மாலதி ! மானத் தமிழ் மறத்தி
மாண்டு போகா வீரத் தீ
பாரதி பாட்டிலே வடித்த தீ
பிரபாகரன் தீரத்தில் தீட்டிய தீ
மடந்தையர் மடமைகள் எரித்த தீ
பெண் சரிநிகர் எனும் பறை எழுப்பிய தீ
மாலதி எம்முள்ளே மூட்டிய தீ
மண் விடுதலை பெறும் வரை மூசிடும் தீ

பெண் பதுமையில் புயலினையிருத்தி
சுதந்திரச் சிறகுகள் அகலவே உயர்த்தி
மனம் சிறையுண்ட பயங்களைத் துரத்தி
புதுமைப் பெண்ணாய் தலைகளை நிமிர்த்தி
அடுப்பங்கரையில் மூட்டடி தீ’ யென்றிகழ்ந்தவர்
பழங் கதைகளைப் பாடையில் கொளுத்தி
தமிழீழப் பெண்களை முன்னிலைப்படுத்தி
எழுந்தனள் மன்னாரில் பேதுரு புத்திரி

சொந்த நிலத்திலே இருந்தவர் துரத்தி
அடிமையாய் நடத்தி சிறையினுள் வருத்தி
சொத்து மனைகள் எல்லாமும் கொளுத்தி
துயரினுள் அமிழ்த்தி கொதி தாரினுள் கிடத்தி
துடித்த தமிழர் நிலமெங்கனும் குருதி
குடித்திட்ட காடையர் படைகளை வீழ்த்தி
அழித்திடவே பிறந்த கார்த்திகைப் பெருந்தீ
மூட்டிய வேள்வியில் இணைந்தனள் மாலதி

சுதந்திரக் கீதங்கள் காற்றினில் பொருதி
இந்தி’யம் வந்தது சத்தி’யம் தந்தது
காக்குமென்றெண்ணி குந்தி’யிருந்திட
எம் மாந்தர் கற்பையும் பாரதம் தி’ன்றது
காந்தி’ய தேசம் எங்கள் தி’லீபனைக் கொன்றது
தீருவில் தீயில் எம் தீரரைப் போட்டது
கோபக் கனழ்கள் கண்களில் இருத்தி
கோப்பாய் வெளியில் மூண்டது பெருந் தீ
சத்திய வேள்வியில் முதல் சொட்டென நிலத்தில்
அன்று வீழ்ந்தனள் மாலதி எனும் பெருந் தீ

மண்ணின் விடுதலை நெஞ்சிலிருத்தி
மங்கையர் பூவும் பொட்டும் மங்கலம் விலத்தி
சுகங்களை புறத்தி சுமைகளைப் பொருத்தி
உடலினை வருத்தி உரிமையை முன்னிறுத்தி
கடலினில் நீந்தி கரும்புலியெனும் உயிர்த்தீ
முப்படை நடத்தி இரவிலும் உலாத்தி
நடந்தவர் தியாகங்களை எப்படி எழுத்தி’ல் அடுக்குவேன்
பெண் புலிகளே நீங்களே இவ்வுலகில் உசத்தி

நஞ்சள்ளி நெஞ்சிலே அணிந்த நம் யுவதி’யர்
யுகங்கள் தாண்டியும் வாழுவார் இது உறுதி
இவர் பண்பள்ளி நெஞ்சிலே நிறுத்தி
கனவள்ளி கண்களில் பொருத்தி
நம்பிக்கை கொண்டு நாட்களை நடத்தி
நாளையை வெல்லலாம் வேற்றுமை ஒறுத்தி
மூட்டடி தங்கையே விழிகளில் பெருந்தீ
உன்னை வீழ்த்திட முடியுமா நீயும் தான் மாலதி!

க.குவேந்திரன்
10/10/2019