இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஏற்பட்டுள்ள ஐக்கியம், ஏன் தமிழ் பிரதிநிதிகளிடமும் ஏற்படக்கூடாது?

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்காக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்திருந்தோம். அவர் இன, மதவாதி அல்ல என எண்ணினோம். ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்களில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குகூட தீர்வு வழங்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது” என மேலும் தெரிவித்தார்.0