அப்பனைத் தவறவிட்டான்
அசுரர்களால் அன்பையும்
தொலைத்துவிட்டான் 
இப்போதெல்லாம் அவன்
அழகான வாழ்வாக ஒன்றை
மட்டும் மிச்சம் கொண்டான்

இருமிக் களைத்துச் சோர்ந்து போகும் 
பெற்றவளை அயராது உழைத்தாலும் 
கண்ணுக்கள் சுமந்து நிற்பான் 
மருந்தும் மாத்திரையும்
மூச்சோடு கலக்க என்று ஒரு 
குப்பி காற்றழுத்தி

கொஞ்ச நாட்களாக 
இப்படித்தான் கழிந்தது 
அவர்களின் அன்பான 
வாழ்நாள்கள். 
அன்றொருநாள் 
அவசர வைத்திய மனை 
அவர்களை அணைத்துக் கொண்டது

அடுத்து இருமிய அவன் தாயை
ஆறேழு நாள்களாக
ஆஸ்த்துமா எனச்சொல்லி 
அவள் உடம்பில் பல நிற குழாய்களால் 
அலங்காரம் செய்து 
பரிசோதனைகள் செய்தார் மருத்துவர்

ஐயம் ஒன்றைக் கண்டார்
என்னவோ இருப்பதாய் 
உணர்ந்து விழி பெருக்கு 
கூர்ந்து அவதானித்து 
இனங்கண்ட நோயினை 
அவனுக்குரைத்து நெஞ்சைப் பிழிந்தார்
நுரையீரல் வழியில் ஒரு 
புகை படிவம் என்றார்

புண்ணியவதியோ புகைபிடிப்பவளல்ல
பூர்வீகத்திலும் அது எவருக்கும் இல்லை. 
புரியாத புதிராக இருந்தவளுக்கு
புரிந்தது விடையொன்று

முடிந்து விட்டதெனக் மூச்சடைக்க குழறி வரும்
முள்ளிவாய்க்கால்ப் பேரழிவில்
தொடர்ந்து வந்த தொடரி இது 
கொத்துக் கொத்துக் குண்டினை உதிர்த்த
கொடூரமான வேளைதனில் 
மூச்செடுத்த நச்சுக் காற்று 
மூச்சுக்குழாயில் படிந்தது என்று

யதார்த்தம் என்று எண்ணி 
நாள்களையவள் கடத்திட்டாலும் 
தசாப்தம் ஒன்று போயினும்
தாக்கம் இன்னும் போகாது 
உடம்பில் தங்கிவிட்ட துயரம் இன்று

எத்தனையோ உறவுகளை இழந்து
இருக்குமுயிரைக் காக்க 
இத்துணை தூரம் வந்து 
இப்படியும் ஒரு வகை 
இடுக்கண் இவளுக்கு

இன்னமும் எத்தனை அகநோய்கள்
சன்னமாய்த் துளைக்கும் குறைநோய்கள்
பசி பட்டினியால் துடிக்கும் வதை நோய்கள்
வாழ்வாதாரம் தேடி தவிக்கும் வலி நோய்கள்

விழி நீரைச்சொரிந்து விக்கி விக்கி அழுது-வாழ
வழிதேடி வந்தும் வலம் வரும் இவ்வவலம் -பாவம்
பழியெல்லாம் பலிக்கடாவாக்கி எம்மைச் – சூழ
கழிந்த நாள்களெல்லாம் கடலலையாய்- மூச்செடுக்க முடியாது முடங்கிவிட்ட சோகம்

மஞ்சு மோகன்