2009 மாசித்திங்கள் 25 ஆம் நாள். இரவு 7.30 மணி இருக்கும். திடீர் என்று வோக்கிகள் அழைக்கின்றன. குறித்த இடம் ஒன்றைக் குறிப்பிட்டு, ஒன்று கூடுவதற்கான கட்டளை சங்கேத மொழியாக வருகின்றது. குறித்த நேரத்தில் அனைவரும் குறித்த பகுதியில் ஒன்று கூடுகின்றனர். ஒன்றுகூட்டப்பட்ட இளநிலை தளபதிகள், அணித்தலைவர்கள் முன்னிலையில் அந்தக் கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கிறது. ” ஒவ்வொரு மூத்த தளபதிகளையோ அல்லது போராளிகளையோ நாம் இழந்த போதும், எமது போராட்டம் கைவிடப்படவில்லை. தொடர்ந்தும் போராடி வெற்றிப் பாதைகளில் நாம் பயணித்துள்ளோம். இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இறுதி யுத்தம் என்று எதிரி எங்கள் மீது பாரிய நடவடிக்கைகளை சர்வதேசத்தின் முழுமையான பங்கோடு செய்து கொண்டிருக்கிறான்.

நாம் தென் தமிழீழம் தொடக்கம் இன்றைய களமுனை வரை பின்நகர்ந்து கொண்டே வருகிறோம். எம் போராட்டத்தின் பின்னடைவு எமது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை களமாடி இந்த மண்ணில் வீழ்ந்த எங்கள் உறவுகளுக்கு நாம் கொடுக்கும் ஆறுதல் இது தானா? எமது நேசம் கொண்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தின் முடிவு இது தானா? அண்ணைக்கு என்ன பதில் கூறப் போகிறோம்? ….” எனப் பல வினாக்களோடு தொடர்கிறது அந்த குரல்.

இப்போது மிக நெருக்கடியான நிலையில் நாமும், எமது மக்களும் இருக்கின்றோம். இந்த நெருக்கடியான சூழலை நாம் எவ்வாறு மாற்றப் போகின்றோமென்பதை யோசிக்க வேண்டும். இராணுவம் முன்னேற, முன்னேற பின் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இது தொடரக் கூடாது இதற்கு முற்றுப்புள்ளியிட எதாவது செய்ய வேணும். எப்படி, எப்ப செய்ய போறம் என்றத யோசிப்பம். அண்ண எங்களில நிறைய நம்பிக்கை வைச்சிருக்கிறார். அண்ணைக்காக, எங்கள் மாவீரர்களுக்காக எதாவது செய்ய வேணும்…தொடர்கிறது அந்தக்குரல். 
அந்தக் குரலுக்கு சொந்தமானது சர்வதேசமே கேட்டு அஞ்சும் கட்டளைகளை ஓய்வின்றி, தொய்வின்றி தொடர்ந்து வழங்கி சண்டைகளைச் செய்த வரலாற்றுச் சொத்தாகிய மூத்த தளபதி சொர்ணம்.

“அண்ண சாளைப் பக்கத்தால ஒன்றை செய்யலாம் அண்ண. செய்தா தேவிபுரம் அணைய பிடிச்சு அப்பிடியே கடற்கரைப் பக்கமாக விரிச்சா எங்கட இடியனுகளப் போட்டு அவனுக்கு நல்லா குடுக்கலாம் அண்ண” சொல்லி முடித்தான் விசேட வேவு அணி போராளி, லெப்டினன் கேணல் விந்தன். விந்தன் அண்ண சொல்லி முடித்த பாதைகள், திட்டங்கள் சொர்ணம் அண்ணாவால் திட்டமிடக்கூடியவாறு இருந்தது எனிலும் ஆபத்துக்கள் அதிகமாக இருந்தது.

ஆனாலும் வேறு பாதைகள், வேறு திட்டங்கள் இருக்கும் என்று சொர்ணம் அண்ண நம்பினார் அதனால் அதற்கான தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. உடனடியாக விந்தன் மற்றும் ஆதவன் தலமையிலான விசேட வேவுப் போராளிகள், சண்டைக்காக வேவுத்தரவுகளைத் திரட்டுகிறார்கள். அவசரமாக திரட்டப்பட்ட தரவுகளூடாக திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
அணிகள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன.

கணனிப்பிரிவின் சிறப்புப் பொறுப்பாளராக இருந்த சார்ள்ஸ் மற்றும் அவரது போராளிகள், பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு தளபதி அஸ்வினி மற்றும் போராளிகள், மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தமிழீழ வான்படையின் சிறப்பு அணிப் போராளிகள், திருகோணமலை மாவட்ட சண்டை அணி, ராதா படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, விசேட வேவுப் போராளிகள் மற்றும் புலனாய்வுத்துறைப்படையணி என பல அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. அவர்களுடன் 15 பேர் கொண்ட மருத்துவ அணியும் நிலை கொண்டிருந்தது.

அதில் போராளி மருத்துவர் ஜோன்சன் மற்றும் போராளி மருத்துவர் காந்தன் ஆகியோரின் அணிகள் நிலையெடுத்திருந்தன.

05.03.2009 அன்று அனைவரையும் ஒருங்கிணைத்து மூத்த தளபதிகள் சண்டை பற்றிய நிலவரங்களை கதைக்கிறார்கள். பிரிகேடியர் சொர்ணம் அவர்களுடன் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், பொட்டு மற்றும் கடற்படைச் சிறப்புத் தளபதி சூசை ஆகியோர் போராளிகளுடன் கதைக்கிறார்கள். அதில் பொட்டம்மான் கதைக்கும் போது,

எமது இருப்பைத் தீர்மானிக்கும் இறுதி வலிந்து தாக்குதலுக்காக நாம் தயாராகி இருக்கிறோம். இதில் நாம் தோற்றோம் என்றால் எமது விடுதலைப் போராட்டம் தோற்றுவிடும் என்பதில் ஐயம் இல்லை. இதை உங்கள் மனங்களில் நிச்சயமாக உறுதியெடுங்கள். அவ்வுறுதியோடு எல்லோரும் வடிவா சண்டை பிடிக்க வேணும். ஏனெனில் இதில் வென்றால் மட்டுமே எம்மால் அடுத்த நிலைப் போராட்டத்திற்கு எம்மை தயார்ப்படுத்த முடியும்.”

மூத்த போராளிகள் இளநிலை தளபதிகள் புதிய போராளிகள் என்று அனைவர் முகத்திலும் வெல்ல வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. அவர்களது கரங்களில் தவழ்ந்த ஆயுதங்கள் உறுதியாக நிமிர்ந்து நின்றன. எதாவது செய்ய வேணும் இல்லை என்றா எங்கட தமிழீழம் அந்நிய அட்டூழியத்திற்கு சிதைந்து போகும். விடக்கூடாது நாங்கள் செத்தாலும் இந்த சண்டையை வெல்ல வேணும். அண்ணையின் நம்பிக்கையை நிர்மூலமாக்காது வெற்றி பெற வேணும். அனைவரும் இதைத்தான் ஆயுதத்தை பிடித்திருக்கும் உறுதியில் சொல்லி கொண்டார்கள்.
அணித்தலைவர்கள் தமது அணியை உறுதி குலையாது வைத்திருந்தார்கள். எதாவது செய்ய வேண்டும் என்ற உறுதி அனைவரிடமும் இருந்ததை மறுக்க முடியாது.

முல்லைக்கடலின் சாளைப்பகுதி, இரவு, பகல் என்ற வித்தியாசம் தெரியாத அளவுக்கு வெளிச்ச குண்டுகளால் நிரம்பி இருக்கும் ஒரு நிலாக்கால நேரம் அது. எப்போதும் தீவிர கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் பகுதி. ஆனாலும் அணிகள் அங்குதான் நிலைப்படுத்தப்பட்டன. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் மிக முக்கியமானது மக்களோடு, மக்களாக போராளிகள் ஒருங்கிணைக்கப்படும் சந்தர்ப்பத்தில் தகவல் கசிவுகள் அதிகமாகும். அதனூடாக போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக சிங்களம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும். இதன் மூலமாக எழப்போகும் அழிவுகள், வெற்றி பெற்றாலும் பெரும் வலியைத் தரும். அதனால் போராளிகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

கடற்புலிகளின் பிரதான தளங்களில் ஒன்று அமைந்த சாளைப் பகுதி அது. அதனால் எந்த நேரமும் தீவிர தாக்குதல்கள் வான்படையாலும், தரைப்படையாலும் செய்யப்படும் பகுதி. கடற்படை கலங்கள் தாக்க வருவதும், கடற்புலிகளின் படகுகளைக்கண்டு திகிலடைந்து ஓடுவதும், ஓடும் படகுகளில் ஏதோ ஒன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்படுவதும் இறுதி நாட்களில் நடக்கும் சாதாரண விடயங்கள்.

இவ்வாறான ஒரு களச்சூழலில் தான் ஒருங்கிணைப்புத் தளபதி சொர்ணம் தலமையில்  ஒருங்கிணைக்கப்பட்ட 750 ற்கும் மேற்பட்ட படையணிப் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள். வானத்தில் சுற்றி கொண்டிருக்கும் “வண்டு” க்கும் ( Beech craft- ஆளில்லா வேவு விமானம்), தரை வழி புகுந்திருக்கும் இராணுவ வேவாளர்களுக்கும் கண்ணில் மண்ணைத்தூவி அத்தனை போராளிகளும் உருமறைந்து வலிந்து தாக்குதலுக்காக காத்திருக்கின்றனர்.

காத்திருப்பு வீணாகவேயில்லை. 05.03.2009 இரவு அனைத்துப் போராளிகளுக்கும் நகர்வுக்கான கட்டளைகள் கிடைத்த போது சாளைக் கடல் வழியாக மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டிருந்த படையணிகள் தமது இலக்குகளை நோக்கி நகர்கின்றன. அப்போது சண்டை தொடங்குவதற்கு முன்பாகவே அவ்விடத்தை நோக்கி எதிரியின் 81 வகை எறிகணை செலுத்திகள், எறிகணைகளை ஏவுகின்றன. எறிகணை செலுத்தும் சத்தத்தை அவதானித்த மருத்துவர் யோன்சன், அனைவரையும் தயார் நிலைக்கு கொண்டு வந்த போதும், அருகில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் அவ்விடத்திலையே மருத்துவப் போராளி கபிலன் வீரச்சாவடைகின்றார். அவரோடு இன்னும் ஒரு போராளி பலத்த காயமடைந்திருக்க அவரை உடனடியாக பின்நகர்த்திய போராளிகள் முன்னோக்கி நகரத் தொடங்கினர். அப்போது போராளி மருத்துவர் காந்தன், மருத்துவர் யோன்சனிடம்

“நீங்கள் 55 ( சொர்ணம் அவர்களின் இரகசியக் குறியீட்டு பெயர்) தோட போங்கோ நான் இவங்களை பார்த்திட்டு வந்து சேர்கிறேன்”

அங்கே தாக்குதலுக்கான அணிகளில் முதல் நிலையில் சொர்ணம் தன் பாதுகாப்பு போராளிகளுடன் சென்று கொண்டிருக்க அடுத்த நிலையில் கணனிப்பிரிவின் சிறப்புப் பொறுப்பாளர் சார்ள்ஸ் தனது போராளிகளுடன் நகர்ந்து கொண்டருக்கின்றார்கள். இப்போது அவர்களிடையே ஒரு மருத்துவ உதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்த மருத்துவர் யோன்சன் மருத்துவர் காந்தனிடம் தன் அணியினருடன் விடைபெற்று முன் நகர்கிறார்.

அப்போது விசேட அணிப் போராளிகள்
“ அண்ண இதுக்க கெவி வெப்பன்ஸ் ( Heavy  Weapons  ) போட்டிருக்கிறான் அண்ண 50 ( 50 கலிபர் துப்பாக்கி) எல்லாம் வைச்சிருக்கிறான் கவனமா நகருங்கோ “
என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

அந்த எச்சரிக்கையோடு நிரல் நிலை எடுத்து அவதானித்துக் கொண்டிருந்த போராளிகளை, அடித்துக் கொண்டு உள்நுழையுமாறு சண்டைத் தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் கட்டளை இடுகிறார். அந்த கட்டளையோடு துப்பாக்கிகள் அனைத்தும் நெருப்பை உமிழ்ந்து கொண்டு இயங்கத் தொடங்கின. சற்றுத் திகைத்துப் போன எதிரி பின் நோக்கி ஓடத் தொடங்கினான். அந்த இடத்தில் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருந்த போது, சில புதிய போராளிகள், வழங்கல் பொருட்களுக்குள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளை கைவிட்டு வெடிபொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு சண்டையைத் தொடர்ந்தனர். அதனால் உதவி வழங்கல் தடைப்படும் நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அப் பைகள் சேர்க்கப்பட்டு அணிகள் ஒழுங்கு படுத்தப்பட்டது. மறுபுறம் சண்டை உக்கிரமமாகி  முதல் நிலை வேலியில் அமைந்திருந்த 4-5 காவலரண்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. அதனூடாக  இரண்டாவது எல்லை வேலியை நோக்கி சென்றிருந்தது புலிகளின் அணிகள்.

அப்போது குறுக்கே இருந்த சிறு காட்டுத் துண்டைக் கடந்த போது, குறுக்கறுத்தோடும் சிறு கடல் பகுதி இருந்தது. அதை சாதாரணமாக கடந்து விட முடியாது. எதிரியின் குறிச்சூட்டாளர்கள் குறிபாத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி முன்னேற முயன்ற படையணி, சிறு கடலேரிக்குள் நிலத்தில் தவழ்ந்தபடி ( குரோள் ) நகர்கின்றனர். அதில் தாக்குதலுக்கு பொறுப்பாக சென்றுகொண்டிருந்த தளபதி சொர்ணம் அவர்களும், போராளிகளும் முன்நிலையில் சென்று கொண்டிருக்க, அவர் பின்னால் மருத்துவர் யோன்சனின் மருத்துவ அணி செல்ல, அதன் பின்னால் சார்ள்ஸ் தனது அணியுடன் முன் நகர்ந்தனர்.

அங்கு எந்த எதிர்ப்பையும் காட்டாத எதிரி பின்வாங்கி இருந்த நிலையில் தேவிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது புலிகள் அணி.  இந்த நிலையில் கைப்பற்றப் பட்டிருந்த பகுதிகளில் நிலைகொண்டு அடுத்த முன்னேற்ற நடவடிக்கைகளுக்கான பணியில் ஈடுபட்டார்கள் போராளிகள்.  அவசரம் அவசரமாக முன்னாள் அடிக்கப்பட்டிருந்த அணை ஒன்றினை பாதுகாப்பு அரணாக கொண்டு பதுங்ககழிகள் அமைக்கப்பட்டன. அப் பதுங்ககழிகளே பாதைகள் அடைக்கப்பட்ட நிலையில் இருந்த அப் போராளிகளுக்கு பாதுகாப்பு அரண்களாகின. அதில் இருந்து கொண்டு ஆயுதங்களை துப்பரவாக்குவது முதல் தம்மை அடுத்த சண்டைக்காக தயார்ப்படுத்துவது வரை போராளிகள் ஓயாமல் இயங்கும் அதே வேளை சண்டையணிகளின் சில பகுதிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு இலக்கில் பயணித்த அணிகள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்வதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த இடத்துக்கு வந்து சேர்ந்த சண்டையணிகளை, இடர்களுக்கு முகம் கொடுக்கும் நிலையைய கொண்டு வந்திருந்தன. ஆனாலும் போராளிகள் சலித்துப் போகவில்லை. சாகத் துணிந்த படையணிகளுக்கு இவை எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அவர்கள் மூர்க்கமாகவே சண்டையிட்டடார்கள். அந்தப் பிரதேசம் எங்கும்  தளபதி சொர்ணம் அவர்களின் குரல் ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்த நேரம் இரு அணிகளாக பிரிந்திருந்த மருத்துவர் காந்தனின் மருத்துவ அணி, பிரிகேடியர் சொர்ணம் அவர்களுடன் நிலையெடுத்திருந்த மருத்துவர் யோன்சனின் அணியை வந்து சந்திக்கிறது. அப்போது அங்கே இருந்த தளபதிகளில் ஒருவரான மகிந்தன் இரு மருத்துவ அணிக்கும், உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார். பதுங்ககழிகள் அமைக்கப்பட்டு காயப்படும் போராளிகளுக்கான சிகிச்சை இடங்கள் ஒழுங்குபடுத்துப்படுகின்றன. இதே வேளை சிங்களப்படைகளும் இவர்களின் தங்கும் இடத்தை தேடி அலைந்து கொண்டிருந்தனர். அன்றைய இரவுக் பொழுது விடிந்திருந்தது.

அனைவரும் எதோ ஒன்றுக்கான பணியில் இருக்க மருத்துவர் காந்தன் தனது தாடியை மழித்து புதிய உடை ஒன்றை அணிகிறார். அதைப் பார்த்த தளபதி , “சொர்ணம் என்ன காந்தன் கல்யாணத்துக்கு எங்காவது போறியா…? புதுசா வெளிக்கிடுறாய்?”…. வெற்றுப் புன்னகையோடு அனைவரும் துப்பாக்கிகளை பற்றிக் கொள்ள மருத்துவர் காந்தன் சாதாரணமாக புன்னகைத்து விட்டு தன் உடையை சரிபார்த்துக் கொள்கிறார்.

அப்போது வந்து சேர வேண்டிய இன்னும் ஒரு தொகுதிப் போராளிகள் அவ்விடத்துக்கு வந்து சேர, மீண்டும் ஒரு முன்நகர்வுக்கான ஒழுங்குகளை செய்கிறார் கட்டளைத் தளபதி சொர்ணம் அவர்கள். அதன்படி அருகில் இருந்த ஒரு முகாம் ஒன்றை இலக்கு வைத்து தாக்கி அழித்துக் கைப்பற்றுகிறார்கள் போராளிகள். அச்சண்டை பயங்கரமாக இருந்தாலும் போராளிகளின் பக்கத்தில் பாரிய சேதங்கள் எதுவும் வரவில்லை. அப்படைமுகாம் வீழ்ந்த பின் மீண்டும் எமது படையணிகளால் முன்னாள் அடிக்கப்பட்டிருந்த ஒரு அணையை நோக்கி படையணி நகர்கிறது.

அப்போது தளபதி சொர்ணம் அவர்களுடனான போராளிகள் முன்நிலையில் நின்று சண்டை பிடித்தபடி அணையை நோக்கி நகர்ந்து செல்ல பின்னணியில் இருந்த மருத்துவ அணி, எமீண்டும் இரண்டு அணிகளாக பிரிந்து மருத்துவர் யோன்சனின் அணி சொர்ணம் அவர்களை நோக்கியும், மருத்துவர் காந்தனின் அணி வேறு ஒரு பகுதியை நோக்கியும் நகர்கின்றது. அப்போது குறிப்பிடப்பட்டிருந்த அணை இருந்த பகுதிக்கு சென்று கொண்டிருந்த போராளிகள் மீது மூர்க்கமான தாக்குதலை செய்கிறது சிங்களப்படை. பல வீரச்சாவுகள், பல காயங்கள் என போராளிகள் வீழ்ந்து கொண்டிருக்க, அவர்களைத் தூக்கிக் கொண்டு அணையை நோக்கியே நகர்கிறது அப் போராளிகளின் அணி.

அங்கே குறிப்பிட்ட இடத்தில் புலனாய்வுத்துறைப் படையணிப் போராளி கலை தனது அணியுடன் நிற்கிறார். அவரிடம் தளபதி நிற்கும் இடத்தை கேட்டறிந்து கொண்டு நகர்ந்த மருத்துவ அணியையும் போராளிகளையும் இலக்கு வைத்து சிங்களத்தின் குறிச்சூட்டு ( Sniper ) அணி இயங்கிக் கொண்டிருந்தது. அதே தாக்குதலே பல போராளிகளின் இழப்புக்கு காரணமாகலாம் என்ற நிலையிலும், அவற்றைத் தாண்டி தளபதி சொர்ணம் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்கிறது அப் போராளிகளின் அணி.

அங்கே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அணையோடு  இருந்த ஒரு “ I “ வடிவ பதுங்ககழியில் இருந்து கொண்டு கட்டளை வழங்கிக் கொண்டிருந்த சொர்ணம் அவர்களும், அதன் அருகே இன்னொரு பதுங்ககழியில் இருந்து கொண்டு கட்டளைகளை வழங்கிக் கொண்டிருந்த கணனிப்பிரிவின் சிறப்புப் பொறுப்பாளர் சார்ள்ஸ் அவர்களையும் அப் போராளிகள் சந்திக்கின்றனர். அப் போராளிகள் அணியில் மூன்று மருத்துவப் போராளிகள் மற்றும் ஒரு தொடர்பாடல் கண்காணிப்புப் ( Monitoring ) போராளி மற்றும் சண்டையணிப் போராளிகள், காயப்பட்ட போராளிகள் என பலர் இருந்தனர்.

அவர்கள் தளபதி சொர்ணம் அவர்களின் பதுங்ககழிக்கு அருகில் இருந்த சிறு பதுங்ககழியை பாதுகாப்பரணாக்கி அதற்குள் தங்கி இருந்த சிறு இடைவெளியில் தொடர்பாடல் கண்காணிப்புப் போராளி அவசரம் அவசரமாக அனைவருக்கும் எச்சரிக்கை விடுகிறான்.

“10 நிமிடங்களில் இந்த இடத்தில் பெரும் எடுப்பிலான தாக்குதல் ஒன்றை செய்வதற்குத் திட்டமிடுகிறான். பல்முனைத் தாக்குதலாக இருக்கும். அனைவரும் கவனமாக இருங்கள் “

இதைக் கேட்ட போராளிகள் தம்மால் முடிந்தவரை தம்மை பாதுகாத்துக் கொள்ள காப்பெடுக்கிறார்கள்.  விமானப்படையின் கிபிர் மற்றும், மிக் விமானங்கள் முதல் எதிரியிடம் இருந்த அத்தனை மோட்டார் வகை எறிகணைகளும் அப்பிரதேசத்தை சுற்றி தாக்குதலைச் செய்தன. 10 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட அந்தத் தாக்குதல் இவர்களின் இடத்திற்கோ, அல்லது மற்ற போராளிகள் நின்ற பகுதிக்குள்ளோ நடத்தப்படவில்லை. அதனால் மீள் ஒருங்கிணைப்புச் செய்து மீண்டும் ஒரு தாக்குதலைச் செய்ய திட்டமிடுவதாக கண்காணிப்புப் போராளி தெரிவிக்கிறான். அவனின் கூற்றைப் போலவே சரியான இலக்கு நோக்கி கடுமையான தாக்குதலைச் செய்தது. சிங்களப்படை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதியான வலிந்து தாக்குதல் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அத் தருணத்தில் நடக்கவே கூடாத அந்த சம்பவம் நடக்கிறது.

சிங்களத்தின் பல்முனைத் தாக்குதல் ஓய்வடைந்த போது மருத்துவப் போராளிகள் தங்கி இருந்த பதுங்ககழியில் இருந்த 10 க்கு மேலான போராளிகளில் 5-6 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஓரிரண்டு பேர் தப்பி இருந்தனர். அதே நேரம் அருகில் இருந்த பதுங்ககழியில் இருந்து மகிந்தன் என்ற போராளி அவசரமாக மருத்துவரை அழைக்கிறான்.

“அண்ண 55 காயப்பட்டிட்டார் ஓடி வாங்கோ அண்ண…”

பெரும் விருட்சமாக நிமிர்ந்து நின்று இப் போராட்டத்தின் சுமைகளைத் தாங்கிய பெருந் தளபதி தனது காலில் பாரிய காயமடைந்திருந்த தருணம், மீண்டும் எம் விடுதலைப் போராட்டம் முடக்கப்படப் போவதற்கான அறிகுறியை காட்டி நின்றது. ஆனாலும் அவர் தளரவில்லை. அக் காயத்தின் வேதனையோடும் தன் போராளிகளுக்கு இறுதிக் கட்டளையிடுகிறார்.

“என்னை சுடுங்கோடா…. என்னைக் காப்பாத்த என்று இதில யாரும் இருக்க வேண்டாம் என்னை சுட்டுப் போட்டு முன்னுக்கு அடிச்சுக் கொண்டு போங்கோடா… கொஞ்சம் கூட பயப்பிடாதீங்க. தம்பி நிக்குது. தம்பிய கவனமா பாருங்கோ என்னை காப்பாத்த யாரும் மினக்கட வேண்டாம். முன்னுக்கு அடிச்சு இறங்குங்கோ… என்னை சுடுங்கோடா… “

அவர் கட்டளையிட்டுக் கொண்டிருந்த போதே அவரது உடலில் மருத்துவர் யோன்சனால் செலுத்தப்பட்டிருந்த வலிநிவாரணி அவரை நித்திரைக்கு கொண்டு சென்றது. அதன் பின் அங்கே சண்டையிடும் போராளிகளின் மனநிலை கொஞ்சம் தழும்பி இருந்தது. ஆனாலும் தம்பி என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சார்ள்ஸ் எடுக்கும் முடிவுகளை அங்கே நின்ற அனைவரும் ஏற்க தயாராகவே இருந்தனர்.  சண்டையை வழிநடாத்தும் தளபதிகள் அனைவரும் தம்பிக்கு சாதகமான முடிவுடனே இருந்தனர். சண்டையைத் தொடர்வதாகவும் நாம் அனைவரும் இறந்தாலும், இச்சண்டை இலக்கை அடையும் வரை தொடர வேண்டும் என்றும் தளபதிகள் போராளிகள் உட்பட தம்பியும் விரும்பினார். அதனால் சண்டை தொடர்ந்தது. ஆனாலும் தளபதி சொர்ணம் அவர்களை ஒரு அணியுடன் பின் நகர்த்துவதென்றும், ஏனையவர்களே சண்டையிடுவதென்றும் முடிவாகியது. அதனால் அந்த இடம் விட்டு நகர்ந்து வேறு இடத்தில் இருந்து கொண்டு சண்டையை தொடர முனைந்தார்கள் புலிகள். அதற்கிடையில் ஒருங்கிணைப்புச் செயலகத்தில் இருந்து வந்த தகவலின் படி உடனடியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்களை பின்நகர்த்துவதோடு மட்டுமன்றி அனைவரையும் பின் நகருமாறு அறிவுறுத்தப்பட்டது.

தளபதி சொர்ணம் அவர்களின் போராளி மகிந்தன் இந்த விடயத்தை “ அண்ண! அம்மான் ஆளையும் கொண்டு உடனே பின்னுக்கு வரட்டாம். என்ன செய்வது ?” என்ற வினாவோடு தெரிவிக்கிறார்.

அம்மானின் கட்டளைக்கு பணிந்து போராளிகள் இலக்கை நோக்கி செல்லாது மீண்டும் பின்நகர தொடங்குகிறார்கள்.

அப்போது மருத்துவர் காந்தனின் அணி, மருத்துவர் யோன்சனின் அணியிடம் இருந்து விடைபெற்று சார்ள்சுடன் நின்ற போராளிகளுக்கான மருத்துவ அணியாக நிலை கொள்கிறது. யோன்சனின் மருத்துவ அணியில் இருந்த போராளிகளும் கட்டளைத் தளபதி சொர்ணம் அவர்களின் பாதுகாப்புப் போராளிகளும் அவரின் கட்டளைகளுக்கு கீழ் போராடிக் கொண்டிருந்த அனைத்துப் போராளிகளும் பின்நகர்வதற்காக சென்று கொண்டருந்தார்கள். ஆனால் மூடப்பட்டிருந்த பாதைகளை திறந்து கடற்கரை வழியாக வெளியேற வேண்டி இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதற்காக கடற்கரை வழியாக பெரும் சண்டை ஒன்றை தளபதி லோரன்ஸ் தலமையிலான போராளிகள் செய்து கொண்டிருந்தார்கள்.

மாலை நேரம் இரவாகிக் கொண்டிருந்த போது இருமுறை எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தார்கள் போராளிகள்.

அப்போது திடீர் என்று கண் முழித்த பிரிகேடியர் சொர்ணம் “டேய் என்னை சுட்டுப் போட்டு முன்னுக்கு அடிச்சுக் கொண்டு போங்கோடா என்னைக் காப்பாத்துறதுக்கு மினக்கட வேண்டாம்” என கட்டளை இடத் தொடங்கினார்.

மருத்துவர்களோ அவரின் கட்டளையை ஏற்க முடியாதவர்களாக அவரின் காயத்துக்கு மீண்டும் வலிநிவாரணி ஒன்றை ஏற்றியதன் மூலம் அவர் அமைதியாகின்றார். அந்த நேரம் கடற்கரை வழியாக பாதையும் உடைக்கப்பட்டு வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி இருந்தார் தளபதி லோரன்ஸ் அதனூடாக சிறு நீரேரி வழியாக நகர வேண்டி இருந்தது. ஆனாலும் தலை தூக்க முடியாத அளவு எறிகணைத் தாக்குதல்களும், சினைப்பர் தாக்குதல்களும் இருந்தன. அதனால் நிலத்தோடு நிலமாக தளபதி சொர்ணம் அவர்களை தூக்கியபடி z வடிவத்தில் நகர்ந்து சென்று வெளியேறினர் போராளிகள்.

ஆனாலும் அந்த இடத்தில் பல போராளிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. நிலத்தோடு நிலமாக நகர்ந்தவர்கள் ஓரளவு தப்பித்துவிட எழும்பி ஓடி வெளியேற முனைந்தவர்கள் வீழ்ந்து கொண்டிருந்தார்கள். அவற்றையும் தாண்டி போராளிகள் வெளியேறி இருந்தனர். வெளிக் கொண்டுவரப்பட்டிருந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களைப் பின்னணி மருத்துவநிலைக்கு கொண்டு சென்றார்கள் மருத்துவ அணியில் இருந்த மருத்துவப் போராளிகள்.

மருத்துவர் யோன்சன் உட்பட்ட போராளிகள் மீண்டு வர வேண்டிய மருத்துவர் காந்தனின் அணிக்காக கடற்கரையில் காவல் நின்றனர். ஆனாலும் மருத்துவர் காந்தனைக் காணவே இல்லை. அப்போது அங்கே வந்திருந்த சார்ள்ஸ் மருத்துவர் காந்தன் சிறுநீரேரிக்குள் இறங்கியதை தான் கண்டதாகவும், அதன்பின் எங்கே என்று பார்த்த போது காணவில்லை என்றும் தெரிவித்தார். பின்னால் வந்த தளபதி லோரன்ஸ்சும் அதே நிலையை கூறினாலும் கடற்கரையைத் தாண்டி வெளி வந்ததற்குரிய சாட்சியங்கள் இல்லை என்றும் தெரிவித்த போது தான் மருத்துவர் காந்தன் 08.03.2009 அன்று எம் மண்ணை நேசித்தாரோ அம்மண்ணுக்காக தன்னுயிரை தியாகித்து வீரச்சாவடைந்ததை புரிந்து கொண்டார்கள் போராளிகள்.

லெப்டினன் கேணல் காந்தன் உட்பட லெப்டினன் கேணல் கபிலன், கப்டன் நிலவரசி மற்றும் லெப் இன்மதி ஆகிய மருத்துவப் போராளிகளும் வீரச்சாவடைந்திருந்தனர். அத்தோடு இச்சண்டையின் வேவுப்போராளிகளான லெப் கேணல் விந்தன் உட்பட்ட பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.

வலிய படையணிகளின் உத்வேகத் தாக்குதல்களுடன் உலகம் வியக்க நிமிர்ந்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைக்கான இறுதி போராட்ட வரலாறு தனது இறுதி வலிந்து தாக்குதலை சாளையூடாக தேவிபுரம் வரையிலான சண்டையுடன் முடித்துக் கொண்டது.

பின்னணிக்கு வந்த அணிகள் தளபதி சொர்ணம் அவர்களை சரியான மருத்துவ சிகிச்சைக்குட்படுத்திக் காப்பாற்றினாலும், அவரது காயத்தின் தன்மை அவரை மீண்டெழ முடியாதவராய் படுக்கையிலையே வைத்திருந்தது. இந்த நிலையில் எம் தேசம் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையின் உச்சம் முள்ளிவாய்க்கால் எனும் குறுகிய நிலப்பரப்பில் அரங்கேறிக் கொண்டிருந்தது. இறுதி வரை உறுதியோடு போராடிய பெரு நெருப்பு ஒன்று தனது கட்டளையகத்தில் 15.05.2009 அன்று அணைவதற்குத் தயாராகி விட்டது. இறுதியாக தன் மனைவி பிள்ளைகளோடு சிலவற்றை பகிர்ந்து கொண்ட அந்த நெருப்பு “ அண்ண சொன்ன சொல்ல காப்பாற்றாமல் அவரை விட்டிட்டு போகப் போறன் “ என்று கூறுகிறது. தான் பெற்றவர்கள் கட்டிய மனையாள் என அவர்களிடம் தலைவனைப்பற்றி மட்டுமே கதைத்துக் கொண்டிருந்துவிட்டு அணைந்து போகிறது.

உடனடியாக மருத்துவப் போராளி அலன் அவர்களின் பொறுப்பில் இருந்து இயங்கிய முல்லை / நெய்தல் ஆகிய இராணுவ மருத்துவமனைகளை ஒன்றாக்கி இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்தின் இறுதியான இராணுவ மருத்துவமனைக்கு பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் கொண்டு செல்லப்படுகிறார். அங்கே மருத்துவர் அலன் பரிசோதித்து தளபதி சொர்ணம் அவர்கள் பிரிகேடியர் சொர்ணமாக மண்ணை முத்தமிட்ட செய்தியை உறுதிப்படுத்துகிறார்.

26 வருடங்களுக்கு மேலாக ஈழத்தின் சுதந்திரத் தீயை சுமந்து வாழ்ந்த பெரு நெருப்பு முள்ளிவாய்க்கால் மண்ணில் அணைந்து போய்விட்ட பெரும் கொடுமையையும் முள்ளிவாய்க்கால் மண் தன் மீது சுமந்து கொண்டது.

புலர்வுக்காக இ.இ. கவிமகன்

தகவல் மூலம்: தமிழீழ மருத்துவர் யோன்சன்