மெல்லிய கறுத்த உருவம் ஆழி என்று அவனின் பெயர். என் வீட்டில் அடிக்கடி செல்லப் பிள்ளையாக வலம் வரும் அன்புத் தம்பி. என் மகள் மீது அதிக அன்பை வைத்திருந்தவன். ஊர் எங்கும் கூடி நின்று தமிழீழம் என்ற உன்னத இலக்குக்காக போராடிய போது அந்த சின்ன உருவத்துக்கு சொந்தமானவனும், போராட்டப் பழுவைத் தன் தோள்களிலே சுமந்தான். குழந்தை போன்ற முகம். அவனை கண்ட முதல் நாளே ஏனோ சொந்தத் தம்பி போன்ற உணர்வு எனக்குள் எழுந்தது. இன்று அவன் வீரச்சாவடைந்து விட்டான் என்பதை நினைக்கக் கூட முடியவில்லை.

“அக்கா….என்னால குளிர் தாங்க முடியுதில்லை. “

என்று குளிரில் வெட வெடத்த படி மழையில் நனைந்த கோழி போல அன்றொரு நாள் அவன் வந்து நின்றது இப்போதும் என் காதுகளில் ஒலிக்கிறது.

இந்த மழைக்குளிரைக்கூட தாங்க முடியாத நீ எப்படியடா இவ்வளவு கடின வேலைகளை எல்லாம் செய்து முடிக்கிறாய் ?

இந்தக் கேள்வி மனதில் எழுந்தாலும் அதற்கான விடையும் எனக்குத்தெரியும். அந்த மெல்லிய கறுத்த உருவத்திற்குள் விடுதலை வேட்கை இருந்தது. தன் மண்ணுக்கும் மக்களுக்குமாய் தன்னால் முடிந்த வரை உழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. மாவீரர்களை கண்ணாக மதிக்கும் தன்மை இருந்தது. தலைவனின் மீது அதீத பாசம் இருந்தது.

அதிகம் சாப்பிட மாட்டான். சோற்றுத் தட்டை வைத்தபடி ஒற்றைச் சோற்றை கொறித்துக் கொண்டிருப்பான். இதற்காகவே என்னிடம் பலதடவைகள் தண்டனையாக என் உதடுகளில் இருந்து வரும் எரிச்சல் வார்த்தைகளைப் புன்னகைத்தபடி ரசிப்பான். அவன் என் கணவனின் பொறுப்பில் இருந்ததால் என் வீட்டில் கொஞ்சம் அதிக செல்லமும் தான். நான் என் கணவரிடம் கூறியதுண்டு

“என்ன ஆழி வர வர மெலிஞ்சு கொண்டு போறான் மழைக்குளிரைக்கூட தாங்க முடியாமல் நிற்கிறான்”.

அதற்கு அவரின் பதில்

“என்ன செய்ய நாங்களும் நெஸ்டமோல்ட் அது இது எண்டு எல்லாம் வேண்டிக் குடுக்கிறம் அவன் உடம்பு வைக்கிற மாதிரியே இல்லை. “

என்ன தான் அவன் செய்யும் பிழைகளையும், குறும்புத்தனங்களையும் கண்டித்து திட்டினாலும் அவருக்கு அவனில் மிகுந்த பாசம் இருப்பதை பல தடவை நான் அவதானித்ததுண்டு. விடுதலைப் போராட்டத்தில் இது சாதாரணமானது என்றாலும் என் கணவன் தன் பொறுப்பில் இருந்த அனைவர் மீதும் அதிக கவனமாக இருப்பதும் அவர்களை தனது சொந்த உறவுகளாக நேசிப்பதும் எனக்கு அதிக மகிழ்வைத் தரும்.

அவனும் சசி என்ற இன்னொருவனும் நெருங்கிய நண்பர்கள். அதைப் போலவே அவர்கள் இருவரும் எம் வீட்டுப் பிள்ளைகளாகவே மாறியிருந்தார்கள். அம்மாவுக்கும் அவர்கள் மீது அதிக அன்பு இருந்தது. எமது வீட்டுப் பக்கமாக ஏதாவது வேலையாக வந்தால்,

“அக்கா பசிக்குது …. அம்மா பசிக்குது “ எனக் கேட்டு வாங்கிச்சாப்பிட ஒரு போதும் அவர்கள் தயங்கியதில்லை. அத்தகைய உரிமையுள்ளவர்களாகி விட்டனர் இருவரும்.

ஒரு நாள் சசி என் வீட்டுக்கு வந்து ஏதோ ஒரு பொருளை ஓரிடத்தில் வைத்தான். வைத்துவிட்டு என்னிடம் வந்து

“அக்கா இது இந்த இடத்திலையே இருக்கட்டும். ஒருவேளை நான் வீரச்சாவடைந்தால், என்னோட பெடியள் வரும்போது எடுத்துக் குடுங்கோ” என்றான்.

போராளிகளின் வாழ்வை நான் நன்கு அறிந்தவள். அதே நேரம் அவர்களின் சாவுகளுக்கு அடிக்கடி கலங்குபவள். அவன் அன்று கூறியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆத்திரம் தீரும் வரை திட்டித்தீர்த்தேன். சிரித்தபடியே நின்றான். சிரித்துவிட்டு ஒன்று மட்டும் கூறினான்.

“அக்கா நீ என்னை திட்டினதுக்கும் சேர்த்து ஒருநாள்  கவலைப்படப் போறாய். “

அதன் பின் அவன் சாவைப்பற்றி கதைப்பதில்லை. எனினும் ஒருநாள் கடைசிப் போராட்டம் உச்சம் பெறத் தொடங்கியிருந்த காலம். யாருக்கும் ஓய்வில்லை. போராளிகள் உன்னத இலட்சியமாம் தமிழீழ இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்க, மக்கள் ஏதிலிகளாக ஓடிக்கொண்டிருந்தனர். நானும், என் மகளும் அதற்குள் இருவராக நகர்ந்து கொண்டிருந்தோம். எப்போதோ ஒருநாள் தான் எம்மைத் தேடி வருவார் என் கணவன். இலக்கு ஒன்றை மட்டுமே அவர்கள் எண்ணத்தில் கொண்டிருந்தார்கள். அதனால் நாங்களும் வெட்டப்பட்ட “I “வடிவ பதுங்ககழிக்குள் பதுங்க தொடங்கி இருந்தோம். அவ்வாறான ஒரு நாளில் தான் எம்முடன் உணவருந்திக் கொண்டிருந்த ஆழி கூறினான்.

“ஆமி நெருக்கிக் கொண்டு வாறான் நாங்கள் விடக்கூடாது எப்படியாவது சண்டை பிடிச்சு ஆமியைக்கலைக்க வேணும் அக்கா என்னோட உயிர் இருக்கும் வரை விடமாட்டன். “

ஆனால் …

என இழுத்தவன் தொடர்ந்தான்.

“என்ன ஒரே ஒரு கவலை நான் வீரச்சாவடைஞ்சா பொடியை (body) குடுக்கிறதுக்கு இங்க அம்மாக்கள்  இல்லை அக்கா”

அவனின் வார்த்தைகள் மனதை கொன்று தீர்த்தது ஆனால் அவனோ அவ்வாறு கூறி விட்டு ஒரு சிரிப்புடன் என் முகத்தைப்பார்த்தான். அதில் என்னிடம் திட்டு வாங்கப்போகும் சந்தோசமா? அல்லது நாங்கள் இருக்கிறமடா என நான் சொல்லும் ஒரு வார்த்தைக்கான ஏக்கமா? என்று அப்போது எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அன்று அவனை என்னால் திட்ட முடியவில்லை.

ஏனெனில் அப்போது யாருடைய உயிருக்கும் யாரும் உத்தரவாதம் குடுக்க முடியாத நிலை. வாழ்வா சாவா எண்டிருந்த காலம் அது. போராளிகள் மக்கள் என்றில்லாது யுத்தத்தின் பிடி எல்லோரையும் ஒரு இறுக்கமான சிந்தனைகளுக்குள்ளும் நிலமைகளுக்குள்ளும் வைத்திருந்த காலம்.

“யோசிக்காதையடா நாங்கள் இருக்கிறம் என்று அவனுக்கு ஆறுதல் கூறவும் முடியாமல் தவித்த நான், ஆழி இப்பிடி சொல்லாதடா உனக்கு நாங்கள் இருக்கிறம். ஆனால் அதுக்கு முதல் நான் தான் சாகிறனோ தெரியாது” அப்பிடி நான் செத்தால் தான் நீ கவலைப்பட வேணும் யாரும் இல்லை என்று இப்ப நாம் இருக்கிறோம் என்று மட்டும் கூறினேன். இதன் பிறகு நான் அவனை ஓரிரு தடவைகள் தான் சந்தித்திருக்கிறேன். அதுவும் அவசரம் அவசரமாக அவன் போய்விடுவான்.

2009 தை மாதத்தின் கடைசியின் பின்பு நான் அவனைக் காணவில்லை. மாசி மாதத்தில் அவனைப் பற்றிய ஒரு செய்தியே வந்தது. பழகியவர்கள் பிரியும் போது வலித்தாலும் இவனின் வீரச்சாவு என்னை நிலை குலைய வைத்தது. பல நாட்களாக வீட்டுக்கு வராத கணவன் அன்று இத்தகவலை சுமந்து வந்தார்.

அவரிடம் மன்றாடினேன். அவனின் முகத்தை கடைசியாக பார்த்து விட மனம் ஏங்கியது. ஆனால் கணவனோ முடியாது என்றார். காரணம் கேட்டு அழுதேன். ஒரே ஒரு தடவை அவனை பார்க்க வேண்டும் என்று மன்றாடினேன்.

“அவன் உடல் சிதறி விட்டது. “

என்ற ஒற்றை வார்த்தைக்குள் அவர் மௌனமாகிவிட்டார். அவனுக்காக எதுவுமே செய்ய முடியாது கண்ணீர் வடிக்க மட்டுமே என்னால் முடிந்தது. உனக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறியும் எதற்காக உன் உடலத்தை கூட சிதற வைத்தாய் என்று அவனிடம் கேட்டு கேட்டு அழ வைத்தது அன்றைய நாள். ஆனால் அவனோ அதை கேட்கும் தூரத்தில் இல்லாதவனாய் தூர சென்றிருந்தான்.

சில நாட்களில் அவனின் நண்பனான சசி வந்தான். அவனை கண்ட போது ஆழியின் நினைவே முட்டிக் கொண்டு கண்ணீரைத் தந்தது. அது தேவிபுரத்தில் பதுங்குழிக்குள் இருந்த காலம். அவனும் சண்டைக்களத்தில் நின்று வந்திருந்தான். பதுங்கு குழிக்குள் எட்டிப்பார்த்ததும்,

“அக்கா நான் சண்டையில நிற்கும் போது ஆமி கிட்ட வர வர மனதில என் செல்ல குட்டியம்மாவை பார்க்காமலே வீரச்சாவாடைந்து விடுவனோ எண்டு தான் பயந்தனான். இப்ப தான் மனதிற்கு நிம்மதியா இருக்கு. நான் என் குட்டிம்மாவை பார்த்திட்டன் இனி வீரச்சாவாடைந்தாலும் பரவாயில்லை. “

என் மகள் பிறந்ததிலிருந்தே அவளை தூக்கி வளர்த்தவன். பல சந்தர்ப்பங்களில் அவளுடனேயே கூட இருந்தவன். அதனாலேயோ என்னவோ அவளில் அதீத பாசம் வைத்திருந்தான். திடீர் என்று அவன் அவ்வாறு கூறிய போது வந்த கோவத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்று அவனும் என்னிடம் திட்டு வாங்கிக்கொண்டே விடைபெற்றான். அது தான் அவனின் இறுதி விடைபெறுதல். சில நாட்களில் அவனும் வீரச்சாவு என்ற செய்தி வந்த போது தாங்க முடியாத வேதனை. என் மகளைப் பார்க்கிறேன் அப்போது அவளுக்கு 4 வயது. எதுவும் அறியாத பருவம். தன் மாமா ஒராள் வீரச்சாவு என்பதை கூட அறியாதவளாய் என் மடியில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். என் வீட்டில் நெருங்கிப் பழகிய அந்த இளைய போராளிகளை இழந்துவிட்ட எனக்கு பேரதிர்ச்சியாய் வந்து சேர்ந்தது இன்னொரு வீரச்சாவு.

அதே மாசி மாதத்தில் இன்னுமொரு உறவு. நாங்கள் இரணைப்பாலை என்னும் இடத்தில் இருக்கிறோம். இடையிடையே சரமாரியான எறிகணை வீச்சு. பதுங்கு குழியை விட்டு வெளியே வரமுடியாத நிலை.அவ்வாறான தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போதும் அந்த தெளிவான குரல் என் மகளை அழைக்கிறது.

“குட்டிம்மா என்ன செய்யிறீங்க”

மகளோ ” அம்மா அப்பாவும் ….. மாமாவும் வந்திருக்கிறார்கள்” என அவனது குரலை இனங்கண்டு கூறிவிட்டு சிரிக்கிறாள். அப்பாவும் மாமாவும் வந்தது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில் அவனோடும் அவள் சிரித்து விளையாடி பல நாட்களாகி விட்டது . அவளது மழலைக்குரலில் கூறும் கதைகளைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பான் அவன். வீட்டுக்கு வரும் வேளையெல்லாம் தானும் ஒரு குழந்தையாகி விளையாடத் தொடங்கி விடுவான். அவளது பிறந்த தினத்தை யார் மறந்தாலும் அவன் மட்டும் மறப்பதில்லை. கமராவுடன் வந்து நிற்பான். அவனது குரல் கேட்டு அவனிடம் செல்லத் துடிக்கிறாள் மகள். எனினும் நான் தடுக்கிறேன்.

“செல்லம் மாமாவோட பங்கருக்குள்ளேயே இருந்து கதையுங்கோ ஷெல் வந்து விழுகுது.”

அவனும் அதையே கூறுகிறான்.

“செல்லம் வெளியில வர வேண்டாம். பங்கருக்குள்ள இருந்தே மாமாவோட கதையுங்கோ”

பங்கருக்குள் இருந்தவாறு குட்டிம்மாவும் வெளியே இருந்தவாறு அவனும் எம்மோடு தங்கி இருந்த மூத்த போராளி ஒருவருடைய மகனும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் கணவனோடு ஓரிரு வார்த்தைகளை பேசினேன். எறிகணைகள் அருகருகே வந்து விழுந்து கொண்டிருந்ததால் என் கணவரும் அவனும் விடை பெறுகின்றனர். என் கணவரும் வழமைக்கு மாறாக மிகவும் அமைதியாக காணப்பட்டார். என்னோடு கூட அளந்து ஓரிரு வார்த்தைகளையே கதைத்தார். முகத்தில் ஏதோவொரு வேதனையை இனங்காணக் கூடியதாக இருந்தது. நான் நினைத்தே பார்க்கவில்லை. இது அவனது கடைசி சந்திப்பு என்று. அதனால் தான் அவரும் அவ்வாறு அமைதியாக இருந்திருக்க வேண்டும். இது எதுவுமே விளங்கி கொள்ளாதவர்களாக நானும் மகளும் மற்றவர்களும் அவர்களுக்கு விடை கொடுத்தோம்.

அடுத்த நாள் பின்னேரம் தூரத்தே அவன் வரியுடையுடன் கம்பீரமாக நடமாடிக் கொண்டிருந்தான். அந்த கொடிய இரவு ஒன்பதரை பத்து மணி இருக்கும் ஏதோவொரு வித்தியாசமான இரைச்சல். எம்மை தாண்டிச் சென்றது. அது என்ன என்று எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அரை மணித்தியாலம் கழிந்திருக்கும். ஓர் அழைப்பு எங்களின் பதுங்ககழி வாசலில் கேட்கிறது.

எம்மோடு தங்கியிருந்த ஒரு அக்காவின் கணவர் வெளியே நின்று அழைத்தார். கணவனைக் கண்ட சந்தோசத்தில் அச் சகோதரியும் வெளியே சென்று ஏதோ கதைத்து விட்டு திரும்பினார். ஆனால் போன போது இருந்த சந்தோசம் ஒரு வீதம் கூட இல்லாது கட்டுப்படுத்த முடியாத அழுகையுடன் உள் வந்தார் அச் சகோதரி. என்ன என்று வினவியதற்கு பதில் கூற முடியாதவளாக வேதனையில் உளன்ற அச் சகோதரி விம்மல்களுக்கிடையே அவனும் இன்னுமொரு உறவும் தமிழீழ தேசத்துக்காக பெரும் சாதனையாளர்களாக சாதித்து வீரச்சாவடைந்து விட்டார்கள் என்ற செய்தியை கூறினார். அக் கணமே என்ன நடந்திருக்கும் என கண நேரத்தில் புரிந்து கொண்டோம். நெஞ்சு வெடித்து விடும் போன்ற வேதனை. கத்தி அழுவதை தவிர வேறெதும் எமக்கு வழி இல்லை. அழுது தீர்த்தோம். நெருங்கி இருந்தவர்கள் ஒவ்வொருத்தரையும் இழந்து கொண்டிருந்த எம்மால் அழுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?

அதே நேரம் என்னை அறியாமல் என் கணவர் மீதும் கோபமாக வந்தது. ஒரு வார்த்தை கூறியிருந்தால் குட்டிம்மா வெளியே சென்று அவனுடன் விளையாடுவதை தடுத்திருக்க மாட்டனே என்று விம்மத் தொடங்கிய என்னை அருகில் இருந்த வேறு ஒரு சகோதரி ஆறுதல் படுத்தினார்.

“அக்கா இதை விட நாம் பெரிய இழப்புக்களையும் சந்திக்க வேண்டி வரலாம் அதனால் கவலைப்படாமல் இருங்கோ எதற்கும் தயாராக இருங்கோ”

“இல்ல அக்கா இவர் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பிள்ளைய விளையாடாமல் தடுத்திருக்க மாட்டன் “

அவர் எப்பிடி இதை பற்றி உங்களுக்கு சொல்ல முடியும்?

அவர் அவ்வாறு கூறுவது சாத்தியமில்லை என்று தெரிந்தும் ஆற்றாமையின் வெளிப்பாடாக மனம் விம்மியது. புலிகளின் குரல் வானொலி அவர்களின் வீரச் செய்தியை வெளியிட்ட போது அதை கேட்டபதும், எல்லோரும் அவர்களைப் பற்றி கதைப்பதும் அழுவதுமாக அது ஒரு கொடிய இரவாக கழிந்து கொண்டிருந்தது.

ஒருவாறு அன்றைய இரவு தற்காலிகமாக விடிந்தது. ஏழு மணியிருக்கும். என் கணவர் வந்தார். முகம் வாடிப்போயிருந்தது. அவரைக் கண்டவுடன் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓவென்று பெரிதாக அழத்தொடங்கினேன். சிறிது நேரம் எதுவுமே பேசாது இருந்தவர் கதைக்கத் தொடங்கினார்.

“இவை எல்லாம் ஆரம்பமே என்றார். இதற்கெல்லாம் தளர்ந்து விடக்கூடாது வாழ்க்கையில் இன்னும் இன்னும் சந்திக்க வேண்டியவை நிறைய இருக்கு என்றார். எதையும் துணிந்து நின்று எதிர் கொள்ளப்பழக வேண்டும் என்றார். என் அழுகைக்கும் சேர்த்து திட்டினார். நீ படிச்சனி உனக்கு உலத்தை பற்றிய அறிவு இருக்கு. எப்படி நீ உன் காலில் நின்று வாழ வேண்டும் என்பதை பற்றி உனக்கு நல்லாகவே தெரியும். இப்பிடி அழுது கொண்டிருக்காத… என பல விடயங்களை என்னோடு ஆறுதல் என்ற பெயரில் அறிவுரைகளை கூறித் தீர்த்தார்.

நானும் உன்னை சில நாட்களில் பிரிந்து விடுவேன் என்பதை எனக்கு உணர வைக்கத் தான் இவ்வாறெல்லாம் கூறியுருக்கிறார் என்பதை அப்போது என்னால் உணர முடியவில்லை. ஆனால் இப்போது உணர்கிறேன். அன்றே அவருக்குத் தெரிந்து விட்டது. இது தான் எமது முடிவு என்று. அதனாலோ என்னவோ என் மகளும் நானும் இப்போது எம் காலில் நிற்க வேண்டிய தேவை எழுந்து அதற்கான பாதையில் பயணிக்கின்றோம். கணவனின் நிலை தெரியாத பெரும் வெற்றிடம் ஒன்றுடன்…

புலர்வு இணையத்துக்காக எழுதியது : மலரிசை ( காணாமல் போய்விட்ட போராளி ஒருவரின் மனைவி)