2002 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு நான் பணிக்காக சேர்ந்த போது, முதலில் அங்கே எனக்கு பத்திரிகை வடிமைப்புப் பணியே கொடுக்கப்பட்டது. அதனால் கணினிப்பகுதியிலேயே பணியாற்றத் தொடங்கி இருந்தேன். ஆனாலும் எனக்கு செய்திப்பிரிவில் பணியாற்ற வேண்டும் என்று இருந்த ஆர்வம் என்னை குறுகிய கால இடைவெளிக்குள் செய்திப்பிரிவுக்கு மாற்றி விட்டிருந்தது. அதன் பின்னரே நான் அலுவலகச் செய்தியாளராக ஈழநாதத்தில் பணியைத் தொடங்கினேன்.

அக்காலத்தில் வன்னியின் அனைத்து பாகங்களிலும் செய்திகளை சேகரிப்பதற்காக எம்மில் பலர் வன்னி முழுவதிற்கும் பயணிக்க வேண்டி இருந்தது. அதில் நானும் ஒருவனாக பணியாற்றினேன். அந்த நேரம் தாயகப் பிரதேசம் எங்கும் வியாபித்திருந்த ஆள ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்தும், வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இருந்தும் எம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரும் ஆபத்திருந்தது.

இது எங்களுக்கு மட்டுமல்ல தாயகம் எங்குமே இந்த ஆபத்து நிறைந்து கிடந்தது. அதுவும் பெருங்காடுகள் அடங்கிய வீதிகளால் பயணிக்கும் அனைவரைக்கும் அச்சம் நிறைந்த பயணமாகவே இருக்கும். ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த இலங்கைப்படைகள் விடுதலைப்புலிகளின் சீருடையில் இத்தாக்குதல்களை நடாத்துவதால், பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. அது மிகப்பெரிய சவலாகவும் அமைந்திருந்தது. இக்காலங்களில் உயிராபத்தையும் உணராது நானும் என் சக ஊடகவியலாளர்ளும் பணியாற்றினோம். உண்மையில் போர்க்கால ஊடகப்பணி என்பது ஆபத்துக்கள் நிறைந்த பணி. ஆனாலும் மனம் நிறைவான பணி.

ஈழநாதம் மக்கள் நாளிதழின் இறுதிக் காலச் செயற்பாடுகள்?

இறுதிக் காலத்துக்கு எமது பணிகள் நகர்த்தப்படுவதற்கு முன்பு எமது பத்திரிகையில் பல மாற்றங்கள் வந்து பத்திரிக்கை புது மிடுக்குடன் வெளிவந்து கொண்டிருந்தது. நீண்டகாலமாக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் வந்து கொண்டிருந்த ஈழநாதம் குறித்த சில வருட இடைவெளியில் வண்ணப் பக்கங்களைக் கொண்ட பத்திரிகையாவும், மக்களுக்கு செல்லும் வகையில் வளர்ந்திருந்தது. இதற்காக எமது பத்திரிகையின் பொறுப்பு நிலையில் இருந்த பொறுப்பாளர்களும் பணியாளர்களும் உறுதியாக பணியாற்றினார்கள்.

2008 இல் உச்சகட்டத் தாக்குதல்கள் ஆரம்பித்து எமது பிரதேசங்கள் இலங்கைப் படைகள் வசம் ஆகிக்கொண்டு வந்த காலத்தில் , கிளிநொச்சில் இருந்து நாம் நகர வேண்டிய சூழல் ஏற்பட்டது, கிளிநொச்சியில் இருந்து தருமபுரத்திற்கு வந்து ஈழநாதம் நிறுவனம் இயங்கிய பொழுது ஓரளவு செயற்பாடுகளை செய்யக்கூடியமாதிரி இருந்தாலும் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதாவது ஒவ்வொரு இடங்களாக இடம்பெயரும் போது ஈழநாதத்தின் இயந்திரங்களையும் கணனிகள் மற்றும் அச்சுத்தாள்களையும் பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமப்பட்டது மல்லாமல் சில இடங்களில் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஈழநாதத்தின் முக்கிய இயந்திரங்களையும் இழக்க வேண்டி வந்தது. அதனால் எங்களின் வளங்கள் குறுகத் தொடங்கின.

அத்துடன் எரிபொருளினை பாதுகாப்பது என்பது மிகவும் சிரமம். இடம்பெயர்ந்து மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் எரிபொருட்களை களஞ்சியப்படுத்த முடியாமல் படையினர் முன்னேறிவரும் வேளையில் அதனை அப்படியே கைவிட்டு விட்டு அடுத்த இடத்தினை நோக்கி செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் இறுதியாக முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஈழநாதம் தனது ஊடகப் பணியை பலத்த சிரமங்கள் மத்தியிலும் செய்திருந்தது.

எப்போது பத்திரிகைப் பாதிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டது

19 பிப்ரவரி 1990 அன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளிவந்த எமது ஈழநாதம் நாளிதழ், பல்வேறு இடையூறுகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் பத்தொன்பது வருடங்கள் இடைவிடாத நாளிதழாக தொடர்ந்து வெளிவந்து, 2009 மே 10 அன்று தனது பணியினை முழுதாக நிறுத்திக் கொண்டது.

ஈழநாதப் பணியாளர்களின் அல்லது போர்க்கால ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள்?

நிச்சயமற்ற வாழ்வு. எப்போது சாவு வரும் என்றே தெரியாது. செய்திகள் சேகரிக்கும் அதேநேரம் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக நகர்த்தவேண்டும். மிகக்குறைந்தளவான பணியாளர்களே போர்க்காலத்தில் பணியாற்றியிருந்த வேளையில் ஒருவர் பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. குறிப்பாக என்னை எடுத்துக் கொண்டால் நானே செய்திகள் சேகரிப்பது, புகைப் படங்கள் எடுப்பது, கணனியில் வடிவமைப்புப் பணியை செய்வது, பத்திரிகை விநியோகம் செய்வது, படையினர் முன்னேறிவரும் வேளைகளில் பாதுகாப்பாக இயந்திரங்களை நகர்த்துவது என பணியாற்ற வேண்டி இருந்தது. குறித்த சிலரே பணியில் இருந்ததால், பல பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக இருந்தோம்.

நீங்கள் இனவழிப்புப் போரின் கண்கண்ட சாட்சி அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புப் படை என்ன செய்தது?

  • போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியமை
  • படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றவர்களை பிடித்துபணயமாக படையினரின் வேலிகளின் அருகில் வைத்திருத்தமை.
  • அவர்களை முன் நகர்த்திக் கொண்டு பின்னால் நகர்ந்து வந்து விடுதலைப்புலிகளின் படையணிகள் மீது தாக்குதல் தொடுத்தமை.
  • முன்னேறி வந்த படையினர் பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசி கொன்றழித்தமை
  • பாதுகாப்பு வலய பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையினை முற்றுகையிட்ட படையினர் அங்கிருந்த காயமடைந்தவர்களை சுட்டுப்படுகொலை செய்தமை
  • அத்துடன் துப்பாக்கியால் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து மக்களை நோக்கி குறிபார்த்து சுடுவதன் மூலமும் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
  • வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் – உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன். முள்ளிவாய்க்கால் மற்றும் இறுதியாக, முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனை போன்ற வற்றின் மீது நேரடித்தாக்குதல்களை செய்ததை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
  • இதில் கொடுமை என்னவென்றால், வைத்தியசாலைகளில் ஏற்கனவே படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற பலர் மீண்டும் தாக்குதல் நடாத்தியதில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
  • இதில் முக்கியமாக சாட்சியம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். நான் படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிய முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்த போது, 29.04.2009 மாலை கடற்படையினரும் தரைப்படையினரும் இணைந்து தாக்குதல் நடாத்தியதில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெரும் சேதத்துக்கு உள்ளானது. நான் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்பட்டிருந்தேன். அந்தத் தாக்குதலினால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை எனிலும் எனது நெஞ்சுக் காயம் பயங்கரமாக வலித்தது. அவ்விடத்தில் மீண்டும் அடி பட்டதினால் வலியை தாங்க முடியாது இருந்தது. இருந்தும் நான் தலையை நிமிர்த்தி பார்த்த போது நான் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் இருந்த பலர் சாவடைந்திருந்தனர்.

இதற்கான ஆதாரங்களை நீங்கள் ஒரு ஊடகவியலாளனாக சேகரித்துள்ளீர்களா ?

நிச்சயமாக, நான் பணியில் காயமடைந்ததினால் பல ஆவணங்கள் தவறி இருந்தாலும் பெரும்பாலானவை இப்போதும் இருக்கின்றது. போரில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை மக்கள் மீது வீசி கொன்றழித்ததை நேரில் கண்டிருக்கின்றேன். அதனுடைய செய்தி மற்றும் ஒளிப்படங்களை சேகரித்தும் வைத்திருக்கின்றேன்.

இனவழிப்புத் தாக்குதல்களை அரச படைகள் செய்த காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணி எவ்வாறிருந்தது?

இது கொஞ்சம் விரிவாகவே சொல்லவேண்டும். தனியாக ஒரு பகுதியாகவே இப்பணியினை எழுதவேண்டும். முழுமையாக இதில் சொல்லமுடியாது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியினை செய்திருந்தார்கள். ஒவ்வொரு எறிகணைகளும் மக்களின் உயிரைக்குடிக்கும். அதேவேளை பலரை காயப்படுத்தியுள்ள நிலையில் அவர்களை தூக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தொடக்கம் இறந்தவர்களை புதைக்கும் நடவடிக்கையினையும் செய்து வந்திருந்தனர். உண்மையில் தொற்று நோய் வராமல் அல்லது குறைவாக இருந்தமைக்கு இவர்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது.

தங்களின் குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திக் கொண்டு மக்களுக்கு உதவி புரிவது என்பது பலராலும் இயலாத காரியம். அவ்வேளை சிறிலங்கா அரசின் உணவுத்தடையிலும் பொருளாதாரத் தடையிலும் மக்களுக்காக பசியாற்றும் பணியினை செய்தமையை அங்கிருந்த எவரும் மறந்துவிடமாட்டார்கள். கஞ்சி வழங்கல் சேவையினை ஒவ்வொரு இடங்களிலும் நிறுவி மக்களின் பசியினை போக்குவதற்கு அயராது உழைத்திருக்கின்றார்கள்.

2007 ஆம் ஆண்டு மன்னாரில் தொடங்கிய யுத்தம். முள்ளிவாய்க்கால் வரைக்குமான இவர்களின் அயராத உழைப்பினை நேரில் கண்டிக்கின்றேன். இடம்பெயரும் மக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதற்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் இலவசமாக உதவி செய்திருந்தது. இந்நிறுவனத்தின் தொண்டர்களை பெரிதும் மதிப்புமிக்கதாகவே நான் கருதுகிறேன். யுத்தம் எங்களின் வாழ்வை நொடிநொடியாக துவம்சம் செய்து கொண்டிருக்கும் வேளையில் கூட அயராது மக்களுக்கான மனிதாபிமான பணியினை செய்து முடித்தமையை இங்கே நினைவு படுத்துகின்றேன்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றி ?

உண்மையில், அந்த நிறுவங்கள் பற்றி பேசவே மனம் வெறுக்கிறது. இலங்கை அரசு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக போர் பிரதேசங்களை விட்டு வெளியேறும் படி கூறிய போது, இங்கே ஒரு இனவழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்து வெளியேறினார்கள். எமது மக்கள் எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் நடப்பதை, நடக்கப்போவதை புரிய வைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர்ந்த ஐநா சார்ந்த நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் வெளியேறின. உண்மையில் இந்த நிறுவங்கள் வெளியேற்றப்பட்டதன் பின்பே பாரிய அளவிலான போரியல் சட்டங்களுக்கு முரணாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது இலங்கை அரசு.

உங்களின் ஊடகப்பணியில் அதி துயர சம்பவமாக எதை கருதுவீர்கள்?

என் நண்பனின் இழப்பு. என் அருகிலேயே உயிரைவிட்ட அந்த நாள் என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ஈழநாதம் பத்திரிகையின் இயந்திரப்பகுதியில் பணியாற்றி வந்தவர் சுகந்தன் என்றழைப்படும் சுசிபரன். 25.04.2009 அன்று நானும் மோகன் அண்ணையும் சுகந்தனும் வலைஞர்மடம் சென்று கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினரின் சினைப்பர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நான செய்தி சேகரிக்கச் செல்லும் இடங்களுக்கு என்னுடன் சுகந்தனும் வருவதுண்டு. அங்கு காயமடைந்த பொதுமக்களை எப்படியாவது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடிப்பவர்களில் சுகந்தனும் ஒருவர். அன்று என் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டமை மிகுந்த வேதனையான விடயம்.

துப்பாக்கி ரவையால் சுகந்தன் தாக்கப்பட்டு விழும் போது, சுகந்தன் உயிருடன் இருப்பார் என நினைத்தே அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் சுகந்தன் என் கண் முன்னே சாவடைந்திருந்தான். அவனைக் காப்பாற்றும் முயற்சியின் போது தான் நான் படுகாயமடைந்தேன். நான் படுகாயமடைந்தாலும் எனது நண்பன் உயிருடன் இருந்திருந்தால் மனதுக்கு நிம்மதியாக இருந்திருக்கும், இக்காயத்தைப் பற்றி கவலை கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அவன் என்னை விட்டு சென்று விட்டான். ஆறாத வடுக்களாக இன்றும் சில இரும்புத்துணடுகள் என் உடலில் காணப்படுகிறது. சுகந்தன் இல்லாத தருணங்கள் மட்டுமே வலியைத் தருகிறது.

ஈழநாத பணியாளர் சுகந்தன்

சிங்களப்படையின் தடைசெய்யப்பட்ட ஆயுதப் பயன்பாட்டை உறுதி செய்யும் ஆவணம் எதாவது உண்டா?

ஆம்.

‪2008 -11.29 அன்று அதிகாலை கல்லாறு கிராமம் மீதான கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல் செய்தியினை சேகரித்திருந்தேன். காலையிலேயே கிளஸ்ரர் குண்டு தாக்குதல் தான் என்று புலிகளால் அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனுடைய ஒளிப்படங்கள் என்னிடம் இருக்கின்றது. அன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை விரிவாக இதில் சொல்ல விரும்புகிறேன். ‬

“அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாசம் 2008 ஆம் ஆண்டு. அதிகாலை 1.35 மணியிருக்கும். மக்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான். அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எம்மைத் தாண்டி சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. எழுந்து பார்த்த போது, எமது பிரதேசம் எங்கும் பகல் போல காட்சி தந்தது.

ஏனெனில் வந்த மிக ரக விமானங்கள் பரா வெளிச்சக் குண்டுகளையும் வீசி இருந்தன. அவ்வெளிச்சம் எமது பிரதேசம் எங்கும் சூரிய வெளிச்சத்தை போல காட்சி தந்தன விமானங்கள் மிக அருகில் எங்கயோ தான் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டன என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்த எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்ய வேணும் எண்டு நினைத்துக் கொண்டு, உந்துருளியில் விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனேன். நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிந்தது. அதுமட்டுமல்லாது , தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்த முகாம். இந்தத் தாக்குதலில மக்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்று என் மனம் சொல்லிக்கொண்டிருந்தது.

இரண்டாவது தடவை குண்டுத்தாக்குதல் நடக்கும் போது நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிருந்தேன். இந்தத் தாக்குதலில் மக்கள் காயப்பட்டிருந்தால் தருமபுரத்தில் இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குத் தான் கொண்டு வருவார்கள் என்று எண்ணி அங்கே போனேன். ஆனால் அங்கே எந்த காயக்காறரும் கொண்டு வரப்படவில்லை. அவசரமாக வரப்போகும் காயக்காறர்களை காப்பாற்றும் நோக்கில் மருத்துவர்களும் மருத்துவமனைப் பணியாளர்களும் தயாராக இருந்தார்கள். நான் திரும்பி தாக்குதல் நடந்த பக்கமாக செல்கின்றேன். அப்பொழுது எனது உந்துருளிக்கு மண்ணெண்ணெய் முடிந்து இடைவெளியில் நின்றுவிட்டது.

அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு உந்துருளி தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமா வந்தது. அவர்களிடமே நான் தாக்குதல் நடந்த இடத்தை பற்றி அறிந்து கொண்டேன். அதை விட அங்கே இருந்த மோசமான நிலையையும் உணர்ந்து கொண்டேன். எனது உந்துருளியின் இயங்கு நிலை இல்லாது போனதால் என்னால் தாக்குதல் நடந்த இடத்துக்கு உடனடியாக செல்ல முடியவில்லை. ஆனாலும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அங்கிருந்து அவசர உதவி வண்டிகளை அனுப்பி காயமடைந்தவர்களை மீட்டெடுத்தார்கள்.

நானும் என் நண்பனான இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய பத்திரிகையாளரான லோகீசனும் காலையில் தான் கல்லாறு பகுதிக்கு போனோம். அங்கே சில குண்டுகள் வெடித்து சிதிறிப் போய் கிடந்தன. ஆனால் ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால் நிலத்துக்குள் அரைவாசி இறங்கியிருந்தது. அவற்றை நாங்கள் படம் எடுத்த தருணத்தில் தான் அங்கே வந்திருத்த, ஊடகப்பிரிவுப் போராளிகளால் அந்தக் குண்டு தான் கொத்துக் குண்டு என்று அடையாளம் காட்டப்பட்டது. அங்கு தான் நான் முதன் முதலாக அவ்வகையான தடைசெய்யப்பட்ட குண்டைக் கண்டேன்.

கொத்துக்குண்டு முதல் வெடிப்பின் பின் பல குண்டுகளாக பிரியும் காட்சி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கண்கண்ட சாட்சியா நீங்கள்?

ஒம், தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த லோறன்ஸ் மற்றும் வவுனியா மாவட்ட கட்டளைப்பணியக தளபதிகளில் ஒருவரான கி.பாப்பா ஆகியோர், மே 17 ஆம் நாள் அன்று என் முன்னாலே வட்டுவாகல் ஊடாக படையினரின் பகுதிக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் காயமடைந்தவர்கள் என்பதால் நான் இருந்த பகுதியிலேயே படையினர் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. குறித்த சில நேரங்களில் என்னை மருத்துவமனைக்கு இராணுவம் அனுப்பி இருந்தது. அதனால் அவர்களுக்கு என்ன ஆனது என்பது எனக்குத் தெரியவில்லை.

ஊடகவியலாளர் என்ற வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அல்லது இனவழிப்புப் பற்றிய ஆவணங்கள் எதாவது செய்திருக்கிறீர்களா?

” Witness from the war zone “என்ற ஆவண நூல் ஒன்றினைச் செய்து வருகின்றேன். விரைவில் வெளியிட இருக்கின்றேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமநேரத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இப்போது இருக்கின்றேன். அதைவிட போரில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல், மற்றும் வைத்தியசாலை மீதான தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண் கண்ட சாட்சியாளராக பகிரங்கப்படுத்தியிருக்கின்றேன்.

இனவழிப்புத் தாக்குதல்களில் சாகடிக்கப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி?

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு பல ஊடக பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். தராக்கி சிவராம், நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜன், சுதாகரன் என பல ஊடகப் பணியாளர்கள் சாகடிக்கப்பட்டிருந்தார்கள். அதைப்போலவே இறுதி சண்டைகளின் உக்கிர காலத்தில் அதாவது 2009 ஆம் ஆண்டில் தேவிபுரம் பகுதியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் எறிகணைத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டிருந்தார். போரின் உக்கிரத்தை சர்வதேசமெங்கும் கொண்டு செல்லவேண்டும் என்று அயராது உழைத்தவரகளில் அவரும் ஒருவர் என்பது இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இதை விட தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஊடகப் போராளியான இசைப்பிரியாவின் படுகொலை இனவழிப்பின் உச்சம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இவ்வாறு பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், பலர் வலிந்து காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் குரல் /தமிழீழ வானொலிப் பொறுப்பாளார் தமிழன்பன் (ஜவான்) மற்றும் செய்தியாசிரியர் இறைவன் (தவபாலன் ) ஆகிய இருவரும் தாயக விடுதலைப் போர் முள்ளிவாய்க்காலில் மௌனித்த போது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி இன்று வரை தகவல் தெரியவில்லை. இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இனவழிப்பின் ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன் அடுத்த தலைமுறைக்கு எம் போராட்டத்தின் நியாயப்பாட்டையும் எம்மினம் மீது இலங்கை அரசு செய்த போர் வெறியின் தன்மைகளையும் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள்.

இதே நேரம் எமது ஈழநாத ஊடகப்பணியாளர்களையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

மகேஸ்வரன், சுகந்தன், அன்ரனி, தர்சன், அன்ரன் பெனடிக், மேரி, டென்சி ஆகிய எமது பணியாளார்களை இனவழிப்பில் பறி கொடுத்துள்ளது ஈழநாதம் நாளிதழ் குடும்பம்.

சிறுவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி?

கருவறையில் இருந்த குழந்தையைக்கூட இனவழிப்பு விட்டுவைக்கவில்லை. அதற்கான ஆதாரத்தினை எனது ஒளிப்படம் ஒன்றில் காணலாம். இறுதிக் காலத்தில் எமது மக்கள் பட்டினியால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்ட கொடிய நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் சந்தித்தது. பசி என்பது போரை விட கொடியது. ஆபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் கஞ்சி எங்கே குடுக்கிறார்களோ அங்கே பல மணித்தியாலங்கள் காத்திருந்து பசியாறினார்கள்.

பசியோடு கஞ்சிக்காக வரிசையில் நிற்கும் போதெல்லாம் படையினரால் ஏவப்படும் எறிகணைகள் சிறுவர்களின் உயிரை குடிக்கும். அந்த இருண்ட நாட்கள் மீண்டும் ஒரு போதும் வரக்கூடாது. குறிப்பாக பொக்கணைப் பகுதியில் குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்ற 40 பேருக்கு மேலானவர்கள் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அதில் கர்ப்பிணிப் பெண்களும், பச்சிளம் பாலகர்களும் சிறுவர்களுமே அடங்கி இருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால், ஒரு ஊடகவியலாளனாக உங்களுக்கு எதை சொல்லிச் சென்றுள்ளது?

நிறைய விடயங்களை நிச்சயமாக விட்டுச் சென்றுள்ளது. தொடர்ந்தும் எனது ஊடகப்பணியில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டே சென்றுள்ளது. அதன் செய்தியே ” Witness from the war zone ” என்ற எனது ஆவணப் பொத்தகம். இதனூடாக முள்ளிவாய்க்கால் எனக்குச் சொல்லிச்சென்ற செய்தி அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் என்று நம்புகிறேன்.

போர்க் கால ஊடகவியலாளராக இப்போது பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அரச அதிகாரம் மிரட்டும், கைது செய்யும், வலிந்து காணாமல் ஆக்கும், ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆணி வேரை ஆட்டம் காண வைக்கும் அதிகாரம் ஊடகத் துறைக்கு இருக்கின்றது என்பதை மனதில் வையுங்கள். துணிந்து உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறுதி வரை ஊடகப்பணியாற்றிய விடுதலைப்புலிகளின் ஊடகத்துறையை சார்ந்த போராளிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆவணங்கள் மட்டுமே இன்று இனவழிப்பின் சாட்சியங்களாக நின்று இலங்கை அரசுக்கு பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றது.

இது மட்டுமே போர்க் காலத்தில் நான் பெற்ற அனுபவம். இதைத்தான் உங்களுக்கு இப்போது என்னால் கூற முடியும்.

எதையும் எதிர்த்துத் துணிந்து நில்லுங்கள்…

புலர்வுக்காக நேர்கண்டது இ.இ.கவிமகன்
நாள்: 17.05.2020
ஒப்பு நோக்கியது : மஞ்சு மோகன்