நந்திக்கடலும் வட்டுவாகலும்
நொந்துபோய் கிடக்கிறது
வலி சுமந்த அடிமனதோடு…

பிஞ்சும் பூவும்
காயும் கனியுமாய்
சிந்திய இரத்தம்
காயாமலே
சிவந்தது தாய் முற்றம்

இரத்தமும் சதையும்
சேற்றுச்சகதியாய் மாற
மூச்சுக்காற்று தேடி
முனகியது வாழ்வு

காலின் கீழ் ஒட்டி பிசுபிசுத்தது
காயாமல் சுட்ட இரத்தம்…
யாரதென்று தீர்மானிக்க
இப்போது நேரமில்லை..
மொத்த இனமும்
செத்துக்கொண்டிருந்தது

நாளும் பொழுதும்
கொலைக்களமானது

கஞ்சிக்கும் கடலைக்கும்
கெஞ்சி நின்ற பிஞ்சுகளை
பிச்செறிந்தன வானேறிய பிசாசுகள்

கொத்துக்குண்டுகளின் சத்தத்தில்
செத்துத் தொலைந்தோம்

பொஸ்பரஸ் குண்டுகளின் புகையில்
கருகி இறந்தோம்

பதுங்குகுழிகளே பலவேளைகளில்
சவக்குழியாக சபிக்கப்பட்டோம்

மருத்துவரும் மத தலைவரும்
வதை செய்யப்பட்டார்கள்

பாதுகாப்பு வலயத்திலும்
மருத்துவ நிலையத்திலும்
பள்ளி சென்ற நேரத்திலும் தான்
கொத்தாக பிள்ளைகளை
கொல்லக் கொடுத்தோம்

தொண்டு நிறுவனங்களோ
மனிதநேய அமைப்புக்களோ
அத்தனையும் எமை கைவிட்டு
அமைதியாய் வெளியேற
அநாதையாய் நாங்கள்
அடைக்கப்பட்டோம்

ஐநா என்ன….
அகிம்சை என்ன…
உலக அமைதி மந்திரமென்ன…
எல்லாமும் ஏமாற்றியது எம்மை

மொத்தமாய் பார்த்திருந்து
அவன்பக்கம் சேர்ந்திருந்து
பத்தோடு பதினொன்றாய்
துரோகித்தது சர்வதேசம்..
மௌனித்தது மனிதம்..

இந்தக் கள்ள உலகின்
பொல்லாத பார்வை
கட்டவிழ்த்தது ஒரு சுடுகாட்டை..

எனினும்
இந்தச்சுடுகாட்டிலும் பூக்கின்றன
செவ்வரத்தம் பூக்கள்!

இந்தச் செவ்வரத்தம் பூக்களில்
சிவந்திருப்பது வெறும் நிறமல்ல
நாங்கள் சிந்திய இரத்தத்துளிகள் தான்…!!

புலர்வுக்காக முகில்நிலா