உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லா மாகாணங்களுக்கும் இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை
அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சி.வி.விக்னேஷ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அண்மைய நிலைமை காரணமாக வட மாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் மூலம் பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள சி.வி.விக்னேஷ்வரன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தௌிவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் கவனயீனமே பயங்கரவாதத்
தாக்குதல்களுக்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையானது மனித உரிமை மீறலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சி.வி. விக்னேஷ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தைக் கண்டிப்பதாகவும், பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.சிக்னேஷ்வரன் தனது அறிக்கையினூடாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.