இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

அதே வேளை பதுளை – தியதலாவை பகுதியில் நடாத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது, வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. 

இந்த சுற்றி வளைப்பு விமானப் படையினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டதாக விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் கியான் செனவிரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்த சுற்றி வளைப்பின் போது, ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தியதலாவை பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

இது ஒரு புறம் இருக்க இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

தேசிய தவுத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் தாயிம் மொஹமட் சஹரானின் தலைமையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன்படி, இலங்கையிலுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர் ஆணையம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் பிரகாரம், தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட சிலர் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபர்களின் முழுமையான தகவல்களும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு, பாதுகாப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்ட சந்தேக நபர், சமூக வலைதளங்களின் ஊடாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவின் தகவல்களை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சகத்தினால் அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இது தொடர்பாக எந்த முன்னேற்பாடுகளையும் பாதுகாப்புப்படைகளோ காவல்த்துறையோ செய்யவில்லை. அதனால் தான் இவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டு 290 உயிர்களை பலி கொடுத்துள்ளது இலங்கை.