தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இரு பெரும் வழித்தடங்களில் 2009 மே வரை ஒரே நேரத்தில் பயணித்த மருத்துவப் போராளி திருமதி. கானவி.  களமருத்துவம் மட்டுமன்றி தளமருத்துவத்திலும் பயணித்த போராளி. அதே வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத் தடங்களை வரலாற்று ஆவணங்களாக வழங்கக் கூடியவாறான எழுத்தாளராகவும் ஈழத்தின் பெண் படைப்பாளியான குயில் என்று அழைக்கப்படுகின்ற மிதயா கானவி பயணித்திருந்தார். இறுதி நாள் வரை மக்களையும் போராளிகளையும் தன் மருத்துவப் பணியினார் உயிர் காத்த பல நூறு மருத்துவப் போராளிகளுள் முக்கியமானவர் கானவி.
1995 ஆம் ஆண்டு க.பொ.த உயர் படித்துக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது பங்களிப்புத் தேவை என்பதை உணர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளின் படையணிப் போராளியாக தனது போராட்ட வாழ்வை ஆரம்பித்த கானவி, படையணி மருத்துவராக பயிற்சி பெற வேண்டிய சூழல் வந்த போது அதற்காக மருத்துவக் கற்கையை தமிழீழ மருத்துவக்கற்கை  பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். ஆனாலும் அவரது படையணி மருத்துவத்தையும் தாண்டி மருத்துவப்பிரிவுக்கு அவரது ஆளுமை தேவை என்று உணர்ந்த மூத்த மருத்துவர்கள் அவரை மருத்துவப் பிரிவுக்குள் உள்வாங்கி இருந்தார்கள்.அதன் பின்பான காலங்கள் பெரும்பாலானவை  சண்டைக்களங்களுக்கான மருத்துவப் பணியுடன், மேலதிகமான மருத்துவகற்கைகளையும்   கடந்தே வந்திருந்தன.

வணக்கம் திருமதி கானவி

வணக்கம் கவி.


மருத்துவப் பிரிவின் ஆரம்பம் பற்றியும் அதன்  செயற்பாடுகள் பற்றி கூறுங்கள்.
மருத்துவப்பிரிவின் ஆரம்ப விதை இந்தியாவில் அண்ணையால் நாட்டப்பட்டது என்பது தான் உண்மை. ஏனென்றால் எமது விடுதலை போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த லெப். சங்கர் அண்ண தாயகத்தில் காயப்பட்டிருந்தாலும் அவர் இந்தியாவிற்கு கொண்டு சென்று சிகிச்சை பலன் தராததால் அண்ணையின் மடியிலே உயிரை விட்டிருந்தார். அந்த வீரச்சாவு எமது அமைப்புக்கான மருத்துவப் பிரிவின் தேவையை அண்ணைக்கு உணர்த்தியது. அன்றே அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கழைக்கழக துணைவேந்தர் மாமனிதர் துரைராசா அவர்களின் முற்றுமுழுதான ஆதரவோடு  தமிழீழ மருத்துவக் கல்லூரி, ஆரம்பிக்கப்பட்டு எமக்கான மூத்த போராளி மருத்துவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதன் பின் தமிழீழ தாதியர் பயிற்சிக்கல்லூரி, களமருத்துவக் கல்லூரி போன்ற பல மருத்துவக் கற்கைநெறிகளை கற்பிக்கும் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு மருத்துவ வளங்களும், செயற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டன. இதன் உச்சக் கட்டமாக 2006 காலப்பகுதியில் மக்களுக்கான மருத்துவக் கற்கைநெறி ஒன்றை எமது அமைப்பு ஆரம்பித்து பல மருத்துவ மாணவர்களை கற்பித்து வந்தது.
எமது பிரிவு பிரதானமாக இரண்டு பிரிவுகளை கொண்டிருந்தது

  1. தமிழீழ சுகாதார பிரிவு
  2. தமிழீழ மருத்துவப்பிரிவு

இதில் சுகாதாரப்பிரிவு  அனுபவமுள்ள மூத்த வைத்தியரின் தலமையில் போராளி மருத்துவர்களும்  சிறப்பு கற்கை நெறிகளை மேற்கொண்ட மருத்துவப்போராளிகளும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
சுகாதார சேவையானது மக்களுக்கான பணிகளைபலசேவைகளாக வழங்கியிருந்தது குறிப்பாக மருத்துவமனையற்ற போக்குவரத்து வசதிகளற்ற கிராமப்புறங்களில் தியாக தீபம் திலிபன் மருத்துவமனையை அமைத்ததுடன் நடமாடும் மருத்துவ சேவைகளையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பல்மருத்துவம், கண் மருத்துவமும் முக்கியமானவை.
மருத்துவப்பிரிவு போராளிகளுக்கான பணிகளை செய்து வந்தது. 
இதில் களமருத்துவம், தளமருத்துவம், மருந்துகளஞ்சியம் என பல்வேறு பிரிவுகள் தேவைகளிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருந்தன. களமருத்துவப் போராளிகள் களமுனைக்கு அண்மனையில் வைத்து உயிர்காக்கும் பணிகளை செய்து மேலதிக சிகிச்சைக்காக பிரதான மருத்துவ நிலைக்கு அனுப்பி வைப்பார்கள்.  


கானவி, கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருந்த போது கற்றல் செயற்பாடு  மட்டும் தான் நடக்குமா அல்லது சண்டைகளுக்கும் செல்வீர்களா?
எம் கல்லூரிகளில் படிப்பு என்பதை விட அனுபவக் கற்கையே அதிகமாக இருந்தது. நான் படிக்கத் தொடங்கி இரண்டு கிழமைக்குள் பரந்தன் பகுதியில் நடந்த வலிந்து தாக்குதலில் பங்கெடுத்திருந்தேன். அங்கே காயப்பட்ட போராளிகள் பலருக்கான களமருத்துவப் பணியை செய்திருந்தேன். அதனால் நாம் படிப்பும், சண்டையும் என மாறி மாறியே கற்று முடித்தோம். உண்மையில்  மருத்துவப் போராளிகளிற்காக மூத்த மருத்துவர்களினால் வழங்கப்படும் தீவிர பயிற்சியினாலே அவர்களால் ஒவ்வொரு துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்று செயற்பட முடிகின்றது. அந்த வகையில் நான் அந்த வைத்தியர்களுடன் வாழ்ந்த நாட்களிற்காய் மகிழ்வடைகின்றேன். எமக்கான ஓய்வுகிடைக்கும் போதேல்லாம் புதிதாக ஏதோவொன்றைக் கற்பிக்க தவறமாட்டார்கள். மூத்த மருத்துவப் போராளிகள் பலரும் பல சிறப்பு கற்கைகளை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.


போராளிகளின் தியாகங்கள் பற்றிக் கூறுங்கள்.
பல ஆயிரம் தியாகங்கள் எம்முன்னே இருக்கின்றன இதில் எதைக் குறிப்பிடுவது?எம் போராளிகளின் தியாகங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதனால் அவற்றில் நான் நேரடியாக இறுதிச் சண்டைக்கே வருகிறேன்.
இறுதி யுத்தம் என்ற பெயரில் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கையினை எம் மக்களும் நாங்களும் எதிர்த்து நின்ற நாட்களில் பல தியாகங்கள் நடந்து முடிந்தன. இங்கே அரச மருத்துவர்களின் தியாகங்களும் வரையறையற்றது. இவ்வாறு இருந்த நிலையில், இறுதியாக மருத்துவமனையாக இயங்கிக்கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையின் ஓர் அறையினை  சத்திரசிகிச்சைக் கூடமாக மாற்றி இருந்தோம். நான் நினைக்கிறேன் 13 ஆம் நாள் என்று, திட்டமிட்டு எதிரி மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதலை மேற்கொள்கிறான். அந்த எறிகணை நேரடியாக சத்திரசிகிச்சை அறைக்குள் வீழ்ந்து வெடித்தது. அதில் எமது மருத்துவப் போராளி இறையொளி வீரச்சாவடைகிறார். அவ்வாறு அவர் வீரச்சாவடைந்த அதே நேரம் அருகில் ஒரு பெண் மருத்துவப் போராளி வயதான ஒருவரின் காயத்துக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தாள். அடி விழுந்ததும் ஓடிச் சென்று இறையொளியை பரிசோதிக்கிறாள். இறையொளி வீரச்சாவடைந்து விட்டதை உறுதிப்படுத்தியவள் தனது நண்பனின் சாவுக்காக ஒரு வினாடி  கூட அழுது தீர்க்கவில்லை. மனம்துழுவதும் துயரைச் சுமந்து கொண்டு உடனடியாக வயதான அப்பாவை காப்பாற்ற சிகிச்சை கொடுக்கத் தொடங்குகிறாள். இதை விட எதை தியாகம் என்று கூற முடியும்?அவ்வாறே மூன்று பிள்ளைகளின் தாயானபோராளி மருத்துவர் கமலி அக்கா கடமையின் போதே வீரச்சாவடைந்தார், இவ்வாறு எம் போராளி மருத்துவர்கள் பலரின் தியாகங்கள் வெளிவராது இருக்கிறது. இதை விட எமக்கான மருந்துப் பொருள் வழங்கல் போராளிகள், நிர்வாகப் போராளிகள்   என்று அவர்களின் தியாகங்கள் நீளமானவை.


நீங்கள் போராளிகளுக்கும் அதேநேரம் மக்களுக்கும் சிகிச்சை வழங்கி இருக்கிறீர்கள் அந்த வகையில் சிகிச்சை வழங்கும் போதான அனுபவங்களை பகிருங்கள்.
போராளிகள் பெரும் காயங்களையும் தாங்கும் மன வலு உள்ளவர்களாக இருப்பார்கள். அதே நேரம் மக்கள் அவ்வாறு இல்லை எனிலும் எம்மால் சமாளிக்கக்கூடியதாக இருக்கும். குழந்தைகள் தான் பாவம். அவர்களுக்கான சிகிச்சைகளை செய்வது என்பது கடினமானது. தாங்க முடியாத வேதனையைத் தரும்.
இறுதி நேரம் நீங்கள் அனுபவித்த குழந்தைகள் மீதான கொடூரமான தாக்குதல்களை கண்டிருக்கிறீர்களா?
இப்போது நினைத்தாலும் இதயம் வெடிக்கும் சம்பவங்கள் பல. ஒரு புறம் பசியாலும், மறுபுறம் சிங்களத்தின் தாக்குதல்களாலும் எம்மினம் செத்துக் கொண்டிருந்த போது எமது இயக்கத்தின் சில பிரிவுகள் மக்களுக்கான பணிகளை மட்டும் செய்து வந்தன. அதில் மருத்துவப்பிரிவு மற்றும் நிர்வாக சேவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். அத்தோடு மட்டுமல்லாது சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இறுதிவரை அப்பணியை சிறப்பாக செய்து வந்தது. இந்த நிலையில் பசியாற்றும் நடவடிக்கைகளை செய்து வந்த நிர்வாகசேவை, மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகியன வாய்ப்பன் மற்றும் கஞ்சி போன்றவற்றை மக்களுக்கு தினமும் வழங்கி வந்தார்கள். அவ்வாறு வழங்கிய ஒரு நாள் சிங்கள படையினர் அவ்விடத்தில் கொத்துக்குண்டு தாக்குதலை செய்தார்கள். வாய்ப்பன் வாங்குவதற்காக நிரையில் காத்திருந்த பல குழந்தைகள் காயமடைந்திருந்தார்கள். எனக்கு சரியாக எண்ணிக்கை நினைவில்லை ஆனால் குறைந்தது 8 குழந்தைகளாவது அதில் இறந்திருக்க வேண்டும். அவ்வாறான நிலையில் எம்மிடம் கொண்டுவரப்பட்டிருந்த 3 வயதுக் குழந்தை ஒன்றுக்கு நான் சிகிச்சை கொடுத்த போது அந்தப் பிள்ளை வாங்கிய வாய்ப்பனை ஒரு கடி கடித்துவிட்டு, தனது கைக்குள் மிகுதியை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த என்னால் கண்ணீரை அடக்க முடியாது அழுதழுதே பிள்ளைக்கான சிகிச்சையினை செய்தேன்.அது மட்டுமல்ல குழந்தைகளுக்கான பால்மா வாங்குவதற்காக வலைஞர்மடம் என்ற பகுதியில் நிரையில் காத்திருந்த மக்கள் மீது சிங்கப் படைகள் தாக்குதலை மேற் கொண்டு கிட்டத் தட்ட 43 பேருக்கு மேல் இறந்தார்கள். அதில் கருவுற்றிருந்த தாய்மாரும் குழந்தைகளுடன் வந்திருந்த தாய் மற்றும் குழந்தைகளுமே இறந்தார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் இப்போதும் நெஞ்சில் இருக்கிறது.ஓம் இவ்வாறு பல சம்பவங்கள் இன்றும் எம்மால் மறக்கவோ மறுக்கவோ முடியாது இருக்கிறது.


இந்த நிலையில் மருத்துவ வளங்கள் எவ்வாறு இருந்தது?
உண்மையில் தர்மபுரம் மருத்தவமனை மற்றும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை இரண்டும் இடம்பெயர்ந்த பின் மருத்துவமனை என்ற வளம் எமக்கு இருக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் தான் பெரும்பாலும் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாது அரசாங்கத்தின் மருத்துவ வளங்கல் முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டிருந்ததால் மருந்துப் பொருட்களோ தடுப்பூசிகளோ எம்மிடம் இருந்ததில்லை. அனைத்தையும் எம் மருத்துவப்பிரிவின் வளங்கல் பிரிவில் இருந்தவற்றை வைத்தே நாம் பயன்படுத்தினோம். அவையும் ஒரு நிலையில் இல்லாமல் போய்விட்டது.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை சிங்கள இராணுவம் நடத்தி இருக்கிறதா? இருந்தால் அத்தாக்குதல்கள் பற்றி என்ன கூறுவீர்கள்?
மருத்துவமனைகள் என்று தெரிந்தும் சிங்கள இராணுவம் தாக்குதலை மேற் கொண்டதானது மிக மிலேச்சத்தனமான செயற்பாடு அப்படியான ஒரு தாக்குதலில் தான் மருத்துவப் போராளி செவ்வானம் அக்கா, அல்லி போன்ற போராளிகள் வீரச்சாவடைந்தார்கள் . அது மட்டுமல்லாது எம்மால் சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட மக்கள் பலர் மருத்துவமனை வளாகத்துக்குள் நடந்த தாக்குதல்களால் மீண்டும் காயப்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நடந்தன. பல மக்கள் அவ்வாறு உயிரிழந்திருந்தார்கள்.
குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இயங்கிய  மாஞ்சோலை மருத்துவமனை என  ( முள்ளிவாய்க்கால் கனிஸ்ட உயர்தர  பாடசாலையில் இயங்கிய)  மருத்துவமனையில் பல மக்கள் கொல்லப்பட்டார்கள். குறிப்பாக ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் இந்த மருத்துவமனைக்குள் எறிகணைத் தாக்குதலை இராணுவம் மேற்கொள்கிறது. அதில் பல வயிற்றுக்காயமடைந்திருந்த மக்கள் இறந்தார்கள். அதன் பின்னால் இருந்த இறுதி மருத்துவமனையில் ( பெயர் சரியாக நினைவு வரவில்லை நான் நினைக்கிறேன் முள்ளிவாய்க்கால் ஆரம்பப் பாடசாலை) மே 14 ஆம் திகதி முற்றுமுழுதான தாக்குதல் நடந்தது. எறிகணை மற்றும் ஆர்.பீ.ஜீ போன்றவற்றால் நேரடி சூட்டை இராணும் செய்தது. இங்கே குறிப்பிடக் கூடியது என்னவெனில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இராணுவம் இலகுவாக இனங்காணக்கூடியதாக செஞ்சிலுவை குறியீடு இடப்பட்டிருந்தது.அவற்றை மருத்துவமனை என்று தெரிந்தே சிங்களம் தாக்குதல்களை மேற் கொண்டிருந்தது.


எவ்வாறான குண்டுத்தாக்குதல்களுக்கான நீங்கள் சிகிச்சை வழங்கினீர்கள்?
இறுதி நேரத்தில் பொஸ்பரஸ் குண்டு தாக்குதல், கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் அதிகமாக இருந்தது. மற்றும் கடற்படைத் தாக்குதல்களை அதிகமாக செய்ததன. சரியாக நாள் எதுவென்று நினைவில்லை  பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலில் காயப்பட்ட ஒரு குழந்தையை வலைஞர்மட மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்தார்கள். அந்த பிள்ளை தலையில் காயப்பட்டிருந்தது. அப்போது காயப்பட்ட பிள்ளையின் தலையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அதை தடுக்க எம்மால் முடியவில்லை. பின்னர் அதை பொஸ்பரஸ் குண்டு என்பதை எம் போராளி மருத்துவர் ஒருவர் இனங்கண்டிருந்தார். அதற்கு ஒரே ஒரு மருத்துவ முறமையே பயன்படுத்த முடிந்தது. உடனடியாக அந்த குண்டுக்கும் காற்றுக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்க வேணும் என்பதை மருத்துவர் உணர்த்தினார்.
அதனால் வசலின்  மருந்தை அந்தக் காயத்தை மூடி பூசினோம் அதன் பிறகு தான் அந்த காயத்தில் இருந்து புகை நின்றது. ஆனாலும் பிள்ளையை தொடர்ந்து அங்கே வைத்திருக்க முடியவில்லை. பிள்ளையை மேலதிக மருத்துவத்துக்காக மாத்தளன் மருத்துவமனைக்கு அனுப்பினோம். அங்கே தப்பியதா இல்லையா என்பது தெரியாது. அத்தோடு கொத்துக்குண்டுத் தாக்குதலே அதிகமாக இருந்தது.

அரச சார்பற்ற நிறுவனங்களை சிங்கள அரசு தாயகப்பகுதியில் இருந்து வெளியேற்ற பணித்த நிலையில் எதாவது அரச சார்பற்ற நிறைவனங்கள் இருந்தனவா?
இல்லை, ஆனால் காயப்பட்ட மக்களை எமது பகுதியில் இருந்து கப்பல் மூலமாக வெளியேற்ற என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஓரிரு பணியாளர்கள் இருந்தார்கள்.


செஞ்சிலுவை சங்கம் சில மனிதநேயப் பணிகளை செய்தது என்றால் அவர்களின் பணிகள் எவ்வாறு இருந்தன?
இறுதி நேரத்தில் அனைவரும் எம்மைக் கைவிட்டே இருந்தார்கள். காயப்பட்டவர்களை ஏற்றுவதற்காக கப்பல் ஒன்றை ICRC பயன்படுத்தி வந்தது. ஆனாலும் அதைக் கூட ஒழுங்காக அவர்கள் ஈடுபடுத்தவில்லை இறுதி நாட்களில் கப்பல் வரும் வரும் என எதிர்பார்த்து ஏமாந்தோம். மாவட்ட  வைத்திய அதிகாரிகள்    எத்தனை தடவை வலியுறுத்தியும் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கவோ அல்லது காயப்பட்டவர்களை திருகோணமலைக்கு எடுக்கவோ அவர்கள் சரியான வழிமுறைகளை கைக் கொள்ளவில்லை. மக்கள் காயங்களால் தவித்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் வரும் ஒரு கப்பலில் கூட காயப்பட்டவர்களை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு கப்பலை சூழ்ந்த பகுதிக்கு எறிகணைத் தாக்குதலை  செய்தது சிங்கள அரசு. அதனால் மக்கள் பட்டதுயரம்சொல்லமுடியாது. நேரடியாக பெரிய கப்பலில் ஏற்றமுடியாது கரையில் வைத்து சிறிய படகில் ஏற்றி கடலின் ஆழப்பகுதியில் நிற்கும் ICRC கப்பலிற்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள்.
இறுதி நேரங்களில் வீதியோரங்களில் காயப்பட்டவர்கள் வலியால் கத்திக் கொண்டிருந்த கொடுமையை மறக்க முடியவில்லை. அதை விட இறுதி நேரத்தில் நடந்த சம்பவங்கள் பல இருக்கின்றன. முக்கியமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாக இருந்த மருத்துவமனையில் இருந்து மே 16  ஆம் நாள் அதிகாலை வெளியேறுமாறு எமக்குப் பணிக்கப்பட்டது . எமக்கு பொறுப்பாக நின்ற மூத்தவைத்தியர் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே செயற்பட்டவராகவும் மருத்துவத்தில் பல்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும்  சத்திதிர சிகிச்சை நிபுணராகவும்  விளங்கியவர். எந்த ஒரு புறச் சூழலிலும் சற்றும் தளர்வின்றி தன் கடமையை செய்து கொண்டு எம்மையும் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருந்தார்.

நான் அதிகமான காலங்கள் அந்த வைத்தியரின் கீழ் தான் பணியாற்றினேன் அந்த இரவு மருத்துவ மனையைவிட்டு வெளியேற வேண்டிய செய்தியை அவரால் சொல்லமுடியாது தன்  தலையில் கையைவைத்து பெரிதாக  அழத்தொடங்கினார். என்ன செய்தி என்று அறிய எம் கண்களும் நிறைந்தன அதனால் நாம் சிகிச்சை செய்து காப்பாற்றிய மக்களை அப்பிடியே விட்டு வர வேண்டிய சூழல்  நாம் அவர்களை விட்டு வெளியேறிய போது எமது கால்களைப் பிடித்து எம்மைத் தூக்கிக் கொண்டு செல்லுமாறும் காப்பாற்றுமாறும் கெஞ்சி அழுதார்கள். எம்மால் எத்தனை பேரை தூக்கி காப்பாற்ற முடியும்? எம்மால் எதையுமே செய்ய முடியாதவர்களாக நாம் உயிர் இருந்தும் உயிரற்ற பிணமாக நடந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் அழுத குரல் அந்த இடத்திலையே எனக்கு மருத்துவப்பணியின் மீது வெறுப்பை தந்திருந்தது. எதற்கு இதைப் படித்தேன் என்று இருந்தது முதன்முதலாக ஒரு மருத்துவராக நாம் தோற்றுப் போயிருந்தோம் கண்முன்னே காயப்பட்டவர்கள் வலியில் அழுது கொண்டிருக்க அவர்களை காப்பாற்றாது விட்டு வந்தது வலி மிகுந்த கணங்களை உருவாக்கி இருந்தது. நடந்து வரும் இடமெங்கும் காயங்கள் நிரம்பி இருந்தன. அவர்களுக்கு எம்மிடம் இருந்த பொருட்களைக் கொண்டு முதலுதவி புரிந்து கொண்டே நாங்கள் வட்டுவாகல் நோக்கி நகர்ந்தோம்.


இந்த வலிகளை நீங்கள் ஒரு எழுத்தாளர் என்ற நிலையில் எதாவது இடத்தில் பதிந்துள்ளீர்களா?
ஓம், குறிப்பாக கூற வேண்டியது ஒன்று இருக்கிறது. இங்கே இனவழிப்பு என்பது முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றப்பட்டதல்ல. அது நீண்டகாலமாக நடந்து வரும் சிங்களத்தின் செயற்பாடு. அந்த வகையில்  1998 ம் ஆண்டு     சாவகச்சேரியில் நடந்த இலங்கை இராணுவத்தின் எறிகணைத்  தாக்குதலில் காயப்பட்டிருந்த மக்களை பூநகரி ஊடாக எம் பகுதிக்கு கொண்டு வந்திருந்தார்கள். இதில் இரண்டு மாதக் குழந்தை தொடங்கி முதியவர் வரை காயப்பட்டிருந்தார்கள் அவர்களின் வலிகளில் தொடங்கி, காயப்பட்ட போராளி ஒருவன் எமது சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து மீண்டு களமுனைக்குப் போகும் போது என்ன மனநிலையில் போகிறான் , காப்பாற்ற முடியாது என மருத்துவம் சொன்ன உயிர்களை கூட விடா முயற்சியால் காப்பாற்றப்பட்ட வரலாறு, என்பது வரையிலான ஒரு சிறுகதைத் தொகுப்பை 2005 ஆம் ஆண்டு “மருத்துவமடியில் “ என வெளியிட்டிருந்தேன். அது முற்றுமுழுதாக என் மருத்துவ அனுபவங்களே… அதைப் போலவே 2009 இற்குப் பின் நடந்த வலிகளைச் சுமந்து “  கருணைநதி “ என்ற நாவலையும் வெளியிட்டிருக்கிறேன். நான் நினைக்கிறேன் அவை இரண்டும் எம் மக்களின் வலிகளையும் போராளிகளின் தியாகங்களையும் கட்டாயமாக பேசி இருக்கும் என்று.


நீங்கள் சரணடைந்ததைப் பற்றி கூறுங்கள்.
சரணடைவு என்பது மிகக் கொடியது. ஒரு பெண் என்பதையும் தாண்டி தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள் நாம். எம் துப்பாக்கிகளுக்கும் அவை உமிழ்ந்த ரவைகளுக்கும் அஞ்சி நடுங்கிய சிங்களத்திடமே சரணடைந்தது என்பது உண்மையில் துயரம் நிறைந்தது. சாவை விட கொடிய வலியை தந்தது.உண்மையில் மே 18 ஆம் நாள் எம் வாழ்வில் வந்திருக்கக் கூடாது இன்றும் எம் வாழ்வில் விடியலைத் தராது நீண்டு கொண்டிருக்கும் அந்த நாள் விடியாமலே போயிருக்கலாம்…

சரணடைந்த பின் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பு முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டீர்களா? அல்லது வேறெங்காவதா? . அங்கே உங்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது?
என் வாழ்வில் காணாததும் சகிக்க முடியாததுமான வாழ்க்கை அது. புனர்வாழ்வு என்பதுவொரு புனைகதை என்று தான் சொல்லுவேன் நான்.அதை நினைவு படுத்தவோ அதைப்பற்றி கூறவோ என்னால் முடியவில்லை. அவ்வளவு கொடுமையான வாழ்க்கை அதற்குள் வாழ்ந்தோம். எந்த அடிப்படை வசதியும் இல்லாத விலங்குகளைப் போல எம்மை அடைத்து வைத்திருந்தார்கள். அதற்குள் இருந்து மீண்டு வெளியில் வருவோமா என்று தெரியாத நிலையிலும் உயிரற்ற வெறும் சடங்களாகவே வாழ்ந்தோம்.


நீங்கள் அதற்குள்ளும் மருத்துவப் பணியைத் தொடர்ந்தீர்களா…?
ஓம். என்றோ ஓர் நாள் எமது தேசியத் தலைவர் மருத்துவப் போராளிகளை சந்தித்த போது ஒரு விடயத்தை தெளிவுபடுத்தி இருந்தார்.
“நான் மருத்துவம் கற்க உங்களை தெரிவு செய்தது தனிய போராளிகளுக்கான மருத்துவத்துக்காக மட்டுமல்ல மக்களுக்காகவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் அதே நேரம் எதிரிக்கும் நீங்கள் மருத்துவம் செய்ய வேண்டி வரும் அந்த வேளையில் நீங்கள் ஒரு போராளியாக இல்லாது மருத்துவராக மட்டும் செயற்பட வேண்டும். இதை எம்போதும் மனதில் வைத்திருங்கள்.  ஒரு எதிரி நோயுற்றோ அல்லது காயப்பட்டோ உங்களிடம் வந்தால் அவனை எதிரியாக அல்லாமல் மருத்துவத்துக்காக வந்த ஒரு நோயாளியாக பாருங்கள். “இந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகளை நான் தடுப்பு முகாமில் வைத்து உணர்ந்து கொண்டேன்.அதே நேரம் சிங்கள அரசு எவ்வாறு எம்மை நடத்தியது என்பதையும் கண்டு கொண்டேன்.அங்கே ஒரு இராணுவ மருத்துவர் மட்டும் வந்து செல்வார். ஆனால் அவர் எம்மை நோயாளியாக அல்லாமல் எதிரியாகவே கணித்து நடாத்துவார்.புனிதமான மருத்துவர்களுடன் வாழ்ந்த எனக்கு இப்படி ஒரு மருத்துவருடன் இணைந்து வேலை செய்தது வாழ்க்கையில் ஒரு துயரான சம்பவமே  எப்போதும் எரிந்து விழுவதும் எதற்கு சாகாமல் இங்கே வந்தீர்கள்? என கேட்பதும் ஒழுங்காக மருத்துவம் செய்யாமல் எமக்கு பெரும் பிரச்சனைகளைத் தந்து கொண்டிருந்தார். அதனால் காயப்பட்ட போராளிகளின் காயங்கள் பெரிய பிரச்சனைகளை உருவாக்கியது. காயங்களில் புழுப்பிடித்து வேதனையை உருவாக்கியது. அதனால் அவர்களுக்கு அவசியமாக மருத்துவ உதவி தேவைப்பட்டது. அதனால் எம்மோடு நின்ற மருத்துவப் போராளிகளை தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கான மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் என்னால் உடனடியாக அதை செய்ய முடியவில்லை. கண்முன்னே காயப்பட்டவர்களை கைவிட்டு வந்த சம்பவத்துக்குப் பிறகு மருத்துவப் பணியையே நான் வெறுத்தேன். அதனால் நான் முதலில் மறுத்தாலும், இங்கே உள்ளவர்களும் எம் போராளிகள் தானே என்ற உறுத்தல் என்னை யோசிக்க வைத்தது. அங்கிருந்த மூத்த அக்காக்களும் வந்து கேட்டுகொண்டார்கள் அதே நேரம் அண்ணை சொல்லி வளர்த்த வார்த்தைகள் என்னை அப்பணிக்கு சம்மதிக்க வைத்தது. அதனால் நானும் அதற்கு சம்மதித்தேன். அதே நேரம் எம் மூத்த பெண் போராளி மருத்துவரான மீனா அக்காவும் தயாராக இருந்தார்.   அப்போது அங்கே தங்க வைக்கப் பட்டிருந்த பெண் போராளிகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தோம். அதனால் நாம் இருந்த பகுதியில் மருத்துவ வேலை செய்வதற்கு யாரும் இல்லை அதனால் நாமே தடுப்பு முகாமுக்குள்ளும் எம் போராளிகளுக்கான மருத்துவத்தை செய்தோம். அதேநேரம் அங்கே எமக்கு காவலாக இருந்த பெண் இராணுவச் சிப்பாய்கள் எம்மிடம் மருத்துவத்திற்காக வருவார்கள். அவர்களுக்கு நாம் சிகிச்சை வழங்குவோம். அப்போது தான் அண்ண சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் எமக்கு எதிரொலித்துக் கொண்டிருந்தது. அந்த முகாமின் இரண்டாம் நிலை பொறுப்பதிகாரியும் மருந்திற்காக வருவா ஒரு நாள் நான் வினவினேன்…
எப்படி என்னிடம் நம்பி மருந்து வாங்குகின்றீர்கள் ?
நீங்கள் விடுதலைப்புலிப் போராளிகள். தவறான மருந்தைத் தந்து துரோகம் செய்ய மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் நீங்கள் பிரபாகரனிடம் வளர்ந்தவர்கள். அந்த நம்பிக்கை ஒன்று போதும். என்றாள்.
எனக்கு பெருமையாகவும் அதே நேரம் எம் போராட்டம் ஏன் இப்பிடி இல்லாமல் போனது என்ற கவலையும் வந்தது.
உண்மை தான் காணவி, எம் போராளிகள் என்றும் தலைவனை நேசிப்பவர்கள் அவரின் வார்த்தைகளை வேதமாக கொள்பவர்கள். இந்த ஒன்றை சர்வதேசமே உணர்ந்து கொண்டிருக்கும்.

உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்தும் படைப்புக்களாக வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம் உங்களின் எழுத்துப் பயணத்தில் அடுத்த நிலை பற்றிக் கூறுங்கள்.
இப்போது நான் பல்லின மக்களிடம் எம் வலிகளை கொண்டு செல்லும் ஒரு முயற்சியில் இருக்கிறேன். கருணைநதி நாவலை பிரான்ஸ் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளேன். மிக விரைவில் அதை பிரஞ்ச் மொழியில் வெளியிட இருக்கிறேன். அது வெளி வரும் போது பிரஞ்ச் மொழிபேசும் மக்களிடம் எம் வலிகளை கொண்டு சேர்க்கும்என நம்புகிறேன். ஏனெனில் இப்போது நாமே நமக்காக போராடுவதை விட பல்லின மக்கள் எமக்கான நியாத்தை புரிந்து கொள்ளும் போது நிட்சயமாக எமக்கான நீதி தூரத்தில் இல்லை  என்று நம்புகிறேன்…
நல்லது திருமதி. கானவி தொடர்ந்தும் உங்கள் எழுத்துப் பணி மூலமாக நாம் பலவற்றை அறிய வேண்டும். புலர்வு இணையத்தோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி IBC தமிழ் பத்திரிகை. (2018 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிறப்பு நேர்காணலாக வெளிவந்த கவிமகன் கண்ட நேர்காணல்)