நீண்ட நாட்களாக எனது ஊரைச் சேர்ந்த திரு தவராசா ஆசிரியரை நேரே சந்தித்ததில்லை. திடீர் என்று அவரின் வருகையும் சந்திப்பும் மனநிறைவைத் தந்தது. நீண்ட நேரங்கள் பல விடயங்களை நாம் பகிர்ந்து கொண்டோம். ஊரில் இரசாயனவியல் ஆசிரியராக கடமையாற்றிய அவர் இப்போது பிரான்ஸ் நாட்டின் தமிழ்கல்வி வளர்ச்சிக் கழகத்தின் முக்கிய பணியாற்றும் கடமையாளனாக இருப்பதாக கூறி மகிழ்ந்தார். அவர் பல விடயங்களை என்னோடு பகிர்ந்தாலும் என் மனதில் அவர் கூறிய சில விடயங்கள் ஆழ ஊடுருவின.

அதில் ஆதிசிவன் என்ற கடவுளைப் பற்றிய குறிப்பு எனக்கு பல விடயங்களைத் தொட்டுக்காட்டிச் சென்றது.

“ஆதிசிவன் எனும் கடவுள் மானுடராக இப்பூமியில் வாழ்ந்தவரே! அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் போரிட்ட ஒரு தனிமனிதன். தலைமறைவாய் வாழ்ந்த ஆதிசிவன் தன்னைப் பாதுகாக்கும் நோக்கில் சுடுகாட்டில் வாழ்ந்து உள்ளார்.”சுடுகாட்டில் உள்ள காட்டு மரங்களில் கிடைக்கும் பழங்களையும் அங்கே படைக்கப்படும் உணவையும் உண்டு ஒரு கரடுமுரடான வாழ்க்கையை அவர் வாழ்ந்துள்ளார்.

தனை உருமறைக்கும் நோக்கில் சுடலைச் சாம்பலை உடல் மீது பூசி, புலித்தோலினை உடலில் போர்த்தபடி சுடலைகளில் வாழ்ந்த வண்ணம் மானுட விடுதலைக்காய் போராடினார் என்றார். மதிப்புக்கும் அன்புக்குமுரிய திரு தவராசா ஆசிரியர் “ஆதிசிவன்” தொடர்பில் சொன்ன கதைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அப்போது தான் என் நெஞ்சில் எமது தேசியத் தலைவரின் பல செயற்பாடுகள் ஆசிரியர் கூறிய கதைகளோடு ஒத்திசைவது புரிந்தது. எம் தலைவரும் இப்படித் தானே வாழ்ந்தார் என்ற உண்மை நேர்கோடிட்டது.

1992 ஆம் வருடம் தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றில் ஒரு மைல் கல் நாட்டப்பட்டது. அது தமிழீழ மருத்துவக்கல்லூரியின் உருவாக்கம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை துச்சமென்று எண்ணி போராடும் போராளிகளுக்கு ஏற்படும் விழுப்புண்களுக்கான சரியான சிகிச்சைகளை சரியான நேரத்தில் கொடுக்க முடியாது, வீரச்சாவுகள் நடக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தின் வெளிப்பாடே எம் கல்லூரியின் உருவாக்கம். இங்கு மருத்துவமானி மற்றும் சத்திரசிகிச்சைமானி பட்டப்படிப்பு (Bachelor of Medicine & Bachelor of Surgery (MBBS)) கற்பிக்கப்பட்டு தமிழீழ மருத்துவர்கள் வளர்க்கப்பட்டார்கள்.

ஏற்கனவே முதலாவது அணியின் கற்கைகள் ஆரம்பித்திருந்தது. அதே நேரம் இரண்டாவது அணியும் 1993 ஆம் வருடம் உள்வாங்கப்பட்டது. இரண்டாவது அணியில் இணைக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுள் நானும் ஒருவன். இரண்டு அணிகளின் கற்கைகளும் தொடர்ந்து கொண்டிருந்த போது இரண்டு அணிகளையும் ஒன்றாக்கி ஓரணியாகவே தமிழீழ மருத்துவக் கற்கைநெறி தொடர்ந்தது. அங்கே எமக்கான கற்கைகள் நடந்து கொண்டிருந்த தருணத்தில், 1994 பங்குனித்திங்களின் ஒரு நாள் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வருகை தந்தார். தனக்கே உரித்தான பாணியில் ஒவ்வொரு விடயங்களையும் உன்னிப்பாக கவனித்தார். எல்லா இடங்களையும் பார்வையிட்டார்.

முதலில் மருத்துவக் கல்லூரிக்கான நூலகத்தை (Medical Library)பார்வையிட்டார். அங்கே அனேகமாக மருத்துவம் சார்ந்த நூல்களே இருந்தன. அதைப் பார்த்து இவை மட்டுமல்லாது, வேறு துறைசார் நூல்களும் இடம்பெறவேண்டும் எனக் கூறினார்.அதைத் தொடர்ந்து எங்கள் மருத்துவ ஆய்வுகூடத்தை (Medical Laboratory)பார்வையிட்டார்.இவை மட்டுமல்லாது, எங்களது உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடத்தையும் (Dissection Hall) பார்க்கத் தவறவில்லை. உடலமைப்பியல் (Anatomy) பாடத்தினைப் படிப்பதற்காய் யாழ் மருத்துவபீடத்தால் எமக்கு வழங்கப்பட்டிருந்த உடலங்களையும் பார்வையிட்டு மரியாதை செய்தார்.

உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடம் எமது கல்லூரி வளாகத்தின் மையத்தில் கட்டப்பட்டிருக்கவில்லை. கல்லூரி வளாகத்தின் எல்லையிலேயே அமைக்கப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரி எல்லையில் வாழைத்தோட்டம் காணப்பட்டது. அது பரந்து விரிந்த பெரிய தேட்டம். அப்படியான நீர்வேலி மண்ணின் செழிப்பான வாழைத்தோட்டத்துக்கு அடுத்தே பொது மக்களின் வீடுகள் காணப்பட்டது. அயலில் இருந்த பொது மக்களின் வீடுகளை அவதானித்த தலைவர்,

“உங்களால் பாதுகாக்கப்படும் திருவுடலங்களால் பொது மக்களின் நலன் ஒரு நாளும் பாதிப்படையக் கூடாது. இறந்தவர்கள் தொடர்பான அச்சம் மனிதகுலத்தைவிட்டு இன்னமும் அகலவில்லையாதலால் அவர்கள்அச்சமடையக்கூடும்” என்று அறிவுறுத்தினார். அது மட்டுமல்லாது, “போமலின்(Formalin) மருந்தின் மணங்கள் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.” அதனால் உடற்கூற்றுப் பகுப்பாய்வுக் கூடத்தின் அமைவிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதே சிறந்தவழி எனச் சிறிது கடுமையாக கூறினார்.

நீங்கள் போராளிகளுக்கு மட்டுமல்லாது எங்களின் மக்களுக்கும் மருத்துவம் செய்யும் மருத்துவர்களாக வளர்க்கட்படுகிறீர்கள் அதற்காகவே குழந்தை மருத்துவம், 
பெண்நோயியலும் மகப்பேறியலும் (Gynecology and Obstetrics ) போன்றவையும் உங்களின் பாடத்திட்டத்துக்குள் இருக்கின்றது அதனால் மக்களின் மருத்துவர்களாகவும் நீங்கள் பணியாற்றக்கூடியவர்களாக உங்களைத் தயார்ப்படுத்தவேண்டும்.

பொறுப்பானவர்கள் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்த வண்ணம் இருந்தனர். மற்றும்படி அங்கே ஒரு நிசப்தம் நிலவியது. எங்களில் ஒரு சிலரைத்தவிர மீதமான அனைவரும் அன்றைய நாளில்தான் தலைவரை முதன்முதலில் தலைவரைச் சந்தித்ததால் கதைக்க எதுவுமே தொண்டையைவிட்டு வார்த்தைகள் வெளியே வரவில்லை. அந்த நிலையை அவதானித்த தலைவர் எங்களை சாதாரண நிலைக்குக் கொண்டு வருவதற்காக தானே சில கேள்விகளைக் கேட்டுவிட்டு புன்னகையோடு பதிலும் சொன்னார்.“இறந்தவர்கள் தொடர்பான அச்சம் பலரின் பலவீனம்” என சொன்னார். எதிரியும் புலனாய்வாளும் காட்டிக் கொடுப்பாளர்களும் கூட அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல” என்றார்.

தனது தலைமறைவு காலத்தில் கழுகுக் கண்களுடன் பொதுமக்கள் நடுவே நின்று தன்னைத் தேடிய இரகசிய பொலிசாரின் கண்களிலிருந்து தப்புவதற்காக சுடுகாடுகளையும் இடுகாடுகளையும் தெரிவு செய்த கதையைச் சுவாரசியமாகச் சொன்னார். சுடலைகளை இரவுத் தங்ககமாக மாற்றி வாழ்ந்த கதையைச் சிரித்தவாறே சொன்னார். யாழ்ப்பாண மண்ணில் தனக்கு தெரியாத சுடுகாடுகள் பெரும்பாலும் இருக்கமுடியாது என்றும் அவ்வளவு சுடுகாடுகளில் தான் வாழ்ந்ததாகவும் புன்னகையோடு கூறினார்.

நாமும் இயல்பு நிலைக்கு வந்திருந்தோம். அவரின் புன்னகையுடனான அறிவுறுத்தல்களும், நகைச்சுவையான பேச்சும் அவரோடு சாதாரணமாக பேச வைத்தது. அன்று அவர் எம்மோடு பகிர்ந்து கொண்ட பல விடயங்கள் இன்றும் என் நினைவுப் பெட்டகத்தில் இருந்து மறையாத எமது ஊர் ஆசான் அவற்றை மெதுவாக தொட்டுவிட்டுச் சென்றார். சிவன் மாநுட வாழ்வுக்காக தன் வாழ்வை எவ்வாறு வாழ்ந்தாரோ அதைப் போலவே தமிழீழ வாழ்வுக்காக எம் தலைமகன் தன் வாழ்க்கையை வாழ்ந்தார்.

ஆம்,
இருவர் கழுத்திலும் விஷம்!
இருவர் உடலிலும் புலித்தோல்!
இருவர் வாழ்விலும் சுடுகாடு!
இருவர் எண்ணங்களிலும் மானுட வாழ்வு!

எழுதியது : தமிழீழ மருத்துவர் Dr. தணிகை