“ வெடிவைத்தகல்லு “ இது தமிழீழத்தின் கடல் இல்லாத மாவட்டம் என்று கூறப்பட்டாலும் பலநூறு குளங்களை தன்மீது சுமந்து பசும் வயல்களையும், பசு, காளை மற்றும் எருமை போன்ற உழவர்களின் நட்பு விலங்குகளயும் அதிகமாக கொண்ட மருத நிலம். இது மட்டுமல்லாமல் வெப்ப வலய மரங்களான பாலை, முதிரை போன்ற உறுதியான காடுகளால் நிறைந்து கிடக்கும் பாலை நிலத்தாலும் சூழப்பட்ட மாவட்டமாக இருக்கும் வவுனியா மாவட்டத்தின் ஒரு விவசாயக் கிராமம்.

விவசாயமே வாழ்வாகவும், உழவுத் தொழிலே தங்களது மூச்சாகவும் கொண்டு வாழ்ந்த சேனாதிராசா – கற்பகம் தம்பதி இங்கு தான் தமது இல்லறத்தை மகிழ்வாக நடத்திக் கொண்டிருந்தது.

அவ்வில்லறத்தில் நல்லெழிலாக 02.12.1969 அன்று பிறந்தது நாகராசா என்ற ஆண் குழந்தை. 6 சகோதரர்களும் 3 சகோதரிகளுமாக அக் குடும்பத்தின் கடைக் குட்டிச் செல்லமாக நாகராசா பிறந்தார். கடைக்குட்டிச் செல்லம் என்றாலே செல்லமாக வளர்வதற்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அதிகமான அக்கறையோடும், பாதுகாப்போடும் செல்லமாகவும் வளர்க்கப்பட்ட நாகராசா தனது ஆரம்பக் கல்வியை வ/ வெடிவைத்தகல்லு அரசினர் தமிழ்க்கலைவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வ/ நெடுங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தன்னை கல்வியில் புடமிட்டார். ஆனால் அக்காலத்தில் சிங்கள இனவெறி அரசினாலும், அதனோடு இயங்கிய சிங்கள இனவர்க்கத்தாலும் தமிழினம் பட்ட துன்பத்தை கண்முன்னே பார்த்துப் பார்த்து நொந்து போய் கிடந்தார்.

சிங்கள இனவெறியரின் பிடியில் இருந்தும் அன்றைய தமிழ் அரசியல் தலமைகளின் பிற்போக்கான நடவடிக்கைகளில் இருந்தும் தமிழினத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனை கொண்டவராக தன்னை தயார்ப்படுத்த தொடங்கினார். அதன் அத்திவாரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைகளோடு ஒன்றிப் போன காரணத்தால் தனது தெளிவான தெரிவாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத/ அரசியல் போரை உளமாற ஏற்று அதன் அங்கமாக தன்னை 1984 ஆம் வருடம் இணைத்துக் கொள்கிறார். அங்குதான் நாகராசா என்ற நாமம் மறைத்து வெள்ளை / றொபேட் என்ற புதுப் பொலிவோடும் புதுப் பெயரோடும் புதியவராக உருவாகினார்.

வெள்ளை என்ற பெயர் இவருக்கு காரணப் பெயராக கூட இருக்கலாம். ஏனெனில் அத்தகைய அழகையும் வெள்ளை நிறத்தை கொண்ட மேனியையும் ஒரு போர் வீரனுக்குரிய உடல்வாகையும் கொண்டிருந்தார் அவர். வன்னி மண்ணில் இருந்த புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் அடிப்படை ஆயுத அறிவையும் சண்டைக்கான பயிற்சிகளையும் பெற்ற வெள்ளை தன்னை போராளியாக மாற்றிக் கொண்டார்.

அதன் பின்பான காலங்கள் வன்னி மண்ணின் தாக்குதல் களங்கள் இவரின் இலக்குகளாக அமைந்தன. தமிழினத்தில் வாழ்வாதாரத்தை இனவெறித் தாக்குதல் மூலம் சிதறடித்துக் கொண்டிருந்த சிங்களப் படைகளை தமிழீழப் பரப்பில் இருந்து அடித்துத் துரத்த வேண்டும் என்றும், எமது மக்களுக்கு நல்லதொரு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திட வேண்டும் என்றும் உன்னதமான நோக்கங்களோடு வன்னிமண்ணின் களங்கள் முழுக்க உழைத்தார். இவரின் செயற்பாடுகள் கொரில்லாப் போராளிகளாக இருந்த தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், அதன் தலைமைக்கும் அவரை மிகச் சிறந்தவராக இனங்காட்டியது. அதனால் விடுதலைப்புலிகளின் பாசறைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயராக வெள்ளை என்ற நாமம் மாறிப் போனது.

1984.12. 24 ஆம் திகதி, வெள்ளை, பால்ராஜ் ( பிரிகேடியர் பால்ராஜ்), காண்டீபன், இடியமீன் ஆகியோரிடம் 50 சொட்கண் (shotgun) வகை ஆயுதங்களையும் புதிய போராளிகளையும் புதுக்குடியிருப்பில் இருந்து முழங்காவிலுக்கு நகர்த்தும் பணி அப்போது தளபதியாக இருந்த காண்டீபன் அவர்களால் வழங்கப்பட்டது. அப்பணியில் சிறு தவறு ஏற்பட்டாலும் விடுதலைப் போராட்டத்தின் போக்கு மாறிவிடக் கூடும் என்ற அபாயம் இருந்தது.

அக்காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்த “ விவசாயிகள், வேட்டையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கியான சொட்கண்கள் அனைத்தின் அனுமதிகளும் ரத்துச் செய்யப்பட்டு அவை மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அத் துப்பாக்கிகளை எமது மக்கள் அரசிடம் கையளிக்க முற்பட்ட போது, அவற்றை புலிகள் மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். அதனூடாக எமது ஆயுத வளம் கொஞ்சம் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில்,

எமது அமைப்பிடம் இருந்த ஆயுதங்களை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான விடயம். கையில் இருக்கும் ஆயுத வளங்கள் மிக குறுகியது. அவற்றைப் பாதுகாத்தால் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் நீட்சி வெற்றியில் சென்று முடியும். இல்லையெனில் ஆயுத தளபாடங்களின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது விடுதலைப் போராட்டம் முளையிலையே நசுக்கப்பட்டுவிடும். இவ்வாறான நிலையில் இப்பணியானது மிக முக்கிய பொறுப்பாக இவர்களுக்கு இருந்தது.

அவ்வாயுதங்கள் மற்றும் போராளிகளை ஒரு உழவியந்திரத்தில் ஏற்றிக் கொண்டு ஒதியமலைப் பகுதியூடாக பயணிக்கின்றார்கள் வெள்ளை உட்பட்ட போராளிகள். அப்போதைய வன்னி வீதிகள் செப்பனிடப்படுவது என்பது நினைக்க முடியாதது. பல ஆண்டுகள் சீர்திருத்தப்படாத அப் பாதைகளினூடாக அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். குன்றும் குழியுமாக, மேடும் பள்ளமுமாக இருந்த அவ்வீதிகளினூடாக அப் போராளிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்கின்றார்கள்.

அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே அவர்களின் உழவியந்திரத்தை குறிவைத்து ஒதியமலை பகுதியில் காத்திருந்தது சிங்களப்படைகளின் அணி ஒன்று. அவர்கள் அருகில் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதலை செய்கிறது. உடனடியாக தயார் நிலைக்கு வந்த போராளிகள் எதிர்த் தாக்குதலை செய்கிறார்கள். இரு தரப்பும் பலமான தாக்குதலைச் செய்கின்றார்கள். இரு போராளிகள் வீரச்சாவடைகின்றனர் அதோடு பிரிகேடியர் பால்ராஜ் விழுப்புண்ணடைகிறார். தவிர எந்த இழப்பும் இன்றி தமது பணியை செய்து முடித்தார்கள் வெள்ளையின் இவ்வணியினர். இந்த நடவடிக்கை அப்போது விடுதலைப்புலிகளை பொறுத்தவரை பெரிதும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்பட்டது.

இது முடிந்து சில. நாட்கள் கழிந்த நிலையில்,
மேஜர் பசீலனின் தாக்குதல் தலைமையில் முந்திரிகைக் குளப்பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் பங்கெடுத்த வெள்ளை தனது சண்டை வலுவை அதில் பயன்படுத்த தவறவில்லை. அவ்வணி தமது இலக்கை அழித்து வென்றது. அங்கே சிங்கள மக்களை வலிந்து குடியேற்ற முயன்ற சிங்களப்படைகளை அழித்தது மட்டுமல்லாது, AK வகை சுடுகலன்கள் 13 ஐயும், இராணுவ தளபாடங்களையும் கைப்பற்றி விடுதலைப்புலிகளின் ஆயுதவலுவையும், ஆன்ம பலத்தையும் அதிகரிக்கச் செய்தனர் பசீலனின் அணியினர். இத் தாக்குதலிலும் வெள்ளையின் தனிச் செயற்பாடானது உச்சமானதாகவே பதிவாகியது.

இக்காலத்தில் தான் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக போராடும் போராளிகளை வளர்த்தெடுத்து அவர்களை இலங்கை அரசுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அதில் மிக முக்கியமான பணியாக ஆயுத பயிற்சித் திட்டத்தில் பங்கெடுப்பதற்காக ஒவ்வொரு அணிகளாக பகுதி பகுதியாக தமிழகம் சென்றார்கள் போராளிகள். அவர்களில் ஒரைவராக தெரிவாகி தமிழகம் சென்ற விடுதலைப்புலிகளின் அணியில் வெள்ளையும் சென்றார்.

தமிழகத்தில் உள்ள 9 ஆவது பயிற்சி முகாமில் மேலதிக ஆயுத / சண்டைப் பயிற்சிகளை செய்கின்றார் வெள்ளை. அங்கே ஒரு விடுதலை வீரனாக, தமிழீழ விடுதலைக்கு வளம் சேர்க்கும் கொரில்லாப் போராளியாக, மெய்ப்பாதுகாப்புப் போராளியாக தன்னை புடம் போட்டுக் கொண்டு தன்நிறைவுள்ள ஒரு போராளியாக 1986 ஆம் வருடம் தாயகம் திரும்புகிறார். அதன் பின்பான காலம் முழுவதும் தாயக வாசம் சுமந்து தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார்.

தளபதி மேஜர் பசீலன் தலமையிலான அணியில் இருந்து கொண்டு களமாடிய வெள்ளை, தமிழீழ தேசியத் தலைவரது பிரத்தியேக பாதுகாப்பு அணியான 0 ( சைபர்) என்று அழைக்கப்படும் சிறப்பு அணிக்கு பொறுப்பான ஒரு போராளியாக தன்னை உருவாக்கிக் கொள்கிறார். மிக கண்டிப்பும் பணியில் தீவிரமான விசுவாசமும் கொண்ட தளபதி வெள்ளை தவறிழைக்கும் போராளிகளை திட்டவோ அல்லது அடிக்கவோ மாட்டார். ஆனால் அவற்றை எல்லாம் தாண்டிய பயங்கரமான தண்டனைகளை கொடுப்பதனூடாக அப் போராளிகள் மீண்டும் அவ்வாறான தவறுகளை விடுவதை தவிர்க்க வழி செய்வார்.

அக்காலகட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுத வளம் என்பது இலகுரக ஆயுதங்களினைக் கொண்டதாகவே இருந்தது. ஆனாலும் அன்றைய காலத்தில் M – 203 என்ற ஆயுதமே பலம் பொருந்திய ஆயுதமாக இருந்தது. அவை ஓரிரண்டு தான் புலிகளிடம் இருந்தன. அவற்றில் ஒன்று வெள்ளையிடம் இருந்தது. அவ்வாறு துல்லியமான சூட்டாளனாகவும், ஆயுத பயன்பாட்டாளனாகவும் வெள்ளை இருந்தார் என்பது மிகையில்லாதது.

இக் காலகட்டத்தில் தான் நயவஞ்சகமாக தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் அடிப்படையில் “அமைதிப் படை “ என்ற பெயரில் எம் தாயகத்துக்கு கால் பதித்ததுஇந்திய வல்லாதிக்கப்படை. இலங்கை அரசுக்கு தலைவலியைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த இந்திய அரசு, தாம் சொல்வதெற்கெல்லாம் ஆடும் பொம்மைகள் என்று நினைத்தது தமிழீழ விடுதலைப்புலிகளிடம் தவறாகி விட்டதை உணர்ந்து கொண்டார்கள். இதன் புள்ளியில் தான் அந்த நயவஞ்சகம் ஆரம்பமாகி தமிழீழ விடுதலைப் போரை முடக்கிப் போட்டுவிடத் துடித்து அமைதிப்படையாக தமிழீழத்துக்கு வந்தார்கள்.

அதே நேரம் அவர்களின் நரித் தந்திரத்தை புரிந்து கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் எங்கிருந்து தம்மை மேலதிக பயிற்சிகள் மூலமாக புடம் போட்டுக் கொண்டார்களோ, அவர்களின் துரோகத்தையும், நரித் தந்திரத்தையும் எதிர்க்கத் துணிந்து அமைதிப்படைக்கு எதிராக களமாட முடிவெடுத்தார்கள். அதை அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் சரியான முறையில் செய்தார்கள். அப்போது விடுதலைப்புலிகளின் முக்கியமான போராளியாக வெள்ளை, மணலாற்று காட்டுக்குள் தலைவனோடு இருந்தார்.

“ ஒப்ரேசன் செக்மெட் “ என்ற பெயரில் பலமுறை மணலாறு காட்டை முற்றுகையிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரான தமிழீழ தேசியத்தலைவரை உயிருடன் பிடித்துவிட முனைந்தது இந்தியப் படைகள். அப்போதெல்லாம் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஒவ்வொன்றையும் தாங்க முடியாது திகைத்து நின்றது. இந்தியப் படைகளோடு மிக மூர்க்கமாக பொருதிய போராளிகளுள் முக்கியமானவராக தமிழீழ தேசத்தின் தலைமகனைக் காத்தார் வெள்ளை.

இந்திய வல்லாதிக்கம் தம் முகத்தில் தாமே கரியை பூசியதைப் போல பல முறை முயன்றும் முடியாத இலக்காக இருந்தது தலைவரை நெருங்கும் இலக்கு. அதற்கு விடுதலைப்புலிகளின் போராளிகள் கடுமையான தாக்குதல்களை இந்தியப்படைகள் மீது செய்துகொண்டிருந்தனர். தாயகம் முழுவதும் நடாத்தப்பட்ட வலிந்து தாக்குதல்கள் இந்தியப்படைக்கு பெரும் பிரச்சனைகளை உருவாக்கி தாயகத்தை விட்டு வெளியேற வைத்தது. அதற்காக பல படை வீரர்களை எம் மண்ணில் பலியாக்கியது இந்திய வல்லாதிக்க அரசு. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இருப்பையும், தமிழீழத் தேசியத்தலைவரின் உயிரையும் பாதுகாத்த போராளிகளுள் வெள்ளையும் முக்கியமாகின்றார்.

1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் விரிவாக்கப்பட்ட போது அதுவரை இல்லாத முல்லைத்தீவு மணலாறு மாவட்ட அணியும் பொறுப்பாளர்களும் உருவாக்கப்பட்டு அதற்கு லெப். கேணல் அன்பு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

1993 நவம்பர் 11 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் போரில் மிக முக்கிய சண்டை நடவடிக்கையான “தவளை “ நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட பூநகரி படைத்தளம் மீதான ஈரூடக தாக்குதலின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் அன்புவின் மாவட்டத் தளபதி பொறுப்புக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய தேவை தேசியத்தலைவருக்கு வந்த போது, அதற்கு மிகப் பொருத்தமாக வெள்ளை இருப்பார் என்ற நம்பிக்கையோடு தலைவர் அப்பணிக்காக தன் பாதுகாப்பணியில் இருந்து அப்பொறுப்புக்காக அனுப்புகிறார். வெள்ளை அப்பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

அந்த நாட்கள் முல்லைத்தீவில் பெரும் படை முகாம் உள்ளது என்பதும், அம்முகாமில் இருந்து கொண்டு சிங்களப்படைகள் எம் மக்கள் மீதான இனவழிப்பில் ஈடுபட்டு வருவதும் முல்லைத்தீவு மாவட்ட மக்களைத் தவிர பெரிய அளவில் வெளித்தெரியாத ஒன்றாகவே இருந்தது. ஆனால் அந்தப் படை முகாம், எம் இனத்தை கருவறுத்ததில் முக்கியமானது என்பது நியமானது. ஒருபுறம் நந்திக்கடலாலும், மறுபுறம் இந்து சமுத்திரத்தாலும் சூழப்பட்ட இம்முகாமின் தரைவழிப் பகுதிகளாக இருந்த பிரதேசங்களை விடுதலைப்புலிகளின் மிகக் குறைந்தளவிலான போராளிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். சிறிய படைமுகாமாக இருந்த இம்முகாம் , யாழ்ப்பாணத்தை சூரியக்கதிர் 1, 2 நடவடிக்கைகள் மூலம் தம்வசப்படுத்திய சிங்கள வல்லாதிக்கம், நடவடிக்கைக் காலத்தில் மிக முக்கிய கடல் நடவடிக்கை மையமாக முல்லத்தீவுப் படைத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டு அமர்ந்து கொண்டது. அக்காலத்தில் முல்லைத்தீவுப் படைமுகாமை முற்று முழுதாக முடக்கி வைத்திருந்தார்கள் முல்லை – மணலாறு மாவட்டப் போராளிகள் அணி. வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் சிறு அசைவு தெரிந்தாலும், உடனடியாக எறிகணையாலும் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கியாலும் (சினைப்பராலும் )தாக்கி ஆலயம் என்று கூட இல்லாது எம் மக்களை கொன்று குவிக்கும் இந்தப் படைகளை முல்லைத்தீவு முகாமை விட்டு ஒரு இஞ்சி கூட நகர முடியாத வாறு முடக்கிப் போட்டனர் புலிகள். அதன் பொறுப்பதிகாரியாக லெப். கேணல் அன்புவுக்குப் பின் இருந்து சிறப்பாக செயற்பட்டவர் வெள்ளை.

அதன் பின், 1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் மண்கிண்டி மலை, கொக்குத்தொடுவாய், டொலர்பாம், கென்பாம், வெலிஓயா (மணலாறு என்ற தமிழ் பெயரை நேரடியாக சிங்களத்தில் மொழிபெயர்த்து வெலி- மணல் , ஓயா – ஆறு இப்பெயரை வைத்திருந்தது சிங்கள அரசு) என்ற இடத்தில் அமைந்திருந்த “பராக்கிரமபாகு “முகாம் போன்ற 5 பாரிய படைத்தளங்கள் மீது வலிந்து தாக்குதல் ஒன்று நடந்தேறியது. இதன் நடவடிக்கைக்கை எம்மோடு சேர்ந்தியங்கிய துரோகிகளின் காட்டிக்கொடுப்புக் காரணமானது.

சிறுத்தைப் படையணியின் அதி சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் போராளிகள் உட்பட 150 போராளிகளுக்கு மேல் வீரச்சாவடைந்த இத் தாக்குதலில் வெற்றியடைய முடியாது போனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் வீரத்தையும் உத்வேகமான தாக்குதல் திறனையும் இலங்கையின் சிங்களப்படை புரிந்து கொண்டு அலறிய தாக்குதலாக இது அமைந்தது. இந்த நடவடிக்கையிலும் வெள்ளை பங்கெடுத்திருந்தார். அந்த தாக்குதல் காட்டிக்கொடுப்பால் தோற்றுப்போனாலும், புலிகளின் தாக்குதல் திறனை சிங்களத்துக்கு புரிய வைத்ததில் வெள்ளையும் முக்கியமானவர்.

இதன் தாக்கம் நிறைவாக முன்பே சிங்களப்படைகளினால் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்கில் பலாலி இராணுத் தளத்தில் இருந்து செய்யப்பட்ட “ இடிமுழக்கம் “ படை நடவடிக்கை மீதான மறிப்புத் தாக்குதலுக்காக முல்லை – மணலாறு மாவட்டத்தின் ஒரு பகுதி அணியோடு வந்து சேர்ந்தார் தளபதி வெள்ளை.

இந்த இடைமறிப்புத் மறிப்புத் தாக்குதல் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இன்னொரு பகுதிக்குள்ளால் ஊடுருவித் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு திட்டமிடப்படுகிறது. அத் தாக்குதலானது வலிகாமம் மற்றும் வடமராட்சியின் எல்லைப் பகுதியான அச்சுவேலிப் பகுதியில், சிங்களப் படைநிலைகளை ஊடறுத்து செய்யப்படுகிறது. இந்த வலிந்து தாக்குதலில் தனது அணியோடு பங்கெடுத்தார் வெள்ளை. உள் நுழைந்த போராளிகளோடு முற்றுகைக்குள் மாட்டிய வெள்ளை தனது போராளிகளுடன் இறுதிவரை உறுதியோடு களமாடினார். இந்தச் சண்டையில் 160 போராளிகளோடு அவரும் ஒருவராக மண்ணுக்காக தன்னை விதையாக்கினார்.

தமிழீழ விடியலுக்காக தன்னை அர்ப்பணித்த இந்த வீரவேங்கை மேஜர் வெள்ளை / றொபேட் என்ற பெயரைத் தாங்கி முள்ளியவளைத் துயிலுமில்லத்தில் மீளாத் துயிலில் உறங்குகின்றார்.

எழுதியது : இ.இ. கவிமகன்
தகவல் ஒருங்கிணைப்பு : சிவநேசன்
தகவல் உறுதிப்படுத்தல் : தமிழீழ மருத்துவர் தணிகை
ஒப்புநோக்கியது : மஞ்சு மோகன்