உன் வாசம் நிறைந்து
என் தேகம் சுமந்த
இனிய நினைவு ஒன்று
இன்றும் என்னோடு
பயணிக்கிறது…

காதலியாய் காத்திருந்த
வாழ்வைத் தூக்கி வீசிய
ஈழ வேலியின் காவல்ப்பூவே
உன்னை விட நெஞ்சமர்ந்து
என்னைத் தினமும்
தொட்டுணர வைப்பது
வேறு யாருமில்லை…

தேசம் நினைத்து – என்
நாமம் மறந்து சென்றவளே
வேசம் கலைத்து
வரியுடைக்குள் வாகைக் காற்றாய்
நிமிர்ந்தெழுந்த – என்
தேசக்காற்றே

காயங்கள் தந்து
கனி நினைவை தின்று
காந்தள் மலருக்குள்
நீ வாசம் செய்ய
சென்றுவிட்டாய்

காலங்கள் கடந்தும்
காயாத நினைவுகள்
உன் பெயருக்குள்
புதைந்து போக
விழிகளில் சொரியும்
அருவி ஓட்டத்தில்
நீச்சலிட முடியாது திணறுகிறேன்

உன் நினைவு
தினமும் வருகிறது
தூங்கவும் முடியவில்லை
தாங்கவும் முடியவில்லை
நீ கனவு என்று தெரிந்தும்
எதற்காக நினைவாக
நெஞ்சை தொடுகிறாய்

கனவு தானே என
கண்களை திறந்து உனை
தொலைக்க பார்க்கிறேன்
நீயோ இமையாக இருந்து
எனை விட்டுச் செல்ல மறுக்கிறாய்

உனக்கும் நினைவிருக்கும்
நீயும் நானும் அன்று தேடிய
வண்ணக் கோலங்கள்
கீறப்பட்ட கோடுகளாய்
இணைக்கப்படாமலே
நீண்டு கொண்டே போகிறது

சாவு என்ற ஒற்றைச் சொல்லில்
எங்களின் சிதைந்த காதலின் மீது
தொடருந்துப் பயணம்
செய்து கொண்டிருக்கிறது
வலிய சிங்களம்

வானமேறி வந்த
மேகத்துப் பறவைகள்
தாண்டவக் கூத்தாடிய
வேண்டப்படாத அந்தப்
பொழுதை இன்றும்
மெல்லவும் முடியவில்லை
சொல்லவும் வார்த்தையில்லை

நாட்கள் கணக்கல்ல
நாளிகை ஐந்தை
தாண்டிப் பயணிக்காத
உனக்கும் எனக்குமான
இறுதியான சந்திப்பின் முடிவில்

உன் இருப்பிடம் சிதைந்து
கூடி இருந்த தோழிகளும்
உன்னோடு இணைய
சாவை சிதறலாய் பெற்றாய்

தீண்டியழக் கூட உன்
வீரவுடல் நிலம் விழவில்லை
கூட்டியள்ள சிதறிப்போய்
கண்ணில் ஈரம் ஏன்
தந்து சென்றாய்

நீ தேடித் தேடி
கனவாய் கண்ட நிலவை
என் கண்கள் பறித்து
ஆளுகை கொண்டன
என்று தானே என்னிடம்
கோவம் கொண்டாய்.

நான் பறித்த நீ
விரும்பிய நிலவொளி உன்னிடம்
தானே நான் கண்டேன்
உன் கரங்கள் அதைத் தானே
தீண்டக் காத்திருந்தது.
நிலவொளியின் சுவாசம்
உன் முகத்தில் மிளிர்ந்த
அந்த நிமிடங்களை
என் கண்கள் கூச்சத்துடன்
பார்த்துக் கொண்டன…

நீ சென்று விட்டாய்
குன்றிடாத வீரமும்
கட்டியிருந்த குப்பியின்
நஞ்சுச் சுவையும்
நான் அறிய முன்பே
என்னை விட்டு
நீ சென்றாய்…

நீயும் நானும் ஒன்றாக பயணித்த
பாதைகள் எங்கும்
காதலுக்கு ஒற்றைச் சொல்லால்
நாட்டப்பட்டுக் கிடக்கும்
நடுகற்களில்
மனம் நிறைந்து கிடந்த
பொழுதுகளை மறந்து
தொலைத்து சென்றாய்

நிலவொளியை கை பிடித்து
கவலைகள் துறந்து சிரிக்க
நான் காத்திருக்க
நீயோ…
நிலவொளியில் வசந்தமாய்
உறங்கி கொண்டிருக்கிறாய்
சிறு குழந்தையாக நான்
மட்டும் விம்மிக் கொண்டருக்கிறேன்…

இ.இ. கவிமகன்