கடந்த சில நாட்களின் செய்திகள் மனதை வருத்துகின்றன. எம் விடுதலைக்காக தம்முயிர் தந்த மான மறவர்களின் வணக்கங்களை காட்டிக் கொடுத்தவனும் கூட்டிக் கொடுத்தவனும் எம் மண்ணின் அவல நிலைக்கு காரணமாக சிங்களத்தின் உள்ளாடைக்குள் ஒழிந்திருந்தவனும் நிகழ்த்துவதை மனது ஏற்க மறுக்கிறது.

அத்தோடு மட்டுமல்லாது எங்களின் மதிப்புக்குரிய மாவீரர்கள் எதற்காக தம்மை ஆகுதி ஆக்கினார்களோ அவர்களின் கனவுகளை எல்லாம் சிதைத்து இன்று சிங்கள மயமாக்கப்பட்டுள்ள எம் பூமியில் மரணப் படுக்கையில் தள்ளப்பட்டுள்ள “தமிழ் மொழியும் வாழ்வியலும் “ எப்படி காப்பற்றப்பட போகறது என்ற மன வேதனையும் எழுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு ஜூன் 5 ஆம் நாளைக் கடக்கிறோம்.

ஜூன் 5 தாயக விடுதலை போராட்டத்தில் முதன்முதல் நஞ்சருந்தி வீர காவியமாகி விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு வித்திட்ட மாவீரன் நினைவு நாள் இவர் யார்? ஈழ விடுதலை போராட்டத்துக்கும் இந்த புனிதனுக்கும் என்ன தொடர்பு? இதை பற்றி எழுத வேண்டும் என்ற தேவையில்லாது தமிழ் மனங்களில் ஒன்றிக் கிடக்கும் உன்னத நாமம் பொன். சிவகுமாரன்.

தமிழ் மாணவர்களது கனவுகளில் சிங்களம் கை வைத்த “ கல்வி தரப்படுத்தல் சட்டம்” என்று எமது கல்வி உரிமைகள் இரும்பு கரங்கள் கொண்டு நசுக்கப்பட்ட நேரத்தில் (1967, 1971 ) தமிழர்களுக்கு முற்றிலும் பாதகமாகவும் சிங்களத்துக்கு மிகவும் சாதகமானதாகவும் அமைந்த கல்வி சீர்திருத்த சட்டத்தின் அமுலாக்கத்துக்கு எதிராக மாணவர்கள் சார்பாக ஓங்கி ஒலித்த குரல்களில் முக்கிய குரலுக்கு சொந்தமானவர். பொன்.சிவகுமாரன்

“ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது?

சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா?

இது வெட்கம் இல்லையா?

நாமும் திருப்பி அடித்தால் என்ன?

என. அவரது எட்டாவது வயதில் பருத்தித்துறை இறங்குதளத்தில் சிங்களத்தால் கொழும்பில் இருந்து அடித்து துரத்தப்பட்டு வந்திறங்கிய சகோதரியின் அவலத்தை பார்த்து தாயிடம் கேட்ட வினாக்கள். இவ்வாறான நிகழ்வுகளே சிவகுமாரனின் மனதில் போராட்ட சிந்தனைகளால் நிரம்பக் காரணமாகியது.

ஒரு மாணவனாக விடுதலை வீரனாக ஈழத்தமிழர் போராட்டத்தில் 17 வயதான சிவகுமாரன் 1974-ம் ஆண்டு ஜுன் 5-ந் திகதி நஞ்சருந்தி சாவடைந்தார் . ஈழப் போராட்டத்தில் நஞ்சு உண்டு உயிர் துறந்த முதல் போராளி இவர்தான். தனது சாவின் மூலம் அன்றைய உலகிற்கும் சிங்களத்துக்கும் பல உண்மைகளை உரக்க கூறி சென்றவர் இலங்கையின் இளம் தமிழர் தலைமுறையை அல்லது தமிழ் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கிய சிங்களத்துக்கு ஈழத்தமிழ் இளைஞர்களின் வீரத்தை பிரதியிட்டு காட்டியவர்.

சிவகுமாரன், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தை பொன்னுசாமி, தமிழ் பற்று மிகுந்தவர். தன் குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அதீத கவனமும் சிரத்தையும் கொண்டவர். அதே போல் தான் சிவகுமாரனும் அவரது எண்ணங்களுக்கேற்ப வளர்ச்சிப்பாதையில் பயணித்து கொண்டிருந்தார்.
தாய் அன்னலட்சுமி.

சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். சிறு வயதில் இருந்து தந்தையின் அரசியல் கதைகளை கேட்டு கேட்டு வளர்ந்த சிவகுமாரன் இளமையில் இருந்து விடுதலை வேட்கை உடையவராகத் திகழ்ந்து, தமிழுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணியே வளர்ந்து வந்தார்.

நாட்டில் நடந்து கொண்டிருந்த வன்முறைகளும் தமிழர்க்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளும் அவரது மனதில் ஆறாத உறுதியை உருவாக்கி இருந்தது தமிழரின் உரிமைகளை இல்லாது செய்பவர்களுக்கு எதிரான குரல்களை எழுப்பத் தொடங்கினார்.

தனது சாத்வீக வடிவ போராட்ட முன்னெடுப்புக்களோடு ஆயுத வடிவ போராட்டத்தையும் ஆரம்பிக்கிறார். கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறியை தாக்கி அழிக்க முனைந்த நிகழ்வோடு ஆயுதப் போராட்டத்துக்கான முதல் விதையை நாட்டினார் . அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைக்கப்பட்டிருந்த போதும் அமைச்சர் உயிர் தப்பி விட்டார். ஆனாலும் ஆயுதப் போராட்டத்திக்கான அடித்தளம் விதைக்கப்பட்டதை சிங்களம் உணரத் தொடங்கி இருந்தது. அதனால் அதை தடுக்க அதற்கு காரணமாய் இருந்த சிவகுமாரன் கைதாகி சிறையில் கடுமையான சித்திரவதைகளுடன் அடைக்கப்படுகிறார். அதற்குள் இருந்தே தனது போராட்டத்துக்கான உறுதியை மெருகேற்றி கொள்கிறார்.

சிறையில் இருந்து வெளிவந்திருந்த சில நாட்களில் அடுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
அப்போதைய யாழ் மேயராக பொறுப்பெடுத்து சிறீமா அரசின் துரோகத்தனத்துக்கும் தமிழர்களின் உரிமைகளை பறித்தெடுப்பதற்கும் வழிசெய்திருந்த துரையப்பாவை சாகடிப்பதே தற்போதைய நிலையில் தமிழர் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழியாக இருக்கும் என்பதை உணர்ந்த சிவகுமாரன் துரையப்பாவின் வாகனத்திற்கு கைக்குண்டை வீசி தாக்குதலை மேற்கொள்கின்றார். அந்த வாகனம் வெடித்து சிதறுகிறது ஆனாலும் அந்த வாகனத்தில் துரையப்பா இல்லாத காரணத்தால் அவர் உயிர் பிழைத்து கொள்கிறார்.

இதன் பின் இந்த தாக்குதலுக்கான காரணகர்த்தா யார் என்பதை அப்போதைய காவல்துறை இலகுவாக கண்டுபிடித்தது. சிவகுமாரனை சிறையில் அடைத்தது. இருப்பினும் உறுதி செய்ய முடியாத நிலையிலையே அந்த தாக்குதல் இருந்த காரணத்தால் சிறு காலத்திலியே வெளியில் வந்த சிவகுமாரன் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை மீண்டும் முழுவீச்சுடன் தொடங்கினார்.
இந்த கைது நடவடிக்கையின் பின்பே தனது கழுத்தில் நஞ்சை கட்டி கொண்டு திரிய தொடங்கினார் ஏனெனில் அவர் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் போது கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இருந்தார். வதைகளும் மிரட்டல்களும் ஒரு சிறந்த போராளியை ஒன்றும் செய்துவிடாது என்பதை உணர்ந்தவர். தனது நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

எந்த சந்தர்ப்பத்திலும் தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சிவகுமாரன் கூட இருந்தவர்களிடம்

“இது எனக்கு மட்டும்தான் உங்களுக்குத் தேவையில்லை, தற்செயலாக நீங்கள் பிடிபட நேர்ந்தால் முழு குற்றத்தையும் என் மீது சுமத்தி விடுங்கள். என்று சிவகுமாரன் கட்டளையிட்டதும் கூட இருந்தவர்களுக்கு அவர் மீதும் போராட்டம் மீதும் உறுதியான நம்பிக்கையை விதைத்திருந்தது.

1974 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டுக்கான ஏற்பாட்டாளர்களில் முக்கியமானவராக செயற்பட்டு கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் அமைச்சர் குமாரசூரியர் மற்றும் துரையப்பா ஆகியோரது வழிகாட்டலில் காவல்துறையின் குறுக்கீடுகள் இருந்த போதும் மிகசிறப்பாக மாநாடு நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் என்று உட்புகுந்த காவலர்களது துப்பாக்கி வெட்டுக்களுக்கு பலியான 9 ஈழ தமிழர்களது சாவுக்கும் ஒரு பதிலை தான் கொடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

துரையப்பாவையும் குமாரசூரியரையும் காவல்துறை அதிகாரி சந்திரசேகரவையும் சாகடிப்பதற்கான திட்டங்களை தீட்ட தொடங்கி இருந்தார்,சந்திரசேகரா, யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே குடியிருந்தார். அந்தக் கோவிலைக் கடந்துதான் அவர் பணிக்கு செல்வது வழக்கம். இதைக் கவனித்த சிவகுமாரன், நண்பர்களுடன் கோவில் அருகே காத்திருந்தார். வாகனத்தை ஒட்டி கொண்டு வந்த சந்திரசேகரவை இடை மறித்து கதவை திறந்து அவரை நோக்கி துப்பாக்கியை இயக்கினார் அது இயங்க மறுத்தது அதனால் கத்தியை பயன்படுத்தி சாகடிக்க .முயன்றார் ஆனாலும் அவருடன் கூடி வந்த நண்பர்களது உதவி கிடைக்காது போகவே தன்னந்தனியாக அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை இதனால் தப்பி ஓடுவதை தவிர வேறு எதுவும் வழி இல்லை என்று ஓடத்தொடங்கிய சிவகுமாரன் இடையில் கண்ட துரையப்பாவையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டார் அப்போதும் துப்பாக்கி இயங்க மறுத்தது. அன்று துப்பாக்கி இயங்குநிலை தடைப்பட்டதால் இரண்டு முக்கிய நபர்கள் உயிர் தப்பிய சந்தர்ப்பம் நடந்தது.

இந்த சாகடிப்பு முயற்சியை தொடர்ந்து சிங்கள அரசு பதறத் தொடங்கியது. உடனடியாக ஒரு அறிவிப்பு ஒன்றை சிங்கள அரசு வெளியிட்டது.

“காட்டி தருபவருக்கு 100000 ரூபாய்கள்” சன்மானம்.

இந்த அறிவிப்புக்கு பின் பணத்துக்கு ஆசைப்பட்ட சில தமிழர்கள் சிவகுமாரனை காட்டி கொடுக்க முனைந்தனர், ஆண்டாண்டு காலமாக தமிழினத்துக்காக போராடிவரும் போராளிகளை துரோகத்தனத்துக்கு பலியாக்கும் இந்த தமிழினம் அன்றும் அதே தப்பை செய்ய முனைந்தது. இதனால் சிவகுமாரனால் வெளிப்படையாக எங்கும் நடமாட முடியவில்லை. இதனால் மறைவு வாழ்க்கை வாழவேண்டி இருந்தது. இதற்காக இந்தியா சென்றால் நல்லது என்ற நண்பர்கள் கருத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பணத்தை திரட்ட முடியவில்லை கேட்பவர்கள் எல்லோரும் கைவிரித்தனர். மிக நெருக்கமாக இவர்களுக்கான பல உதவிகள் புரிந்த உறவுகள் கூட கைவிரித்தன.

இதற்கான மாற்று ஏற்பாடு திட்டமிடப்படுகிறது.
பணத்தை ஒழுங்கு செய்வதற்காக நண்பர்களுடன் கோப்பாயில் இருந்த அரச வங்கி ஒன்றை களவாடலாம் என்று தீர்மானித்து வாடகை வாகனம் ஒன்றில் புறப்பட்டனர் வங்கிக்குள் சென்று பணத்தை எடுக்கும் முன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் எமது தமிழின துரோகிகள். இதை அறிந்த இவர்கள் தப்பி ஓட வாகனத்துக்கு வந்த போது அங்கும் துரோகத்தனம் மீண்டும் அரங்கேறி இருந்தது. காருடன் வந்திருந்த சாரதி வண்டி சாவியுடன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி இருந்தார், இதனால் தப்ப வழி அற்று நண்பர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடினர்.
இருப்பினும் காவல்துறை முற்றுகையை உடைத்து வெளி செல்ல முடியாத அளவுக்கு காலில் காயமடைந்திருந்த சிவகுமாரன் புகையிலை செடிகளுக்கு நடுவிலே வந்து தான் எப்போதும் வைத்திருக்கும் நஞ்சை அருந்தி வீர காவியம் ஆகின்றார்.

“என் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் “
என்று இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம்.

“அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு? “

சாவை கண்டு அஞ்சாத வீரன் தன்னை பெற்றவளிடமே சாவுக்கும் தனக்குமான இடைவெளியை கூறியதால் தாய் மனம் வருந்தினாலும் மகன் சாக்கூடாது என்ற வேண்டுதல்கள் வலுப்பெற்றது.

இது தான் சிவகுமாரன் என்று உணர்ந்துகொள்ள சிங்களத்தாலும் எங்கள் மக்களாலும் நீண்ட காலம் எடுக்கவில்லை. அவர் தன் கடமையை இளையவர்களிடம் விட்டு சென்ற போது தமிழினமே உறைந்து கிடக்காது விழித்துக்கொண்டது.

தமிழனது துரோகத்தனத்தின் வெளிப்பாடாக ஈழ விடுதலைக்காக பிள்ளை ஒருவன் நஞ்சருந்தி முதன் முதலாக வீரச்சாவடைய அந்த வீரவித்துடல் மீது தமது குருதியால் திலகமிட்டு சபதம் எடுக்கின்றார்கள் பல இளைஞர்கள். “ஈழ உரிமை மீட்போம் உன் கனவை நனவாக்குவோம்” என்று அந்த இளைஞர்களில் ஒருவராக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனும் தேத்தின் விடியல் தேட தொடங்கினார்.

(இது கடந்த வருடம் எழுதப்பட்ட கட்டுரை )