அடுத்து வருகின்ற ஒரு வருடத்திற்குள் குறிப்பிடத்தக்க, உன்னிப்பாக அவதானிக்கக் கூடிய அதேவேளை பல சுவாரஸ்யங்களை தந்து போகும் சில தேர்தல்கள் மூன்று நாடுகளில் நடைபெற இருக்கின்றன. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல், இந்தியாவின் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல் மற்றும் அமெரிக்காவின் சனாதிபதித் தேர்தல் ஆகியவையே அவையாகும். 

கடந்த ஆண்டு 2019 இன் இறுதிப் பகுதியில், சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய COVID-19 என்கின்ற வைரஸால் எல்லா நாடுகளும் பெரும் உயிரிழப்புகளையும், மருத்துவ நெருக்கடிகளையும் சந்தித்து வருவதுடன் பெருத்த பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. வீழ்ச்சியடையும் பொருளாதாரம் ஒரு புறமும், வைரஸின் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மறுபுறமும் என ஆளும் அரசுகள் திணறிக் கொண்டிருக்கும் அதே சமயம், வைரசுக்கு எதிராக மருத்துவ உலகங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவை தொடர்ந்து இரவும் பகலுமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எலிக்காய்ச்சல், அம்மை நோய், மலேரியா, டெங்கு சார்ஸ் போன்ற நோய்களுக்கு பழக்கப்பட்டு அதனோடு போராடி வாழப் பழகிக் கொண்ட மனித சமூகம், இனி வருங்காலங்களில் இந்த கொரோனா வைரஸோடும் வாழப் பழகிக் கொள்ளும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டாலும், படாவிட்டாலும் இந்த கொரானா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார மாற்றமும், அதனோடிணைந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளும் அடுத்து வருகின்ற அந்தந்த தேர்தல் களங்களில் செல்வாக்கை செலுத்தும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரம் நேரடி தேர்தல் பிரச்சார வடிவங்கள் மாற்றம் அடைவதுடன் வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் பங்குகளே அதிகம் இருக்கும் என்று சொல்கிறார்கள். 

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் – 2020

இலங்கையில் வருகின்ற 05 Auguest 2020 அன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் (மீண்டும் பிற்போடுப் படலாம்), கடந்த வருடம் சனாதிபதி தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பை Gotabaya Rajapaksha அவர்கள் ஏற்றிருந்தார். Lieutenant colonel தர நிலையில் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியதுடன், அதிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறி, பின்னர் 2005 இல் இருந்து இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலராக பத்து வருடங்களுக்கு மேல் பதவி வகித்தவரும், 2009 இல் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனவழிப்பு போரின் முக்கிய பங்காளியுமான Gotabaya Rajapaksha அவர்கள் சனாதிபதியாகியதன் பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். அரசியல் கட்சிகளை கொரானா செல்வாக்கு செலுத்தாமல் விட்டாலும் தேர்தலை நடத்துவதிலும், பிரச்சார நடவடிக்கைகளிலும் தடையை ஏற்படுத்துகிறது. 

ஆளுமைகளுள்ள பலமான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், அவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இல்லாமல் இருந்தாலும், இத்தேர்தலில் தமிழர்கள் தரப்பின் நிலைப்பாடுகளையும், இழுபறிகளையும் ஆழ்ந்த கவலைகளுடன் உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. 2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியல் வெற்றிடத்தை எவரொருவராலும், எந்த கட்சியாலும் இட்டு நிரப்பிவிட முடியாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்தான். காலம் தந்த படிப்பினையோடு நடைபோடும் இலங்கைவாழ் தமிழ் மக்களும் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலே சலிப்பையும் அடைந்திருக்கிறார்கள். இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய தமிழ் கட்சிகளுடன் மற்றைய ஏனைய தேசிய, சிறு கட்சிகளும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தமை அனைவரும் அறிந்ததே. 

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என ஆளுங்கட்சி தவிர்ந்த மற்றைய கட்சிகள் கோரிக்கையை முன்வைக்கின்ற தருணத்தில், நாட்டின் அவசரகால நிலையை கையாள கடந்த மே மாதம் நான்காம் திகதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அழைக்கப் பட்டிருந்த அனைத்துத் கட்சி கூட்டத்தினை எதிர்க்கட்சி உட்பட நாட்டின் முக்கிய பல கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிலே பங்கெடுத்திருந்தது. அதற்குப் பின்னர் சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்கள் விசனப்படும் வகையில் தனது கருத்தை பதிவு செய்திருந்தமை பல்வேறு வாதப் பிரதிவாதங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்களின் ஆன்மாவை கோபப்படுத்தும் எந்த செயற்பாடுகளும் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் என்பதை அனைத்து வேட்பாளர்களும் கருத்தில் கொள்வது அவசியமாகும். 

2004 இல் 22 ஆசனங்களுடன் பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று குறிப்பாக மூன்று கட்சிகளாக பிளவுபட்டு கிடக்கின்றன. சிலவேளை திருக்கோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவாகாமல் போகக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் தேசியக் கட்சிகள் செய்து வருகின்றன. தேர்தல் மாவட்ட பிரிப்புகளிலும், சிங்களக் குடியேற்றங்களிலும் அதிக அக்கறையோடு திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றன. இது பொதுவாக அனைத்து தமிழ் மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன. திருக்கோணமலை உட்பட பல வடகிழக்கு மாவட்டங்கள் தமிழர் தொடர்பில் வரலாற்று ரீதியான ஒரு பின்னடைவை இத்தேர்தலில் சந்திக்கலாம். 

எந்த கட்சிக்காவது தமிழர்கள் வாக்குகளை கட்டாயம் செலுத்தியே ஆகவேண்டிய சூழல் இருந்தாலும், தமிழ் மக்கள் சோம்பேறித் தனத்தால் வாக்களிக்காமல் புறக்கணிப்பது அவர்கள் வாசற்படிவரை பிரச்சனையை கொண்டுவந்து நிறுத்தும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க எவரால் முடியும்? “போர் முடிந்ததும் தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படும்” என்ற இதே அரசின் வாக்குறுதிக்காக பதினொரு வருடங்களுக்கு முன் இதே மாதத்தில், சில இலட்சம் தமிழர்கள் கொன்று புதைக்கட்டிருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. இன்று பேச்சளவில் கூட இதைப் பற்றிக் கதைக்க எந்த அரசும், அரசியல் தலைமையும் தயாரில்லை. அடிமை என்கின்ற நிலை இலங்கைத் தமிழர்களுக்கு எப்பொழுதும் விருப்பமானது போலும்.

இந்தியா, சில மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் – 2021

2021 இல் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள இருக்கின்ற இந்தியாவில், ஆளும் மதவாதக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகங்களை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடைபெற இருக்கின்ற ஐந்து மாநிலங்களில் தனித்த பெரும்பான்மையில் BJP க்கு எந்த மாநிலங்களும் இல்லாத நிலையில், மாநிலக் கட்சிகள், தேசிய காங்கிரஸ் போன்றவற்றின் மக்கள் ஆதரவு நிலைப்பாட்டைத் தகர்த்து மாநிலங்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற எவ்வித எல்லைவரையும் BJP போகும் என்று அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். கைப்பற்ற முடியாவிட்டாலும் அடுத்துவருகின்ற தேர்தல்களில் முழுவதுமாக கைப்பற்றுவதற்கான உறுதியான அடித்தளத்தையாவது BJP போட்டுவிடும் என்பதை உறுதியாக நம்பலாம். 

ஏற்கனவே கைப்பற்றியிருந்த வேறு சில மாநிலங்களை கடந்தவருடம் மீண்டும் BJP இழந்திருந்தாலும், மீண்டும் வெல்வதற்கான உறுதியான நம்பிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதி தீவிர மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொருளாதார அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை. வெளிநாட்டுத் தலைவர்களை அழைத்து ஒளிப்படங்களை ஆயிரக்கணக்கில் வெளியிடுகின்ற அதேநேரம், NRC and CAA போன்ற குடியுரிமைச் சட்ட திருத்தங்கள் மீதான அதிருப்திகளும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. தொழிலதிபர்களின் ஊழலும் தப்பியோட்டமும், போர்விமான கொள்வனவு ஊழல், உள் நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, இறக்குமதி அதிகரிப்பு, உலக சந்தையில் மசகெண்ணை விலை குறைந்திருக்க இந்தியாவின் எரிபொருள் விலையேற்றம், பக்கசார்பான கடன் தள்ளுபடிகள், மாட்டிறைச்சி பிரச்சனை, சிறுபான்மை மதங்களுக்கு எதிரான கடும்போக்குவாதம் என்று இந்தியா அரசுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கின்றன. வருகின்ற மாதங்களில் இன்னும் என்னென்ன காட்சிகளை அரங்கேற்றக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. இந்த இடத்தில் ஆளும் அரசுக்கு எதிராக காங்கிரசின் செயற்பாடுகள் திருப்தி ஏற்படும் அளவில் இருப்பதாகவும் தெரியவில்லை. 

அதிலும் அண்மையில் சீனா, நேபாளம் உடனான எல்லைத் தகராறுகளை சமாளிக்க முடியாமல் திணறும் ஆளும் அரசும் அதன் தலைவர்களுக்கு இது புதிய பிரச்சனைதான். இதே சாட்டாக வைத்து அமெரிக்க மூக்கை நுழைக்க தனது விருப்பம் தெரிவித்திருந்தது.  

மேலும், வரும் மாதங்களில் கொரானா தோற்று காரணமாக இந்தியாவில் பலவாயிரம் மக்கள் இறக்க கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது. பன்முகத் தன்மையடையாத பொதுச் சுகாதாரம் காரணமாகவும், பட்டினியாலும், மருத்துவ வசதியீனங்களாலும் இறப்புகள் அதிகரிக்கக் கூடும். பொருளாதாரம், மருத்துவத்தில் வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்ற நேரத்தில், இந்தியா ஒரு விதண்டாவாதப் போக்கில் தன்னை நிறுத்திக் கொள்வது மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும். கொரனாவால் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கலாம். 

மத்திய அரசின் போக்குகள் அப்படியிருக்க, தமிழகத்தில் ஆளும் அதிமுக மாநில அரசின் பொறுப்புணர்வற்ற தன்மை மேலும் எரிச்சலை ஊட்டுவதாக இருக்கின்றது. விவசாயிகள் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் தடுமாறுகிற நேரத்தில், பட்டினியால் ஒருபுறம் மக்கள் இன்னல்படுகின்ற போது, மதுக்கடைகளைத் திறந்து ஒரு கரும்புள்ளியை தனது கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவு அடுத்துவரும் தேர்தல்களில் எதிரொலிக்கலாம். அதிலும் பெரும்பாலான மது ஆலைகளுக்கு சொந்தக்காரர்களின் குடும்பக் கட்சியான ஸ்டாலின் தலைமையிலான திமுக, மதுக்கடைகள் திறப்பிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களின் பேசுபொருளாகியிருந்தமை குறிப்பிடத் தக்கது. 

செல்வி. ஜெயலலிதா அவர்களின் மறைவின் பின்னர் 2017 பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழக முதலமைச்சராக வலம்வரும் திரு. எடப்பாடி பழனிசுவாமி அவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் ஒரு சவாலானதாகவே இருக்கும். ஏனெனில் அவர் பதவி ஏற்றுக்கொண்ட காலத்தில் இருந்து நடைபெற்று வரும் பல சம்பவங்களும், போராட்டங்களும், மாற்றங்களும் நிச்சயம் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும். கடந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்விய அதிமுக, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபித்திருந்த அதே நேரம், திமுக நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்திருந்தது. மக்கள் தெளிவடைகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்தாலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த தேர்தலில் ஆளும் BJP யுடன் கூட்டணியை அமைத்துக் கொண்ட அதிமுக வும், தேசிய காங்கரசுடன் கூட்டணி வைத்த திமுக வும் வரும் தேர்தலில் அதே கூட்டணியோடு களமிறங்குவது சந்தேகம்தான். 

அண்மைய காலங்களில் தமிழ்த்தேசிய அரசியலை கையிலெடுத்து “திராவிடக் கட்சிகள் யாருடனும் கூட்டணியில்லை” என்ற கொள்கையால் கவனிப்பை ஏற்படுத்திய நாம்தமிழர் கட்சிக்கு இது இரண்டாவது சட்டமன்றத்தேர்தல் களமாகும். சட்டமன்றத் தேர்தல் களத்துக்கு புது வரவான மக்கள் நீதிமய்யம் எவ்வாறான வியூகங்களை அமைக்கும் என்றும் பலர் ஆவலில் காத்திருக்கிறார்கள். அத்துடன் புதிய கட்சி அமைத்து வரும் தேர்தலில் பங்கேற்று முதலமைச்சர் ஒருவரை நியமிக்கப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் நடிகர் ரஜனிகாந்த் அவர்களின் அரசியல் பிரசன்னத்தை பலரும் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கிறார்கள். அவர் வருவதாக இருந்தால் பல கட்சிகளின் வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அது ஏற்படுத்தக் கூடும். அத்துடன் இடையில் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையாரின் கருத்துக்களும் தேர்தல் களம் தொடர்பில் சில சலசலப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. எதுஎவ்வாறிருப்பினும் பலமுனைகளிலும் தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடுபிடித்து ஒரு சுவாரசியமான காலப்பகுதியாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம். 

ஏற்கனவே இணைய தளங்கள் சமூக வலைத் தளங்களை செல்வாக்கு செலுத்தும் திமுக, நாம்தமிழர் போன்ற கட்சிகளுக்குப் போட்டியாக மற்றைய கட்சிகளும் தனித்தனியான இணைய குழுக்களை அமைத்து செயற்படத் தொடங்கிவிட்டன. கொரானா வைரஸ் பரவல் காரணமாக மக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டால் வரப்போகும் நெருக்கடியை சமாளிக்க இப்பவே வேலைத்திட்டங்களை தொடங்கிவிட்டார்களாம்.

தமிழ்நாட்டின் பெரிய சிறிய கட்சிகள் யாவும் கொரானா பரவலினால் ஏற்பட்ட பட்டினிக்கெதிராக தம்மால் இயன்ற உதவிகளை செய்து அவற்றை நிரந்தர வாக்கு வங்கியாக மாற்றத் துடிக்கிறார்கள். எவர் எப்படி தலைகீழாக நினறாலும் இறுதி நேரத்தில் யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற கேவலமான அரசியல் நிலையே தமிழ்நாட்டில் நிலவுகிறது. எல்லாவற்றையும் பட்டு அனுபவித்த பின்னாலும், காசை வாங்கிவிட்டு “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.” என்று தமிழ்நாட்டு மக்கள் போய்க்கொண்டே இருப்பார்கள். இவற்றையும் தாண்டி மக்கள் சிந்தித்து தகுதியான தலைமையை தேர்வு செய்தால் வருங்காலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியும், எழுச்சியும் அடுத்துவரும் கால்நூற்றாண்டிற்கு பெறுமதியானதாகவே இருக்கும் என்று நம்பலாம். 

அமெரிக்கசனாதிபதித்தேர்தல் – 2020

“Keep America Great”, “make America Great again” போன்ற கவர்ச்சிகரமான சுலோகங்களுடன் 2016 இல் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியை கைப்பற்றிய Donald John Trump அவர்களால், அமேரிக்கா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று எதிர்பார்த்தார்கள். அவரால் செயற்படுத்தப் பட்ட பொருளாதார நகர்வுகளுக்கான  விளைவுகளை அடுத்துவருகிற ஐந்து வருடங்களில் கண்டு கொள்ள முடியும் என்று பலரும் எதிர்வு கூறுகிறார்கள். 

உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் என்ற அடிப்படையில் சில வெளிநாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கையிலிருந்தும் வெளியேறியிருக்கிறது அல்லது மட்டுப் படுத்தியிருக்கிறது. குறிப்பாக வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கையில் (NAFTA) இருந்து 2018 இல் வெளியேறியதால் பல தொழிற்றுறைகளுக்கு மீளவே முடியாத பேரிடியாகவே விழுந்திருந்தது. அதற்கு மாற்றீடாக USA Mexico Canada ஒப்பந்தம் (USMCA) ஒன்று  போடப்பட்டிருக்கிறது. அது இவ்வருட நடுப்பகுதியில் இருந்து செயற்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கின்றார்கள். அதற்குப் பின்னர் பொருளாதாரத்தின் மந்த நிலை மாறி வளர்ச்சியடையும் என்றும் நம்புகிறார்கள். 

ஆனால் வெளியுலகங்களுக்கு பொருளாதாரத்தில் வளர்ச்சி என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிக் கொண்டிருந்த சமநேரத்தில், Trump இன் ஆட்சிக்கு கொரானா தொற்றின் பரவலும் பேரிடியாக விழுந்துள்ளது. கடந்த மூன்றரை வருடங்களில் அவர் குறிப்பிடும்படியாக பாரிய மாற்றங்கள் எதனையும் செய்திருக்கா விட்டாலும், பொருளாதார நிலையே அவருக்கு பெரும் சவாலாக நிற்கிறது.

வர்த்தக உடன்படிக்கைகள் மூலம்புதிய கதவுகளை வரும் ஜூலை மாதம் திறக்க இருக்கின்ற அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான நிறப் பிரிவினை வன்முறைகள் ஆங்காங்கே பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. பெரிய நகரங்களில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப் படுகின்ற நிலைக்குள் வந்திருந்தது. தேர்தல் நெருங்கும் காலம் என்பதால் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றினாலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் நூற்றாண்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வன்முறைகள் எதோ ஒருவிதத்தில் இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கியில் செல்வாக்கினை ஏற்படுத்தவே செய்யும். 

வருகின்ற நவம்பர் மூன்றாம் திகதி அமெரிக்காவுக்கான சனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மீண்டும் குடியரசு (Republican) கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கும் Trump அவர்களின் தேர்தல் வியூகம் எப்படியாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகெங்கும் கவனிக்கப் படுகிறது. எப்பொழுதும் சமூக வலைத் தளத்தில் தன்னை பிணைத்து வைத்திருக்கும் அவர் எல்லா நேரங்களிலும் ஏதோ ஒருவகையில் மக்களுக்கு போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறார். “நல்லதோ கெட்டதோ எப்படியாயினும் அறிமுகமாகிவிடு” என்ற தற்காலத்தின் போக்கு, போன தேர்தல் போலவே இம்முறையும் அவருக்கு கைகொடுக்கலாம்.

Trump அவர்களை எதிர்த்து (Democratic) சனநாயக கட்சியின் பிரதம வேட்பாளராக கமிறங்கும் 78 வயதுடைய Joseph Robinette Biden Jr. அவர்கள் மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டவராக இருக்கிறார். 1972 இல் நடைபெற்ற தேர்தலில் Delaware மாநிலத்துக்கான செனட்டராக தெரிவு செய்ய்யப்பட்ட அவர், 2009 இல் துணை ஜனாதிபதியாக பொறுப்பெடுக்கும் வரை அந்த மாநில செனட்டராக தொடர்ந்து பதவி வகித்தமை முக்கிய விடயமாகும். அந்த நேரத்தில் குறைந்த வயதில் (30) செனட்டராக தெரிவுசெய்ய்பட்ட ஆறாவது நபராவர். 1988, 2008 ஆகிய ஆண்டுகளில் சனாதிபதி வேட்பாளருக்கான கட்சியின் தேர்தலில் முக்கிய நபராக பரிந்துரைக்கப் பட்டிருந்ததுடன், 2009-2017 காலப்பகுதியில் Barack Obama அவர்களின் கீழ் துணை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு, பரந்து பட்ட துறைகளில் பணியாற்றியிருக்கும் Biden அவர்கள் இம்முறை சனாதிபதி பிரதம வேட்பாளராக களமிறங்குவது அமெரிக்க சனாதிபதி தேர்தலில் கவனிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. 

மிகுந்த நிதானமான பேச்சாற்றல் கொண்ட Biden அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு, மக்கள் நிராகரிக்கும் நேர்மறை புள்ளியாக இருப்பது அவருடைய வயது ஒன்று மட்டும்தான். ஆயினும் மிகுந்த எதிர்பார்ப்புகளும், பலத்த போட்டியும் காணப்படும் என்று நம்பலாம். கடந்த முறை Trump அவர்களை தெரிவு செய்தவர்கள் எதிர்பார்த்த உடனடி பொருளாதார மாற்றம் என்பதில் ஏமாற்றத்தைக் கண்டவர்கள் இம்முறை வேறு முடிவை எடுக்க சந்தர்ப்பங்கள் உண்டு. பலர் இருந்த பொருளாதார நிலையை விட்டு கீழே போயிருக்கிறார்கள். பல பாரவூர்தி நிறுவனங்கள் அடியோடு மூடியதனால் பலவாயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். வேலையிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கின்ற நேரத்திலேதான், “அமெரிக்கர்களுக்கே இனி வேலை” என்று Green card H-1B விசா தொடர்பில் இடைநிறுத்த செயற்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதனால் பயன் கிடைக்குமோ கிடைக்காதோ Trump அவர்களுக்கு உள்ளூர் மக்கள் மத்தியில் ஆதரவு நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். நாளும் நெருங்க விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கும் நாளை அமெரிக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

சனநாயகத்தின் குறியீடான தேர்தல்கள் உலகெங்கும் நடந்துகொண்டே இருக்கின்றன. தமிழர்கள் நமக்கு எந்தவிதமான தீர்வுகளும் இன்றி காலங்கள் இளுத்தடிக்கப் படுகின்றன. உலகநாடுகளும் எம்மை மறந்து அனாதையாய் கைவிட்டு விட்டன. எமது பலம் அழிக்கப் பட்ட அந்த நொடியில் இருந்து நாம் அனாதைகள்தான் என்பதை மறந்து, அற்ப இலாபத்திற்காக விலைபோகின்றோம் என்பது பெரும் அவமானம்தான்.

எழுதியது: ப.வித்யாசாகர்.