யாரப்பா இந்த நேரத்தில கோல் பண்ணுறது…?
நாடு இராத்திரி நடுநிசிப் பேய்கள் போல அலறிய கைபேசியின் ஒலியைக் கேட்டு கண் விழித்துப் பார்த்தகணவன் கேட்டதற்கான பதிலைச் சொல்ல முன் கைபேசியை பார்க்கின்றாள் கமலா.
அவளது ஒரு கை வாயினை பொத்திக்கொள்ள, நித்திரைக் கொட்டாவி பெரிதாக வெளிவந்தது. மறுகையால்கண்ணைக் கசக்கிக் கொள்கிறாள். அவள் பகல் முழுவதும் செய்த வேலைகளின் அலுப்பு அவளை அந்ததொலைபேசி அழைப்புக்கு பதில் கொடுக்க விடவில்லை என்றாலும் அது தொலைபேசியில் “அக்கா” என்றபெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்திருந்ததால் பதில் தருகிறாள்.

“ம்ம்ம் சொல்லுங்க அக்கா”

மீண்டும் கொட்டாவி வருகிறது மீண்டும் வாயைப் பொத்திக்கொண்டு, சத்தமில்லாமல் கொட்டாவியைவிடுகிறாள்
“……………..”
“இல்ல இல்ல அக்கா நீங்கள் சொல்லுங்கோ நான் எழும்புற நேரம் தான் நீங்கள் கதையுங்கோ… “
“…………………………………..”
“என்னது நாட்டுக்கு வாறீங்களா? உண்மையாகவா? எப்ப எப்ப அக்கா? பிள்ளைகளும் வருவினம் தானே அக்கா?”

அவள் சந்தோசத்தில் சத்தமாக கதைக்கத் தொடங்கி விடுகிறாள். ஏற்கனவே கைபேசி அலறிய சத்தத்தில் கண்விழித்துவிட்ட அவளது கணவன் கையில் தட்டி மெதுவாக பேசுமாறு அறிவுறுத்துகிறார்.

“சும்மா இருங்கப்பா” என்று அவரை அதட்டி விட்டு தொலைபேசியில் மூழ்கி விடுகிறாள் கமலா.

“ம்ம்ம்ம் சரியக்கா, சரியக்கா நீ ஒன்றும் யோசிக்காத அக்கா நான் அவரை கொண்டு எல்லாம் செய்யுறன் நீயோசிக்காமல் வா அக்கா. அது சரி இங்க எத்தின நாள் நிற்பாய் அக்கா? “

அவள் தனது சகோதரியுடனான உரையாடலை நிறைவு செய்து தொலைபேசித் தொடர்பை அணைக்கிறாள். அவளது நித்திரை கலக்கம், வேலை அலுப்பு எல்லாம் எங்கோ போய் சேர்ந்துவிட்டது. சகோதரி ஜெர்மனியில்இருந்து ஊருக்கு வரப்போகிறாள் என்ற செய்தி அவளுக்கு இனம்புரியாத மகிழ்வைத் தந்தது.

“அப்பா… வாற கிழமை அக்கா ஊருக்கு வாறாவாம். எங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்காம். “
அவள் குதூகலிக்க அதே நேரம் அவளின் கணவனுக்கு அவர்களின் வருகை எரிச்சலைத் தந்தது.

“ஏய் சும்மா படப்பா. அதுகளெல்லாம் ஒரு மனுசர் என்று அவையோட கதைக்கிறாய். கொக்காவுக்கும்கொத்தானுக்கும் காசு கூடிட்டுத்தாக்கும் இங்க வந்து கலர்காட்டிட்டு போறதுக்கு வருகினம் போல, நடந்துக்களை மறந்திட்டியா கமலா? அதுகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை மனிதத் தன்மையே இல்லாதமனிதர்கள். அவர்கள் வாறதுக்கு இப்பிடிக் குதிக்காத. உந்த போணைத் தூக்கி எறிஞ்சு போட்டு பேசாமல்படப்பா விடிய தோட்டத்தில நிறைய வேலை கிடக்குது”.
கணவன் எரிச்சலுடன் மறு பக்கம் திரும்பிப் படுத்துவிட அவளது வதனம் சோகத்தில் சுருங்கிக் கொண்டது. உண்மையில் அந்தச் சம்பவமும் அன்றைய நாளும் என்றும் மறக்க முடியாத ரணத்தைக் கொண்டது. ஆனாலும்அவர்கள் கூடப் பிறந்தவர்கள் என்ற பந்தத்தினால் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறவாகிகிடந்தது. அவர்கள் செய்த செயல் மன்னிக்க முடியாது என்றாலும், சகோதர பாசம் அவளை கொஞ்சம் சலனப்பட வைத்தது என்றே சொல்ல முடியும். அதனால் அந்த சம்பவத்தின் சோகத்தையும் தாண்டி, அக்கா மீதுபாசத்தை வைத்திருந்தாள்.

கணவனிடம்,
“சொறியப்பா, நீங்கள் படுங்கோ” என்று மன்னிப்புக் கேட்டபடி மறுபக்கம் திரும்பிப் படுத்த அவளின் கண்கள்கண்ணீரோடு கரையத் தொடங்கின.

இறுதிப் போரில் புலிகளை அழித்துவிட்டோம் என்று சிங்கள அரசு குதூகலித்துக் கொண்டு இனவழிப்பின்உச்சத்தை செய்து முடித்திருந்த காலம். புனர்வாழ்வு என்றும் நலன்புரி நிலையங்கள் என்றும் போராளிகளையும், மக்களையும் கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்திருந்த காலம். அங்கே எந்த தொடர்புகளும் இல்லை. யாருடனும் பேச முடியாது. தரப்பாள் கொட்டில்களுக்குள் பத்துப்பேர் கொண்ட குழுக்களாக எமது மக்கள்அடிமை வாழ்க்கை வாழத் தொடங்கி இருந்து, சில காலங்கள் கழிந்த கொடூரமான காலம்.

அக்காலத்தில் தொலைபேசியூடாக எந்த தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாது. இலத்திரனியல் பொருட்களின் பயன்பாடு முற்றுமுழுதாக தடை செய்யப்பட்ட இடமாகவே அந்த நலன்புரி நிலையங்கள் இருந்தன. அவ்வாறுஇருந்தாலும் எங்கோ ஒருவர் இரகசியமாக கைத்தொலைபேசியை பயன்படுத்தி வந்தனர். அவர்களின்தொலைபேசிகளில் பேசுவதாயின் ஒரு நிமிடத்துக்கு பல நூறு ரூபாக்களை செலவு செய்ய வேண்டி இருந்தது. அவ்வாறே கமலாவும் ஒரு நாள் தொலைபேசி அழைப்பு ஒன்றினை தனது சகோதரிக்கு எடுத்திருந்தாள்.

அக்கா ரிங் போகுது இந்தாங்கோ….

தொலைபேசிக்கு சொந்தக்காரன் அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்தான் .

“அக்கா நான் கமலா பேசுறன் எப்பிடி இருக்கிறீங்கள்.”

மறுமுனை மௌனத்துக்குள் இருந்தது…

“அக்கா நான் கமலா… “

மூன்று முறை அழைப்புக்கு பின் குரலை சரிப்படுத்த செருமிய படி ஒரு ஆண் குரல்.

“எதுக்கு எடுத்தாய் இப்ப உனக்கு என்ன வேணும்?
யாரு அத்தானா? எப்பிடி இருக்கிறீங்க நான் கமலா பேசுறன்.”
“தெரியுது என்ன வேணும் உனக்கு? என்னிடம் இங்க ஒரு ரூபா கூட இல்ல போன மாசம் தான் பிள்ளைக்குசாமத்தியவீடு செய்தனான். எல்லாம் அதுக்குள்ளே போட்டுது உங்களுக்கு நெடுக அனுப்புறதுக்கு இங்கஎன்னிட்ட ஒரு சதம் கூட இல்ல வை போணை. என்னோட பிள்ளைக்கு நான் சடங்கு செய்யும் போது ஒருவாழ்த்து சொல்லுறதுக்கு வக்கில்ல வாங்குறதுக்கு என்றா உடனே இங்க அடியுங்க…”
அடித்து வைக்கப்பட்ட தொலைபேசியில் அவள் பேச வந்த அனைத்தும் நொறுங்கி போய் கிடந்தது.
தொலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு கண்ணை துடைத்தபடி தனது கொட்டிலை நோக்கி நடக்கிறாள்.
அவளது கால்கள் நகர மறுக்கின்றன. கரங்கள் இரண்டும் மாறி மாறி கண்ணைத் துடைத்துக் கொள்கிறது. சீஎன்ன சனமப்பா இதுகள். நாடு என்ன நிலையில் இருக்கின்றது என்றது கூட தெரியாதவர்களாக சாமத்திய வீடுசெய்திருக்குதுகள் என்றால் இதுகளெல்லாம் மனித இனமே இல்லை…

நான் இவர்களிடம் காசு வாங்கவா கோல் எடுத்தனான். ஒரு இரத்த உறவுகளின் பிணைப்பு பணம் என்ற கருவிகொண்டா இணைக்கப்படுகிறது? பணம் இல்லையேல் துடிக்கும் உயிர் கூட உறவுகளால் கைவிடப்படுமா? பலவினாக்கள் அவளது மூளை அடங்கிய மண்டையோட்டை போட்டு குழப்பிக்கொண்டிருந்தது.

எனது அக்காவுமா? சாதாரண மனித பிறவி என்ற வரையறைக்குள் அடங்கிடாமல் போய் விட்டாள். எனதுபிள்ளை இறந்து முழுமையாக இன்னமும் பத்து மாதங்கள் கூட ஆகவில்லை. எங்களின் தேசம் தனதுவாழ்க்கையைத் தொலைத்து குற்றுயிரும் குறையுயிருமாய் கிடைக்கும் இந்த நேரத்தில் பெரும் எடுப்பாக எப்படிபிள்ளைக்கு சடங்கு செய்ய மனசு வந்தது? முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழன் செத்து அந்த ஈரம் காயும்முன்னே இவர்களால் மட்டும் எப்படி சந்தோசமாக விழாக் காண முடிந்தது? வினாக்கள் அவளது இதயத்தில்தொடர்ந்து கொண்டே போனது.

விழியில் மழை நீராய் பெருக்கெடுத்தது கண்ணீர். சீ இதுகள் மனித வர்க்கமே இல்லை; மனித உருவில் வாழும்மிருகங்கள் என்று மனதுக்குள் தீட்டித் தீர்த்தபடி நடந்தவளின் கால்களிடையே ஒரு சிறுவன் ஓடி வந்து தடக்கிவிழுகிறான்.

அவனை பார்த்தவுடன் கமலாவால் தனது மகனின் நினைவில் இருந்து வெளி வர முடியவில்லை. அவளதுசெல்லக் குழந்தை, அவளைத் தாய் என்ற தகுதி நிலையைத் தந்த குழந்தை. அக்குழந்தையின் சாவு என்பதுசாதாரணமானது இல்லை. அதை அவளால் மறக்கவும் முடியாது. அதைச் செய்த இந்த சிங்கள தேசத்தைமன்னிக்கவும் முடியாது. அன்றைய நாளை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

அன்று அசுரனை அழித்து மானுடத்தை காத்த கிருஷ்ணனின் வெற்றி நாளாக ஆரியர்களால் சித்தரிக்கப்பட்டுபெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி நாள். அன்றைய பொழுது இவர்களுக்கும் வானவேடிக்கைகள் பட்டாசு சத்தங்களுடன் தான் விடிந்தது. அதனால் அவர்கள் அனைவரும் தமது தீபாவளிகொண்டாட்டங்களைத் தமது பதுங்கு குழிக்குள் இருந்தே கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பல்குழல்ஏவுகணைகள், கிபிர், கனரக ஆயுதங்கள், ஆட்லறி எறிகணைகள் என பலவகையான வெடிபொருட்கள்வெடிப்பொலிகள் அந்த தீபாவளிக்கு பயன்படுத்தப்பட்டன.

தமிழீழத் தாயகத்தை வன்பறிப்பதற்காக முயலும் வன்முறையாளர்களின் நிய வெடிபொருட்களால் பதுங்குகுழிகள் மட்டுமே பல லட்சம் மக்களின் இருப்பிடங்களாகிப் போயின. கண் முன்னே பிண்டங்களாகபிரித்தெறியப்பட்ட உடல் துண்டுகளின் கோரங்களை கண்டு உறைந்து போய்க் கிடந்த படியே அந்த பிரதேசம்நிய வெடிபொருட்கள் வெடிச்சத்தத்தில் தமது தீபாவளி கொண்டாட்டத்தை கொண்டாடியது.
அவ்வாறான தீபாவளி நாளன்று தான் கமலாவின் கருவில் உதித்த மூத்தவனின் நெஞ்சுக்குழிக்கு அருகால்துழைத்துக் கொண்டு அவனின் குருதியைக் குடித்து சென்றது பாய்ந்து வந்த ரவை ஒன்று.

குருதியைக் கட்டுப்படுத்தி அவனைக் காப்பற்றிட போராடி தோற்றுப் போனார்கள் தமிழீழ மருத்துவர்கள். சரியான நேரத்துக்குள் கொண்டு வந்திருந்தால் சிலவேளை அவர்களால் காப்பாற்ற முடிந்திருக்குமோதெரியவில்லை. அதிக குருதி வெளியேறி அந்தப் பிள்ளை சாவடைந்திருந்தான்.

அவனை மண்ணுக்குள் வெட்டித் தாக்கவோ அல்லது எரிக்கவோ கூட திராணியற்றவராய் அங்கயே விட்டிட்டுக்கைக்குழந்தையாய் இருந்த இளையவனைக் காத்திட என்று ஓடி வந்த போது நீண்டு சென்ற ஓட்டமும், வலிகளும் நிறைந்த அந்த தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்திருந்தன. தாம் நேசித்த மண்ணையும், மண்ணுக்காக வாழ்ந்தவர்களயும் கைவிட்டு சிங்களப் படைகளிடம் நாய்களை போல அவள் ஓடி வந்த போது மற்றப் பிள்ளையை என்றாலும் காப்பாற்றிட வேண்டும் என்றே ஓடி வந்தாள்.

இவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஊன்றுகோல்களாக இருந்தவர்கள் அல்ல; ஆனாலும் போராட்டத்தின்மீதும் எமது விடிவு மீதும் அதீத நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டவர்கள். அதனால் தான் என்னவோஅவர்களும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தார்கள்.

எப்போ யார் கைது செய்யப் படுவார்கள் எப்போது என்ன நடக்கும் என்ற பயத்தைத் தவிர வெடிபொருட்களின் ஒலியோ, ஒளியோ அற்று, பிண நாற்றமும், இறப்புக்களும் இல்லாது, பிரிவுகளும், வலிகளும் மட்டும் கொண்டகம்பிக் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட போதும் அவள் யாரிடமும் கையேந்தியது கிடையாது. சாப்பிடுவதற்குக்காசு தாங்கோ என்று கேட்டதும் கிடையாது. அவளைக் கையேந்தும் நிலையில் தந்தையோ அல்லதுகணவனோ விட்டதும் கிடையாது. இல்லை என்றாலும் இருப்பதை விற்று அவர்கள் வாழ்க்கை சக்கரத்தைநகர்த்தி கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அவளுக்கு பெரும் துயரம் ஒன்று திடீர் என்று வந்து சேர்ந்த போது அவளால் தனது சகோதரியிடம்கையேந்த வேண்டிய நிலை வந்திருந்தது. அவளுக்கு வேறு வழி தெரியவே இல்லை. அக்கா தானே என்றநினைப்போடு தனது நிலையை கண்ணீரோடு கூறி முடித்து உயிருக்காக மடிப்பிச்சை கேட்கிறாள்.

“அக்கா என்னுடைய பிள்ளைக்கு நெருப்புக் காய்ச்சல் வந்து நேற்று வலிப்பும் வந்திட்டுது அக்கா. செட்டிகுளம்கொஸ்பிட்டல்ல இருந்து வவுனியாவுக்கு மாத்திப் போட்டாங்கள். கிடந்த நகைகளும் வித்துப் போட்டன். கையில காசில்லை அக்கா. பிள்ளைக்கு ஒரு மாபேணி கூட வாங்க கஸ்டமா இருக்கு கொஞ்ச காசு தாறியா?”

அவள் கேட்டதுக்காக 20000 இலங்கை ரூபாக்களை அனுப்பிய சகோதரியின் கணவன் இன்று வாழ் நாள்முழுக்க தன்னிடம் அவள் கையேந்தியத்தைப் போல பேசிய வார்த்தையை அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

அவள் தனக்கு சொந்த ஊருக்கு போறதுக்கு அனுமதி கிடைத்ததை சொல்வதற்காகத் தான் தொடர்பைஎடுத்திருந்தாள். ஆனால் மனிதமற்ற அந்த மனிதனால் அவளின் மனதை முழுதாக உடைத்தெறிய மட்டுமேமுடிந்தது.

அந்த நிகழ்வின் பின்னான இந்த ஐந்து வருட காலத்தில் எப்போதாவது வரும் தொலைபேசி அழைப்புக்களில்ஓரிரு வார்த்தைகளில் முடிந்து போய்விடும்.

கமலாவின் வாழ்வாதாரங்கள் கணவனால் மீண்டும் மேன்மைப்படுத்தப்பட அவளும் தனது குழந்தை கணவன்என்ற வட்டத்தை விட்டு வெளிவராமல் இருக்கப் பழகிக் கொண்டாள். பல கண்டங்களில் இருந்து தப்பி உயிர்வாழும் தனது மகனின் கற்றலில் மட்டும் அதிக அக்கறை கொண்டவளாய், அவனின் ஒவ்வொருநடவடிக்கைகளிலும் ஊன்று கோலாக நிற்க முனைந்து கொண்டிருந்தாள்.

இவளின் சகோதரியோ மேற்கத்தைய நடைமுறைகளை மட்டுமே பிள்ளைகளுக்கு ஊட்டியிருந்தாள். அதனாலோ என்னவோ மூத்த பிள்ளையாக உருவெடுத்த அவளின் வாழ்க்கைச் சந்ததி மூன்றும் தமிழ்கலாச்சாரத்தை மீறிய குழந்தைகளாகவே பயணப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இனம் மாறிய வாழ்க்கைத் துணை, சுத்தமாக நாக்கில் ஒட்டாத தமிழ் பேச்சு என்று அவர்களின் வாழ்க்கை முறைமுற்று முழுவதுமாக மேற்கத்தைய கலாச்சாரத்துக்குள் அமிழ்ந்து போய் கிடந்தது. பிள்ளைகளைக்கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களுக்கான முடிவைப் பெற்றவர்களான தாம், எடுக்கவோ முடியாதநிலையில்தான் சிறிது காலம் என்றாலும் நாட்டை விட்டுப் பிரிந்திருந்து பிள்ளைகளுக்கு தாயக வாழ்க்கைமுறை பற்றி காட்டுவதற்கு பெற்றவர்கள் நினைத்தார்கள்.

எங்கோ ஒரு கூரையில் நித்திரை விடடெழுந்த சேவல் ஒன்று கூவிய சத்தத்தை கேட்டு விழிகளைத் துடைத்துக்கொண்டு எழுகிறாள் கமலா.

நாட்கள் இரண்டு மூன்றை கடந்திருந்தது. மாதத்தில் ஒரு தடவை கூட தங்கையைத் தேடாத ஜெர்மனி வாழ்அக்கா இப்போதெல்லாம் நாள் ஒன்றுக்கு பலதடவை தொலைபேசியில் அழைக்கிறாள்.

“தங்கச்சி நாங்க வார நேரம் தான் தீபாவளி வருகுது நிறைய பட்டாசு வானவெடி எல்லாம் வாங்கி வை. என்ரபிள்ளையளுக்கு பட்டாசு என்றா ல் பிடிக்கும். தீபாவளி கொண்டாடுவம் எல்லாரும் சேர்ந்து”.

தமக்கையின் வேண்டுகோள் அவளுக்குள் எரிச்சலை ஏற்படுத்தினாலும் தமக்கை என்ற உறவுக்காகஅனைத்தையும் செய்கிறாள். அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டிருந்தன.

“அவர்கள் எங்களை பணத்துக்காக பழகினது என்று கைவிட்டவை அவைக்காக இப்பிடி எல்லாம் செலவுபண்ணுறியே” என்ற கணவனுக்கு,

“இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னையம் செய்துவிடல்” என்று கூறி சிரிக்கிறாள். அவனால்அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் கேட்ட அனைத்தையும் தன்னை மீறி செய்துகொண்டிருந்தான். மனைவிக்காகவும் தனது உயிர் மகனுக்காகவும். எதையும் செய்ய பின் நிற்காதவன் அவன். அதனால் எவ்வளவு செலவானாலும் அவனுக்கு கவலை வரவில்லை. மனைவிக்காக அனைத்ததையும்செய்திருந்தான்.

அவள் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்து சேர்ந்தது.

நீண்ட நாட்களின் பின் தனது சொந்த ஊரைப் பார்க்கும் சந்தோசத்தில் தாயகத்தை நோக்கிப் புறப்பட்டதமக்கையும் அத்தானும், தாம் பிறந்த நாடான ஜேர்மனியையும் அதன் சூழலையும் விட்டுப் பிரிந்து ஒருமாதத்துக்கு இருக்கப் போகிறோமே என்ற கவலையும், வேதனையையும் சுமந்தபடி இரண்டு பிள்ளைகளும், இயற்கையின் அன்னையால் சூழப்பட்டு குளிர்மையும், அமைதியும் மிக்க அந்த வீட்டை வந்தடைந்த போதுஎண்ணற்ற மகிழ்வில் திளைத்து போனாள் கமலா.

வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரே கூடி நின்று கமலாவின் சகோதரியையும், குடும்பத்தையும் வரவேற்றுக்கொண்டது. ஆனாலும் அந்த வரவேற்பு எதுவும் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. தாயும் தந்தையும் தாம்கொண்டு வந்திருந்த பழைய புதிய உடைகள் பொருட்கள் என பலவற்றை சொந்த பந்தங்களுக்குபகிர்ந்தளித்துக் கொண்டிருந்தனர். கழுத்திலும், கரங்களிலும் பணத்தின் ஆளுகை மினுங்கி கொண்டிருக்க, வந்தவர்களோடு தங்களது வெளிநாட்டு பெருமைகளை பறை தட்டிக் கொண்டிருந்தார் கமலாவின் அத்தான்.

பிள்ளைகளுக்கோ அந்த சூழலில் ஒத்துப் போக முடியவில்லை வெண்மை படர்ந்த பனிக்கட்டிகளும், குளிர்மையுமே அவர்களுக்கு வேண்டியவையாக இருந்தன. இருப்பினும் அவர்கள் அந்த சூழலில் பிடிக்காமலேவாழத் தொடங்கினர். அவர்களால் யாருடனும் பேச முடியவில்லை. சித்தியுடனோ, சித்தியின் தம்பியுடனோஅவர்களால் மகிழ்வாக இருக்க முடியவில்லை. அவர்கள் தமிழில் கேட்கும் கேள்விகள் எதுவும் அவர்களுக்குவிளங்கவில்லை. அதனால் அந்த வீட்டின் ஒரு அறைக்குள் அவர்கள் முடங்கி கிடந்தார்கள்.

அவர்களுக்கு தீபாவளி பற்றியோ இங்க நடக்கும் எவை பற்றியும் அக்கறையே இல்லை. ஜெர்மனியில் இருக்கும்தமது அக்காவுக்கும், நண்பர்களுக்கும் தொலைபேசியில் பேசுவதை மட்டுமே பொழுதுபோக்காக்கிகொண்டார்கள். அவ்வாறான சூழல் ஒன்றில் தான் மீண்டும் ஒரு தீபாவளி நாள் பிறக்க இருந்தது.

அதற்கு முதல் நாள் இரவு முற்றத்து மாமர நிழலில் நிலவொளியின் குளிர்மையில், கமலா அடுத்த நாள் தனதுஇறந்து போன மகனின் நினைவு நாள் என்பதால் அவனுக்குப் பிடித்தமான பலகாரங்களைச் செய்தபடி இருக்க, அருகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்.

அப்போது,
“அது சரி கமலா…. இந்த வீடும் காணியும் உனக்கு இன்னும் எழுதவில்லையாம் உண்மையா ? கொப்பா, கொம்மா இருக்கும் போது உனக்குத் தனிய என்று எதுவும் சொல்லவில்லையாம், கொக்காவுக்கும் உனக்கும்பாதி பாதி என்று சொல்லிச்சினமாம் என்று கொக்கா சொல்லுறாள் அது உண்மையே”.

அத்தான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாது கணவனைத் திரும்பிப் பாக்கிறாள் அவள். அவனோ கண்ணால் உண்மையை சொல்லு என்று சைகை காட்டுகிறான்.

“ஓம் அத்தான், அம்மா, அப்பா எனக்கு என்று மட்டும் சொல்லவில்லை. நாங்கள் இரண்டு பிள்ளைகளும் தானே. நீங்களும், அக்காவும் வெளிநாட்டில செட்டில் ஆகிட்டிங்கள். அதனால, நான் தானே இங்க வாழ்க்கை முழுக்கஇருக்க போறான் என்று அவை அதை பற்றி யோசிக்கவில்லை”. என்றாள்.

“சரி அவை யோசிக்காததுக்கு என்ன செய்யுறது. ஆனால் நாங்கள் வந்து நிற்கும் போது இந்த பிரச்சனையைதீர்த்துப்போட்டு போகலாம் என்று நினைக்கிறன். அதனால நீ இந்த வீட்டையும் காணியையும் அப்பிடியேவைச்சு கொள் எங்களுக்கு வேண்டாம். ஆனால் அந்த பங்குக்கு ஒரு பத்து லட்சம் காசு எங்களுக்குத் தாநான் முழு காணியையும் வீட்டையும் உன்னோட பெயருக்கே எழுதி வைச்சிட்டு போறம்.”

அவர்களின் வருகையும், தீபாவளி கொண்டாட்டமும் அந்த வீட்டையே மகிழ்ச்சியில் மூழ்கடித்துக்கொண்டிருந்த அந்தக் கணப்பொழுது அவளுக்கு சொல்ல முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதுவுமே பேசஅவளுக்கு வார்த்தை வரவில்லை.
அதிர்ச்சியோடு கணவனைப் பார்க்கிறாள். அவனோ எதுவும் பேசாது அவளைப் பார்க்கிறான். அதற்கு மேல்அங்கே இருக்க முடியாதவளாய் சுட்ட பலகாரத்தை எடுத்தபடி எண்ணெய் சட்டியை கீழே இறக்கி விடுமாறுகணவனிடம் கேட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளே செல்கிறாள் கமலா.

அப்போது
“என்ன கமலா நான் ஒன்று கேட்கிறன் நீ எதுவும் சொல்லாமல் போறாய்? “ என்கிறார் மைத்துனன்.

“என்ன சொல்ல அத்தான் ?
அவ்வளவு காசு எனக்கு எங்கால ? “

“காசு இல்லை என்றால் நான் பத்து லட்சம் தாறன் உடனே வேற வீடடை பார்த்து போங்கோ. எங்கட பெயரிலேவீட்டையும் காணியையும் எழுதித் தந்துவிடு…”

கமலாவும்,கணவனும், அதிர்ந்து போகிறார்கள்… செய்வது தெரியாது திகைத்து போகிறார்கள். ஒருவரை ஒருவர்பார்த்தபடி எழும்பிச் சென்றார்கள்.
அவர்கள் வீட்டு வாசலில் கால் வைத்த அதே நேரம்,
வெளியில் கேட்டுக் கொண்டிருந்த தீபாவளி கொண்டாட்ட பட்டாசுச் சத்தங்களைத் தாண்டி “நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று சொல்லிச் செல்வதைப் போல திருவுருவப்படமாக சுவரோடுதொங்கிகொண்டிருந்த கமலாவின் மகன் கார்த்தி நிலத்தோடு வீழ்ந்து நொறுங்கி போகிறான்.