ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பிரான்ஸின் தேசியவாதக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

மரின் லூ பென் அம்மையாரின் தீவிர வலதுசாரிக் கட்சியான RN ( Rassemblement national), அதிபர் மக்ரோனின் ஆளும் கட்சியை தோற்கடித்து முன்னணிக்கு வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்றுமுடிந்த வாக்களிப்பில், மரின் லூ பென்னின் RN கட்சி 23.73 சதவீத வாக்குகளையும் அதிபர் மக்ரோனின் 
LAREM கட்சிக் கூட்டணி 22.47வீத வாக்குகளையும் பெற்றிருப்பதை பூர்வாங்க முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

பிரதான கட்சிகளான சோஷலிசக்கட்சி மற்றும் ரிப்பப்ளிக்கன் ஆகியவற்றினைத் தோற்கடித்துக் கொண்டு மூன்றாவது ஸ்தானத்தை தனதாக்கியதன் மூலம் இந்தத் தேர்தலில் குறிப்பிடக்கூடிய சாதனை படைத்துள்ளது ஜரோப்பிய சூழலியல் பசுமைக்கட்சி.((Europe-Écologie Les Verts). 12.6 வீத வாக்குகளை இக் கட்சி பெற்றிருக்கிறது.

முன்னாள் அதிபர் சாக்கோசியின் ரிப்பப்ளிக்கன் கட்சி (Les Républicains)8.10 வீதவாக்குகளையும், முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலன்டின் சோஷலிசக் கட்சி (PS) 6.57 வீத வாக்குகளையும் பெற்று பின்தங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 751 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக பிரான்ஸ் உட்பட ஒன்றியத்தின் 28 நாடுகளில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. ஏனைய நாடுகளின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.