 03.09.1969 ஆம் ஆண்டை வியட்நாமின் தேசிய வீர்ர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இவர்கள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனான விடுதலைப் போரில் கொடுத்த விலைகளும், உயிரிழப்புக்களும் சொல்லொணாத் துயர்களும் எண்ணிலடங்காதவை.
இந்தியா கூட தனது சுதந்திர நாளில் விடுதலைக்காக உயிரிழந்த வீரர்களை நினைவு கூருகின்றது. அதேபோல் ஜேர்மனியும் உலகப் போரில் இறந்த வீரர்களைத் தவறாது கௌரவித்து நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.


சுதந்திர தமிழீழ விடுதலையை அடிநாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரைவார்த்து தமிழர் மானம் காத்த மாவீரர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்த்தையில்லை.
எரி நட்சத்திரங்களாக, விடுதலையின் விடிவெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் நாள் நவம்பர் 27.கார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள்.


ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அற்புதங்கள் செய்து, மயிர்கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச்செய்த இந்த வீரமாவீரர்களின் வீரத்திருநாள் நவம்பர் 27. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூருதல் இருந்து வருகின்றது.


போரில் மாண்ட வீரர்களைப் புதைத்து, அவர்களின் ஞாபகார்த்தமாக நடுகற்களை இட்டு வணங்குகின்ற நடுகல் வணக்கமுறை காணப்பட்டு வந்திருக்கிறது. எனவே போரில் இறந்த வீரர்களை வணங்குகின்ற முறை தமிழர் பண்பாடாகும்.
தமிழில் ஆரியம் கலப்பதற்கு முன் இறந்தவர்களை புதைக்கின்ற முறையே இருந்தது. தமிழில் ஆரியம் வந்து கலந்துவிட்டதன் பின் இறந்தவர்களை எரித்தார்கள். இது ஆரியமும், பிராமணியமும் எம்முள் புகுத்திய கலாச்சாரங்கள்.


போரில் இறந்தவர்களை வீர சுவர்க்கம் அடைந்தவர்கள் என மரியாதை செய்து நடுக்கல் நாட்டி வணங்கிய வரலாற்றை புறநானூற்றில் பரவலாகக் காண்கின்றோம். அது பிற்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததனை இலக்கியங்கள் சான்றாக்கின்றன.
திருக்குறளிலும் போரில் இறந்த வீரர்களுக்கு கல்லறை அமைத்து வழிபடுதல் பற்றிக் கூறப்படுகிறது.

இக்கட்டுரை நாளையும் தொடரும்…