எட்டுத்திக்கும் நாங்கள்
வேட்டை நாய்களால்
குதறப் பட்டுக் கொண்டிருந்தோம்
வேட்டி மடிப்புக்குள்ளும்
கஞ்சி போட்டு அழுத்திய
வெள்ளைச் சட்டைக்குள்ளும்
எங்கள் உயிர்கள்
விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தன
நாங்கள் தத்தளித்து
கழுத்துவரை வந்து விட்ட
குருதிக் கடலில்
மூழ்கிக் கொண்டிருந்தோம்
அப்போது தான் அந்த
குரல் ஒலித்தது
தீக்குள் தீய்ந்து கொண்டிருந்த
தமிழீழத்துக்காய்
ஒரு கொடியில் பூத்த ஒரு மலர்
இதயத்தில் இருந்து உரிமைக்
குரல் எடுத்து பாடியது
எங்கள் இதயங்கள் வலித்தன
பாவியரை மீட்டு விட
கரங்களில் தீயேந்த அந்த குரல் அழுதது
ஈழ மண்ணைக் காக்க சொல்லி
வானுயர எழுந்து
அரக்க நெஞ்சங்களைத்
தட்டிப்பார்க்கத் தொடங்கியது
நாங்கள் தமிழீழ தாகத்துக்கு
குருதியைக் குடித்துக் கொண்டிருக்க
அந்தக் குரல் விடுதலையின்
துளிர்ப்புக்காய் தீக் கொழுந்தைக்
தாகம் தணிக்க குடித்தது
எந்த வல்லரசும் செவி தரவில்லை
எந்த வல்லாதிக்கத்துக்கும்
நெஞ்சம் இழக வில்லை
எந்த மேற்கத்தையத்துக்கும்
அக்குரல் கேட்கவில்லை
கொஞ்சம் கொஞ்சமாக
தீயின் நாக்குகளுக்குள்
அரைபட்டுக் கொண்டிருந்தது அக்குரல்
நாங்கள் முற்று முழுதாய் செத்திடாமல்
போகவென்று அக்குரலிலை
மண்ணெண்ணைத் தீ தின்று முடித்தது.
நாங்கள் விக்கித்துப் போனோம்
முள்ளிவாய்க்காலுக்கு
முன்னமே முகவரியிட்டு
காந்தள் பூவை மிதித்து
அழித்துவிடத் துடித்துக் கொண்டிருந்த
உலகத்தின் நெஞ்சை
இக்குரலும் தட்டி எழுப்பவில்லை
என்று நாங்கள் உயிருக்குள் உறைந்தோம்
முத்துக்குமார் தீக்குள்
முத்தைத் தேடினான்
ஆயிரம் ஆயிரம் கனவுகள் சுமந்த
அந்த இளைய தமிழன்
தீயின் நாக்குகளுக்குள் எங்களது
உரிமையைத் தேடினான்
“சாஸ்திரிபவன் “ அதிர்ந்து போனது
முத்தாக பிறந்த தமிழ் மகன்
தீக்குழித்து தியாகித்த
காலைப் பொழுது
மறக்க முடியாத புள்ளியாக
எம் குருதிக்குள் கலந்தது
முத்துக்குமார்
ஈழத்துக்காய் , எமக்காய்
தமிழ்த்தாய்க்காய் தன்னுயிர் துறந்தநாள்.
இ.இ. கவிமகன்

  1. 01.2021