பிரியமுள்ள செல்லத் தங்கைக்கு…,

உன் அன்பின் சின்னண்ணா எழுதிக்கொள்வது. நான் நலம். உனது நலமறிய மிக மிக ஆவல். அதோட இன்றைய உனது பிறந்த நாளில் மனமார வாழ்த்துவதுடன், வேண்டும் நலங்கள் உன்னுடன் கூடவே வர உனது நம்பிக்கைகள் துணையிருக்கட்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாள் போல மிக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது தங்கா! உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும் உனக்காக ஒரு கடிதம் எழுதுவேன். இன்றும் உனக்காக ஒரு கடிதம் எழுதுகிறேன். இன்றோட உனக்கு முப்பது வயசாகிறது. இருந்திருந்தால் பேரிளம்பெண்ணாக ஐந்தாறு பிள்ளைகளுக்குத் தாயாக இருந்திருப்பாய். ஆனால் இன்றும் என் கண்களுக்குள் அதே அற்புதப் பட்டாம்பூச்சியாகத்தான் நீ பறந்து திரிகிறாய் செல்லா!

அற்புதா! என் மன ஆறுதலுக்காக நான் உனக்கு எழுதும் இந்தக் கடிதம் போல ஒவ்வொரு வருடமும் இதே நாளில் உனக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். உன்னோடு நேரே கதைக்கிற ஒரு உணர்வு இந்த கடிதம் மூலமாக எனக்குக் கிடைக்கிறது செல்லா! இது உனக்கு மிக நீண்ட மடலாகவே இருக்கும்.

இன்னொரு முக்கிய விடயம் உனக்குச் சொல்ல வேணும். சென்ற மாதம் இதே திகதியில் நீ அத்தை ஆகியிருக்கிறாய். அதாவது நாம் உன்நினைவால் ஆசீர்வதிக்கப் பட்டோம். அவள் பெயர் கூட “அற்புதமுல்லை”. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இரண்டுமே உன் பெயர்தானே! எங்கள் அம்மா அப்பா சூட்டிய பெயர் “அற்புதா”. நீ இந்த தமிழ் மண்ணுக்காக நீ சூடிக்கொண்ட பெயர் “முல்லை”. எப்படிக் கூப்பிட்டாலும் நீயாகவேதான் இருக்க வேண்டும் என்று, உன் சின்னண்ணிதான் இந்தப் பெயரைச் சூட்டினாள். உன் சின்னண்ணியார் இந்த பெயரை மகளுக்கு வைத்து விட்டு அடைந்த ஆனந்தத்தைக் காண என் இரு கண்கள் போதவில்லையம்மா! உன்னோடு கதைப்பது போலவே இப்பொழுது அற்புதமுல்லையுடனும் கதைக்கத் தொடங்கிவிட்டேன்.

கடந்த 2003 ஆம் ஆண்டு சித்திரை மாதம் எங்கள் அம்மாட ஒருவருட திதி நாளில் நீ வீட்டுக்கு வந்து போனபிறகு, இதுவரை உன்னை நாங்கள் கண்டதில்லை. அப்போதே எங்கள் அப்பா படுத்த படுக்கையாக் கிடந்தவர் என்று உனக்குத் தெரியும். அடுத்தடுத்த வருசமே அவரும் கைலாயம் போய் விட்டார். அந்த நாளில் உனக்குச் சொல்லச் சொல்லி உங்கட ஆக்களிட்ட தகவல் சொல்லியிருந்தோம். உனக்குத் தகவல் அறிவிக்கப் பட்டுவிட்டது ஆனால், நீ உடனே வரமுடியாத தூரத்தில் நிற்பதாகத் தகவல் சொன்னார்கள். அம்மா மோட்சம் போனபோதும் இப்படித்தான் சொன்னார்கள். அடுத்த வருடமாவது நீ வந்து போனாய். அதுபோல அப்பாவின் நாளுக்குப் பிறகாவது நீ வருவாய் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து காலங்கள் ஓடியே போய் விட்டது.

2009 மே மாசம் வரை நீ அங்க நிற்கிறாய். இங்க நிற்கிறாய் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அப்பப்ப உன்னை அங்க பார்த்தேன், இங்க நிக்கிறாள் என்று ஊராக்களும் வந்து சொல்லுவார்கள். உன்னை மாதிரியே இருந்ததாகவும் சொல்வார்கள். உண்மைக்கு சொன்னார்களோ, பொய்க்குச் சொன்னார்களோ எங்களுக்குத் தெரியாது. 2009 க்குப் பிறகு நாங்க யாரிட்டப் போய்க் கேட்க? நீ எங்கே என்று எவ்விடம் போய்த் தேட? சொல்லு! அதுக்குப் பிறகு பேச்சுக்குத்தானும் உன்னை கண்டனாங்கள் என்று சொல்ல ஊருக்குள்ளயும் உன்னத் தெரிஞ்சவங்க ஒருவரும் இல்லாமலே போய் விட்டார்களடா!

இது எனக்கு மட்டுமானது இல்ல கண்ணா! தமிழீழத்தில் என் போன்ற ஆயிரம் அண்ணா, தம்பி, அம்மா, அப்பா, அக்காமார்கள் என்று இன்றும் தேடிக் கொண்டே இருக்கிறாங்கள். உனக்கு நான் சென்ற மடலில் எழுதியது போல இன்றுவரை எங்கள் அண்ணா வீடு வந்து சேரவேயில்லை. எங்களிட்ட இருந்து விசாரணைக்கு என பிரிச்சுக் கூட்டிக் கொண்டு போனதோட அவரை இதுவரை யாருமே பாக்கவில்லையாம். குடுத்துத் தேட ஒரு போட்டோ கூட இல்ல. எதுவும் மிஞ்சவில்லை. உன்ர படம் கூட உன்னோட படிச்ச பிள்ளை ஒருத்திதான், அவளுடைய பிறந்த நாளுக்கு வீட்டில் எடுத்த ஒருபடம் கிடப்பதாகச் சொல்லி ஒன்று கொண்டு வந்து தந்தாள். எங்கட குடும்பத்தில் வேற ஒருவருடைய படமும் இல்லை. கிடைக்கவில்லை.

இந்த வருசத்தோட அண்ணாவைக் கண்டு அஞ்சு வருசம் ஆகிட்டுது அற்புதா! அண்ணியாக்களும் அண்ணாவுக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேடிக் களைச்சுப் போய்விட்டார்கள். அண்ணியும் ரெண்டு பெறாமக்களும், உனக்காக அப்பா, அம்மா வாங்கிய அந்த தென்னங் காணியிலதான், வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடு கட்டி அங்கதான் இருக்கிறாங்கள். அந்தக் காணிய வீட்டுத் திட்டத்துக்கு சொந்தப் காணி வேணும் என்று அவாவுக்கே எழுதிக் கொடுத்தாச்சு அற்புதா! அண்ணியின் அம்மா உதவிக்கு கூடவே இருக்கிறா. அவாவை விட அண்ணிக்கு உறவுகள் என்று யாரும் மிஞ்சவில்லை. அண்ணியோட அப்பா, தம்பி, அவரோட மனைவி ஒரு பிள்ளை என்று, 2009 கடைசி நாளில பங்கருக்குள்ள செல் நேர விழுந்து போய்ச் சேர்ந்திட்டாங்கள். நான்தான் அப்படியே பங்கரோட இழுத்து மூடிப் போட்டு வந்தனான்.

ரெண்டு பெறாமக்கள் மட்டும் சின்னச் சின்ன காயத்தோட தப்பினவங்கள். அவர்களில் மூத்தவன் சரியா எங்கள் அண்ணன் மாதிரியே நல்ல படிப்பும் சுட்டியும். அடுத்தவள் அண்ணி மாதிரி சரியான அமைதி. ஆனால் மிகவும் கெட்டிக்காரி. எங்கள் அண்ணா போலவே அவளும் கராத்தேயில் படு பயங்கரம். வீட்டிலேயே தையல், தோட்டமும் என்று அண்ணியாக்களின் பாடு போகிறது.

நாங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்த, அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கட்டிய அதே வீட்டிலேதான் நானும், சின்னண்ணியும் அற்புதமுல்லையோடு வசித்து வருகிறோம். இந்த வீடு எப்பொழுதும் உனக்காகக் காத்திருக்கிறது தங்கா! ஒருநாள் நிச்சயம் நீ வருவாய் என்றும், நீ வரும்போது இந்த வீட்டையும், காணியையும் உனக்கு கொடுத்துவிட எப்பொழுதோ நாங்கள் முடிவெடுத்து விட்டோம். எங்கள் குடும்பத்தில் என்னை மட்டும் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு எல்லோரும் ஒவ்வொரு திசைகளில் பயணித்து விட்டீர்கள்? எங்கே போனீர்கள்? கூட ஆட்கள் இருந்தும் அனாதை என்கின்ற உணர்வு அப்பப்போ எட்டிப் பார்க்கிறது அற்புதா!

எங்கள் வீட்டின் ஒவ்வோர் மூலையும் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னிருந்த கலகலப்பையும், சிரிப்புகளையும், சந்தோசங்களையும், எதிரொலித்த வண்ணமே இருக்கின்றன. எங்கள் அண்ணா 1995 இல் இயக்கத்துக்கு இணைந்த பொழுது கூட, எங்கள் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் பெரிதாக தாக்கம் செலுத்தாத போதிலும், 2001 ஆம் ஆண்டு நீ இயக்கத்துக்கு போனதும் வீடு தலைகீழாக திரும்பிவிட்டிருந்தது. அடுத்த வருடமே அம்மா போய்ச் சேர்ந்ததும், அடுத்தடுத்த வருடம் அப்பாவும் படுத்த படுக்கையாகி அம்மாவுடன் சேர்ந்து கொண்டதும் என்று எதோ கனவுகள் போல நடந்து முடிந்தன.

போராட்டம் என்பது தமிழரின் பொதுவிதியாகிப் போனதால் எங்கள் அப்பா,அம்மாவால் எதுவுமே செய்ய இயலாமல் போய்விட்டது. நீ இயக்கத்தில் இணைந்து விட்டாய் என்ற செய்தி வீடு வந்ததும், எங்கள் வீடு இருந்த கோலத்தையும், நிசப்தத்தையும் இன்று நினைத்தாலும் நடுங்குகிறது அற்புதா! அந்த நாளுக்குப் பின் எங்கள் வீட்டில் சிரிப்பொலிகள் அரிதாகிப்போயின. அப்பப்போ தெரிந்தவர்கள் யாரையும் பார்க்கும் போது கூட அம்மா அப்பாவின் உதடுகளின் ஓரமாகவே ஏனோதானோவென சிரிப்புகள் வந்து விலகிக் கொண்டன. இனம்புரியாத இறுக்கத்தின் கோடுகள் யாவும் அவர்கள் முகங்களில் நிரந்தரமாகக் குடியேறிக் கொண்டன.

வாசலிலே மாவிலைகள் காய்ந்தபடியே கிடந்தன. வீட்டிற்குள் எப்பொழுதும் பரவியிருந்த சாம்பிராணி வாசம் இல்லாமலேயே போனது. கோயில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் எதெற்கென்று ஆயின! பலகார வாசணைகள் குறைந்தே போய்விட்டன. தொதல் கிண்டும் பெரிய சட்டியில் மழைநீர்தான் பல நாட்களாக தேங்கிக் கிடந்தது. அந்த நீரில் நுளம்புக் குடம்பிகள்தான் நெளிந்துகொண்டிருந்தன. வாசலின் சருகுகளை கூட்டிப் புதைக்க தேவை என்ன என்று ஆனது! பற்றுத் தேய்க்காமல் பல பாத்திரங்கள் வட்டிலிலே கவிழ்ந்த படி! கிடுகு வேலிகளில் கறையான் அரித்த பொத்தல்கள் ஆங்காங்கே விழத்தொடங்கின. ம்….அந்தக் காலங்களில்தான் நான் அடுப்புப் பற்ற வைத்து, தேநீர் போடவே கற்றுக் கொண்டேன்.

2005 இல் அண்ணாவின் திருமணம் கூட, அம்மா இன்றி படுத்த படுக்கையா கிடந்த அப்பா முன்னாலதான் நடந்தது. எல்லாருடைய நினைவுகளையும் என்னொருவனை மட்டும் சுமக்க வைத்து விட்டு நீங்கள் போன திசைகள்தான் என்ன அற்புதா? அனாதையாகி நிற்கிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டின் முன்படலை திறக்கும் சத்தம் கேட்டாலே நீயாக இருக்குமோ என்று சட்டெனத் தோன்றும் எண்ணம் மேலெழ ஒரு எதிர்பார்ப்பிலேயே எட்டிப் பார்க்கிறேன். தோற்றுப்போகிறேன்.

எங்கள் வீடும் 2009 இல் செல் விழுந்து காயங்கள் பட்டு கூரை விழுந்து போய்தான் கிடந்தது. காரணமில்லாமல் ரெண்டு வருசம் சிறையில கிடந்திட்டு வந்துதான் திருத்தினேன். வீட்டிற்கு திருப்பி ஓடும் போட்டு, வெள்ளையும் அடிச்சனான். செல் அடியில எங்கட வீடு சேதமடைஞ்சாலும், எல்லா சாமானும் அழிஞ்சு போனாலும், அப்பா உனக்காக வாங்கித் தந்த வயலின் மட்டும் அப்படியே சேதம் படாமல் இருந்திருக்கு. பக்கத்து வீட்டு மலரக்கா பத்திரமாக எடுத்து வைத்திருந்து தந்தார். சின்னமகாராணி உன் குட்டி விரல் கொண்டு நீ இசைத்த அதே வயலின் இன்றும் எம்மோடுதான். ஆனால் நீ மட்டும் இல்லை. இதே வீட்டுலதான் போனவருசம் என் கலியாணமும் சின்னதாக நடந்தது.

ஓ அற்புதா! அண்ணி யார் என்று உனக்குத் தெரியாததல்ல. அண்ணனுக்காகத் தங்கை தூது போன உனக்குத் தெரியாதா என்ன? உனது நண்பியின் தமக்கையார்தான். 2009 கடைசியில் எல்லாரும் உயிரைக் கையில பிடிச்சபடி ஒவ்வொரு திசையில் ஓடிய பொழுது தொடர்புகள் இல்லாமலே போயிருந்தது. சிறையில் இருந்து வந்த ஒருநாள் தற்செயலாக கண்ட பொழுதுதான், நான் சிறையில் இருப்பது தெரியும் என்றும், நான் வரும் வரை எனக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னாள். பதின்மூன்று வருடங்கள் காத்திருந்திருக்கிறாள்.

என்னைவிட அவள் உன்மீதுதான் அதிகம் பிரியம் போல! அடிக்கடி உனது பழைய ஞாபகங்களை மீட்டிக் கொள்வாள். எனது காதல் கடிதத்தை நீ அவளிடம் கொடுத்துவிட்டு ” இதுக்கு நல்ல பதில் சொல்லாட்டி ஆள் வச்சு அடிப்பன்” என்று மிரட்டியதையும், ஓரிரு நாட்கள் தான் பயத்தில் குச்சொழுங்கையால திரிந்ததையும் சொல்லிச் சிரிப்பாள். அவள் எனக்காக காத்திருந்தது உண்மையில் உன்மீதுள்ள பிரியம்தான் என்று நினைக்கிறன் தங்கா!

2003 க்குப் பின்னர் உன்னைத் தேடி உங்கள் முகாமக்களுக்கு அதிகம் திரிந்தவளும் அவள்தான் அற்புதா. இயக்கத்தில் இருந்த, தன் நெருங்கிய நண்பிகள் ஊடாக எல்லாம் உன்னை விசாரிப்பா! அவர்கள் சொல்கின்ற உனைப்பற்றிய சில போர்க்களக் கதைகளை என்னிடம் சொல்லி சிலாகிப்பாள். 2009 க்குப் பின்னரும் உன்னைத் தேடி அவள் சிறைச்சாலைகள், புனர்வாழ்வு முகாம்கள், ஆணைக்குழுக்கள் என்று தேடியலைந்திருக்கிறாள். இப்பவும் அவள் உன்னைப் பற்றிய விசாரிப்புகளை நிறுத்திய பாடில்லை. ஏதாவது பத்திரிகைகள், இணைய தளங்கள் என்று தேடுதல் கடிதங்கள் போட்டுக் கொண்டே இருக்கிறாள். உன்மேல் நான் வச்சிருக்கிற பிரியம் பற்றி அவவுக்கு நன்றாகவே தெரியும் அற்புதா! என்னோடு சேர்ந்து அவளும், அற்புதமுல்லையும் உனக்காக காத்திருக்கிறோம்.

“காரணமின்றி சிறையிருந்தேன்” என்று சொன்னதற்காக என்னை மன்னிச்சிரு முல்லையே! உண்மையில் காரணம் இருக்கிறது. அனைவரும் மண்ணுக்காக, உரிமைக்காக போராடும்பொழுது, நான் பங்களிக்காமல் பார்வையாளராக இருந்தது குற்றம்தானே முல்லை! அண்ணாவும் தங்கையும் போராளிகள் என்ற நிழலில் நான் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தட்டிக் கழித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். சிறையில் இருந்து அதனை நினைத்து அழுது தீர்த்திருக்கிறேன். தமிழர்கள் அனைவரும் காரணங்கள் சொல்லாமல் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தாலே எமக்கான தேசம் நிச்சயம் மலர்ந்திருக்கும் என்று சிறையிலேயே உணர்ந்து கொண்டேன் முல்லை. கண் கெட்ட பின்னர் சூரிய வணக்கம் பயனில்லை!

முல்லை! நீயும் உன் தோழர் தோழியரும் சேர்ந்து போராடிய இந்த நிலம் இன்று முழுவதுமாய் மாறிவிட்டது. இந்த மண்ணின் காலத்தையும் மாற்றத்தையும் 2009 க்கு முன் – பின் என்று வித்தியாசப்படுத்த தேவை வந்திருக்கிறது. புழுதி கிளப்பி வீதிவலம் வந்த வீரத் தளபதிகள், வீரக் கதாநாயகர்களின் நிழல்கள் எதுவுமற்றுப் போய், சூனியத் தெருக்களாகவே காட்சி தருகின்றன. கரிமருந்துப் புகையோடு, கந்தகப் புகையின் வாசனைகள் அடங்கி, கறுத்த தார்வீதிகளின் மணமும் பொலிவும், மண்ணுக்கு ஒவ்வாத சப்பாத்துத் தடங்களும், சிகரெட் நெடில்களும் எல்லா இடங்களிலும் நிறைந்து விட்டது முல்லை.

வீர வித்துக்களைப் புதைத்த இடங்களெங்கும் எருக்கலைகள் பூத்துக் கிடக்கின்றன. சில நினைவு இடங்களில் இன்றைய எங்கள் மைந்தர்கள் சந்தோசமாக உதைபந்து ஆடுகிறார்கள். துப்பாக்கி ரவைகளும் எறிகணைச் சிதறல்களும் கீறிக் கிழித்த சுவர்கள் எல்லாம் பூசி மெழுகப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டுவிட்டது. முறிந்த மரங்களும், சரிந்த தென்னைகளும், பிளந்த பனைகளும் கரையான் அரித்துப் போக புதிய மரங்கள் முளைத்தாயிற்று. புதிய புதிய முகங்கள் புதிய வடிவங்களில் பரவலாகத் தென்படுகின்றன.

எங்கு திரும்பினாலும் தமிழ்மொழி வேரோடியிருந்த இந்த மண்ணில், சிங்களம் கலக்கத் தொடங்கி விட்டது. வங்கிகள், அரச அலுவலகங்கள், கடைகள் என்று எங்கு போவதாக இருந்தாலும் சிங்களம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. நீங்கள் பாவித்த கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள் அனைத்தும் காட்சிக்கென கூடங்களுக்குள் அடுக்கி வைத்துவிட்டார்கள். உங்களுடைய தளங்களில் இராணுவ வெற்றிச் சின்னங்கள் நிறுவப்பட்டு, புரியாத சிங்களத்தில் கவிதையும் எழுதியாச்சு. இப்பொழுது மக்கள் மனநிலையிலும் மாற்றங்கள் வந்து விட்டது முல்லை. நடந்து முடிந்த போராட்டம் தேவையான ஒன்றா? என்ற கேள்வியும், நினைப்பும் வந்துவிட்டது. வெளிநாட்டில இருந்து வந்து போற எங்கடையாக்களுக்கும் நல்ல சந்தோசம்.

முன்ன இல்லாத சாதிய வேறுபாடுகளும், சீதனப் பிரச்சனைகளும் மீண்டும் துளிர் விட்டு மரமாகிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் போராளிகள் இன்றைய சமுதாய எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டு, தீண்டத் தகாத தாழ்ந்த சாதியென ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். சில முன்னாள் போராளிகள் ஏதேதோ வருத்தங்கள் வந்து திடீரென்று சாகுறாங்க. அவங்கட குடும்பங்களைப் பற்றிக் கவலைப் பட இங்க ஆட்களில்ல. இன்னும் சில முன்னாள் போராளிகள் பதிவில்லாத இராணுவ போலீஸ் சீருடைகளுக்குள் புகுந்து கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். புட்டும் கத்தரிக்காய் குழம்பும் தின்று வளர்ந்த அவர்கள், சிங்களத்தின் எலும்புத் துண்டுகளைத்தான் இப்போது விரும்பி உண்ணுகிறார்கள்.
கடற்கரைகள், படுக்கைகள், வாடிகள் எல்லாம் சிங்கள மயம். காடுகளெங்கும் சிங்களக் குடியேற்றங்கள். பெருந்தெருக்களும் சிங்களர் வசம். சந்திகளிலும், வீதிகளின் கரைகளிலும் புன்னகை பூத்து சிரித்து நின்ற மாவீரர் உருவங்கள் உருமாறி, கண்ணை மூடி பால்குடிக்கும் புத்தர் பெருமானது சிலைகளும், அவர் வெயிலுக்கு நிழலென அரசமரங்களுமாக உருப்பெற்றுவிட்டன. ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தர் மாறிவிட்டார். மாவீரர் கீதங்களும், எழுச்சிப் பாடல்களும் தவழ்ந்த இந்தக் காற்றலைகளில் இன்று விகாரைகளின் பிரித் ஓசைகள் நிறைந்துவிட்டன. எங்கள் மக்களும் புத்தர் சிலைகள் போல கண்களை மூடி வாழப் பழகிவிட்டார்கள். முள்ளந்தண்டில்லாத தமிழர்கள்தான் என்று பார்த்தால் மூளையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

புரியாத மொழிகளில் கடைப் பெயர்களும், விளம்பரங்களும் காட்சிக்கு இருக்கின்றன. வாங்கும் பொருள்களில் தமிழ் இருக்குதோ இல்லையோ சீனம் இருக்கிறது. நீங்கள் இல்லாத இடத்தை நிரப்ப, உள்ளூரிலும் வெளியூரிலும் பலர் முயல்கிறார்கள். உங்கள் நிழல்கள் இல்லாத இந்த தருணம் பார்த்து, அரபி கூட வந்து தாண்டவம் ஆடுது. இளந்தலைமுறை கைகளில் அதிநவீன செல்பேசிகள் தாராளாமாகிட்டுது. தமிழருக்கு கலாசாரம் என்கின்ற ஒன்று தேவைதானா? என்ற கேள்வி தோன்றியது ஆச்சரியமில்லை. வீரமும் விவேகமும் முளைவிட்டிருந்த எங்கள் சந்ததி இன்று களவும், போதையும், காதலும், காமமும், வெட்டும் கொத்தும் என்றலைகிறார்கள். இறுதியில் மக்கள் விரும்பியபடியே அவர்கள் வாழ்க்கை கிடைத்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

சப்பை மூஞ்சிக் காரனும், வடக்கத்தையானும் போட்டிபோட்டுக் கொண்டு அபிவிருத்தி என்று வந்து நிக்கிறாங்கள். அவர்கள் போடுகிற பெரிய சாலைகளும், தண்டவாளப் பாதைகளும்தான் மக்களுக்குப் பெரிதாகிப் போய்விட்டன. கடிவாளம் இல்லாமல் போனதாக நினைக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் பண மோகத்திலும், பதவி ஆசையிலும் தமக்குள்ளேயே பிடுங்கிக் கொள்கிறார்கள். வெளிநாடுகளிலும் போராட்டம் நடத்துகிறோம் என்கின்றவர்களின் அறிக்கைகளும் அப்பப்போ வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்நாடு திருட்டு அரசியல் வாதிகளும் எம்மை வைத்து இப்பவும் பிழைத்துக் கொள்கிறார்கள். இவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

முல்லை! இப்பொழுதெல்லாம் தமிழ்ப் பெண்களின் கண்ணீர் தொலைக்காட்சி தொடர் நாடகங்களுக்கு மட்டுமே பிரயோசனப்படுது. வெங்காயம் வெட்டினால் கூட கண்ணீர் வருதில்ல. பெண்கள் பழையபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவார்களோ என்கிற அச்சம் துளிர் விடுது. மீண்டும் தமிழர்கள் பொருள்கள் சேர்க்கத் தொடங்கிட்டாங்க. மோட்டார்சைக்கிள் இல்லாத இளைஞர்களை காண்பதரிது. கடலேறி அவுஸ்ரேலியா போறம் என்று போனவர்கள் கனபேரின் நிலை எங்கென்றே தெரியாது. சாகப் பயந்து விட்டோடி இப்போ வாழ்க்கையிழந்து நடுவில கனபேர் தத்தளிக்கிறாங்க. அதையும் தாண்டி வெளிநாடு போன பலருடைய அலப்பறைகள் தங்க முடியல.

வாழ்க்கைச் செலவுகள் கைமீறிப் போய் விட்டன. வட்டிப் பிரச்சனை, நுண்கடன் தொல்லைகள் என்று தற்கொலையும், குடும்பக் கட்டமைப்புச் சீரழிவும் என்று புதுசா தோன்றியிருக்கின்றன. அங்கங்க காட்டுப் பற்றைகள், சிதஞ்ச வீடுகள், மலக்குழிகளில் இருந்து ஆண் பெண்களின் சடலங்கள் மீட்கப் படுவது சாதாரணமாகிவிட்டது. திருமணமாகாமலேயே சிலர் பிள்ளைகளை பெற்றெடுக்கிறார்கள். மூச்சற்ற பிண்டங்களாகக் கூட சில கைக்குழந்தைகள் மதகுகள் ஓரம் கண்டெடுக்கப்படுகின்றன. இப்படியான ஒரு சமூகத் தோற்றத்தை நாங்கள் கனவிலும் கூட நினச்சுப் பார்த்ததில்லை முல்லை!

எங்கட மண்ணில் இப்ப இருக்கிற மாற்றங்களை பார்க்கிறபோது, உயிரைப் பணயம் வச்சு போராடிய உங்கள எல்லாரையும் நினச்சு பரிதாபப் படுறன். உயிரக் கொடுத்த மாவீரர்களை நினச்சு கவலைப்படுறன். தன்ர குடும்பத்தையும் சந்ததியையும் பலிகொடுத்த அவரையும் நினச்சு வேதனைப் படுறன். நீங்களும் வாழாமல், உங்கட கனவையும் அடைய முடியாமல் அந்தரிச்சு போன உங்கட வாழ்க்கையையும், ஆயுளையும் நினைச்சாலே மண்டைதான் சூடாகுது. இதெல்லாம் நான் உனக்குச் சொல்லித்தான் தெரியவேணும் என்றில்லை. நீயே அன்றாட செய்திகளை பார்த்து தெரிஞ்சிருப்பாய். சிலவேளை உங்கட கனவு போல, எதோ ஒரு காலத்தில எங்களுக்கென்று மண் கிடைச்சால் கூட, அங்கயும் சிங்களவர்கள்தான் அதிகம் வாழுவார்கள் என்று நினைக்கிறன்.

ஆ.. முல்லை, இன்னொன்று கட்டாயம் சொல்லவேணும். இங்க கனபேர் உங்கட ஆட்கள் மீண்டும் வரவேணும், திருப்பி வரவேணும், கனக்க செய்ய வேணும் என்று நினைக்கிறாங்கள். கதைச்சுக் கொண்டும் திரியிறாங்கள். தயவு செய்து ஒருவரையும் இங்கால பக்கம் வந்திற வேணாம் என்று மட்டும் சொல்லிவிடு! எங்கயாவது கண்காணா தேசத்துல போயாவது மிச்ச வாழ்க்கையை நிம்மதியாக, கொஞ்சம் உங்களுக்காக வாழ்ந்துவிட்டு போகச்சொல்லு. இங்க வந்து பார்த்தால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினச்சு மூச்சடைச்சே செத்துப் போயிடுவாங்கள். உங்களுக்காக நிக்கற ஆட்களைவிட, பாழ்படுவான்கள் வந்திட்டாங்கள் என்று காட்டிக் கொடுக்கத்தான் கனபேர் அலையிறங்கள். சரி அதைவிடு அற்புதா! இதைப்பற்றிக் கதைச்சால் வேதனைதான் மிஞ்சும்.

பல அண்ணன்மார்களின் விருப்பு வெறுப்புகள், ஆசைகள், இலட்சியங்கள் ஏன் காதல் விடயங்களின் அடிநுனி எல்லாத்தயும் அறிந்திருப்பது அவர்களின் பிரியமுள்ள தங்கைமார்தான். அம்மாப்பாவிடம் மறைத்தாலும் அன்புத் தங்கைகளிடம் மறைக்கவே முடியாது. எப்படியோ அவர்களின் நுனிமூக்கு வேர்த்துவிடும். தங்கைகள் இல்லாத அண்ணன்மாரை நினைத்து நான் கவலைப்படுறன். என்னை நினைத்து பொறாமைப்பட்ட நண்பர்களும் எனக்கிருந்தவங்கள் அற்புதா! அண்ணிமாரைத் தெரிவு செய்வதில் தங்கைமாருக்கே அதிக அக்கறையும், விருப்பமும் உண்டு. ஏனென்றால் அம்மாவுக்குப் பின்னர் அண்ணிதான் என்று தங்கைகளுக்குப் புரிந்திருக்கிறது.

எனக்கும் நீ அப்படியான ஒரு தங்கைதான். நீ திருடித் தரக் கேட்டு நான் பறித்துத் தந்த வேலு மாஸ்டர் வீட்டு அந்த கிளிச்சொண்டு மாமரம், செல்லடியில குத்துயிராக்கிடந்து, இப்ப துளிர்விட்டு மீண்டும் காச்சுக் கிடக்குது அற்புதா! போறவாற நேரத்தில அதைப் பார்க்கும்போது என்னவோ ஏதோபோல ஆகிவிடுகிறது எனக்கு. கண்களைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சின்ன வயசில நீ மழையில் நனைந்து விளையாடிவிட்டு நாங்கள் தள்ளிவிட்டதாகக் கூறி அப்பாவிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் உன் குறும்புகளை, மழைத் துளிகள் பட்டெழும் மண்வாசணை போல உன் நினைவுகளை, மழைநாட்கள் வந்து என்னை ஒடுங்கிப் போகச் செய்கின்றன. எனக்கும் அண்ணாக்கும் நீ குசினியில இருந்து திருடிக் கொண்டு வரும் பலகாரத்தின் வாசனைகள் இன்றும் என் நாசியிலேயே ஒட்டிக் கிடக்கின்றன.

அற்புதா! என்ன அதிசயம் என்றால் அம்மாக்கும், உனக்கும் இருந்த அதே வலப்பக்க நாடி மச்சம், அற்புதமுல்லைக்கும் இருக்குதடா. அவள் சரியாக உன்னைப் போலவே என்று உன் சின்னண்ணியார் அடிக்கடி சொல்லுவாள். அப்பொழுது என்மனதெங்கும் பரவும் ஆத்மசந்தோசம், நீ திரும்ப எம்மிடம் வந்தால் எப்படியிருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கிவிடும். எப்போது வருவாய் என மனம் பரபரக்கத் தொடங்கி விடும்.

முல்லை! இங்கே வராமல் போனாலும் கூட எங்க இருந்தாலும் நல்லாரோக்கியத்தோடு இரு. நீண்ட ஆயுள் உனக்குக் கிடைக்கட்டும். எதனையும் தாங்கும் மனதையும், உடலையும் பெறக்கூடிய நம்பிக்கைகளை மட்டும் எப்பொழுதும் கைவிட்டிடாத. உன்னை வளர்த்தவங்களை எப்பவும் மனதில் வை. உனக்குள்ளே ஒரு புயல்தான் ஒளிந்திருந்தது என்பதை நாங்கள் அறிவோம். உன்னால் முடியாததென்று எதுவும் இருக்காது என்றும் நம்புகிறோம். அண்ணாவைக் கண்டால் அவரையும் சேர்த்துக் கூட்டிவா. தங்கா! என்போன்ற பலர் தங்கள் உறவுகளுக்காகக் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைவருடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்ற நம்பிக்கை என்கிற ஒன்றைத் தவிர வேறெதுவும் எம்மிடம் மிச்சமில்லை.

அற்புதாவாக வருவாயா? அல்லது முல்லையாக வருவாயா? என்று எனக்குத் தெரியாது. எப்படி வந்தாலும் அற்புதமுல்லை உனக்காகக் காத்திருக்கிறாள் என்பதையாவது நினைவில் கொள்.

உனது வரவுக்காக காத்திருக்கும் உன் அண்ணியோடு பிரியமுள்ள அண்ணன்.