முகங்களை இனங்காணும் தொழில்நுட்பம் மேற்கு நாடுகளை விட சீனாவில் முன்னேறியுள்ளது.

மக்கள் மீதான கட்டுப்பாடு. குற்றச் செயல்கள் தடுத்தல். அரசுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்காணித்தல் போன்றவற்றிற்கு சீனா இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. முதலில் “உய்குர்” மாகாணத்தில் இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக பரவலாக முகங்களை இனம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அவர்களது தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளால் இல்லாமற் செய்யப்பட்டது. இயலுமான அளவிற்கு எல்லா மக்களினதும் முகங்கள் ஒளிப்பதிவு செய்து வைக்கப்பட்டது.

அப்பதிவுகளில் அவர்களது விபரங்கள் யாவும் இணைக்கப்பட்டன. எங்காவது ஒருவர் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களின் முகங்கள் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் பதிவு செய்யப்பட்டால் அவரை இலகுவில் இனம் கண்டு கைது செய்யக் கூடிய வகையில் கணினி மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. வியாபார நிறுவனங்களில் ஒவ்வொரு பொருட்களிலும் அதற்கான கோட்டுக்குறியீடு (Barcode) இணைக்கப்பட்டிருக்கும். அக்கோட்டுக் குறியீட்டில் அப்பொருள் பற்றிய முழுவிபரமும் இருக்கும். அதைக் கணினி இனம் காணுவது போல் முகத்தின் படத்தை வைத்தே அந்த முகத்துக்குரியவரின் விபரங்கள் துரிதமாக அறியப்படும். சீனாவில் 200மில்லியனுக்கும் அதிகமான கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால் உலகிலேயே நகரக் கண்காணிப்பில் சீனா முன்னணியில் இருக்கின்றது. மேற்கு நாடுகளில் தனிப்பட்ட ஒருவரின் தகவல்களை அவருக்குத் தெரியாமல் சேமித்து வைப்பது தனிமனித உரிமை மீறலாகக் கருதப்படுகின்றது. இருந்தும் மேற்கு நாடுகளின் உளவுத்துறைகள் களவாகவும் இரகசியமாகவும் அவற்றைச் செய்கின்றன. சீனாவில் அது பகிரங்கமாகச் செய்யப்படுவதுடன் சீன மக்கள் அதையிட்டு பெரிதாக கரிசனை காட்டுவதில்லை.

சீனாவின் முகங்களை இனம் காணும் பதிவில் அதன் மொத்த மக்கள் தொகையான 1.4 பில்லியன் பேர்களில் அநேகமாக எல்லோரினதும் தரவுகள் நிரைப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் YITU Technology நிறுவனம் 2மில்லியன் முகங்களை கையாளக் கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. அதன் மென்பொருளிற்கு Dragonfly Eye System எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பெறுமதி 2பில்லியன் டொலர்களாகும். பெரும் அங்காடிகளில் மக்களின் செலவு செய்யும் பழக்கங்களில் இருந்து குற்றச்செயல்களை வரை பலதரப்பட்ட நிகழ்வுகளை சீனாவில் உள்ள 200மில்லியன்களுக்கும் அதிகமான ஒளிப்பதிவுக் கருவிகள் பதிவு செய்து கொண்டே இருக்கும். முகங்களை இனம் காணும் தொழில்நுட்பத்துடன் செயற்கை விவேகமும் இணையும் போது பெருமளவு தரவுகளை கையாளும் திறன் அதிகரிக்கின்றது.

2022-ம் ஆண்டு முகங்களை இனங்காணும் தொழில்நுட்பத்தின் மூலம் 9.6பில்லியன் டொலர்கள் வருமானம் உலகெங்கும் சம்பாதிக்க முடியும். சீனாவில் மட்டும் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளுக்கான சந்தை 120பில்லியன் டொலர்களாகும்.

கடைகளில் காசு கொடுக்காமல் முகம் காட்டினால் போதும்

உலகிலேயே அதிக அளவு கைப்பேசியூடான கொடுப்பனவுகள் சீனாவில் நடக்கின்றன. சீனாவின் WeChat Pay, Alipay ஆகியவை சீனாவின் கொடுப்பனவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கு Paypal, Apple Pay போன்றவை பயனில் இருந்தாலும் குறைந்த அளவே பாவிக்கப்படுகின்றன. சீனாவில் கடன் அட்டைகள் பாவனை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது. அமெரிக்காவிலும் பார்க்க நான்கில் ஒரு பங்கு கடன் அட்டைகள் சீனாவில் பாவிக்கப்படுகின்றன. இப்போது கைப்பேசியூடான கொடுப்பனவுகளுக்குப் பதிலாக முகத்தை இனங்காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவர் கடையின் பொருட்களை வாங்கிவிட்டு அங்குள்ள ஒளிப்பதிவுக் கருவிக்கு தனது முகத்தைக் காட்டினால் போதும் அதை வைத்தே அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் அறவிடப்படும்.

முகங்களின் பின்னே இரு பெரும் மூளைகள்

YITU Technology நிறுவனத்தை உருவாக்கியவர்கள் Leo Zhu, Lin Chenxi என்னும் இருவராகும். Leo Zhu அமெரிக்காவின் The University of California, Los Angeles பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும் Massachusetts Institute of Technology பல்கலைக் கழகத்தின் Artificial Intelligence Labஇல் கணினிப் படப்பதிவிலும் மூளைச் செயற்பாட்டு விஞ்ஞானத்திலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர். Lin Chenxi சீன நிறுவனமான Alibaba Cloudஇல் பணிபுரிந்தவர். இவர்கள் உருவாக்கிய செயற்கை விவேகம் தொழில்நுட்பம் சீனாவில் வங்கிகள், கடைகள், காவற்துறை, மருத்துவத் துறை போன்றவற்றில் பெருமளவு பாவிக்கப்படுகின்றன. இவர்களது YITU Technology நிறுவனம் 2019 ஜனவரியில் சிங்கப்பூரில் தனது முதலாவது வெளிநாட்டுக் கிளையைத் திறந்தது. அங்கு பல நாட்டு நிபுணர்களைப் பணிக்கு அமர்த்தி தமது தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அவர்களின் நோக்கம். பிரித்தானியாவில் பல உள்ளூராட்சிச் சபைகள், நிதி நிறுவனங்கள், மருத்துவத் துறை போன்றவை இவர்களது சேவைக்கு பெருமளவு பணம் கொடுக்கின்றன.

முகங்களை இனம் காணும் தொழிநுட்பம் தொடர்பான 900
இற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புக்களுக்கு சீனா காப்புரிமை பெற்றுள்ளது. இது இத்துறையில் அமெரிக்கா பெற்றுள்ள காப்புரிமையிலும் பார்க்க பத்து மடங்காகும். 1958இல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக்-1 செய்மதியை விண்ணில் பறக்கவிட்டது அமெரிக்காவின் ஆணவத்திற்கு பேரிடியாக அமைந்தது. அது போன்ற ஒரு நிலை இப்போது சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அமெரிக்கா விண்வெளிப் பயணத்தில் மிகத் தீவிரமாக இறங்கி சோவியத்திற்கு முன்னர் நிலவில் மனிதனை இறக்கியது. அது போல அமெரிக்கா சீனாவை இனி முந்துமா?