மூத்த தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் காலமானார் எனும் சேதியும் இந்த அவலமான கட்டத்தில் எங்கள் செவிப்பறைகளை அதிரவைத்து அலற வைக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான “பிரிகேடியர் ” ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனிலிருந்து நேற்று (31) விண்ணகம் சென்றார்.

பார்வதியம்மா,

கிட்டம்மா,

ரூபநிதியம்மா,

வரிசையில் இன்னுமோர் ஆளுமை மிக்க அன்னையை தமிழர் நாம் இழந்திருக்கிறோம்.

தமிழினத்தின் மூத்த தளபதி ஒருவரின் தாய் என்பதற்கும் அப்பால் சிங்களப் பேரினவாதத்தின் வன்கொடுமையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழரெம் வவுனியா மாவட்டத்தின் “பாவற்குளம்” எனும் ஊரில் நிமிர்ந்த ஓர் பெண் ஆளுமை இவர் ஆவார்.

“பாவற்குளம்” பிரதேசம் குடியேற்றவாதம் எனும் போர்வையில் வன்பறிப்பு செய்யப்பட்ட கொடிய காலகட்டத்தில் தனிநபர்களாக அதை எதிர்த்தவர்களில் இந்த அன்னையும் ஒருவர் ஆவார்.

இலங்கை, இந்திய இராணுவங்களாலும் அவர்களது துணை இராணுவக் குழுக்களாலும் பல இன்னல்கள் விளைவிக்கப்பட்ட போது அவற்றையெல்லாம் துணிச்சலுடன் எதிர் கொண்ட ஒரு மிடுக்கான குடும்பத்தின் தலைவியாக இந்த அன்னை திகழ்ந்தார்.

அமைதிப்படை எனும் பெயரில் இமைய நாட்டுப்படைகள் எம் மண்ணில் தங்கியிருந்த வேளை அவர்களின் துணையுடன் இயங்கிய தமிழ்க் குழுவினர் இந்த அன்னையின் அன்புக் கணவரை கடத்திச் சென்றனர். பின்னர் பலமான அடிகாயங்களுடன் அவரது திருவுடல் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

அதன் பின்னரும் ஓயாத அலையாக இந்த அன்னை எங்கள் எல்லைக் கிராமங்களில் தமிழ்த்தேசியத்தில் உயர் மிடுக்காக உலா வந்தவர்.

எல்லையோரங்கள் எதிரியின் ஆக்கிரமிப்புக்கு உட்படும் போது அச்சத்தில் உறைந்து போகும் தமிழர்கள்
அன்னையின் திடகாத்திரமைப் பார்த்து தங்கள் உளவுரனைச் சீர்செய்த சம்பவங்கள் நிறையவுண்டு.

தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரனைப் பெற்ற வீரத்தாயை,

‘அகம்’தனில் ஆழ நினைந்து
‘கரம்’ தனைக் கூப்பி
‘சிரம்’ தனை தாழ்த்தி

ஒன்றுபட்ட தமிழராய் இப்பாரினில் நிமிர்வோம்!?