“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின் இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது. மாலை 5 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்தது. மங்கள விளக்கினை நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய வணிக மற்றும் ஊடக நிறுவனங்களை சார்ந்தவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களுக்கும் சாவடைந்த மக்களுக்காகவும் அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மாவீரர் வணக்க நடனத்தை ஜேர்மனியின் இளைய கலைஞராகிய அனாமிகா வழங்கி எமக்காக வீழ்ந்தவர்களை வணங்கினார். தொடர்ந்து காற்றுவெளியிசை இறுவட்டின் பாடலாசிரியர்களில் ஒருவரான தூயவன் வரவேற்புரையை வழங்கி நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று அரங்க நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். அதை தொடர்ந்து இசை வணக்க நிகழ்வும் இசை நிகழ்வும் தொடர்ந்தன.

அரங்க நிகழ்வுக்ளில் இசை நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டு “காற்றுவெளியிசை “ என்ற இறுவட்டு வெளியீட்டை செய்வதற்கான நிகழ்வுகள் ஆரம்பித்தன. காற்றுவெளியிசை இறுவட்டின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய இரத்தினம் கவிமகன் இவ்விறுவட்டு எவ்வாறு உருவாகியது அதற்காக தாம் எவ்வாறான அனுபவங்களை, தடைகளை பெற்றிருந்தார்கள். இதன் பெறுபேறு என்ன போன்ற விடயங்களை தனது அறிமுக உரையில் தெளிவுபடுத்தினார். காற்றுவெளியிசை என்பது தொட்டு விட முடியாத இந்த அண்டத்தில் கலந்திருக்கும் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றில் எம்மால் பலவற்றை உணரக் கூடியது போல இக் காற்றுவெளியிசை இறுவட்டினூடாகவும் இசை ரசிகர்கள் பல உணர்வுகளை பெறக் கூடியதாக பாடல்கள் உருவாகி உள்ளன எனவும் இதன் நோக்கம் இலைமறை காயாக இருக்கும் தமிழீழ கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை கொடுப்பது என்பதால் புதியவர்கள் பலரை இதில் இணைத்துள்ளதாகவும் அதனை சரியான முறையில் திரு இரா. சேகர் அவர்கள் செய்துள்ளார் எனவும் தனதுரையில் தெரிவித்து நிறைவு செய்தார்.

தொடர்ந்து வெளியீட்டுரையினை முன்னாள் போராளியும் மக்கள் செயற்பாட்டாளருமான திரு. ராஜன் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில், தமிழீழ படைப்பாளிகள் பல சிரமங்களை எதிர் கொண்டு தான் இவ்வாறான படைப்புக்களை கொண்டு வருகின்றார்கள். அவ்வகையான படைப்புக்களை எம் மக்கள் வரவேற்று அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் இல்லை என்றால் மீண்டும் மீண்டும் முயற்சிகளில் மட்டுமே தமிழீழ படைப்பாளர்கள் முடக்கப்பட்டுவிடுவார்கள். பல வெற்றிடங்கள் இந்த மண்டபத்தில் இருக்கின்றது. ஆனால் இனிவரும் காலத்தில் அவ்வாறு வெற்றிடங்கள் இல்லாமல் நிறைவானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களாகிய எமது கடமை என்றார்.

வெளியீட்டுரையைத் தொடர்ந்து காற்றுவெளியிசை இறுவட்டு பாடல் ஒன்றுக்கு இளைய நடன கலைஞர் அனாமிக்கா நடனம் வழங்கினார். அதை தொடர்ந்தே வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இறுவட்டு வெளியீட்டினை அங்கே சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த மூத்த இசையமைப்பாளர் கண்ணன் அவர்கள் வெளியிட்டுவைக்க நிகழ்வின் பிரதான அனுசரணையாளரான நெதர்லாந்தை சேர்ந்த மூத்த நாடக கலைஞரான சிறீஸ்கந்தவேள் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. சிறப்புப் பிரதிகளை வருகையாளர்களுக்கு இசையமைப்பாளர் திரு. கண்ணன் மற்றும் இசையமைப்பாளர் இரா. சேகர் ஆகியோர் வழங்கினர். சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சபையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு வெளியீட்டு நிகழ்வு அடுத்த நிலைக்கு சென்றது.

மதிப்பீட்டுரையினை பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த திரு. சத்தியநாதன் நிகழ்த்தினார். அவ்வுரையில், தமிழீழ படைப்பாளிகள் பெரும் எதிர்பார்ப்போடு ஒவ்வொரு படைப்புக்களையும் செய்கிறார்கள் அதிலும் இப்படைப்பு இந்திய சினிமா மோகத்துக்குள் இருந்து வெளிவந்து தனித்துவமான படைப்பாக வந்துள்ளது. அவ்வகையில் இப்படைப்புக்களுக்கு சிறந்த வரவேற்பை மக்கள் கொடுக்க வேண்டும் என வேண்டுகை விடுத்தார்.

தொடர்ந்து நெதர்லான்ட் நாட்டில் இருந்து வந்திருந்த சிலம்பொலி கலாஷேத்ரா நடன பள்ளியின் மாணவிகள் மற்றும் Beatz Dance School மற்றும் தமிழ் அரங்கம் கலைக்கூட மாணவிகளின் சிறப்பான நடனங்கள் மற்றும் இரா. சேகர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தாளவாத்திய கலைஞர் தேவகுருபரன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இயங்கிய இசையணியின் சிறந்த இசை நிகழ்வும் நடந்தது. இவை அனைத்தையும் மூத்த அறிவிப்பாளர் முல்லைமோகனும், தமிழீழத்தின் சிறந்த அறிவிப்பாளராக இருக்கும் கிருஷ்ணாவும் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்வுகள் ஆரம்பித்திருந்த நேரம் முதல் இறுதிவரை பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கான மதிப்பளித்தல் நடந்தது. அது முடிந்த பின் நன்றியுரை வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்றது.