பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். இருப்பினும், கடந்த 2016-இல் பதான்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இரு தரப்பு உறவு பின்னடைவைச் சந்தித்தது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவியேற்ற நிலையில், கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகிய சம்பவங்கள், இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகப்படுத்தின.

இந்தச் சூழலில், இந்தியாவின் பிரதமராக மீண்டும் தேர்வான பிரதமர் மோடியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, நமது பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்வதற்கு, பயங்கரவாதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று இம்ரானிடம் மோடி வலியுறுத்தினார்.

இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.