இந்த மாவீரர்நாளை நினைவேந்தும் செற்பாட்டின் மீது, குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அமைப்புகள் மீது பலரால், கடந்த பன்னிருவருடங்களாக சுமத்தப்படும் விமர்சனம் அல்லது குற்றச்சாட்டின் உள்ளடக்கத்தினை சற்று வெளிப்படையாக ஆராயலாம் என்று நினைக்கிறேன். அது கடமையாகவும் இருக்கிறது. ஏனெனில் அண்மையில் தாயகத்தில் வாழும் ஒரு நட்பு கூட இதுதொடர்பான ஆதங்கத்தை என்னிடம் தனிப்பட வெளிப்படுத்தியிருந்தமை இதனை ஆய்வுசெய்வதற்கு ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.

ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாட்கள் கடக்கும் பொழுது ஒரு கனத்த மனதுடன் கடக்கின்றோம். காலங்கள் செல்லச் செல்ல கனக்கும் கனம் குறைகின்றதா என்றால், இல்லை. கனம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் உயிரும் சதையுமாக,  உணர்வும் உதிரமுமாக இந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் கடந்திருக்கின்றோம். போராட்டத்தில் பங்கெடுத்து இருந்தோமா? இல்லையா? எதுவானாலும் அடிமனதில் ஆழப்பரவிப்போன உணர்வின் வெளிப்பாட்டில் வேரூன்றியிருக்கும் மாவீரர்களின் தியாகங்களின் கனங்கள் என்பது எக்காலத்திலும் குறையாதது. இறக்கிவைக்க முடியாதது. அடுத்த தலைமுறைக்கு வார்த்தைகளினால் சொல்லிக் கடத்திவிடமுடியாதது.

கைவிடப்பட்ட இனமாக 2009 இல் இந்த மாவீரர்நாளை நினைவேந்திய நமக்கு இது பன்னிரண்டாவது வருடம். காலங்கள் போகின்ற வேகத்துக்கு இந்த இனம் தம்மை நிலைநிறுத்த படாதபாடு கொண்டிருக்கிறது. எமக்கு வழிகாட்டி அழைத்து வந்த துடுப்பை கைநழுவி விட்டதன் விளைவு சிறிது சிறிதாக வெளித்தெரிய ஆரம்பித்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட முன்னமே தெரிய ஆரமிப்பித்திருக்கிறது என்பதிலும் வியப்பில்லை. எதுஎப்படியிருப்பினும் கண்கெட்டபின்னர் சூரியனைத் தேடி நாங்கள் கரம்கூப்பியவாறே காத்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கேள்விகளை மூன்றாக வரிசைப்படுத்தலாம்.

  • புலம்பெயர் நாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக எதற்கு ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள்?
  • இவர்கள் யாருக்காக பெரிய எடுப்பிலே செய்து பகட்டு காட்ட ஆசைப்படுகிறார்கள்?
  • சொந்த மண்ணில் வாழ வழியின்றி, ஒருநேரச் சாப்பிட்டிற்கே பல்லாயிரம் மக்கள் வாடியிருக்க இந்த மாவீரர்நாள் செலவுகள் அவ்வளவு முக்கியமா?

இவைதான் பலரது விமர்சனக் குரல்களின் கேள்விகள். 

கேட்கப்பட்ட கேள்விகளில் உள்ள வலியின் அர்த்தங்களை நாங்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆதங்கங்கள் குறிகாட்டும் உரிமையின் தெளிவில் நாம் முரண்படவே முடியாது. என்னைக் கேட்டால் தமிழ்மக்களுக்கு கேள்விகேட்கும் உரிமையை தாராளமாகவே தலைவர் கொடுத்திருந்தார். அந்த உரிமையை எவரும் பறிக்கவும் முடியாது. நசுக்கவும் முடியாது. தமிழ்மக்களின் கேள்வி கேட்கும் உரிமைக்கு பாதுகாவலர்களாக இருப்பதுதான் நமது கடமையும் கூட.

  • புலம்பெயர் நாட்டில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக எதற்கு ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள்?

நூற்றுக்கு நூறாக இந்த விமர்சனத்துடன் நாம் ஒத்துப் போகவேண்டும். எல்லா புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு என ஆடம்பர செலவுகள் செய்யப்படுகின்றனவா? ஆம்! வீதக்கணக்கில் அதிகமாக செய்யப்படுகிறது. மாவீரர் நினைவேந்தலை தவிர்க்க முடியாது, ஆனால் செலவுகளை பொறுத்தவரை அது அந்தந்த புலம்பெயர் மக்களால் அமைப்புகளால் ஆய்வுசெய்து சரிசெய்யப்பட்டேயாக வேண்டும். ஒவ்வொரு பணத்தாளையும் கவனமாக பொறுப்பாக செலவழிக்க வேண்டியது கடமையாகும். அதே நேரம் அதனை மேற்பார்வை செய்யவேண்டியது பணம் வழங்கும் மக்களினதும் அமைப்பினதும் தலையாய கடமையுமாகும்.

சூழலில் கிடைக்கும் பொருட்கள், கைவிடப்பட்ட பயனுள்ள பொருட்கள் கொண்டு சிறார்களின் கைவண்ணங்கள் அடங்கலாக ஒரு பெரும் அலங்காரத்தினை உருவாக்க சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். செலவுகளை பெருமெடுப்பில் குறைக்க அது உதவியாக இருக்கும். அதே நேரம் முற்கூட்டியே திட்டமிட்டு அலங்கார வேலைகளை பகிர்ந்து, பிரித்து பொறுப்போடு செயலாற்றும் பட்சத்தில் செலவுகளை மேலும் குறைக்கமுடியும். அது பற்றி புலம்பெயர் அமைப்புகள், குடும்பங்கள் சிந்திக்க வேண்டும். அது ஒரு ஆத்மார்த்த உணர்வின் செயற்பாடாக மாற்றியமைக்க அனைவரும் முன்வரவேண்டும்.

ஆடம்பர தோரணைகள் தவிர்க்கப்பட்டு உணர்வுப் பரவல் அதிகரிக்கும் வண்ணம் நினைவேந்தலை மாற்றியமைக்க வேண்டியதேவை புலம்பெயர் மக்களுக்கு இருக்கிறது. தமிழீழ போராட்டத்தை முதுகெலும்பாய் நின்று தாங்கிய பெருமை புலம்பெயர் மக்களுக்கு இருக்கிறது. அதுபோல இந்த விமர்சனங்களை ஒரு நல்ல ஆலோசனையாக ஏற்று ஆராய புலம்பெயர்மக்கள் முன்வரவேண்டும். இன்றைக்கு இல்லாவிட்டால் எப்பவுமே இல்லை.

  • இவர்கள் யாருக்காக பெரிய எடுப்பிலே செய்து பகட்டு காட்ட ஆசைப்படுகிறார்கள்?

கேட்கப்படுகின்ற கேள்விகள் யாவும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சரியானவைதான் என்று சொல்லிவிடமுடியாது. அவர்கள் கேட்ட இந்த கேள்வியில் தவறும் இருக்கலாம். இந்த கேள்வியை கொஞ்சம் திருத்தி சரியான பதில் வழங்கமுடியும். “யாருக்காக பெரிய எடுப்பிலே மாவீரர்நாள் செய்து காட்ட ஆசைப்படுகிறார்கள்? பெரிய எடுப்பிலே செய்துகாட்டும் போது நிகழும் ஆடம்பர செலவுகள் என்கின்ற ஒரு விடயத்தை ஏற்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது அடுத்த சந்ததிக்காக, தம்மோடு வாழும் வேற்று இன அயலவர் – நண்பர்களுக்காக, அந்தந்த நாட்டு அரசியல் தலைவர்களுது மனவெண்ணத்தில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக என்று நியாயமான  பதில்களை வரிசைப்படுத்த முடியும்.

தாயகத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் தமிழர் போராட்டத்தின் அதியுச்ச தியாகங்கள் பற்றி நீங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா? மனசைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் மாவீரர்களின் தியாகங்கள் பற்றி எவ்வளவு தெரியும்? அவர்களை விடுங்கள், பெற்றோர்களாகிய உங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒரு வீதமாவது தெரியுமா? பெறுபேறுகளுக்காக அலையும் உங்களுக்கு அதிலென்ன அக்கறை இருந்து விடப்போகிறது? தொலைகாட்சி தொடர்நாடகங்களே உங்கள் வாழ்க்கையின் ஆகச்சிறந்த இலட்சியமாகக் கொண்டிருக்கும் உங்களுக்கு எப்படி எங்கள் தலைமுறையின் தியாகம் தெரிந்திருக்கப் போகிறது?   ஆனால், விகிதக் கணக்கில் பார்த்தால் தாயகத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளை விட புலம்பெயர் நாட்டில் வளரும் பிள்ளைகளுக்கு எங்கள் போராட்ட தியாகங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்திருக்கிறது. இப்பொழுது புரிகிறதா? அந்த மாவீரர் நாள் எதற்காக புலம்பெயர் மக்களால் நினைவேந்தப் படுகிறது? என்று அதன் பயன் தெரிகிறதா?

உனக்கு அதிகம் தெரியுமா? எனக்கு அதிகம் தெரியுமா? என்பதல்ல இங்கே உள்ள பிரச்சனை. எமது சந்ததிக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதுதான் கேள்வி? எவ்வளவு விடயங்களை அவர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோம் என்பதுதான் விடயம்.

புலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் உங்களை கொஞ்சம் இருத்தி சிந்தித்தால் இதற்கான பதிலை புரிந்து கொள்ளலாம். இயந்திரத்தனமான வாழ்க்கை. குடும்பத்தில் ஒருவரையொருவர் பார்க்கமுடியாத வேகம். அதற்கிடையில் குழந்தைகள் சந்ததிகள் என்று வேறு கடமைகள். நல்லநாள் கெட்டநாள் எது என்று கிழமைகள் தெரியாத ஓட்டம். இதற்கிடையில் எமது மாவீரர்களின் தியாகங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமே? அது பற்றி சிறிதளவேனும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டாமா? என்கின்ற மனக் கேள்விகளின் விடைதான் இந்த புலம்பெயர் மக்களின் மாவீரர் நாள்.

தமிழீழ விடுதலைப் போரில் நான் பங்காளியாக இருந்தேன். இல்லாமல் இருந்தேன். உங்கள் பார்வையில்,  பயத்தோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிவந்தாதாகவே இருக்கட்டும்,  எது எப்படியானாலும் எம்மைப் போலில்லாமல் அடுத்த சந்ததிக்கு கொஞ்சம் தமிழுணர்வையாவது ஊட்டிவிடவேண்டும் என்ற அங்கலாய்ப்புத்தான் அந்த மாவீரர்நாள் நினைவேந்தல்.

மாவீரர் நினைவுடன் எங்கள் பிள்ளைகள் ஆற்றும் நிகழ்வுகளில் ஊடாகவாவது எங்கள் தமிழை, கலையை, கலாசாரத்தை, மண்ணின் பெருமையை, மாவீரர் தியாகத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற ஆவல்தான் இந்த மாவீரர்நாள். எல்லாத்திசைகளிலும் எமக்காக, எதிர்கால தமிழீழ தாயகம் என்கின்ற மடிந்தவர் கனவுக்காக, எங்கள் தமிழீழக் குழந்தைகள் இனத்தின் பிரதிநிதியாக வளரவேண்டும் என்கின்ற அடங்காப் பற்றின் உச்சம்தான் இந்த மாவீரர்நாள். 

குறைகள் காண ஆயிரம் தகுதிகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் புலம்பெயர் மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கான தகுதியை அளவிட நிலத்தில் உங்கள் எவருக்கும் எந்த தகுதியும் இல்லை என்பதை உங்கள் மூளையில் ஆணியடித்து அறைகிறேன்.

உங்கள் மூன்றாவது கேள்வி.

  • சொந்த மண்ணில் வாழ வழியின்றி, ஒருநேரச் சாப்பிட்டிற்கே வழியின்றி பல்லாயிரம் மக்கள் வாடியிருக்க இந்த மாவீரர்நாள் செலவுகள் அவ்வளவு முக்கியமா?

இதனைவிட இன்னும் ஆழமான கேள்விகளை, உங்களிடம் திருப்பிக் கேட்டால்? மாவீரர்நாள் நினைவேந்தல் ஒருபுறம் இருக்கட்டும். பாதிக்கப் பட்ட சகமனிதனை கைதூக்கி மேலிழுத்துவிட புலம்பெயர் மக்களுக்கு மட்டும்தான் கடமையுண்டா? நீங்கள் எல்லாம் இந்த போராட்ட பாதையில், மாவீரர் தியாகங்களின் பலன்கள் என்று எதுவுமே நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா? ஒன்று தெரியுமா? நீங்கள் இன்று தமிழ் மொழி பேசிக்கொண்டு உயிரோடு இருப்பதே உங்களுக்கு அறிமுகமே இல்லாத மாவீரர் அவர்கள் தந்த பிச்சை.

அதெப்படி? அதெப்படி? நீங்கள் ஆடம்பரம் செலவுகள் செய்து தங்கநகைகள் உடுப்புடவைகள், கலியாணவீடு, சாமர்த்திய வீடு, பெரிய வீடுகட்டி  வீடுகுடி விழா, தீபாவளி வருடப்பிறப்பு என்று கொண்டாட்டம், அதைவிட கோடிக்கணக்கில் செலவுசெய்து புதிய கோயில்கள் கட்டுவது, லட்சக்கணக்கில் செலவழித்து அந்தத் திருவிழா, இந்த ஊர்வலம் என்று எல்லாத்தையும் கொட்டிக் கொடுத்தபின்னாலே, உங்கள் ஊரில் இருக்கும் போரினால் பாதிக்கப் பட்ட ஒருவனுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை என்றால் மட்டும் புலம்பெயர் மக்கள் முன்வந்து நிற்க வேண்டும்? பெரும்பாலான உங்கள் ஆடம்பரச் செலவுகள் எல்லாமே வெளிநாட்டு காசின் பெருமை என்பது தெரியுமா? தெரியாதா? உள்ளூரில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் செலவுகள் எல்லாமே நியாயமானதா? தேவையானதா?

“எதற்காக உங்கள் ஆலயங்களின் திருவிழாக்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கிறீர்கள்?” “உள்ளம் பெருங்கோயில்” என்று தமிழ் சொல்கிறதே! உங்கள் ஆலயங்களின் வீதிஉலாவுக்கு என வாகனத்தின் பின்னணியில் அலங்கரிக்கப் படும் மலர்களுக்கு எவ்வளவு செலவழிக்கப் படுகிறது என்ற கணக்குத் தெரியுமா? சிலமணிநேரங்களே உலாவரும் அவற்றுக்கு எதுக்கு இந்த செலவு என்று எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? இறைவன் வீதியுலா வருகிறார் என்று நகர வீதிகளின் அலங்காரங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்று எமக்குத் தெரியாதா என்ன? நேர்த்திக் கடன் என்கின்ற பெயரில் மலையென உடைத்துக் குவிக்கும் தேங்காய்களில் இருந்து வழிந்தோடும் இளநீர் பெரும்பாலும் புலம்பெயர் உறவுகளின் வியர்வை என்ற உண்மை உங்களுக்கு உறைக்குமா?

2009 போர் முடிந்த சிலமாதங்களில் இலங்கைச் சிறைகளில் எத்தனை புலம்பெயர் உறவுகள் கைதுசெய்யப்பட்டு அடைக்கப் பட்டிருந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? வெளிநாடுகளில் இருந்து வந்து உதவியதாக, பணம் செலவளித்ததாக குற்றம் சுமத்தப் பட்டிருந்தது பற்றி அறிவீர்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என புலம்பெயர்மக்களால் கொடுக்கப்படும் பணத்தினை இடையில் இருந்து களவாட சிங்கள அரசு செய்த சூழ்ச்சிகள் ஆயிரம். அவற்றையும் கடந்து பாதிக்கப் பட்ட மக்களை இன்றுவரை எதோ ஒருவழியில் கைதூக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எங்கள் ஊருக்குள் சுனாமி நிழலைக் கூட பார்க்காமல், போரின் வடுவைக் கூட சுமக்காமல் நிவாரணம் பெற்று வாழ்ந்து கழித்த சமூகங்கள் தலைநிமிர்ந்து அல்லவா வாழ்கிற வரலாறு எமக்குத் தெரியாதா?  உடலில் பல காயங்களுடன் வேதனைப்பட்டுக் கொண்டு வேலைக்கு போகமுடியாமல் வாழும் நாட்டு அரசின் உதவிக்கொடுப்பனவில் வாழ்ந்தாலும், அந்த காசில் ஒரு தொகையினை யாரோ முகம்தெரியாத சிலருக்காக அனுப்பிவிட்டு சத்தமே இல்லாமல் வாழும் புலம்பெயர் உறவுகளின் ஈகத்திற்கு நன்றிகளை எங்கே கொண்டு சேர்ப்பது?

ஏதோஒரு வழியில் புலம்பெயர் மக்கள், அமைப்புகள் தம்மால் இயன்றதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இனியும் செய்வார்கள். கேள்விகள் கேட்கும் உரிமைகள் இருக்கிறது என்பதற்காக நீங்கள் வாய்க்கு வந்தபடி எல்லாவற்றையும் கேள்விகளாக கேட்டு விட முடியாது. கேள்விகள் கேட்கவும் தகுதி வேண்டும் என்கின்ற ஒன்றை நீங்கள் எவரும் மறந்துவிடக் கூடாது. இங்கே பதில் சொல்லக் கூட தகுதி தேவைப்படுகிறது. “கடமையைச் செய்தவன் உரிமையை அனுபவிக்கலாம்” என்பதுபோலத்தான் இங்கே எல்லாம். 

எழுதியது :ப.வித்யாசாகர்

நாள்: 15.12.2020