வாகரையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த இனவழிப்பின் சாட்சியமாக கனடாவில் திருமதி  KASS GHAYOURI அவர்களால் எழுதப்பட்ட A NOTE FROM the NO FIRE ZONE  என்ற ஆங்கில நூல் இனவழிப்பின் சாட்சியமாக முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 10 ஆவது ஆண்டினைக் கடக்கும் இந்த நேரத்தில்  வெளியீடப்பட்டுள்ளது. இப் புத்தகம் தாயகத்தில் நடத்தி முடிக்கப்பட்ட சிங்களத்தின் இனவழிப்பு போரின் இறுதி நாள்வரை மக்களுக்கான மருத்துவப் பணியில் ஈடுபட்டு பல்லாயிரம் மக்களின் உயிர்காத்த மருத்துவரான, மருத்துவக் கலாநிதி வரதராஜன் அவர்களின் சாட்சியமாக உருவாகி இருக்கின்றது. 

இப் புத்தக வெளியீடு இன்று வெளியிடப்பட்ட இந்த இனவழிப்புச் சாட்சிய நூல் வெளியீட்டில் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி மற்றும் ஒன்டாரியோ சட்டமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி ஆகியோர் கலந்து கொண்டு உரைகளை நிகழ்த்திச் சிறப்பித்தனர். 

நூலினை மருத்துவக் கலாநிதி வரதராஜன் வெளியிட்டு வைக்க, முதற் பிரதியினை தாயகத்தின் மருத்துவத்துறையில் மிக நீண்ட காலமாக தாதிய சேவையில் பணியாற்றிய மூத்த தாதி திருமதி கந்தசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பிரதிகளை திரு இளமாறன் மற்றும் இறுதி போரின் போது காயமடையும் வரை ஈழநாத ஊடகவியலாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு  மற்றும் மருத்துவ கலாநிதி கல்யாணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

நிகழ்வின் ஆரம்பத்தில் கனேடிய தேசியகீதம் பாடப்பட்டு தமிழ் வாழ்த்துப் பாடப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது சிறப்பாகும். தொடர்ந்து புத்தகம் சபைக்கு வழங்கப்பட்டு நன்றியுரையோடு இனிதே நிறைவேறியது. 

இப் புத்தகம் ஆங்கில வழியில் எழுதப்பட்டிருப்பதால் அடுத்த தலைமுறைக்கும் பல்லின மக்களுக்கும் எம் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பின் கொடூரங்களை நிச்சயம் கொண்டுபோய் சேர்க்கும் என்பது நியம். 

கனடாவில் இருந்து புலர்வுச் செய்தியாளர்.