வலிகாமம் வடக்கில் மக்கள் 1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக தமது சொந்த மண்ணைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். உடுத்த உடையுடன் கையில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தனர். வலிகாமம் வடக்கில் அன்று 45கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் வாழ்ந்து வந்தனர். வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை, ஊறணி, மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட பிரதேசங்கள் 27 வருடங்களுக்குப் பின் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 54 ஏக்கர் காணியும் மயிலிட்டித் துறைமுகமும் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். மக்களுடைய வாழ்விடங்கள் அனைத்தும் அழிந்த நிலையிலேயே மக்கள் அங்கு மீளக்குடியேறியுள்ளனர். மீள் குடியேற்றம் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இங்குள்ள மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியில் பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியில் தமது நாளாந்த வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்றனர்.


இங்குள்ள மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரமாகக் கடற்றொழில் இருக்கின்றது. மீன்பிடித்தலைப் பிரதானமாகவும், மீன் வியாபாரம் மற்றும் விவசாயம் போன்றவற்றையும் இம் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் இப்பிரதேசத்தில் இலங்கைக்குத் தேவையான மீன் மற்றும் கருவாடு போன்றவற்றை அதிகளவில் உற்பத்தி செய்த கடல் வளமும் கடற்தொழிலும் சிறப்புற்றிருந்தது.  இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் மயிலிட்டி 30 வீதத்திற்கு அதிகமான மீன்களை 1970கள் மற்றும் 1980களில் உற்பத்தி செய்தது. இது இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித் துறைமுகம் ஆக விளங்கியதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தென்கிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காலப்பகுதியிலும் இத்துறைமுகத்தைப் பயன்படுத்தமுடியும் என்பது இத்துறைமுகத்தின் சிறப்பம்சமாகும். ஆனால் 27 வருட இடப்பெயர்வுக்குப் பின் இம் மக்கள் நாளாந்த வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான வருமானத்தை மீன்பிடித்தொழிலின் மூலம் ஈட்ட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இன்று மீன் பிடித்தொழிலில் பாரிய சவால்களை இவர்கள் நாளாந்தம் எதிர்கொள்கின்றனர்.
ஆளணிப் பாற்றாக்குறை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும். இடப்பெயர்வின் பின் இந்த 27 வருடங்களில் பலர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். சிலர் தாம் இடம்பெயர்ந்து இருந்த பிரதேசங்களிலேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியுள்ளனர். கல்வி, மருத்துவம் உட்பட மிக முக்கியமான அடிப்படை வசதிகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் பலர் சொந்த இடங்களுக்குத் திரும்பவில்லை. குறிப்பாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் இருக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியைக் கருத்தில்கொண்டு சொந்த மண்ணிற்குத் திரும்பவில்லை.

மீள்குடியேறியோரில் இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. உதாரணமாக தரம் 1தொடக்கம் 5 வரையான சிறார்கள் கல்வி பயிலக்கூடிய வகையில் யாழ். ஊறணி கனிஷ்ட வித்தியாலம் காணப்படுகின்றது. இங்கு தற்போது 12 மாணவர்களே கல்வி கற்கின்றனர். ஆனால் இற்றைக்கு 27 ஆண்டுகளுக்கு முன் இப் பாடசாலையில் 240 மாணவர்கள் கல்வி கற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதற்கான பாடசாலைகள் இங்கு இல்லாத காரணத்தால் அயல் பிரதேசங்களில் உள்ள நடேசுவராக் கல்லூரி மற்றும் யூனியன் கல்லூரி போன்றவற்றிற்கு தமது கல்விக்காகச் செல்லுகிறார்கள். இன்னும் சில மாணவர்கள் அச்சுவேலி இடைக்காட்டு பாடசாலைகளுக்கும் செல்கின்றார்கள். இவர்கள் போக்குவரத்து ரீதியாக பல சவால்களுடனே ஒவ்வொரு நாளையும் கடக்கின்றார்கள். 


அதே நேரம் வலிகாமம் வடக்கில் உள்ள சில கிராமங்களில் இளைஞர்களைக் காணமுடியாமல் இருக்கின்றது. உதாரணமாக ஊறணி கிராமத்தில் ஒரு சில இளைஞர்களே இருக்கிறார்கள். இளைஞர்கள் இல்லாத கிராமம் பிள்ளைகள் இல்லாத குடும்பத்துக்கு ஒப்பானது. உள்நாட்டு யுத்தம் மக்களைச் சிதறடித்து எங்கெங்கோ அந்நிய மண்ணில் வாழக் காரணமாகியிருக்கிறது. இளைஞர்களே எதிர்கால நம்பிக்கைகள். அவர்கள் கல்வி கற்று, திறன் மிக்கவர்களாக மிளிர வேண்டும். முற்போக்கோடு வளர்க்கப்படும் இளைஞர்களால் தான் சமூக மாற்றம் சாத்தியமாகும்.


அதுமட்டுமல்லாமல் வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிக்கப்பட்டதாக பெயரளவில் சொல்லிக் கொண்டாலும் இன்னும் விடுவிக்கப்படாமல் ஏராளமான காணிகள் முப்படைகள் மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்படாத மக்கள் இன்னும் ஏதிலிகளாக தான் வாழ்கின்றனர்.


“இராணுவத்தின் தயவில் தமது சொந்த மண்ணில் இந்த மக்கள் வாழத் தலைப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் அருட்தந்தை தேவராஜ். வலிகாமம் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில் முற்று முழுதாகக் காணிகள் விடுவிக்கப்படாமையால் குறிப்பிட்டளவிலான மக்களே குறியேறியுள்ளனர். இளையவர்களுக்குத் கடற்றொழில் தொழில் தெரியாது. இதனால் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான ஆளணிப் பற்றாக்குறையாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படுகிறது. மீன்பிடிக்கும் மக்களை விடுதலை செய்யாது துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மயிலிட்டி மீன் பிடித்துறைமுகத்திற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் துறைமுகம் 205 மில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 


“கடற்றொழிலில் நாளாந்தாம் 500 ரூபா வருமானம் வந்தால் போதும் என்ற நிலையில் தான் வாழ்கிறோம்” என்கிறார் ஊறணியில் வாழும் வயோதிப் பெண்மணி ஒருவர். இன்றைய இம் மக்களது வாழ்கை நாளாந்த உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான போராட்டமாகவே இருக்கிறது.


ஊறணி அந்தோனியார் ஆலயம், பலாலி செபஸ்தியார் ஆலயம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் போன்றன 2013 இற்குப் பின்னர் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் பின் 2012 ஆம் ஆண்டு விசேட அனுமதி பெற்று இப்பிரதேசங்களைப் பார்வையிடவந்த மக்கள், இவ் ஆலயங்கள் அழிவுக்குட்படாதிருப்பதனை அவதானித்திருக்கிறார்கள். ஆனால் 2017 ஆம் ஆண்டு இப் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும் போது, இந்த ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் இடித்தழிக்கப்பட்டிருந்தன.

இவ் ஆலயங்கள் இன்னும் உரிய முறையில் புனரமைக்கப்படாது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேறிய பெரும்பாலான மக்கள் வீடு, காணி அற்ற நிலையில் தற்காலிக குடிசைகளில் வாழ்கிறார்கள். வீட்டுத்திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. மலசலகூட வசதிகள் போதியளவில் இல்லை. அதுமட்டுமல்லாமல் அரசாங்கம் வழங்குகின்ற வாழ்வாதார உதவிகளிலும் பாரபட்சம் காட்டப்படுகின்றது. விதவைகளுக்கான வாழ்வாதார வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை.


“நான் தனியாள், எனக்கு ஒண்டுமேயில்ல, மலசலகூட வசதிகூட இல்லை. நான் தகர வீடொன்றில் வசிக்கிறேன்” என்கிறார் கணவனை இழந்த வயோதிபப் பெண்ணொருவர். இவர் மீன் தெரிதல் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் தனது நாளாந்த வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார்.


மேலும் இப்பிரதேசங்களில் உள்ள பெண்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலே தமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள். கடற்றொழில் செய்கின்ற குடும்பங்களில் மீன் தெரிதல், மீன் விற்றல் போன்றவற்றையும் குடும்பத்தையும் கவனிப்பவர்களாகப் பெண்களே இருக்கிறார்கள்.


கணவனை இழந்த நிலையில் தனது 16 வயது மகளுடன் சிறிய குடிசை ஒன்றில் வசிக்கும் திரேசம்மா தனது அன்றாட வாழ்வை கொண்டுசெல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார். மீன் தெரிதலை தனது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டிருக்கும் இவர் தொழிலுக்குச் செல்லமுடியாத போது, திருமணமான மகள்களின் உதவியினாலேயே நாளாந்த உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதாகக் குறிப்பிட்டார்.

விதவைகள் மற்றும் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தப்படவேண்டும்.
இப்பிரதேசங்களில் மக்களின் காணிகளைப் பயன்படுத்தி, இராணுவம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதுவும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு விடயம் ஆகும். விவசாயம் செய்யக்கூடிய நீர் ஆதாரமுள்ள பகுதிகளை இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதன் மூலம் மக்களின் பொருளாதாரம் சிக்கலாக்கப்படுவதுடன் தொடர்ந்தும் அம் மக்களை அடிமையாகவே வைத்திருக்க முயல்கின்றனர்.

இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு சவால் பலாலி வீதியில் இராணுவ முகாம் இருப்பதால் பலாலி மக்களால் அதனைப் பயன்படுத்த முடியாதுள்ளது. பலாலி மக்கள் வைத்தியசாலை போன்ற அவசர தேவைகளுக்குக்கூட தூரம் கூடிய மாற்று வீதிகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது. பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காகவும் மக்களின் காணிகளும் ஆலயங்களும் விடுவிக்கப்படாதுள்ளன.


இப்பிரதேசங்களில் இன்னும் வைத்தியசாலை, வங்கி, நூலகம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால் 27வருடங்களுக்கு முன் இவை இருந்திருக்கின்றன. உதாரணமாக மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை அன்று பிரபலமாக இருந்திந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வைத்தியசாலை இன்னும் புனரமைக்கப்படாது காணப்படுவதுடன் அரசால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றமையைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று அதிகமான காசநோயாளர்களைக் கொண்ட யாழ் மாவட்டத்தில் காசநோய் வைத்தியசாலையின் தேவை உணரப்பட்டிருக்கிறது.


“27 வருடம் அகதிகளாக வாழ்ந்த இந்த மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளினூடாக பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். முகாம் வாழ்க்கை சாதி, சமூகப் பாரபட்சங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து மக்கள் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் சகவாழ்வுக்கு வழிசமைத்திருக்கிறது. அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிடும் போது, அப்போது நிறைய மக்கள் வாழ்ந்தார்கள். நிறையச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்றைய காலம் அவ்வாறல்ல. தற்போது செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நிறையத் தடைகள் இருக்கின்றன” என்கிறார் அருட்தந்தை தேவராஜன்.


இந்த மக்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? வறுமையின் பிடியில் வாழும் இம் மக்களுடைய வாழ்வு மேம்படுத்தப்படவேண்டும். 1990களுக்கு முன்னர் இந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்களோ அந்தளவிற்கு மக்களின் வாழ்வு மேம்படுத்தல் காலத்தின் தேவையாகும்.

எழுதியது : அனுதர்ஷி லிங்கநாதன் ( விரிவுரையாளர் – யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை)