கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலை உள்ளூர் முஸ்லிம் மக்கள் இணைந்து உடைத்திருந்தனர்.

நூலகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், வெளிநாட்டு நிதியுதவியில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்ததென்றும் பிரதேச தௌஹீத் ஜமாத் செயற்பாடுகள் அங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாகவே பிரதேச முஸ்லிம் மக்கள் இந்த நடவடிக்கையை நேற்று மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஊடகப்பிரிவு இன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், “கெகிராவ, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடு ரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம்.

அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.

இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.

ஆகவே தயவு செய்து எவரும் அதற்கு இடமளிக்கக்கூடாது. எங்களுக்குள்ளே மோதிக்கொள்வதன் ஊடாக ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

இவ்வாறான செயற்பாடுகள் மிகமோசமான நிலைமையினை ஏற்படுத்துவதோடு கடந்த யுத்தகாலங்களிலே சகோதர இனம் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டதினூடாக எவ்வாறான விளைவுகளை சந்தித்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.

ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு யாரும் முயலக்கூடாது என்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.