மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பே இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் எமது பதவி விலகல் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தோம். எந்த சூழ்நிலைமையில் நாம் பதவி விலக நேர்ந்தது என்பதை அவருக்கு தெரியப்படுத்தினோம்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடிய ஒரு நிலைமையே காணப்பட்டது. குறிப்பாக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் முஸ்லிம் மக்கள் பாரிய நெருடிக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது.

எமது பதவி விலகல் இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தலை ஏற்பட்டுத்திவிடக் கூடாது என்று இதன் போது எதிர்கட்சி தலைவர் கேட்டுக் கொண்டார். நாம் அதை ஏற்றுக் கொள்கின்றோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு நாங்கள் இடங்கொடுக்கப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறியுள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ முன்னின்று பேச வேண்டும். அதனூடாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு அவர் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்த அவர், இன்று எம்முடன் கலந்துரையாடிய விடயங்களை ஆதாரமாகக் கொண்டு அறிக்கையொன்றை விடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.