உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ்மித் 73 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹரே 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, கார்லஸ் பிரத்வைற் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஓஷன் தோமஸ், ஹொற்ரெல் மற்றும் அன்ரூ ருஸெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 289 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அந்தவகையில் இவ்வணி 15 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, ஷை ஹோப் 68 ஓட்டங்களையும், ஜெஸன் ஹோல்டர் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு, நிக்கோலஸ் பூரன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்ரேலிய அணி சார்பாக, மிட்செல் ஸ்ராக் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நைல் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலிய அணி, விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் உள்ளதோடு, மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.