இன்று காலை அவசரகாலச் சட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழீழ தேசியத் தலைவரின் படங்கள் மற்றும் மாவீரர்களது படங்கள் வைத்திருந்ததாக கூறி யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது. அக் கருத்தில் தாம் என்றும் மாணவர்களுக்கு உதவியாக கூட இருப்போம் என்றும் பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் கைதாகி இருக்கும் இம் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கருத்தறிக்கை பின்னே இணைக்கப்பட்டுள்ளது.

இன்றய தினம்  யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல்க்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நுழைந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அப்பாவி மாணவர்கள் இருவரை கைது செய்து பொய்க்குற்றச்சாட்டினை சுமத்தி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலீசார் தமது பங்கிற்கு அக்குற்றச்சாட்டுக்களுக்கு மேலும் மெருகூட்டி ஊதிப்பெருப்பித்து மாணவர்களை எப்படியாவது பயங்கரவாதிகளாக்கிவிட வேண்டுமென்பதில் குறியாக இருந்து  குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். 

காலையிலிருந்து இரவு எட்டுமணிவரை வேண்டுமென்றே இழுத்தடித்த பின்னர் இரவு 8.45 மணியளவில் மாணவர்கள் இருவரையும் யாழ் நீதவான் நீதி மன்ற நீதிபதி உயர்திரு ஆரோக்கியசாமி பீற்றர்போல் அவளது இல்லத்தில் நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்தினர். 

அங்கு பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணிகளான குமாரவடிவேல் குருபரன் கனகரட்னம் சுகாஸ் சுயந்தன் ஆகியோர் பிணை கோரியிருந்தனர். 

எனினும் பொலீசார் மாணவர்கள் மீது அபாண்டமான பொய்களைச் சோடித்து பிணை வழங்க ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதனால்  

யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நவரத்தினம் திவாகரன்

செயலாளர் சிவராசா பவில்ராஜ் ஆகிய இருவரையும் எதிர்வரும் 16-05-2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மற்றும் யாழ் மருத்துவபீட தேநீர்ச்சாலை நடத்துனர் பொன்னம்பலம் ஞானவேல் அவர்கள் மீதும் பொய்க்குற்றச்சாட்டுக்களை பதிந்துள்ள பொலீசார் அவரை தொடர்ந்தும் பொலீஸ்நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 

இராணுவத்தினரதும் பொலீசாரதும் இனவெறிச் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஸ்ரீலங்கா இராணுவமோ பொலீசாரோ ஸ்ரீலங்கா அரசின் சட்டங்களோ தமிழ் மக்களின் நலன்களுக்கானது அல்ல என்பது மீண்டும் பட்டவர்தனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 மாணவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் அவர்களது விடுதலைக்காக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு வழங்கும்.