அப்பா உங்களுக்கு நினைவிருக்கா நீங்களும் நாங்களும் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை. எனக்கு கொஞ்சம் நினைவிருக்கு அப்பா. நாங்கள் அப்போது சிறியவர்கள் முன்பள்ளி செல்லும் வயது எனக்கு. தம்பி ஐங்கரன் இன்னும் சிறியவன். அவன் உங்களின் முகத்தை கூட நினைவு வைத்திருக்க முடியாத ஒரு வயது நிரம்பியவன். இப்போது உங்களின் உருவப் படத்தை பார்த்து உங்களை அறிந்து கொண்டவன். உங்களின் நிய உருவத்தை உணர சந்தர்ப்பமற்ற குழந்தை அவன்.

அப்போதெல்லாம் உங்களின் உந்துருளியில் (Motor Bike ) லில் முன்னுக்கு இருந்து பயணிப்பது என்பது எனக்கு பிடிச்ச ஒன்று. நீங்கள் எதோ எல்லாம் எனக்கு சொல்லிக் கொண்டு வருவீர்கள். எனக்கு எதுவும் நினைவில்லை அப்பா. ஆனால் வீட்டுக்கு வந்து செல்லும் நாட்களில் எல்லாம் என்ன வேலை இருந்தாலும் என்னை முன்பள்ளிக்கு ஏற்றிச் சென்று விட நீங்கள் தவறியதில்லை. அப்பிடித் தவறினால் வீட்டுக்கு வர முடியாவிட்டாலும் முன்பள்ளிக்கு வந்து என்னை பார்த்து விட்டுத் தான் செல்வீர்கள்.

அந்த நாட்களில் அம்மா என்னை வீட்டுக்கு அழைத்து செல்ல வரும் போது எனது ஆசிரியை அம்மாவிடம்

“ விநாயகம் அண்ண வந்தார் அலையோட கதைச்சுப் போட்டுத் தான் போனவர்”

என்று புன்னகையோடு கூறி முடிப்பார். அவ்வாறு அவர்களுக்கும் உங்களை பிடிக்கும். அவர்களும் உங்கள் மீது அதீத நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருந்தார்கள். எனக்கு நீங்கள் கூறியவை இப்போதெல்லாம் அதிகமாக தெரியாது. சிறுவயதோ என்னவோ அவற்றை நான் மறந்துவிட்டேன். ஆனால் உங்களின் முகமும் உங்களின் அன்பும் நீங்கள் உங்களின் தோள்களில் தூக்கித் திரிந்த காலங்களும் இன்றும் எனக்குள் மறையாது இருக்கிறது அப்பா. அம்மாவிடம் உங்களைப் பற்றி நாங்கள் இருவரும் அடிக்கடி கேட்போம். நிறைய சொல்லுவா. அவ்வாறான நினைவுகளில் மறக்க முடியாமல் இரு விடயங்கள் எமக்குள் இருக்கின்றது.

எமது தலைவர் மாமா உங்களை வெளிநாட்டுக்கு போய் மக்களோடும் வெளிநாட்டு இராசதந்திரிகளோடும் எமது நிலைப்பாடுகளை பற்றி பேசி வர சொன்ன போது நீங்கள் வெளிநாட்டுக்கு சென்றதாக அம்மா சொன்னவா. அப்ப தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை இருந்த காலம் என்றும், அப்போது தான் நீங்கள் சர்வதேச நாடுகளுக்கான பயணத்தை மேற் கொண்டதாகவும், அப்போது அங்கே வெளிநாட்டவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவதில் நீங்கள் மொழிப் பிரச்சனையால் பல சிரமங்களை எதிர் நோக்கியதாகவும் அம்மா கூறினார்.

அதற்காக நியமிக்கப்பட்டிருந்த மொழி பெயர்ப்பாளர்களூடாக விடயங்களை பரிமாறிய போது உங்களுக்கு பேசப்பட்ட விடயங்களில் திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக கட்டாயம் ஆங்கில அறிவை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையை அடிக்கடி எமக்கு வலியுறுத்தியதாகவும் கூறினார். அப்பா நாங்கள் ஆங்கில வழி கல்வியைப் பெற வேண்டும் என்ற உங்களின் நினைவாடல் அல்லது எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறுகிறதப்பா. நாங்கள் ஆங்கில அறிவை முழுமையாக பெறுகின்றோம். நீங்கள் எதற்காக மொழியாற்றலை வளர்க்க வேண்டும் என எண்ணினீர்களோ அதை நாங்கள் இப்போது கற்றுக் கொண்டிருக்கின்றோம்.

அப்பா, அம்மா அடிக்கடி உங்களின் இறுதிக் கடிதத்தை தான் தவற விட்டுவிட்டேன் என்று கண் கலங்குவா .

“அதில் என்ன அம்மா இருந்தது? “

என்று கேட்டால் நாங்கள் அப்போது வள்ளிபுனத்தில் இருந்த எமது வீட்டில் இருந்தோம். அப்போது உடையார்கட்டுப் பகுதிக்கு சிங்கள இராணுவம் வந்து விட்டது. ஆனால் இயக்க மாமாக்கள் அங்க பயங்கரமா சண்டை பிடிச்சவை. ஆனாலும் ஆமி வந்து கொண்டு தான் இருந்தாங்கள். அப்பொழுது அப்பா சுண்டிக்குளம் என்ற இடத்தில அவரது முகாமில நின்றவர். கன நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. அவருடன் பணிசெய்த ஒரு மாமா தான் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் தான் அக் கடிதத்தைத் தந்தவர்.

அதில்

நான் முக்கிய பணியில் இருப்பதால், வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிள்ளைகள் இருவரையும் கவனமாக பார்த்துக்கொள். திரும்பும் இடமெங்கும் செல்லாலும் கிபிராலும் அடிச்சு எங்கட மக்களை சாகடிக்கிறான். பிள்ளைகளை கண்டபடி வெளியில திரிய விடவேண்டாம். எப்பொழுதும் விழிப்பாக இருக்கவும். இனி என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை. எமக்கு என்ன நடந்தாலும் பிரச்சனை இல்லை. எம் பிள்ளைகளை காப்பாற்றிட வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அடுத்த தலைமுறைக்காக தானே இப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம்.

எம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்பவும் மக்களோடு மக்களாக செல். எனக்கு என்ன நடந்தாலும் கவலைப்படாதே பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள். நீங்கள் இனி வள்ளிபுனத்தில இருக்க வேண்டாம். இனி உங்க இருக்கிறது ஆபத்து. எப்ப வள்ளிபுனத்தையும் பிடிப்பான் என்று தெரியவில்லை. அதனால உடனே இரணைப்பாலைக்குப் போங்கோ. அங்க போய் என்னோட முகாமுக்கு பக்கத்தில இருக்கிற வீட்ல இருங்கோ. அங்க பங்கரும் இருக்கு அதனால பாதுகாப்பாக இருக்கும். இப்போது நான் செய்கின்ற பணியை முடித்துவிட்டு உங்களை வந்து சந்திக்கிறேன்.

என எழுதி இருந்ததாக அம்மா சொல்லுவா.

அப்பா இதை எல்லாம் அம்மா சொல்லி கண் கலங்கும் போது எமக்கு இத்தனை நாளும் புரிவதில்லை. ஆனால் இப்போது புரிகிறது. உங்களுக்கு என்ன நடந்தது? நீங்கள் ஏன் எங்களோடு இல்லாமல் போனீர்கள்? என்பது இப்போது விளங்குகிறது. அப்பா நீங்கள் எம்மோடு இருந்த போது நாங்கள் மிகவும் செல்லப் பிள்ளைகளாய் இருந்தோம். எங்கள் மீது நிறைய அன்பு காட்டி நாங்கள் கேட்பதை வேண்டி தருவீங்கள். நாம் முன்பள்ளி முடித்து முதலாம் வகுப்பு போவதை பார்ப்பதற்க்கு மிகவும் ஆவலுடன் இருந்தீர்கள். ஆனால் அதை பார்க்காமல் 2009 ஆம் ஆண்டு மாசி 4 ஆம் நாள் சுண்டிக்குளம் பேப்பாறைப் பிட்டிப் பகுதியில் எங்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டீர்கள்.

இப்போ நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறேன். தம்பி ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றான். நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முடியாது நாங்கள் நிறைய சிரமத்தின் மத்தியில் தான் படிக்கின்றோம். எங்கள் அம்மா எங்கள் இருவரையும் கஸ்டப்பட்டுத்தான் படிப்பிக்கிறார். நீங்கள் இருந்திருந்தால் கஷ்டம் என்றால் என்னென்று தெரியாமல் வாழ்ந்திருப்போம் அவ்வளவு அன்பை எமக்கு காட்டி இருப்பீர்கள்.

உங்களுக்கு ஒரு விழிப் பார்வை இல்லை என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் உங்களின் இரு விழிகள் அல்லவா அப்பா. விழிகளை காக்கும் இமைகளாக நீங்கள் எமக்கு இருந்திருப்பீர்கள். ஆனால் இன்று அம்மா என்ற ஒற்றை சிறகுக்குள் நாம் பாதுகாக்கப்படும் கொடிய நிலையை எமது வரலாறு எமக்குத் தந்துவிட்டது அப்பா. அவ் வரலாற்றில் நீங்களும் எம்மை விட்டு சென்று விட்டீர்கள்.

லெப். கேணல் விநாயகத்தின் மகன் அலைக்குமரன் எழுதியதை தொகுத்தது கவிமகன்