நண்பர்களைப் பற்றி ஆயிரம் கதைகளையும், உணர்வுகளையும் இந்த உலகம் சொல்லிவிடும். ஒரு நல்ல நண்பனை இழந்ததன் பின்னால், அவன் விட்டுப் போன அவனது வெற்றிடத்தை நிரப்ப யாரும் வரவில்லை என்றால், எத்தனை வருடங்கள் போனாலும் ஒருநாளில் ஒருதரமேனும் எதோ ஒரு மூலையில் அவனது நினைவுகள் வந்து போகும் என்றால், தொடரும் வாழ்க்கை வெறுமையானது என்றுதான் எண்ணத் தோன்றும்.

இன்று வாழும் இந்த உயிருக்கு சொந்தக்காரர்கள் எனது நண்பர்கள் என்றால் அதில் பொய்யேதும் இல்லை. அவர்கள் இன்று என்னருகில் இல்லை. எல்லா பொழுதுகளிலும் என்னோடு கூட இருந்தவர்கள். அவர்களுடைய சிறுசிறு குற்றங்களில் கூட பங்கு எனக்கும் தந்தவர்கள். தீரம் மிகுந்த களங்களையும் நாளை என்று இல்லாத காலங்களையும் பகிர்ந்து கொண்டவர்கள். உடல் காயங்களை வாங்குகின்ற போதெல்லாம் மனம் காயப்படாமல் என்னை வளர்த்தவர்கள். என்னோடு கூடவே வளர்ந்தவர்கள்.

ஒல்லித்தேங்காய் இரண்டு கட்டி ஆழக்கடலேறி எனக்கு நீச்சலையும் கற்றுத் தந்தவர்கள். கரைத் தண்ணியில் தப்படித்துக் கிடந்த என்னையும் ஆழக்கடலில் மைல் கணக்கில் நீந்த வைத்தவர்கள் எனது நண்பர்கள். வாழ்க்கையை எவ்வளவு சுலபமாக வாழலாம் என்றுமட்டுமல்ல, எப்படி சலிக்காமல் வாழலாம் என்றும் கற்றுத் தந்தவர்கள். எனது தோளின் சுமையை பங்கு போட்டு எங்கெங்கோ எல்லாம் என்னையும் அழைத்துக் கொண்டு திரிந்தவர்கள். காயப்பட்ட போதெல்லாம் தோளில் தூக்கி என்னை சுமந்தவர்கள். எனக்காகத் துடித்தவர்கள். அந்த நண்பர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்றார்கள். என்னை முந்திக் கொண்டு போவதற்காக அல்ல, என்னை முன்னேற்றுவதற்காக முன்னாலே நிற்பார்கள் என்னை கரையிலேயே விட்டுவிட்டு எனக்கு கையசைத்து விடை பெற்றுச் சென்றார்கள் அவர்கள். விரைவில் சந்திக்கிறேன் என்றேன். ஆனால், காலம் எல்லாவற்றையும் புரட்டியே போட்டுவிட்டது தோழர்களே!

நண்பர்கள் எமக்கிடையிலான ஒரு உலகை சொல்வதென்றால், 2007 ஆரம்ப நாட்களில் ஒரு பயிற்சித் திட்டம் ஒன்றிற்காக எனது நண்பர்களுடன் இருபத்தியைந்து பேரளவில் காட்டிற்குள் இருந்த பயிற்சிமுகாம் ஒன்றில் கூடியிருந்தோம். நான்கு மாதங்கள் அந்த பயிற்சிகள் தொடர்ந்து கொண்டு இருந்தன. நூறு பேர் கொண்ட பயிற்சி என்றால் சுத்துமாத்து செய்து தப்பலாம். இது வெறும் இருபத்தைந்து பேர்கொண்ட ஒரு சிறப்புப் பயிற்சித் திட்டம். ஒவ்வொருவரும் தனித்தனியாக கண்காணிக்கப் பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவரின் அசைவும் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தெளிவாகவே தெரியும்.

எமது முகாமில் ஒரு பகுதியில் 2006 இற்குப் பின்னர் புதிதாக இணைக்கப்பட்டு களமுனைகளில் தங்கள் உறுதியைக் காட்டிய சுமார் நூற்றியிருபது ஆண்பெண் இருபாலாருக்குமான அடுத்தகட்ட பயிற்சிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. அதையும்விட இன்னும் ஒரு முப்பது பேர்கொண்ட ஒரு அணிக்கு விசேட பயிற்சிகளும் அங்கே நடந்து கொண்டிருந்தன. ஒருபுறம் நாங்களுமாக பயிற்சி முகாம் கட்டளைகளின் உக்கிரத்தாலும் ஊதுகுழல்களின் சத்தங்களாலும் அதிர்ந்துகொண்டே இருக்கும். இரவுப் பயிற்சிகளும் நடைபெற்றதனால் இரவுகளும் எமக்கு கட்டளைகள் வந்துகொண்டே இருக்கும்.

இப்படி பயிற்சிகள் தனித்தனியாக தொடர்ந்து கொண்டிருந்த காலங்களில், அடிக்கடி பயிற்சிகளில் எமது நண்பர்கள் செய்யும் தவறுகளுக்காக தேக்கம் குற்றிகளை இருவர் இருவராகத் தூக்கிக் கொண்டு பல மைல்கள் ஓடியிருக்கிறோம். எப்படியிருந்தாலும் மாலை சாப்பாட்டிற்குப் பின்னர் வழமையாக இரவுப் பயிற்சிகள் தொடங்கும். இரவு ஒன்பதுமணிக்கெல்லாம் ஒரு அரைமணித்தியாலம் இடைவேளை தருவார்கள். அதிலே பிளேன்டீ யும் ஒரு வாய்ப்பனும் தவறாமல் கிடைக்கும். அதிலே என்ன சுவாரசியம் என்றால், நான்கைந்து மணித்தியால நித்திரையும் கொண்டு காலையிலிருந்து பயிற்சிகள் படிப்புகள் என்று தொடர்ந்து இந்தா பிடி விழப்போறன் என்று பலருடைய உடல் சொன்னாலும், அந்த இரவு நேர சிறு இடைவெளியில் ஒரு சிமினி விளக்கை நடுவில் வைத்து விட்டு சிலர் புரட்சிப் பாடல்களை கோர்வையாக பாடத்தொடங்க (non stop) சிலர் கைகளைத் தட்டி உற்சாகமூட்ட இன்னும் சிலர் ஒழுங்கு முறையில் குத்தாட்டம் ஆடத் தொடங்கினால் உடலின் களைப்புகள் எங்கோ ஓடிமறைந்து ஒரு புத்துணர்வு ஒன்று வந்து ஏறும் பாருங்கள். அப்ப்பா ! நினைக்கவே மனம் குழையுது!

அந்த அரைமணித்தியாலம் எங்களது அட்டகாசம்தான் பயிற்சி முகாமின் பயிற்சி வெட்டையில் நடக்கும். அது எங்களுக்கு எழுதப்படாத விதியாகிப் போனது. வாத்திமார் எந்தக் கதையும் கதைக்க ஏலாது. எங்கட ஏரியாவுக்குள்ள வரவும் மாட்டாங்கள். ஏனென்றால் அது எங்களுக்கான நேரம். மற்றைய பயிற்சி போராளிகள் தூரங்களில் இருந்தது எங்களைப் பார்த்தவாறு இருப்பார்கள். எம்மைக் காணும்போது அவர்கள் எங்களிடம் கேட்கும் கேள்விகள் எப்படிடா? இப்படி எல்லாம் ஆட்டம் போடுறீங்கள்? பயிற்சிக்கே நாக்கு தள்ளுது. நெய் வடியுது. ஆட்டம்போட உங்களுக்கு மட்டும் சக்தி எங்க இருந்துடா வருது ? எல்லாமே கூட சேர்ந்து இருக்கிற நண்பர்கள் கூட்டம் என்று அவர்களுக்கும் எப்போதாவது தெரியவரலாம். அப்பொழுது எங்கள் சூட்சுமத்தை அவர்களும் தெரிந்து கொள்ளக் கூடும்.

கோடை வெயில் உச்சம் பெற்றிருந்த காலம். மற்றைய அணிகள் பயிற்சி முடிந்து வெளியேறி விட்டிருந்தன. எங்களுக்கு மட்டுமே அப்பொழுது அந்த முகாமில் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. தளபதிகள், சிறப்புத் தளபதிகள் பலரும் வந்து எமக்கான வழிகாட்டுதல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணம் இருந்தார்கள். அதே நேரம் வவுனியா மன்னார் களமுனைகள் திறக்கப்பட்டு அங்கங்கே சிறு சிறு மோதல்கள் எல்லையில் ஆரம்பமாகியிருந்தன. இப்படியே நாட்கள் போயின. எங்கள் பயிற்சிகள் முடியும் நிலைக்கு வந்தது. கடைசிக் கிழமை எல்லா வழியிலும் எங்களுக்கான பரீட்சைகள் ஆரம்பமாகின. அனைவரும் சித்தியடைந்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நான்கு மாதங்கள் பட்டபாடிற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும் நாளில் தேசியத் தலைவர் அவர்கள் வரப்போவதாகவும் செய்திகள் பரவி விட்டது. கடைசி நாள் பரீட்சைக்கு முதல் நாளில் இருந்து எனக்கு உக்கிரமான காய்ச்சல் தொடங்கி விட்டது. அன்றைய நாளை எப்படியோ கடந்த எனக்கு கடைசிநாள் பரீட்சைக்கு போயே ஆக வேண்டும். நண்பர்கள் என்னை விட்ட பாடில்லை. அவர்களின் தோள்களில் தாங்கியவாறு நடந்து திரிந்து கொண்டு பரீட்சைகளை முடித்துக் கொண்டிருந்தேன். கடைசிநாள் காலையில் குறித்த நேரத்திற்குள் குறித்த தூரத்தை, குறிப்பிட்டளவு ஆயுத தளபாட சுமையுடன் ஓடி முடித்தேயாக வேண்டும். அன்றைய உடல் நிலையில் அதுதான் எனக்கு சவாலானதாக இருந்தது.

ஓட்டம் தொடங்கும் நேரம் வந்தது. எனது நண்பர்களின் பார்வை அப்பப்போ என்னை நோக்கியே இருந்தன. எல்லாரும் ஒரே தகுதியுடையவர்கள்தான். ஆனால் இந்த ஓட்டத்தில் நான் சித்தி எய்தவில்லை என்றால் எனக்கான புள்ளிகள் கிடைக்காது. பயிற்சியை நான் முடித்தது என்று ஆகாது. நிற்க முடியாமல் காய்ச்சல் கொதித்துக் கொண்டிருந்தது. உடலில் பலம் இழந்து அங்கே நின்று கொண்டிருந்தேன். ஓட்டம் தொடங்கியது. நேரமும் ஒடத் தொடங்கியது. என்னால் முடிந்த அளவு சராசரி வேகத்தில் ஓடத்தொடங்கினேன். கால்களை வீசுவது மட்டுமே எனக்கு தெரிகிறது. ஒரு கட்டத்தில் எனக்கு கண்கள் பிரகாசமாக மாறத்தொடங்கியது.

எனது நிலையை கண்டுகொண்ட நண்பர்கள் என்ன பேசிக்கொண்டார்களோ தெரியாது. நண்பர்களில் ஒருவன் மட்டும் கொஞ்சம் பின்னடைந்து என்னருகில் வந்து எனது கையை பற்றி பிடித்தவன், எனக்கு சொன்னான் “ஒன்றுக்கும் யோசிக்காத. நீ கால்களை மட்டும் தூக்கி முன்னுக்கு வீசு. நான் இழுத்துட்டு ஒடுறன்” என்றான். அவன் என்னை இழுத்து ஒடத் தொடங்கினான். பின்னர் இன்னும் ஒருவன் பின்னடைந்து மாறி மாறி இழுத்துக் கொண்டு ஒடத் தொடங்கினார்கள். நேரத்தையும் கணித்து, என்னையும் இழுத்துக் கொண்டு ஓடினார்கள். முடிவிடத்துக்கு சிறிது தூரம் இருக்க ஒன்றிரண்டு பேராக சேர்ந்து இழுத்துக் கொண்டே முடிவிடத்தை தாண்டி கொண்டு போய் தள்ளி விட்டு விட்டார்கள். அப்படியே நான் நிலத்தில் சரிந்து விழுந்தேன்.

இந்த ஒரு சிறு சம்பவம் உங்களைப் பொறுத்தவரை சிறிய சம்பவமாக இருக்கலாம். இதுல என்ன பெரிசாக இருக்கு என்று கூட யோசிக்கலாம். வார்த்தைகளில் ஓரிரு பந்திகளில் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அன்று எமது நட்புக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த உணர்வின் இழையை எந்த சொற்கள் கொண்டு காட்டி விடமுடியும் சொல்லுங்கள்? என்னுடைய வாழ்க்கையை மாற்றிய சம்பவம் என்றால் அதுதான். ஏனெனில் அந்த பயிற்சிக் காலங்கள்தான் அடுத்து வந்த காலங்களில் “நான் யார்?” என்பதை எனக்கு காட்டியது மட்டுமல்லாது, என்னைச் சூழ்ந்து இருந்த சமூகத்துக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கைவிட்டுப் போக இருந்த அந்தத் தகுதியை எனக்கு மீண்டும் பெற்றுத் தந்தவர்கள் எனது நண்பர்கள்.

அடுத்த வந்த இடைவிடாத இறுதி போரில், நாம் பங்கெடுத்த களங்களில் ஓரிருவராக இழந்துகொண்டே இருந்தோம். சில இடங்களில் எனக்கு நிகழ்ந்திருக்க வேண்டிய சாவைக் கூட என் நண்பர்கள் தத்தெடுத்திருக்கிறார்கள். இன்று சாதாரணமாகவே வாழும் எங்களது வாழ்க்கையில் பல இடங்களில் எனது மனம் அவர்களின் நினைவுகளில் வந்து குவிந்து என்னை தட்டிச் செல்லும்.

இங்கே ஒன்றை அவதானித்தீர்களா? கூடுதலான இடங்களில் “என்னை” “எனது” என்று வருவதற்குப் பதிலாக ‘எம்மை” எமக்கு” என்று இயல்பாக வருகிறதை அவதானித்தீர்களா? சாதாரணமாக நாம் கதைக்கும் பொழுதுகூட “எங்களுக்கு” “நாங்கள்” என்று பன்மையில் விழிப்பதுண்டு. இது ஒரு பெரிய நண்பர்குழாம் சூழ இருந்த ஒருவனுக்குத்தான் இது பேச்சுவழக்கில் இயல்பாகிவிடும். பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். “நாங்க நாங்க” என்கிறீர்களே? வேற யார் இருக்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சிரிப்பு ஒன்றுதான் பதிலாக வரும். அப்பொழுதும் எதோ எனது நண்பர்கள் எனக்குப் பின்னால் நிற்பது போன்ற உணர்வு. வாழ்க்கையில் நண்பர்கள் அவர்களைப் புறந்தள்ளி எமது வாழ்க்கையை உருவகித்திட முடியவே முடியாது.

இன்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை சுற்றி உள்ளவர்களை ஒருதரம் நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு நட்பு என்று சொல்கிறவர்களை எண்ணிப் பாருங்கள் உங்களுக்கு புரியும். அவ்வளவு ஏன்? நண்பர்கள் என்று முகநூலில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் உயிர் கொடுக்கும் நண்பன் ஒருவனைக் காட்டி விடுங்கள் பார்க்கலாம். எத்தனை வேஷங்கள், எத்தனை பொய்கள், எத்தனை பழிவாங்கல்கள், எத்தனை ஆசை வார்த்தைகள். எனக்கு எனது நண்பர்களைப் பற்றி இன்னும் பலவிடயங்களை பகிர்ந்துகொள்ள முடியும். ஆனாலும் காலம் அதற்கு எப்பொழுதும் இடம் கொடுக்காது என்பதுதான் உண்மை. அவர்களின் பெயர்களைக் கூட வெளியில் சொல்லமுடியாத திரிசங்கு நிலைதான் எங்களுடையது. எமக்குள்ளேயே அவர்களின் நினைவுகளோடு மரணத்தின் வாசல்வரை நாம் வாழ்ந்து மடிய வேண்டும் என்பதுதான் எமக்கான தண்டனை போலும்.

எங்கோ தொலைவில் குடும்பங்களை விட்டுவிட்டு வாழ்ந்த எமக்குள், குடும்பங்களின் நினைவுகள் வந்த நாட்களை எண்ணிச் சொல்லிவிட முடியும். என்னைப் பொறுத்தவரை ஒரு நண்பனால் எல்லாமும் ஆகமுடியும். சூழ நின்ற அந்த நண்பர்களின் நிழல் இருந்தால் போதும் பிறப்பெடுத்த மனித வாழ்க்கையின் அர்த்தங்கள் புலப்பட்டே தீரும். ஆனால் என்னை மட்டும் உயிரோடு விட்டுவிட்டு அவர்கள் எங்கோ ஏன் போய்த் தொலைந்தார்கள் என்றுதான் எனக்கு இன்றுவரை புரியவில்லை.

எல்லா பொழுதுகளிலும் என்னை அழைத்துக் கொண்டு போகின்றவர்கள். முன்னே போகிறோம் காயம் மாறி உடல்நிலை தேறியதும் பின்னாலே வந்து சேர்ந்துவிடு என்றுதானே சொன்னார்கள். அந்த காயத்துடனேயே என்னை அழைத்துக் கொண்டு போயிருக்க அவர்களால் முடியுமே! வேண்டுமென்றுதான் என்னைத் தவிர்த்தார்களா? முன்னே போன அவர்கள் எங்கே என்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. இன்றுவரை எத்தனையோ பேர் நன்பர்கள் என்று வந்து போய்விட்டார்கள். இன்றும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். உணர்வின் வழியில் ஒன்றிப்போன அவர்களின் நெருக்கத்தையும், நட்பையும் இதுவரை எவரும் ஈடுசெய்யவில்லை. அவர்களின் முகங்களை ஒருதரமாவது கண்டுவிட இன்று வரை ஏங்கிக் கொண்டே இருக்கிறேன். எல்லா இடங்களிலும், தெரிந்தவர்களிடமும் அவர்களை விசாரித்துக் கொண்டே இருக்கிறேன்.

இன்று நீங்கள் எப்படி வாழ்ந்தாலும் எனக்கு கவலையில்லை தோழர்களே! ஒருதரம் உங்கள் முகங்களை எனக்கு காட்டி விட்டு செல்லுங்கள் எனக்கு அதுவே போதும். நீங்கள் இன்று இலங்கை இராணுவ சீருடைக்குள் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு உங்களைப் பற்றித் தெரியும். கரையிருந்து கைகாட்டி வழியனுப்பி வைத்த எமக்கு, நந்திக்கடலோடு எல்லாம் முடிந்ததன் பின்னாலேதான் தெரியும் துரோகத்தின் வலைக்குள்ளே நாம் வீழ்ந்த கதையெல்லாம் நீங்கள் போனபின்னரே தெரிந்துகொண்டோம் தோழர்களே!

முதுகில் குத்திய வலியை சுமந்து உயிரோடு வாழ்வது எவ்வளவு பெரிய வேதனை என்பதை நீங்கள் அறிவீர்களா? குத்தியவனும் நாங்களும் ஒன்றாக ஒரே தட்டிலேதான் சாப்பிட்டுக் கிடந்தோம் என்பதையாவது நீங்கள் அறிவீர்களா? முதுகில் குத்தியவன் என் முன்னால் நின்று சிரித்த சிரிப்பின் அர்த்தங்களை நீங்கள் அறிவீர்களா? எப்படி நண்பர்களே உயிருக்குயிராய் பழகி வாழ்ந்துவிட்டு துரோகத்துடன் சமரசம் செய்ய அவர்களுக்குச் சாத்தியமானது? நட்பு என்ற போர்வையில் எம்மோடு ஒன்றாக வாழ்ந்த அவனது துரோகத்திற்காக உங்களை நான் எப்படி வெறுத்துவிட முடியும் சொல்லுங்கள். நட்போடு துரோகமும் கூடவே வளர்க்கப்படும் என்பது எனது பட்டறிவிலும் ஒரு பாகம் ஆகிப்போனது

முள்ளிவாய்க்காலின் முடிவுகளின் பின்னால் கொலைக்களத்து ஒளிப்படங்கள் காணொளிகள் என்று வெளிவருகின்ற பொழுதுகளில் எங்காவது எனது நண்பர்கள் முகங்கள் தெரிகிறதா என்றெல்லாம் உருப்பெருக்கி பார்த்துப் பார்த்து களைத்துப் போய் விட்டேன். எல்லாருடைய முகங்களையும் சரியாக இனங்காண முடியாமல் உருக்குலைக்கப் பட்டிருந்தாலும், ஒளிப்படத்தில் தெரிந்தவர்களுக்காக நெஞ்சு குமிறிவெடிப்பதை தவிர்க்க முடியாமல் போனாலும், அங்கே கிடப்பவர்கள் எனது நண்பர்களாக இருக்கக் கூடாது என்று என்னுள்ளே ஒரு சுயநலம்.

சொல்லப்போனால் எல்லாருமே எமக்காகத்தான் அங்கே நெஞ்சு பிளந்து, கண்கள் எதையோ அல்லது யாரையோ எதிர்பார்த்தவாறு, மண்ணை நெஞ்சோடு அணைத்தவாறெல்லாம் கிடந்தார்கள். களமாடி வீரச்சாவைத் தழுவி அங்கே இலங்கை இராணுவத்தினரால் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அவர்களோடு எமக்கு என்ன உறவு? அண்ணா அக்கா தம்பி மாமன் மச்சான் இப்படி ஏதாவது உறவு உண்டா? அவர்கள் பெயராவது தெரியுமா? முன்னபின்ன பார்த்தாவது இருக்கிறோமா? இல்லையே! யாருக்காக ? யார் அவர்கள்? எதற்காக? ஏன் இப்படியெல்லாம் நடந்தது? விடைகளை வந்து யார் சொல்லுவார் எங்கள் தோழர்களே! தோழியரே!

இந்த நிலையில் எனது சுயநலத்துக்காக நான் வெட்கப்பட்டிருக்கிறேன். அதற்காகவே அந்த காணொளிகள் புகைப்படங்களை பார்ப்பதை தவிர்த்து விட்டேன். அந்த கொலைக்களத்து ஒளிப்படங்கள் காணக்கிடைக்கும் போதெல்லாம் முகத்தை திருப்பிவிடுகிறேன். சிதறி வழிகின்ற இரத்தமும் சதையுமாக வாழ்ந்த எங்களால் கூட அவற்றைப் பார்க்க மனம் தாங்குதில்லை, அத்துடன் நெஞ்சுக்குள் எழும் குற்ற உணர்வு அந்தப் படங்களிலிருந்து என்னைத் தொலைவாக்குகிறது நண்பர்களே! எங்கோ ஒரு நாட்டில் எவனோ ஒருவனுக்கு வாழ இடம் கிடைக்கின்றதென்றால், அங்கே நெஞ்சு பிளந்து கிடந்த உங்களால் என்பதை இன்று ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை தோழர்களே! பணம் மட்டுமே அதனைப் பெற்றுத் தருகிறது என்று உங்களை மறந்து போகிறார்கள் நண்பர்களே!

எனக்கு எப்பொழுதுமே ஒரு ஆச்சரியம் உண்டு. உயிரைக் கொடுத்த நண்பர்கள் பற்றி சினிமாவில் பார்த்ததுண்டு. கதைகளில் வாசித்ததுண்டு. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமா? நிச்சயம் சாத்தியமே! உயிரைக் கூட கொடுக்கும் நட்புகளை இந்த போராட்டம் எமக்குத் தந்திருந்தது. அப்படியான நட்புகளை நானும் கொண்டிருந்தேன் என்பதில் எனக்கு என்றும் ஆத்மதிருப்தியே. என் ராசிக்கு எனக்கு நண்பர்கள் இருக்காதாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்று இருக்கும், வாழும் இந்த உயிரை எத்தனை நண்பர்கள் காத்து, காவல் இருந்து தந்திருக்கிறார்கள் தெரியுமா? அந்த தகுதிக்கு நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் எனக்கும் பெருமையே!

யாரோ ஒரு போராட்டக் கவிஞரின் பாடல் வரிகள் எனக்குள் எப்பொழுதும் நினைவுக்குவரும். அந்த வரிகளோடு அந்த பாடல் எனக்குள் நிறைந்து எங்கெங்கோ எல்லாம் அழைத்துச் செல்லும். நண்பர்களே! மீதி வாழ்க்கையை வாழ்ந்துவிட கடந்தகாலம் என்பது நியாயமானதாக, நெஞ்சுருகக் கூடியதாக, எதோ ஒன்றில் அர்த்தப்படுத்தப் பட்ட நினைவுகளோடு இருந்தே ஆகவேண்டும். இயந்திரங்கள், இயந்திரத்தனங்களுக்கு அப்பால் நினைவுகளில் இருந்து அழிக்கவே முடியாத நட்பின் ஞாபகங்கள் உனக்குள்ளும் இருந்தால் நீங்களும் எனது நண்பர்களே!

நண்பா!
எம் நட்பின் முகில் நெஞ்சில் மழை தூவும்
நாம் வாழ்ந்த ஞாபங்கள் பூ பூக்கும்
எங்கே எம் பிள்ளை என்று நெய்தல் முற்றம் கேட்கும்
கரையோர விழிகள் உன்னை வழி பார்க்கும்.
விழியோரம் கடலின் ஈரம்
மனசுக்குள் நினைவின் பாரம்
வருமா வரம் வருமா இனி
ஒருதரம் உனைக் காணும் வரம் வருமா?
(பாடல்வரிகள் https://thesakkatru.com/album/black-sea-tigers-vol-09/ )

. வித்யாசாகர்